Tuesday, December 26, 2006

கற்றதனால் ஆன பயனென்ன.......(பாகம் 4)

இந்த இடுகையின் இரண்டாவது பாகத்தில் வந்த நண்பர் ஆசாத்தின் பின்னூட்டங்கள் முக்கியமான கேள்விகளை முன்வைத்தன. அவை நான் இதுவரை பெரிதும் சிந்தித்திருக்காததும், இப்போது என்னைச் சிந்திக்கத் தூண்டியவையும் ஆகும். "பெண்ணுரிமை என்பது ஒரு ஒருமித்த திட்டம், அதற்கான அரசியல் இயக்கம் எல்லாம் இல்லாமல் வெற்றிபெறமுடியுமா?" என்கிற அவரின் கேள்வியைத் தொடர்ந்து எனக்கும் அவருக்கும் நடந்த கருத்துப் பரிமாற்றங்களை, அவரின் இறுதியான பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக எனக்குள் விழைந்த எண்ணங்களையும் எழுதி (வழக்கம்போல் அவை நீண்டுவிட்டதால்:)) இங்கு தனிப்பதிவாக இடுகிறேன்.

ஆசாத்தின் முதல் பின்னூட்டம்:

I have appreciate your expectation about the fellows of Virtual world(net blog).

My quet. is simple. Can win Feminism without a plan, party, Tactics ... etc?

If cant't what is the unique plan for it. If ok please describe it now.

Second, all feminst thoughters have such freedom at family than other Females. Why are fought against that feminine has treated as a Commadity in India.?

Third, why this type of independent personalities have not became the Social activities (Politics like against the mass struggle against Hindu Fascism & Imperialistic USA


என் மறுமொழிஆசாத்,
முதன்முறையாக உங்கள் எழுத்தைப் படிக்கிறேன். மறுமொழிக்கு நன்றி. பெண்ணியத்திலிருந்து மேலும் விரிவான இடங்களைத் தொடுகிறீர்கள் என நினைக்கிறேன். எனக்குப் பதில் சொல்ல உள்வாங்கிடும் வகையில் இன்னும்கூட விரித்து நீங்கள் நினைப்பதை முடிந்தால் எழுதுங்களேன்.


ஆசாத்தின் இரண்டாவது பின்னூட்டம்
I am aasath

I can't know that to describe my previous question? ... If possible, can anyone tell it now.

Without any Party (political) how feminism will success?

On Kairanchi Massacare also, Females have treated as a property of Dalits. How you accept it?

All of you (so-called female feminists) have such small freedom in your home (ie, family). Then why you can't come in front of the peasants' struggle, Peoples struggle, .... Govt. employees struggle against privitization, trying of form a Union at IT employees also. I need the explanation?



என் மறுமொழி

நண்பர் ஆசாத்,
உங்களின் பார்வைகளுக்கான பின்னணியை அறிய விரும்பியே உங்களை மேலும் எழுதக் கேட்டது. நீங்கள் அப்படி விரிவாக எழுதாதபோது நான் பதில்சொல்லிக்கொண்டிருப்பது இருவரும் ஒரு புள்ளியில் இல்லாமல் அவரவர் திசைகளில் பேசிக்கொண்டிருக்க
வித்திடலாம். இப்போது நீங்கள் மீண்டும் விளக்கம் வேண்டும் என்று (மட்டுமே) கேட்டிருப்பதால் இதை எழுதுகிறேன்.

பெண்விடுதலை பற்றிய சிந்தனைகள் ஒரே இயக்கமாக ஒரு குடையின்கீழ் வராதிருப்பினும் சமீபத்திய நூற்றாண்டுகளில் இதுபற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு அதன் விளைவாக உலகெங்கும் தோன்றிய சிறுசிறு இயக்கங்களின் எழுச்சிகளும், போராட்டங்களுமே இன்று
பெண்களுக்கு ஆதரவான பல சட்டங்கள்வரை கொண்டுவந்திருக்கிறது. நம் ஊரிலும் இயங்கிவரும், அரசுசார்ந்த மகளிர் ஆணையங்களில் இருந்து, கட்சிசார்ந்த ஜனநாயக மாதர் இயக்கங்கள் வரை இதில் சேரும்.. அடிமட்டப் பெண்களின் அன்றாட வாழ்வாதாரப்
பிரச்சினைகளைக் களைவதில் சிறந்து விளங்கும் இன்றைய மகளிர் சுய உதவிக்குழுக்களைக்கூட நான் இதனடிப்படையில் பார்க்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருகிற, அவர்களுக்கு வேண்டியது செய்கிற பல சமூக இயக்கங்களையும் பார்க்கிறோம். இவையெல்லாம் தத்தம் பணிகளில் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது அவற்றின் பலம் இன்னும் கூடும் என்பது உண்மையே.

எங்களைப்போல் பெண்ணுரிமைபற்றிப் பேசுகிற பெண்கள் வீதிக்குவந்து போராடவேண்டும் என்கிற உங்களின் ஆவல் பாராட்டுதலுக்குரியது. இப்படியான பெண்கள் உங்களின் கண்களில் விழுகிறவண்ணம் வெளியில்வந்து போராடவில்லை என்பதால் அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று பொருள் கிடையாது. சிறுசிறு பணியாகவேனும் அவரவருக்கு முடிந்த தளங்களில் இயங்குகிறவர்கள் நிறைய உண்டு. என்றாலும் முழுமையாக அரசியல், சமூகத் தளங்களுக்கு பெண் தன் பங்களிப்பை வழங்க முன்வராமைக்குப் பலகாரணங்கள் உள்ளன. இங்கெல்லாம் இயங்கும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் எப்படியானவை என்பதை நாம் அறிவோம். வேலையா, குடும்பமா என்று வருகிறபோதே வேலையைவிட்டுக் குடும்பத்திற்கு மட்டுமே முன்னுரிமை தருவதற்கே இன்றும் பெண்கள் வலியுறுத்தப்படுகிற சமூகத்தில் பொதுவாழ்வில் இன்னும் பெண்களின் பங்கு அதிகமாக, பெண்களைவிடவும் சமூகமே தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஜெயிலுக்குப் போன பெண்களில் இருந்து இன்று ஒரு போராளியாகக் களத்தில் இருக்கிற மேதாபட்கர் வரை உண்டு.

பெண்விடுதலை பேசுபவர்கள் ஏன் இந்து பாசிசத்திற்கெதிராகவெல்லாம் போராடவில்லை என்கிற உங்களின் முதல் பின்னூட்டக் கேள்விக்கு என் பதில்:-

மதங்களில் இந்து மதம் என்றில்லை, பொதுவாக எல்லா மதங்களுமே இன்றும் பெண்ணுக்குரிய அங்கீகாரங்களை வழங்கிவிட்டதாகச் சொல்லமுடியாது. பெண்ணடிமையைப் பேணிக்காப்பதில் மதங்களுக்கு நிறையப் பங்குண்டு. அவற்றிற்கெதிரான பெண்களின் குரல்களையே இன்னும் அவர்கள் முழுமையாக எழுப்பமுடியாவண்ணம் அங்கங்கு மதங்களின் அரண்களாய் மனிதர்களும், மத அமைப்புகளும் நின்றுகொண்டிருக்கையில் அடுத்த கட்டம் நோக்கிய பயணங்களுக்குப் பெண்கள் ஏன் வரவில்லை என்று கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் ஐடி பணியாளர்களின் சங்கம் அமைப்பதிலும் பெண்விடுதலை பேசுபவர்கள் ஏன் முன்வரவில்லை என்று முடித்திருக்கிறீர்கள்:)) உலகின் எல்லாவேலைகளையும் இனிப் பெண்விடுதலை பேசுபவர்கள்தான் ஆரம்பித்து வைக்கவேண்டும்போல் தெரிகிறதே:)) இந்த இடுகையின் அடுத்த பாகத்தில் நண்பர் செந்தில்குமரனுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும். பெண்விடுதலை என்பதே பெண்கள் மட்டும் செய்யவேண்டிய வேலை அல்ல. ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவம் பெறுவதுதான் சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது. அவ்வகையில் பெண்விடுதலை என்பதும் பெண்களின் பிரச்சினை மட்டுமேயில்லை. அது சமூகத்தின் பிரச்சினை. அதைக் களைவதில் ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே சமமான கடமைகள் உண்டு. ஐடியில் எனக்குத் தெரிந்து மேலாளர்களாகவும், உதவி மேலாளர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பான்மை ஆண்களே. அதிலேயே இன்னும் சமத்துவம் முழுமையாக வந்தபாடில்லை. இதில் சங்கம் அமைக்க மட்டும் பெண்கள் வந்து போராடவேண்டும் என்றால் எப்படி:)) ஆனாலும் அப்படி ஒரு கருத்து செயல்வடிவம் பெறும்போது அத்துறைசார்ந்த பெண்களும் அதற்குக் குரல்கொடுப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். நன்றி.



ஆசாத்தின் மூன்றாவது பின்னூட்டம்
i am aasath

You thought that your view is for the way of acheive of freedom to Feminine gender.

Do Any struggle against suffering in world is done by feminist or Comminist?

So everybody in the world whom suffered by class/gender/community can join with them to fight against the Backward thoughts/System. Then, which weapon could guide to us?

Marxism-Leninism or Like Self-support groups, or NGOs of Patkar.

Please form the anger to the semi-feudal society to prevent the females' social activities. Individuals anger haveen't good enough. It forms a plan, party with whom is fighting for the sufferers. Through this struggle, all feminine genders also growth their soccial activities as civilizing Homozapeans.

You got such minimized rights from your former rebelions. What is the consequent history for it without plan?

Shall you justify?

Without promotion of Manager in IT field, why females to try to form a union for struggle. If female or male got it, they should corrupted by the neo-Capitalist societies Strategy. He don't come in front of the struggle.


அதன்பின் எழுதி நான் இப்போது சேர்த்திருப்பவை

ஆசாத்,

நீங்கள் சிந்திக்கும் கோணத்தின் ஒரு நுனியை (யாவது) பிடித்துவிடும் தெளிவை உங்களின் இந்தப் பின்னூட்டம் எனக்கு அளித்துள்ளது. நீங்கள் தெளிவாக எழுதவில்லை என்பதைவிட, நான் இதுவரை அப்படியான ஒரு பார்வையில் தீவிரமாக இதைச் சிந்திக்காதிருந்ததும்கூட காரணமாக இருந்திருக்கலாம், உங்களின் கருத்துக்களை எடுத்தவுடன் சட்டென்று உள்வாங்கிடமுடியாமல் போனதற்கு. ஆனாலும் எனக்கு இந்த இடுகையில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது உங்களின் பின்னூட்டம். நான் சிந்தித்துக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து என்னை இன்னொரு நிலைக்கு அதற்குரிய தர்க்கரீதியான காரணங்களுடன் எடுத்துப்போகும் எழுத்துக்களை நான் விரும்புகிறேன்.

இதற்கான ஒரு ஆயுதம் என்று ஒரேயொரு குறிப்பிட்ட இசத்தை மட்டும் என்னால் சொல்லிவிடமுடியவில்லை. வர்க்கப்பிளவுகளை, முதலாளித்துவத்தை, எதேச்சாதிகாரத்தை, ஆதிக்க மனோபாவத்தை எதிர்த்த எல்லா இசங்களும் பெண்விடுதலையை ஆதரிப்பவை எனச்
சொல்லிக்கொள்பவையே. ஆனால் அவையும் இதற்கொரு முழுமையான தீர்வாக இருந்தனவா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. காரணம் தொழிலாளர்களின் நலன் விரும்புவர்கள் முதலாளித்துவநிலையை மட்டும் எதிர்த்தால் போதும். அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு சிறுபான்மை இனத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள் அதன் உடனடியான அடுத்த ஆதிக்கசக்தியை எதிர்த்தால் போதும். ஆனால் தொடர்ச்சியான வலைகளால் பின்னப்பட்டு ஆரம்ப நுனி தேடிச் சிக்கல் அவிழ்க்கப்படவேண்டிய இடங்களில் இது கடினமாகிறது. இந்து மதத்தில் சாதிகளை ஒழிக்க முடியாமல் இருப்பதற்கு, அடிமட்டத்தில் வைக்கப்பட்டவன் அங்கேயே வருந்திக்கொண்டிருப்பதற்கு
நான் இதையே காரணமாகப் பார்க்கிறேன். பெண்விடுதலையும் இதைப்போல் பல வலைகளுக்குள்ளும் சிக்குண்டிருக்கிறது.

நாம் பெண்விடுதலையை முற்றிலுமாக அடைவதற்கு எதிர்க்கவேண்டியவைகள் ஏராளம். ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் எதிர்க்க வேண்டி வரும், குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் பிரச்சினைகளுக்கு அப்பிரச்சினைகளுக்கு
காரணமானவர்களை மட்டும் எதிர்க்க முடியாது, அப்படியான சாதகமான ஒரு சூழலை அவர்களுக்கு வழங்கி ஊக்குவிக்கும் குடும்பம் என்கிற அமைப்பையே எதிர்க்க வேண்டிவரும். பெண்ணுக்குத் தியாகப் பட்டம் கொடுத்து அவளை உச்சாணியில் உட்காரவைத்திருப்பதாய்ச் சொல்லும் புராணங்களைப் புனிதங்களை எதிர்க்கவேண்டிவரும். இப்படி இன்னும் பலவலைகளைக் கொண்டிருக்கும் இந்த விடயத்திற்கு இவ்வளவையும் எதிர்க்கும் முகமாக ஒரு ஆயுதம் வேண்டும் என்கிற உங்கள் வாதம் நியாயமானதே. அப்படியொரு ஆயுதத்தால் மட்டுமே இது ஒட்டுமொத்த விடியலாவதற்குச் சாத்தியங்களும் உண்டு என்பதை என்னாலும் உணரமுடிகிறது.அவ்வகையில் பார்த்தால் பெண்ணுரிமை இயக்கங்கள் என்பவை அந்தநிலையை இன்னும் எட்டவில்லை என்பதை ஒத்துக்கொள்வதிலும்
எனக்குச் சங்கடமில்லை. ஆனால் அதற்கு அவ்வகை இயக்கங்கள் முயலவேயில்லை என்றும் குற்றம்சாட்ட என்னால் முடியவில்லை. காரணம் அதன் செயலாக்கங்களுக்கான சிந்தனைவடிவைக்கூட அடையமுடியாவண்ணம் இங்கு அறியாமையும், அயோக்கியத்தனங்களும் மண்டிக்கிடக்கின்றன. இவ்விடயத்தில் நான் அறியாமைக்குப் பலியான, மதங்களின் புனிதங்களைக் கேள்விகள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்
பழகிய பெண்களையும் (படிக்காதவர்களைவிடப் படித்தவர்களும்) தைரியமாக விரல்நீட்டிச் சுட்டுவேன். எனவேதான் பெண்கள் வேலைக்குப் போகத் தேவையில்லை என்று மதங்களின் பீடங்களும், "பெண்ணா, லட்சனமா அடக்கமா இரு" என்று சூப்பர்ஸ்டார்களும் வசனம் பேச
முடிகிறது. எங்காவது எதிர்ப்பை எழுப்பும் சிலபெண்களின், ஆண்களின் குரல்களும் வெளித்தெரியாவண்ணம் சுற்றிலும் அதன்மீதான விமர்சன இரைச்சல்கள் கேட்கத் தொடங்கிவிடுகின்றன.

இந்தவகையில் இசங்களும்கூட அவற்றைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இயக்கங்கள் மூலம்(அரசியல் இயக்கங்களானாலும்) தோல்வியைத் தழுவுகின்றன என்பதைத் தமிழ்நாட்டில் கற்பு பற்றிக் கருத்துச்சொன்ன நடிகை குஷ்புவுக்கு எதிராக விளக்குமாறெடுத்துப்
போராடவேண்டிய நிலைக்குப் பெரியாரியவாதிகள் போனதை வைத்துச் சொல்லலாம். பெண்விடுதலை என்பது ஒரு அரசியல் இயக்கமாகவோ அதன் ஆயுதமாக அதற்கென்று ஒரு இசமோ உருவாகும்வரை அழைத்துச்சென்று ஊக்கப்படுத்தவேண்டியவர்களே இப்படிச்
சறுக்கிவிழுவதும், பிறகு அதற்காகக் காத்திருந்த வெறும்வாயை மெல்லும் மதவாதிகளுக்கு, இன்னபிற ஆதிக்க சமூகங்களுக்கு அவல் கிடைத்து, அதுவே முக்கியமாகிவிடுவதும் இயல்பாக நடக்கிறது. இத்தனை கரடுமுரடான பாதைகளைக் கடந்துதான் நீங்கள் சொல்கின்ற
ஒரு கனவை அடையமுடியும். இருந்தாலும் இடைவிடாத தேவைகளும், போராட்டங்களும் இதையும் ஒருநாள் சாத்தியமாக்கும் என்றே நம்புவோம்.

பெண்ணுரிமைவாதிகள் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இருக்கிறார்கள். பாரதியாலும், பெரியாராலும் சொல்லமுடியாத ஒரு பெண்விடுதலையை ஒரு பெண் பெண்ணுரிமைவாதிதான் சொல்லமுடியும் என்றில்லை. எனவே நீங்கள் சொல்லுகிற பெண்
பெண்ணுரிமைவிரும்பிகள் மட்டுமே இதைச் செய்யவேண்டும் என்கிற கருத்தில் எனக்கு இப்போதும் உடன்பாடில்லை. ஒடுக்கப்பட்ட இனத்துக்குக் குரல்கொடுப்பதாய்ச் சொல்லும் இசங்கள், அவற்றைக் காப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட இயக்கங்கள், பெண்விடுதலையை
மானிடவிடுதலையாகப் பார்க்க முடிகிற பெண்கள், ஆண்கள் எல்லோருமே இணைந்து நீங்கள் சொல்லும் இடம்நோக்கி நடக்கலாம். எழுத்து, செயல் என்று கொஞ்சமேனும் இதை உணர்ந்து சிறிதுசிறிதாகச் செயல்பட முயன்றிருக்கிற பெண்களுக்கு எதிராகக் கிளம்பும்
எகத்தாளக் கொக்கரிப்புகளை சமூகத்திலிருந்து அகற்றிக்கொடுக்கவேண்டிய கடமை மேற்சொன்ன அனைவருக்கும் உண்டு.

மற்றபடி ஆசாத், மீண்டும் என் மனமார்ந்த நன்றி உங்களுக்கு. உங்களின் மற்ற எழுத்துக்களின் தன்மையைக் கண்டுணர விரும்பி உங்கள் பக்கத்துக்குப் போனேன். ஆங்கிலத்தில் ஒரேயொரு பதிவு மட்டும், ஒன்றேயென்றாலும், நன்றாக எழுதப்பட்டிருந்த அந்தப் பெரியார் பற்றிய பதிவும் பிடித்தது. உங்களைப்போன்றவர்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும். உங்களுக்குத் தமிழில் எழுத ஏதும் பிரச்சினை இருக்கிறதா?
இருந்தால் சொல்லுங்கள், எனக்குத் தெரியாவிட்டாலும் நண்பர்கள் உதவுவார்கள். தமிழிலும் நீங்கள் எழுதவேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாய் இதைச் சொல்லுகிறேன்.

Monday, December 25, 2006

கற்றதனால் ஆன பயனென்ன.......(பாகம் 3)

செல்வநாயகி அவர்களே சில காலம் முன்பு லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள் டைரக்டர் கௌதமை திட்டியிருந்தார். அவர் திட்டியிருந்த காரணம் அந்த டைரக்டர் தன்னுடைய படத்தில் ஒரு திருநங்கையை மோசமானவராக காட்டியிருந்தது தான்.

அந்தப் படத்தில் காட்டியுள்ளது போல திருநங்கைகள் இன்று சமூகத்தில் இல்லையா?(சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்ததால் தான் அவர்கள் அப்படி ஆனார்கள் என்பதால் சமூகத்தில் உள்ள அனைவரும் அந்தக் காட்சியின் போது தலை குனிந்திருக்க வேண்டும் என்பது வேறு விஷயம்.) ஆனால் திருநங்கைகள் என்பவர்கள் அது போலவே இல்லவே இல்லை என்பது போல அவர் அங்கு ஆவேசப்பட்டது எனக்குத் தவறாக பட்டது

ஏன் இதனை சொல்கிறேன் என்றால் ஒரு விஷயத்தை அலசும் சமயம் இரு வேறு விதமாகவும் அதனை பார்க்க வேண்டும் எனக்குத் தேவையானவற்றை மட்டுமே பார்ப்பேன் என்பது தவறான கண்ணோட்டம் ஆகும்.

உங்களின் பதிவில் நான் சொன்னதை பொதுமைப் படுத்தி விட்டீர்களோ என்று தோன்றுகிறது

நான் அந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது பெண்ணியம் பேசும் எல்லாப் பெண்களையும் அல்ல என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

ஆனால் பெண்ணியம் பேசும் பெண்களில் சிலர் அப்படி இல்லை என்பதை மறுத்தால் அதில் நேர்மை இருக்காது. எதிர்வினைகளே இல்லை இதில் என்பது வேறு சில பிரச்சனைகளுக்கு வழி வகுப்பது போலாகி விடும்.

மற்றபடி உங்களின் பதிவில் எனக்கு முழு உடன்பாடு உண்டு உழைக்கும் பெண்கள் இருக்கும் வீட்டில் ஆண் என்பவனும் சரி சமமாக வேலைகளை பகிர வேண்டும், பெண்களுக்கு இன்று மாதாந்திர தொந்தரவுகள் போன்றவை எல்லாம் பிரச்சனைகளே கிடையாது என்பதை எல்லாம் நூற்றுக்கு நூறு சதவீதகம் ஒப்புக் கொள்கிறேன்.(நான் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது கூட எப்படி இந்த நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சிந்தித்ததன் விளைவே. அதுவும் தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்)

உங்களிடம் இருந்து மேலும் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் சில

பல வேறு ரூபங்களில் பெண்களின் மேல் பிரயோகிக்கப்படும் பாலியல் பலாத்காரங்கள், சீண்டல்கள் போன்றவை பற்றி கூட இன்று பலர் அறியாமல் இருப்பது வேதனைக்குறிய ஒரு விஷயம் ஆகும். இது போன்ற பிரச்சனைகளை குறித்த பார்வைகளை எதிர்பார்க்கிறேன்.

கடைசியாக,

குடும்ப அமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போட்டி அல்ல. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறித்து அல்ல. நான் இதனை செய்வதால் நீ அதனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அப்படி ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதினால் பல பிரச்சனைகளே மிஞ்சும் என்பது என் தாழ்மையான கருத்து. பெண்ணியம் என்பது இது போன்ற விஷயங்களுக்கு துணை போய் விடக் கூடாது. இதனையும் தவறாக அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டாம். சில சமயங்களில் அது போலவும் நடக்கிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறேன்.






செந்தில்குமரன்,
நீங்கள் லிவிங்ஸ்மைல் வித்யாவின் பதிவின் கோணத்தையும், என் பதிவின் கோணத்தையும் ஒப்பிட்டு எழுதியிருப்பதே சரியானதல்ல என்பது என் கருத்து. திருநங்கைகளின்
பிரச்சினைகளும், போராட்டங்களும் பெண்ணியப் போராட்டங்களைவிடவும் கனமானவை. சக மனித இனமான ஆணினத்தோடு சமத்துவம் வேண்டி நிற்கிறது பெண்ணீயம். ஆனால்
முதலில் தாங்கள் மனித இனமாகவே ஏற்றுக்கொள்ளப்படாதிருக்கிற வேதனையை வெளிப்படுத்துகிறது திருநங்கைகளின் போராட்டம். இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை அறியவேண்டும்.

தோழி லிவிங்ஸ்மைல் வித்யாவுக்கு அந்தப் பதிவிற்காகக் குவிந்த கண்டனங்களைப் படித்தபோதே அங்கேயோ அல்லது அதுகுறித்து என் பதிவிலோ எழுதிட நினைத்தும் நேரமின்மை காரணமாக முயலவில்லை. மேலும் அந்தசமயத்தில்தான் என்று நினைக்கிறேன், நண்பர் ஆழியூரான் அதுகுறித்த ஆழ்ந்த கோணத்தில் அம்பேத்காரையெல்லாம் எடுத்துக்காட்டி ஒரு அழகான பதிவிட்டிருந்தார். அதை ஆதரித்து ஒரு பின்னூட்டம் இட்டதோடு சரி. ஆனால் இப்போது நீங்கள் அதை இங்கே நினைவுபடுத்தியிருப்பதால் கொஞ்சம் எழுதலாமென நினைக்கிறேன்.

இச்சமூகத்தில் திருநங்கைகளின் வாழ்வு என்ன? பிறந்ததிலிருந்து சுற்றிவந்த வீட்டிலேயே அந்நியமாக்கப்பட்டுத் தெருவில் விடப்பட்டு, எந்த ஒரு அன்பும், பரிவும் சமூகத்தின் எந்தப்
பக்கத்திலிருந்தும் துளியும் கிட்டாமல் ஒருவேளைச் சோற்றுக்கு எதையாவது செய்தாக வேண்டுமே என்கிற நிலையை, அதன் கொடூரம் எப்படியிருக்கும் என்கிற உண்மையை, உயிரின் ஒவ்வொரு செல்லிலும் ஏற்படும் வலியை நிச்சயமாக செந்தில்குமரன் நீங்களோ, நானோ அறியமுடியாது அப்படி ஒரு வாழ்க்கையில் நாம் துடிக்காதவரை. வெளியிலிருந்துகொண்டு அவர்களின் செயல்களுக்கு நாம் நீதிபதிகளாகித் தீர்ப்புச் சொல்லி, ஒழுக்கத்திற்கென்று நம்கையில் யாரோ கொடுத்துச் சென்ற அளவுகோலில் அவர்களை அளந்து கருத்துச் சொல்வதை நிறுத்துவதே அவர்களுக்கு நாம் முதலில் செய்கின்ற உதவியாக இருக்கமுடியும்.

"திரைப்படத்தில் திருநங்கை ஒருவரை அப்படிக் காட்டியதற்காக லிவிங்ஸ்மைல் வித்யா இப்படி ஆவேசப்படத் தேவையில்லை. ஏனென்றால் அப்படியான திருநங்கைகளே இல்லையா?"என்று கேட்கிறீர்கள். அடைப்புக்குறிக்குள் "அவர்களை அப்படி ஆக்கியது சமூகம்தான்" என்றும் ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் அந்த சமூகத்தின்மீது கோபப்படவும்
கூடாதென்கிறீர்கள். குழப்பமானதாக இருக்கிறது உங்கள் நிலை. எந்த வழியையும் திறந்துவிடாமல் அவர்களைப் புறக்கணிக்கிற சமூகத்தில் உயிர்த்திருத்தலின் பொருட்டு அவர்களாக ஒருவழியில் சென்றால் அதை நக்கலும், நையாண்டியும் செய்து கைகொட்டிச் சிரிக்கிற வேலையையும் அச்சமூகமே செய்கிறது. இந்த வக்கிரமனப்பான்மை ஒழிகிறவரை
திருநங்கைகளைப் போன்றவர்களுக்கு வாழ்க்கை சுலபமாகுமா?

ஏதோ இந்த ஒருபடத்தில் மட்டும்தான் இப்படிக் காட்டப்பட்டதா செந்தில்? நம் திரைப்படங்களில் திருநங்கைகள் காட்டப்படுகிற இடங்கள் எல்லாமே நையாண்டிகளாகத்தானே
இருக்கிறது? வேறெந்த வெளி ஊடக வாசிப்பு, அனுபவமெல்லாம் இல்லாமல் இருந்த என் பள்ளிநாட்களில் சினிமாக்களில் மட்டும் இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த காலத்தில்
"இவர்களைப் பார்த்தால் பயந்து ஒதுங்கிவிடவேண்டும்" என்கிற ரீதியிலும், "இவர்கள் மோசமானவர்கள்" என்கிற கோனத்திலும்தான் என் எண்ணங்கள்கூட இருந்திருக்கின்றன.
இவைபற்றிய சரியான செய்திகளை, அவர்கள் அப்படி ஆகிப்போனதற்கான காரனங்களை எடுத்துச்சொல்லி ஒரு விழ்ப்புணர்வை மனிதர்களிடத்தில் ஏற்படுத்தவும், இவர்கள் சரியாக
வாழ்வதற்கான வழிகளைத் தரவும் முயற்சிக்காத ஊடகங்களுக்கு இவர்களைப் பற்றி நக்கலடித்துக்கொண்டிருக்க மட்டும் முடியும் உரிமை எங்கிருந்து வந்தது?

அவர்கள்மீதான ஏளனங்களும், கொடுமைகளும் முற்றும் நின்றுபோன ஒருசமூகத்தில் திருநங்கைகள் வேண்டுமென்றே இப்படியிருக்கிறார்கள் என்கிற நிலைவரும்போது பேசலாம்
செந்தில் "இருப்பதைத்தானே படத்தில் காட்டுகிறார்கள்? இதற்கு எதற்கு இத்தனை ஆவேசம்?" என்கிற நேர்மையை, நியாயத்தை. இப்போது தேவையில்லை அது. லிவிங்ஸ்மைல் வித்யா என்கிற ஒருவரின் அனுபவம் மட்டுமல்ல. வேறெந்த வெற்றியான வாழ்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் திருநங்கையின் அனுபவமும் எப்படியானதென அறிகிறபோது அவர்களின் உண்மையான துயரங்கள் புரியும். நாட்டியக்கலைஞர் நர்த்தகி நடராஜனின் செவ்வி படித்தேன் சமீபத்தில் குமுதத்தில். இந்தியாவில் பாஸ்போர்ட் வாங்கிய முதல் திருநங்கை அவர். ஆனால் அதை வாங்குவதற்கு அவர் பட்ட பாடுகள் எத்தனை தெரியுமா? நாட்டியம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு, அவரின் பாலினம் கருதியே யாரும் அவருக்குச் சொல்லிதர முன்வராத சோகத்திலிருந்து இப்போதும் அவருக்கு முழு ஆதரவளித்து வாழவைத்துக்கொண்டிருப்பது அவரைப் போன்ற இன்னொரு திருநங்கைதான் என்பது வரைக்கும் சொல்லியுள்ள அவரின் அனுபவங்கள் முக்கியமானவை. இப்படிப் போராடி சாதிக்கும் திருநங்கைகளை(யும்) ஏன் நம் படங்களில் காட்டுவதில்லை? திருநங்கைகள் என்றாலே உடலுறவு வைத்துக்கொள்ள ஆள்தேடி அலைந்துகொண்டிருப்பவர்கள், மற்றவர்களிடம் காசு பிடுங்குபவர்கள் என்பதை மட்டுமே சித்தரித்துக் காட்டமுடிகிறவர்கள் நர்த்தகி நடராஜனை ஏன் காட்டமுடியவில்லை? அந்த ஊடகக் கதைகளின் உற்பத்தியாளர்களை பல்வேறு போராட்டங்களைத் தாண்டி வந்திருக்கும் திருநங்கையான லிவிங்ஸ்மைல் வித்யா திட்டியதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் திட்டியதற்குப் பயன்படுத்திய மொழியைக்கூட விமர்சிக்க நான் விரும்பவில்லை. அதன் பின்னிருந்த வலியை உணர்ந்துகொள்வது மட்டுமே
எனக்கு அதில் முக்கியமாக இருந்தது.

அதுமட்டுமல்ல செந்தில். சாந்தியின் பாலினம் குறித்த பிரச்சினைகளை இப்போது எழுதிக்கொண்டிருக்கிற ஊடகங்களில் ஒன்றில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரையில் ஒரு இடத்தில் "சாந்தி பெண்தான், அவரை அரவாணியைப் போல் மோசமாகக் கருதுவது" என்று படித்தேன். இந்த மொழிகளையெல்லாம் எதிர்த்துக் கண்டனம் எழுப்பி அப்படி நிகழாவண்ணம்
தடுக்க நம்மால் முடிந்ததைச் செய்யலாம். ஊடகங்கள் மட்டுமல்ல. அரச இயந்திரத்தில் பீகாரில் நடந்த ஒரு நிகழ்வை டிசம்பர் 10ம் தேதி ஜூனியர் விகடனில் படிக்க நேர்ந்தது.
அங்கிருக்கிற மாநகராட்சி ஒன்றில் அதற்கு வரவேண்டிய வரிபாக்கியை வசூல் செய்ய ஒரு புது உத்தியை யோசித்த அதன் ஆணையர், திருநங்கைகளை அனுப்பி வரிகட்டாத
கடையினர் முன்பு ஆட்டம் ஆடிப் பாட்டுப் பாடி வரிவசூலிக்கும் முறையை அமுல்படுத்தியிருக்கிறார். திருநங்கைகள் கடைகளுக்கு முன்பு கூடுவதில் அச்சம் கொள்பவர்கள் உடனே வரியைக் கொண்டுபோய்க் கட்டிவிடுகிறார்களாம். ஆனால் மாநாகராட்சி ஊழியர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடைக்காலமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த எதிர்ப்புக்கு அவர்கள் சொல்லும் காரணம் "நாங்கள் போய் வசூலித்தால் எங்களுக்குக் கிடைக்கும் 4 சதவீத கமிஷன் வரும். அலிகளால் அது போய்விடுகிறது. மேலும் நபர்களை அடையாளம் காட்ட நாங்களும் அலிகளுடன் போக வேண்டியிருக்கிறது. பிறகு வீட்டிற்குப் போனால் அலிகளுடன் ஆட்டம்போட்டுவிட்டு வர வெட்கமாக இல்லையா என்று கேட்கிறார்கள் வீட்டில்". இந்தச் செயல், ஒரு அரச இயந்திரமே திருநங்கைகளைப் பயன்படுத்தும் விதம், இவையெல்லாம் நம் சமூகம் எப்படிப்பட்டதென்பதை நாமே அறிந்துகொள்ள (முயன்றால்) ஒரு உதாரணம். நிற்க.

பெண்விடுதலை குறித்தான என் பதிவுகளையும் நீங்கள் தோழி லிவிங்ஸ்மைல் வித்யாவுக்குச் செய்த அதே "நேர்மை அளவுகோல்" கொண்டு அளந்தால் நான் சொல்வதற்கு
ஒன்றுமில்லை. நான் பெரும்பான்மை சமூகப் போக்கை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதில் பெண்விடுதலையைப் பெண்ணுக்குரிய விடுதலையாக மட்டும் நான் பார்க்கவில்லை. அதை
ஆரோக்கியமான சமூகத்திற்குத் தேவையான ஒரு அங்கமாகவே பார்க்கிறேன். அதை உணர்வது ஆண், பெண் இருவருக்குமே அவசியமானது என்பதையும் எழுதியிருக்கிறேன்.
என்னைவிடவும் இதை அழகாக எழுதிய, எழுதும் நண்பர்களும், தோழியரும் இங்கிருக்கிறார்கள். "பெண் விடுதலை கிடைத்து அதைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்கள்" என்பதை எந்த நிகழ்வுகள், அனுபவங்கள் அடிப்படையில் சொல்கிறீர்கள் என்பதை விரிவாக ஒரு பதிவாகவே இடுங்கள். உங்களின் கண்ணோட்டம் பற்றி நான் முழுமையாக அறிந்துகொள்வேன்.


///குடும்ப அமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போட்டி அல்ல. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறித்து அல்ல. நான் இதனை செய்வதால் நீ அதனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அப்படி ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதினால் பல பிரச்சனைகளே மிஞ்சும் என்பது என் தாழ்மையான கருத்து. பெண்ணியம் என்பது இது போன்ற விஷயங்களுக்கு துணை போய் விடக் கூடாது.//////

மீண்டும் ஒரு பொதுமையான கருத்தை இந்த இடுகையில் வைத்திருக்கிறீர்கள். குடும்பம் பற்றிய என் கருத்தை இந்த இடுகையின் முதல் பாகத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறேன்.

" உன் கணவன் குறித்தான உன்பயங்களை உதறிவிட்டு பேரன்பின் வெளிப்பாட்டுடன் அவரையும் உனக்குச் சமமாகவே எண்ணு. உன்னையும் அப்படியே அவர் எண்ணவேண்டும். அந்த அன்பில் இருவருமே கரைந்து போங்கள். ஆனால் தொலைந்து அல்ல. உங்களைப் புதுப்பித்துக்கொண்டு வெளிப்படுத்த, வாழ்வின் சுவாரசியங்களைத் தேட இருவருமே ஒருவருக்கொருவர் உறுதுணையாகுங்கள்"

இதைவிட எனக்குச் சொல்லவும் தெரியவில்லை. மேலும் ஆணுக்கு காலையில் இந்த வேலை, பெண்ணுக்கு மதியம் இந்தவேலை என்றெல்லாமும் நான் எங்கும் அட்டவணையிட்டும் கொடுக்கவில்லை. நான் "கத்தரிக்காய் எந்த அளவுக்கு உடம்புக்கு நல்லது" என்று சொல்லிக்கொண்டிருந்தால் அதையெல்லாம் உருளைக்கிழங்குக்குச் சொன்னதாக நினைத்து அதைச் சாப்பிடத் தொடங்கிவிடுகிறீர்களோ என்று நினைக்கும்படியாகச் சிலசமயங்களில் உங்களின் வாதங்கள் எனக்குத் தோன்றுகின்றன செந்தில்:)). ஆனால் நான் சொன்னது உருளைக்கிழங்கையல்ல என்பதை விளக்கிவிடவாவது எனக்கு விருப்பத்தைத் தரும் வகையில் உங்கள் மொழியின் முதிர்ச்சி இருப்பது மகிழ்ச்சி:))

Tuesday, December 19, 2006

கற்றதனால் ஆன பயனென்ன.......(பாகம் 2)

இந்த இடுகையின் முதல் பாகத்தில் நண்பர் காந்தித் தொண்டன் ஒரு முக்கியமான
வாதத்தை முன்வைத்திருந்தார். "ஆணும் பெணும் சமம். ஆனால் பெண்
வீட்டிலிருப்பதையும், குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதையும் தாழ்வாகக் கருதக் கூடாது.
இன்றைய பெண்ணியவாதம் பெண் சமையல் செய்வதைத் தாழ்வாகக் கருதுகிறது இது
தவறு. பெண்ணுக்குப் பிள்ளைப் பேறும், மாதாந்திரத் தொல்லைகளும் இருப்பதால் அவளை
வீட்டில் இருக்கச் சமூகம் பணித்திருக்கலாம்" என்கிற அவரின் கருத்துக்களை
எடுத்துக்கொண்டு இந்த இடுகையை எழுதுகிறேன். நண்பர் சிவக்குமாரும் மேற்சொன்ன
கருத்துக்களை முன்பொருமுறை சக்தியில் எழுதியிருந்தார். ஆணும், பெண்ணும்
எல்லாவிதங்களிலும் சரியெனக் கருதி வாழ்ந்ததால் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சில
உண்டு என்றும்கூடக் குறிப்பிட்டிருந்தார். சொல்ல வருவதை உள்வாங்கும் முயற்சியோடு,
பரிகசிப்பும், கிண்டலுமற்ற நாகரிகமான சொற்களில் உங்கள் தரப்புக் கருத்துக்களை
இப்படி மனம் விட்டு நீங்கள் எழுதுவதற்கு நன்றி.

முதலில் ஒரு விடயத்தை உங்களுக்குத் தெளிவாக்கிவிட விரும்புகிறேன். "
பெண்ணியவாதம் பெண் சமையல் செய்வதை அடிமைத்தனம் என்று சொல்கிறது." என்று
நீங்கள் எதனடிப்படையில் புரிந்து வைத்திருக்கிறீர்களோ தெரியவில்லை. வெவ்வேறு
துறைகளில் வெளியில் வந்து சாதித்த பெண்களிலிருந்து இதோ பெண்ணுரிமையை
விரும்புவதாக எழுதிக்கொண்டிருக்கும் சாதாரண மனுஷியான நான் வரைக்கும் சமையல்
தெரிந்தவர்கள்தான். கணவனுக்கு எது பிடிக்குமெனத் தெரிந்து, அதன் செய்முறையை
ஆர்வத்துடன் அறிந்து செய்துகொடுத்து மகிழ்வது எல்லாப் பெண்களுக்கும்
பிடித்தேயிருக்கும். "முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" என்று பாராட்டப்பட்ட சங்கத்
தமிழச்சியின் காதலுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை இதோ இப்போது பாரதிராஜா
மகன் மனோஜுக்குச் சமைத்துப்போடுவதற்காக 725 ரெசிப்பிக்களை எழுதிவைத்துக்
காத்திருந்த இந்த நூற்றாண்டு நந்தனாவின் காதல். அப்படியிருக்க "பெண்கள் சமையல்
செய்வதை விரும்புவதில்லை" என்ற முடிவுக்கு நீங்களாக வருவதும், அதைத்தான்
பெண்ணியவாதம் பேசுகிறதென்று புரிந்துகொள்வதும் அபத்தமானது. பெண்ணியவாதம்
பேசவருவது வேறு. "உனக்கு அ, ஆ படிக்க வருவதுபோல் எனக்கும் வரும். உனக்கு
நிரலி எழுத முடிவதுபோல் எனக்கும் எழுதமுடியும். நீ வெளியில் போய்ப் பணிபுரிவதும்,
பொருளீட்டுவதும், பணி உயர்வுகளைப் பெறுவதும், வெளிஉலகில் உனக்கான
அங்கீகாரங்களோடு வாழ்வதுமாய் இருப்பதுமாதிரி நானும் செய்ய ஆர்வம் எனக்குண்டு. நீ
நினைப்பதைச் செய்ய நான் அனுமதிப்பதுபோல் அப்படி உன் மனைவியாகிய என்னை
அனுமதிக்க உனக்கு என்ன பிரச்சினை? உனக்கும், எனக்கும் நம் குழந்தைகளுக்கும்
சமைப்பது முதல், துவைப்பதுவரை அன்றாட அவசிய வேலைகள் செய்வதற்கு நான்
வீட்டிலிருந்தால் வசதியாக இருக்கும். நீ களைத்து வீடு வருகிறபோது உன்
வியர்வைதுடைத்துத் தேநீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த நானிருந்தால் நன்றாக இருக்கும்
என்கிற உன் நினைப்பு. அந்த நினைப்பு மட்டும் அழிந்தால் போதும். மற்றவை சுலபம்.".
நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டால் இதுதான் பெண்ணியவாதம்.

பெண் வேலைக்குப் போவதில் ஏற்படும் இழப்பு ஆண்களுக்கு அவள் வீட்டில் உள்ள நேரம்
குறைவதில் தொடங்குகிறது. வீட்டு வேலைகளில் மற்ற குடும்ப வேலைகளில் ஆண் தன்
பங்கை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் பெண் வேலைக்குப் போவதிலோ, அல்லது அவள்
தனக்கென்று ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பதிலோ உருவாகிறது. அப்படி நேருகிறபோது
ஒருவரின் பணிசார்ந்த சுமைகளை இன்னொருவர் உணர்ந்து, ஒருவருக்கொருவர்
உதவியாய் முழுதுமாய் அனைத்துப் பணிகளிலும் பங்கெடுத்து வாழும்போது அது
வெற்றிகரமாக நிகழும். ஆனால் வேலைக்குப் போனாலும் இவையெல்லாம் பெண்ணால்
மட்டுமே செய்யமுடியும் அல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்பிக்கிடக்கிற
மனமுள்ள இடத்தில், பணிசார்ந்து தன் கட்டுப்பெட்டித்தனங்கள் துறந்து அன்னிய
ஆண்களுடன் சமமாகவும், தோழமையுடனும் பெண் பழகுவதை சீரணிக்கமுடியாதவர்கள்
சுற்றியுள்ள வீட்டில் வேலைக்குப்போவது நிச்சயம் பெண்ணுக்கும், அவளைக்
கொண்டிருக்கும் குடும்பத்திற்கும் உவப்பாயிருக்க முடியாது. பிரச்சினைகள்
முளைப்பதற்கான களம் இதுதான். இதில் பிரச்சினைக்கு உண்மையான காரணம்
வீட்டிலிருந்த பெண் வேலைக்குப்போவதால் வீட்டில் ஏற்படும் அன்றாட
நடைமுறைகளின்பாலான மாறுதல்களை ஏற்கும் அளவு முதிராத மனங்களே! ஆனால் அதை
நோக்க விடுத்து, "வேலைக்குப்போவதால் திமிரெடுத்து, சமையல்செய்வதைத் தாழ்வாகக்
கருதி அதைத்தான் பெண்விடுதலை என்கிறார்கள்" என்று கொடிபிடித்துக்கொண்டிருந்தால்,
"எது உண்மை என்பதைப் புரிய முயற்சிக்காதவரை நீங்கள் புரிந்ததையே உண்மையென்று
நம்பியிருப்பீர்கள்" என்று மட்டும் சொல்லிச்செல்ல வேண்டியதுதான்.

இதில் இன்னொருவிடயமும் கவனிக்க வேண்டும். இரண்டுபேரும் வேலைக்குப்போவதால்
குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டிய, அல்லது வேறு சில தவிர்க்கமுடியாத
கடமைகள் வீட்டில் தவறிப்போகிறதென வரும்போது யாருடைய வருமானமும்,
பணிநன்மையும் அதிகம் என யோசித்து, இன்னொருவர் வீட்டிலிருக்கவேண்டிவரும்.
இங்குதான் சமூகத்தின் முக்கியமான முகம் வெளிப்படும். பெண் வீட்டிலிருப்பது சமூகத்தால்
அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் ஆண் இருந்தால் அவனுக்குப் பெயர் பொண்டாட்டிதாசன்
அல்லது அது ஆணடிமை. தனிப்பட்டமுறையில் இப்போது சில ஆண்களே அப்படி
வீட்டிலிருப்பதை ஏற்று அவரின் மனைவி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாலும் அதை
மற்றவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதற்கு என் வலைப்பக்கத்தில் இட்டிருந்த
"கொழுகொம்பாகும் கொடிகள்" http://selvanayaki.blogspot.com/2006/07/blog-post_31.htmlஎன்ற பதிவில் வந்த சில பின்னூட்டங்களும், அதற்குப்
பிறகு அம்மாதிரி ஆண்களுக்குப் பொண்டாட்டிதாசன் பட்டம் வழங்கி எழுதப்பட்ட ஒரு
பதிவும் சாட்சிகள்.

மேற்குலகினை வசைபாடி நம் காலாசாரம், பண்பாடு குறித்துப் பெருமையடித்துக்கொள்வது
நமக்கு இயல்பென்றாலும் பெண்களும் வேலைக்குப்போகும் நிலைக்கு வந்தபிறகு
மேற்குலகில் வீடுகளிலும் மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒருநாளைக்கு இரண்டு
இடங்களில் பணி செய்யும் அமெரிக்கத் தோழியிடம் உன் குழந்தைகளோடு செலவிடும்
நேரம் குறைகிறதா? எனக் கேட்டபோது "என் கணவர் பகல் நேரத்தில் மட்டும் பணி
செய்கிறார். மாலை வீட்டிற்கு வந்துவிடும் அவர் இரவு உணவு தயார் செய்து
குழந்தைகளுக்கு ஊட்டித் தூங்க வைக்கிறார். நான் மாலை கிளம்பி மீண்டும் பணிக்குப்
போய்விட்டு இரவு வீடு திரும்புகிறேன். காலையில் உணவு தயாரித்து எல்லோருக்கும்
கொடுத்தனுப்புவது நான்" என்பதை இயல்பாகச் சொல்லமுடிகிறது அவரால். "moms at
home" போலவே "dads at home" பிரிவும் இயல்பாக, முக்கியமாக அண்டை
வீட்டுக்காரரின் ஏளன, இளக்காரப் பார்வைகளில்லாமல் இயங்க முடிகிறது இங்கு. இங்கிருக்கும் இந்திய நண்பர்களில் சிலரும் குழந்தைகளுக்கு வேண்டியது செய்து
பள்ளிக்கு அனுப்பித் தாங்களும் பணிக்குச் சென்றுகொண்டு, மனைவியை ஒரு தொலைதூர
ஊரில் படிக்கவைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். இதையே நம் ஊரில் நம் சமூகத்திலும்
கடைப்பிடிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. பெண் படிப்பது, வேலைக்குப்போவதுவரை
ஏற்றுக்கொள்ள முடிந்த நாம், வீடுகளில் பெண்ணை இன்னும் அதே பழைய
கண்ணோட்டத்துடன்தான் பார்த்து வருகிறோம். அதன் விளைவுகள்தான் "வேலைக்குப்
போனால் கொம்பு வருமா? சமையல் செய்வது தாழ்வென்று பெண்கள் நினைக்கிறார்கள்"
என்கிற பல்லவிகள். நம் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள்
எல்லாவற்றிற்கும் பெண் குறித்து இதே எதிர்பார்ப்புகள்தான். இவை மாறவேண்டும் என்று
பேசினால், எழுதினால் இங்கு விழுகிற எதிர்வினைகள் "ஆணடிமைக்கு வித்திடுகிறார்கள்,
சமைப்பதைக் கேவலம் என்கிறார்கள், பெண்விடுதலை குறித்துப் பேசப் பயமாக
இருக்கிறது, அவர்கள் எல்லாம் வந்து சாத்திவிடுவார்கள்" என்கிற ரீதியில்
தொடர்ந்துகொண்டிருப்பதே நாம் பயணிக்கவேண்டிய தூரம் அதிகம் என்பதை
நினைவூட்டுபவையாக உள்ளன.

இதில் கையில் கேப்பைக்கஞ்சியுடன் வந்த நண்பர் கைப்புள்ளையும் (உங்களை இப்படி
அழைப்பது நகைச்சுவைக்காகவே. உண்மையில் உங்கள் நகைச்சுவை எழுத்து நடைக்கு
நான் நெடுநாளைய ரசிகை) சமீபத்தில் பெண்ணீயம் குறித்து இணையத்திலெல்லாம்
தேடிப்படித்து விட்டுக் கருத்துச் சொல்லியுள்ளார். http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/12/with.html கூடவே ஒரு செண்டிமெண்ட்டல் அட்டாக் வேறு செய்துள்ளார், கருத்தம்மா பாத்திரத்தை வைத்து. "வயதான தகப்பனை, அதுவும் தனக்கு கள்ளிப்பால் கொடுத்துக் கொல்ல நினைத்த தகப்பனை நிர்வானமாகக் குளித்துப் பராமரிக்கும் அச்செயலில் குழந்தையைத் தாய் பராமரிப்பது போன்ற தாய்மை கண்டு நிற்பதா? இல்லை என்னைக் கொல்ல நினைத்தவருக்கே இப்படிப் பணிவிடை செய்யவேண்டிய அடிமைத்தனம் என்று பெண்விடுதலை பற்றிப் பேசுவதா?" என்று கைப்புள்ளை கேட்டுள்ள கேள்வி மிக முக்கியமானது. ஏனென்றால் இது கைப்புள்ளை ஒருவரின் கேள்வி மட்டுமல்ல. நம் சமூகத்தின் பெரும்பகுதியின் பார்வையும் இதுதான். இச்சமூகத்திற்கு வேண்டுவதும் இந்தமாதிரிக் கருத்தமாக்கள் மட்டுமே. தன் அக்காவைக்கொன்று, தன் விருப்பமில்லாமலே தன் வாழ்வையும் அழிக்க முனைந்த அக்காவின் கணவரைக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போகும் கருத்தம்மாக்களின் போராட்டமும், கண்ணீரும் நம் சமூகத்தின் கண்களில் விழுவதில்லை, மனதிலும் நிற்பதில்லை. எனவேதான் பணிவிடைக் கருத்தமாவை மட்டுமே எடுத்துக்கொண்டு பேசமுடிகிறது. பெண்ணுரிமை, பெண்விடுதலை என்றெல்லாம் இங்கு எழுதிக்கிழித்துக்கொண்டிருக்கும் எனக்கு அந்தப்படத்தை மூன்றுமுறை பார்த்தும், கருத்தமா அவரின் அப்பாவுக்குக் குளித்துவிடுகிற காட்சியில் "கொல்ல நினைத்தவரையே இப்படிக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கும் கருத்தம்மாவின் அடிமைத்தனம்" என்று நினைக்கத் தோன்றவேயில்லை. மாறாக "ஆண் உசத்தி, பெண் தாழ்ச்சி இல்லை. எனவே பெண்ணுக்குக் கள்ளிப்பால் தரவேண்டிய தேவையில்லை என்பதைக் கருத்தம்மாவின் இந்த அன்பிலிருந்தாவது அந்தப் பெரியவரால் இவ்வளவு வயதுக்குப் பிறகேனும் உணரமுடிந்ததே" என்றுதான் நினைக்கத் தோன்றியது எனக்கு. "ஆனால் பெண்விடுதலை பேசுபவர்கள் கருத்தமாவின் செயலை அடிமைத்தனம் என்பார்கள்" என்று கைப்புள்ளைக்குக் கற்பனையிலெயே முடிவு செய்ய முடிந்திருக்கிறது:))

கணினி இருக்கிறது தட்டச்ச. மொழி இருக்கிறது பகிர்ந்துகொள்ள. விருப்பமும், நேரமும்
அமைந்து நட்புணர்வும் கொண்டு பேசினால் வலைப்பதிவர்கள் சமூகம் நம்
பண்பாட்டிலிருந்து, மதங்கள் வரைக்கும் ஆரோக்கியமான விவாதக்களம் அமைத்து
எவ்வளவோ பேசலாம். செய்யலாம். என்றாலும் இப்போதைக்கு அடியிற்கண்ட
குறிப்புகளோடு மட்டும் இதை நிறைவு செய்கிறேன்.

1. பெண்விடுதலை என்பது சக உயிர் என்ற முறையில் சம அங்கீகாரம்தான் கேட்டு
நிற்கிறது. எனவே "ஜென்ம ஜென்மமாக எனக்குக் கப்பம் கட்டு நீ" என்ற மன்னன்
படத்துப் பாடலை நினைத்துக்கொண்டு விஜயசாந்தி ரஜினியை ஆள்விட்டுக் கட்டி
இழுத்துவருவதுமாதி இங்கு வீதிகளில் பெண்ணுரிமைப் பேச்சுக்காரர்களையும் கற்பனை
செய்துகொள்கிற மாயையிலிருந்து நாம் வெளிவரவேண்டியிருக்கிறது.

2. பெண்விடுதலை பேசுபவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் கணவனுக்குச் சமைப்பதை,
குழந்தைகளுக்கு உடுப்பு போட்டுவிடுவதை, வயதான தாய்தந்தையருக்கு உதவுவதை
எல்லாம் படம் எடுத்துப் போட்டுக்காட்டிக்கொண்டிருப்பது சிரமம். மாரியாத்தா,
கருப்பராயன் கோவில்களில் சூடம் ஏற்றிச் சத்தியம் செய்வதும் சாத்தியமில்லை. அப்படி
முடியாததாலேயே அவையெல்லாம்தான் அவர்களின் பார்வையில் "அடிமைத்தனம்" என்று
முடிவுசெய்துகொள்வதை விரும்பினால் அவரவர் மறுபரிசீலனை செய்யலாம்.

3. சக்தியில் யாரும் கையில் கத்தியோடு நிற்கவில்லை. இது மாற்றுக்கருத்துக்களை
கண்ணியமாகவும், நட்போடும் சுட்டிக்காட்ட விரும்பி அமைக்கப்பட்ட தளம் மட்டுமே
என்பதைத் தாராளமாக நம்பலாம். ஆதலால் "என் தலை போய்விடும்; உன் தலை போகப்
போகிறது" என்ற பயங்களும், கூப்பாடுகளும் இன்றி அவரவருக்குத் தோன்றியதை இந்தக்
காட்டாற்றுச் சுதந்திரப் பெருவெளியில் தைரியமாக எழுதலாம்:))

4. கடைசியாக, நண்பர் காந்தித் தொண்டன் அவர்களின் பின்னூட்டத்தில்
கீழ்க்கண்டவரிகளுக்குச் சொல்ல நினைப்பது.

///பெண்ணுக்குப் பிள்ளைப் பேறும், மாதாந்திரத் தொல்லைகளும் இருப்பதால் அவளை
வீட்டில் இருக்கச் சமூகம் பணித்திருக்கலாம்////

இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கத் தேவையில்லை. 45 வயதில் விண்ணுக்குப்
போய்வர முயலும் இன்னொரு இந்தியப் பெண்ணினைப் பற்றிக்
கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிற இக்காலத்தில் பெண்ணின் மாதாந்திர உடலியல் ஒழுங்கு
குறித்தான பேச்செல்லாம் தேவையே இல்லை. பிள்ளைப்பேறும், மாதச் சுழற்சியும்
பெண்ணின் உடலியல்பு. அவை ஓய்வுக்குரியன. ஆனால் ஊனமல்ல ஒன்றும்
செய்யமுடியாமல் உட்கார்ந்துவிடுவதற்கு.

Monday, December 11, 2006

லீனா மணிமேகலை செவ்வியின் தொடர்ச்சி

தீராநதி: பாரதிராஜாவை முதலில் சந்தித்த நிகழ்ச்சியில் துவங்கினோம்...

லீனா: ஆம். அவர் என் சர்டிஃபிகேட்டுகளைப் பார்த்தார். "why dont you try in films?" என்று கேட்டார். என் கவிதைகளை ஆர்வமுடன் வாசித்தார். நான் தினமும் புதிய கவிதைகள் எழுதி அவரிடம் சென்று காண்பித்தேன். அப்பா சொன்னதை வைத்து அவரைப் பற்றிய ஒரு பெரிய இமேஜ் என் மனதில் உருவாகியிருந்தது.

தீராநதி: அந்த நாட்களில் பாரதிராஜா ஒரு பெரிய ஹீரோவாகவே இருந்தார் இல்லையா?

லீனா: இப்போதும் அவர் ஹீரோதான். மிக முற்போக்கான படங்கள் செய்தவர். `தமிழ் சினிமா` என்பதை அவர் மட்டுமே செய்தார் எனலாம். நான் அவருடைய சினிமாவில் செயல்படத் துவங்கினேன். என் வீட்டாருக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சிதான். பெண்கள் சினிமாத்துறைக்குப் போவதைக் குறித்தெல்லாம் சிந்திக்கவே முடியாத சூழ்நிலை அங்கு. ‘தாஜ்மகால்’ என்ற படத்தில் சேர்ந்து பணியாற்றினேன். யூனிட்டுக்குச் சென்று சினிமாவின் எல்லா விஷயங்களையும் புரிந்துகொள்ளச் சொன்னார் அவர். எங்கு சென்றாலும் பலர் என்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தார்கள், நான் ஒரு நடிகை என்று எண்ணி. ஒரு 20 வயதுப் பெண் யூனிட்டில் வேலை செய்வாள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதாவது ஒரு கிரியேட்டிவ் டீமின் அங்கம் ஆவாள் என்று. யூனிட்டிலிருந்தவர்கள் ஒரு விசித்திர ஜீவியாகத்தான் பார்த்தார்கள். ஆனால், நான் வேலை செய்யத் துவங்கியபோது எல்லாம் மாறிவிட்டது. சினிமா எடுத்தல் எனும் நிகழ்வை ரசிக்கத் துவங்கினேன். சினிமா தயாரிப்பின் ஒவ்வொரு அணுவையும். ஆனால், சினிமா தயாரிப்பு மிகவும் ஃப்யூடலாகத் தெரிந்தது எனக்கு. டைரக்டருக்கு முன்னால் உட்காரக்கூடாது. அதேபோல் அவர்கள் பெண்களிடம் பழகும் விதமும். மூன்று, நான்கு மாதங்கள் வேலை செய்தேன். பிறகு மிக அசௌகரியமாய் உணர்ந்தேன். திரும்பிவிட்டேன்.

வீட்டில் மிகப் பிரச்சனையாக இருந்தது. நன்றாய்ப் படித்து ராங்க் வாங்கிய இவள், மிக உயர்ந்த நிலைக்குச் செல்வாள் என்று நினைத்தால், சினிமாவுக்குப் போய்விட்டாளே என்ற கேள்வி. எனக்கே குழப்பமாய்த்தான் இருந்தது. என் வாழ்க்கைக்கு இது சரிதானா? பிறகு பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் பதினொரு மாதங்கள் வேலை பார்த்தேன். ஆனாலும், சினிமா என் மனதில் நுழைந்துவிட்டிருந்தது. அங்கிருந்துதான் சினிமா பார்க்கும் பழக்கம் துவங்கியது. தியேட்டருக்குச் சென்று வெகுஜனப் படங்களைப் பார்ப்பேன். ஆனால், பெங்களூரின் நகர வாழ்க்கை, வேறு ஏதோ கிரகத்துக்கு வந்து சேர்ந்ததுபோல், த்ரில்லிங்காகவும்தான் இருந்தது. சிறிது காலம்தான் நீடித்தது அது. வேலை ஒருபோதும் விறுவிறுப்பாக இருக்கவில்லை. நல்ல ப்ரோக்ராமர், நல்ல டீ கோடிங், நல்ல டெஸ்டிங், எல்லாம் சரி. ஆனால், அதிலென்ன சேலஞ்ச்? அதன் க்ரியேட்டிவ் ப்ராசஸ் என்ன? யாரிடமும் ஏதும் பேசாமல் எந்திரம் போல செய்யும் வேலை. அப்போதுதான் மீண்டும் சினிமாவுக்கே போனால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில்தான் தீபா மேத்தாவைப் பற்றி கேள்விப்படுகிறேன். நான் அவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் `வாட்டரி`ல் வேலை செய்து பார்க்கச் சொன்னார். நான் சினிமாவுக்குத் திரும்பப் போகிறேன் என்று சொல்லி எப்படியோ அம்மாவைச் சம்மதிக்க வைத்தேன். தீபா மேத்தாவுடன் மறுபடியும் தொடர்புகொண்டேன். ஆனால், `வாட்டர்` நிறுத்தி வைக்கப்பட்டதால் சினிமாவில் உடனே வாய்ப்பு இல்லை என்ற நிலை வந்தது. ஆனாலும், நான் வேலையை விட்டுவிடுவது என்றே முடிவு செய்தேன்.

பிறகுதான் Êஜெரால்டைப் பார்க்கிறேன். அவர் தொலைக்காட்சித் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடன் ஒரு டெலிஃபிலிமில் வேலை செய்தேன். ஜெரால்ட் சில மர்மத் தொடர்களை எல்லாம் எடுத்திருந்தார். நாம் வேலை செய்ய வேண்டிய களம் இதுவல்ல என்று நான் சொன்னேன். நான் விஜய் டி.வி.யில் சேர்ந்தேன். டெலிவிஷன் எனும் ஊடகத்தின் ஆதி அந்தம் கற்றேன். பாரதிராஜாவின் உதவியாளராக வேலை பார்த்த அனுபவமும் என் தொழில்நுட்பப் படிப்புகளும் தொலைக்காட்சி ஊடகத்தின் பரிணாமங்களைக் கற்றுக்கொள்ள உதவின. சினிமாவைப் பற்றிய நிகழ்ச்சிகள் எதுவும் செய்ததில்லை. கலாச்சார நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி ஊடகத்துக்குத் தகுந்த சில நிகழ்ச்சிகள். இன்டர்நெட்டில் ஆய்வு செய்து பல புதிய விஷயங்களையும் செய்தேன்.

அப்போதுதான் ஆக்டிவிஸத்தை மீண்டும் ஆரம்பித்தேன். மாணவ இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் ஆகியவற்றில் சேர்ந்து செயல்படத் துவங்கினேன். கல்லூரியில் படிக்கும்போது கிராமம்தோறும் சென்று தெரு நாடகங்களெல்லாம் செய்திருக்கிறேன். அதெல்லாம் மீண்டும் ஆரம்பம். படிக்கின்ற காலத்தில் நான் மாணவ நிருபராக இருந்தேன். சென்னைக்கு வந்தவுடன் ஃப்ரீலான்ஸராக தினமணி கதிர், தாமரை போன்றவற்றில் செயல்பட்டேன். மாணவ இயக்கக் காலத்தில் ‘புதிய தலைமுறை’ என்ற பத்திரிகையில் வேலை செய்தேன். சேரனைப் பற்றி ஒரு கவர் ஸ்டோரி செய்திருந்தேன். அதிலிருந்து அவர் பெரிய தோஸ்த் ஆனார். சேரன் என்னை மீண்டும் சினிமாவுக்கு வரச்சொல்லி வற்புறுத்தினார். ‘பாண்டவர் பூமி’யில் அவருடன் வேலை செய்தேன். பிறகு அவருடன் சில கருத்து வேறுபாடுகள் உண்டானது. பாலசந்தரிடம் சேர்ந்தேன். இதற்கிடையில் கவிதை எழுதுவதும் அதன்பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தது. ஐம்பது கவிதைகள் வரை முக்கிய பத்திரிகைகளில் பிரசுரமானது. இப்படியாக கவிதை, ஜர்னலிஸம், தொலைக்காட்சி என்று போய்க்கொண்டிருந்தபோதுதான் மின்பிம்பங்களில் சேர்கிறேன். பாலசந்தரின் டி.வி புரொடக்ஷன் கம்பெனி. எனக்குள் மாற்று சினிமாவின் விதை தூவப்பட்டது மின்பிம்பங்களில்தான்.


என் கையில் ஒரு கேமராவைத் தந்து தமிழ்நாடு முழுக்க போய்வரச் சொன்னார்கள். அதுதான் கேமராவுடன் என் முதல் பயணம். என்ன செய்ய வேண்டுமென்று நானே தீர்மானித்துக் கொள்ளலாம். 2001_ல் பல இடங்களுக்குச் சென்று 16 கேஸ் ஹிஸ்டரிகளைப் பதிவு செய்தேன். எல்லாமே பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள். ஈவ் டீசிங், பெண் சிசுக்கொலை. கஸ்டடி கற்பழிப்புகள், குழந்தை கற்பழிப்புகள் இப்படி 16 கேஸ்கள். ரியாலிட்டி ஷோவுக்காக. ஆனால், அந்த நிகழ்ச்சி வரவில்லை. ஆனால், எனக்கு அது மிகவும் தன்னம்பிக்கையைத் தந்தது. அந்த யீஷீஷீtணீரீமீக்கெல்லாம் என் ணீநீtவீஸ்வீளீsனீ தான் பின்னணியை அமைத்துத் தந்தது. என் தொடர்புகள் மூலமாகத்தான் நான் அவற்றை அடைந்தேன். ஒவ்வொரு கேஸ் டைரியும் ஒரு திரைப்படமாகவே இருந்தது. ஆனால், எனக்கு அப்போது அது தெரியாது. இந்த ஃபிலிம் மெட்டீரியலை எப்படி உபயோகித்தால் அதை சினிமா ஆக்கலாம் அல்லது டி.வி நிகழ்ச்சியாக உருவாக்கலாம் என்ற பயிற்சியை மின்பிம்பங்கள் தான் எனக்குக் கற்றுத் தந்தது. நிறைய திரைப்படங்கள் பார்த்தேன். ஃபிலிம் கிளப்களில் உறுப்பினரானேன். மிதிதிரி 2003 என் கண்களைத் திறந்தது. நிறைய திரைத் துறையினரின் அறிமுகம் கிடைத்தது. அதுவரை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் டாக்யூமென்ட்ரிகளை மட்டுமே பார்த்திருந்தேன். இனி இந்தத் திரைப்பட விழாவுக்கு ஒரு சினிமாவோடுதான் வரவேண்டும் என்ற முடிவோடு திரும்பினேன்.

பிறகு, மின்பிம்பங்களிலிருந்து வெளிவந்தேன். திருமணம் ஜெரால்டுடன். திருமணம்தான் உங்களிடம் சொல்லவேண்டிய பெரிய கதை. அது ஒரு கலப்பு மத, கலப்பு சாதி, கலப்பு மொழித் திருமணம். நாங்கள் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள். ஜெரால்ட் தமிழ் கிறித்துவர். நான் ஆசாரங்களுக்கு எதிராக இருந்தேன். தாலியெல்லாம் அணிந்துகொள்ளமாட்டேன். நான் ஒரு பெரியாரிஸ்ட்டும்கூட. திருமணத்துக்கே எதிரானவள். ஆனால், ஜெரால்ட் திருமணத்தை வற்புறுத்தினார். ஒரு நல்ல மனிதன் கம்பேனியனாகக் கிடைப்பதால் ஒத்துக்கொண்டேன். அதே சமயம், சோஷியல்மீடியா ஆக்டிவிஸம் தான் என் கேரியர் என்று முடிவெடுத்த நிலையில், என் வாழ்க்கையிலேயே மரபுகளை எதிர்க்கவில்லை என்றால் முதலில் அதுதான் கேள்விக்குட்படுத்தப்படும். என் ஆக்டிவிஸத்துக்கு இதெல்லாம் தடையாகக்கூடாது என்று எண்ணினேன். நிபந்தனைகளுக்கெல்லாம் சம்மதம் தெரிவித்த ஜெரால்டோ, தன் வீட்டிலும் என் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கினார். கொஞ்சம் காலம் பிடித்தது என்றாலும் எல்லாம் நினைத்ததுபோல் நிறைவேறியது. அதன் வேதனையும் சுகமும் எங்களுக்கு இருக்கிறது.

சொல்கிறவற்றைத் தனிப்பட்ட வாழ்க்கையிலாவது செய்து காட்ட முடிந்ததன் சந்தோஷம் எனக்கு. ஆனால், ஜெரால்ட் மத நம்பிக்கை உடையவர். ஒரு அசல் கிறித்துவ திருமணத்தை எதிர்பார்த்திருக்கலாம். அதைத் தியாகம் செய்துவிட்டாரென்றுதான் எனக்குத் தோன்றியது. பிறகு யோசித்துப் பார்த்தபோது எனக்கு சங்கடமாய்த்தான் இருந்தது. எதற்காக நான் அடம் பிடித்தேன்? ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கையிலேனும் இதைக் கடைப்பிடிக்கவில்லையென்றால், பிறகு வெளியே பேசித்திரிவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒரு பத்து பவுன் தாலியைச் சுமந்தபடி பெண்ணியம் பேச என்னால் முடியுமா? ஜெரால்டால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. பிறகு எல்லா சேனல்களுக்கும் ஃப்ரீலான்ஸராக வேலை செய்யத் துவங்கினேன். சன் டி.வியில் அறிவிப்பாளராயிருந்தேன். ஒரு டி.வி தொகுப்பாளர் என்ற நிலையில் புகழ்பெற்றுமிருந்தேன். ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு அந்த இமேஜ் எனக்குப் பிடிக்காமல் போனது. கொஞ்சிக்குழைந்து அர்த்தமில்லாமல் பேசுபவர்களும் டி.வி தொகுப்பாளர். நானும் டி.வி தொகுப்பாளர். அது எனக்கு ஒரு பெரிய பிரச்சனையாயிருந்தது. ஆனால் நான் எப்போதும் வாழ்வதற்குத் தேவையான பணத்தை நானே சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவள். சினிமாவில் வேலை செய்த நாட்களில் சரியான சம்பளத்தை எப்போதும் கேட்டுப் பெற்றுக் கொள்வேன். மாதம் 15,000 கிடைக்க தகுந்த ஏதாவது வேலை செய்வேன். டி.வி. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கச் சொன்னால் செய்வேன், ஒரு ஷோ டைரக்ட் செய்ய சொன்னாலும் செய்வேன். ஆனாலும், ஒரு வாரமோ பத்து நாட்களோ என் ஆக்டிவிஸத்துக்கு ஒதுக்கிவிடுவேன். அப்படித்தான் நான் `மாத்தம்மா`வை எடுத்தேன். அந்தப் பிரச்சனைப் பற்றி முதலில் கேள்விப்பட்டபோது பெண் குழந்தைகளை தெய்வத்தின் மனைவியாக்குவது, பிறகு பாலியல் தொழிலாளியாக்குவது என்ற பிரச்சனை. அப்போது நான் சன் டி.வியில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதை ஒரு வீடியோவாகச் செய்ய விரும்பினேன். அப்போது நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் வுமன் (ழிதிமிகீ) அமைப்பின் தேசிய சம்மேளனம் நடைபெறப் போவதை அறிந்தேன். அங்கே அதைத் திரையிட முடிவு செய்தேன். அது ஒரு ரிப்போர்டிங் வகைத் திரைப்படம். பெரிய பட்ஜெட்டில் ஆந்த்ரபோரஜிக்கல் அனாலிடிக்கல் சினிமா எடுக்கும் வாய்ப்பு இல்லை. நான் அவர்களிடம் போய் அறிமுகம் செய்து கொண்டேன். என்னை அவர்களில் ஒருத்தியைப் போல் பாவித்து என்னிடம் பழகினார்கள். பிறகு ‘தலித் பெண்கள் எழுச்சி இயக்கம்’ எனும் அமைப்பின் மூலம் அவர்களோடு இன்னும் நெருங்கிப் பழக முடிந்தது. ஒரு நாள், நான் கேமரா கொண்டு வந்தால் இதையெல்லாம் சொல்லமுடியுமா? என்று கேட்டேன். அவர்கள் சம்மதித்தார்கள். ‘எங்களைப்போல் இனி யாரும் வஞ்சிக்கப்படக் கூடாது, அதற்காகவே பேசுகிறோம்’ என்றார்கள். கேமராவின் ஒரு நாள் வாடகையும் மற்ற செலவுகளும் சேர்த்தால் 10,000 ரூபாய் வரும். அதுதான் என் மாத வருமானம். அதைக்கொண்டு ஒரு சினிமா எடுக்க முடியுமா? அதனால் நண்பர்களிடமிருந்து கேமரா கடன் வாங்கினேன். வேனுக்குக் கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாய் மட்டும் ஏற்பாடு செய்து ஒரே நாளில் படமெடுக்க முடிவு செய்தேன். தேசிய சம்மேளனத்துக்கான ரிப்போர்டிங் படம் போல எடுத்தேன். படம் பார்த்தால் உங்களுக்கு அது புரியும். எடிட் செய்யப் பணமில்லை. சப் டைட்டில் கொடுக்க வேண்டும். சீரியல் வேலைகள் நடக்கும்போது டீ, லஞ்ச் பிரேக்குகளில் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று வேலை செய்து ஒன்றரை மாதங்களில் எடிட்டிங் முடித்தேன். பிறகு மாற்று சினிமா நண்பர்களிடம் காண்பித்தேன். நான் ஒரு படம் எடுத்திருக்கிறேன் என்று சொல்லி அல்ல, ழிதிமிகீ_ல் திரையிடுவதற்காக என்று சொல்லி. பிறகு அதைத் திரையிட்டோம். மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மீடியாக்களில் கவனம் பெற்றது. இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே எங்களுக்குத் தெரியாதே என்று பலரும் கூறத் துவங்கினார்கள். ‘அதிர்வுகள்’ என்ற இயக்கத்தினர் நான் அப்போதும் பெயர் வைக்காத அந்தப் படத்தைக் கேட்டார்கள். பல இடங்களிலும் திரையிடுவதற்காக நிறையப் பேர் அணுகினார்கள். பல பத்திரிகையாளர்களும் அந்த இடத்தைப் பார்வையிடத் துவங்கினார்கள். ‘நிழல்’ என்ற அமைப்பினர் என் படத்தை பாரீசிலும், நார்வேயிலும் நடைபெற்ற டாக்யூமென்ட்ரி விழாக்களில் திரையிட ஏற்பாடு செய்தார்கள். பல இடங்களிலும் விருதுகள் கிடைத்தன. நான் உண்மையிலேயே வியந்து போனேன்.

தீராநதி: ஒரு ஆக்டிவிஸ்ட் என்ற முறையில் தமிழின் இன்றைய பெண்ணிய இயக்கம் எந்த நிலையில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?


லீனா:
தமிழில் மட்டுமல்ல, இந்தியாவின் மொத்த பெண்ணிய இயக்கமே ஒரு தேக்க நிலையில் இருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறேன். எதனால் வளரவில்லை என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான பெண்ணிய இயக்கங்களும் மிகவும் மோரலி`ஸட்டாகத்தான் இருக்கின்றன. வரதட்சணை, கற்பழிப்பு இவையெல்லாம் முக்கியமான பிரச்சனைகள்தான். ஆனாலும் பெண்ணியம் ஒரு தியரி என்ற முறையில் இன்னும் வளர்ச்சியடைய வேண்டியுள்ளது. இன்று மாற்றுப் பேறு உரிமைகளைப் பற்றிப் பேசும்போதோ அல்லது சாய்ஸ் ஆஃப் செக்சுவாலிட்டியைப் பற்றிப் பேசும்போதோ பெண்ணிய இயக்கம் வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை.

தீராநதி: வெளிநாட்டு அனுபவங்களில் சந்தித்த தமிழ் வாசகர் லீனாவின் படைப்புகளை எப்படி எதிர்கொண்டார்கள்?

லீனா: பாரீஸ், லண்டன், பெர்லின், சூரிச் (ஸ்விஸ்), யுஎஸ் என எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு க்ரூப் ஆண் எழுத்தாளர்களுக்கு என் கவிதைகள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தி வீக்கில் அதைப் பற்றி ஒரு கட்டுரை வந்தது. என் கவிதைத் தொகுப்பு வெளிவரும் முன்னரே இந்தியா டுடேயில் ஒரு கட்டுரை வந்தது. பெண்கள் உடலின் அரசியலைப் பற்றிக் கூறுவதற்கு எதிராக, எழுதுவதை நிறுத்தச் சொல்லி பல அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வந்தன. `நான் இனி உங்களிடம் அனுமதி பெற்றுத்தான் எழுத வேண்டும் என்றிருக்கிறேன்` என்று ஒரு கவிதைகூட எழுதினேன். அது புதிய பார்வையின் முதல் இதழில் வெளிவந்தது.

சற்று கூர்ந்து யோசித்தால் எல்லா பத்திரிகைகளும் என்னை ஒரு கம்மோடிட்டியாக உபயோகிக்கத் துவங்கினார்கள் எனத் தோன்றியது. என் பிரச்சனையை அவர்கள் விற்பனைச் சரக்காக்கினார்கள். அது என்னை மிகவும் பாதித்தது. என் கலைச் செயல்பாடே இதற்கு எதிரானதுதான். என் பிரச்சனைகள், என் அரசியல், என் எதிர்வினைகள் எதையும் விற்க நான் விரும்புவதில்லை. வாரத்துக்கொருமுறை மீண்டும் மீண்டும் கூட்டம் நடத்துகிறார்கள். வாருங்கள் வாருங்கள் என்று அழைக்கிறார்கள். அங்கே வருபவர்களாகட்டும், நீ ஏன் ஜீன்ஸ் அணிகிறாய் என்ற கேள்வியில்தான் துவங்குகிறார்கள். நாற்பது வருடம் முன்னரே ‘தலைமுடியை வெட்டிக்கொள், சட்டையோ பேண்டோ உனக்கு எது சௌகர்யமோ அதை அணிந்துகொள்’ என்று பெரியார் சொல்லிவிட்டார். ஒரு ஆண் எழுதினால் அது அவனுடைய அனுபவமா? என்று கேட்பதில்லை. ஆனால், பெண் எழுதினால் அது அவளுடைய அனுபவம்தான் என்று கூறி விசாரணைக்குட்படுத்துகிறார்கள்.

தீராநதி: இலக்கியத்திலாகட்டும் மற்ற எந்தத் துறையிலாகட்டும் இந்த மோரல் போலீசிங்கால் சமூகம் கட்டுப்படுத்தப்படுகிறது இல்லையா?

லீனா: ஒருபக்கம் இந்த மோரல் போலீசிங், மறுபக்கம் தான் சொல்வதுதான் சரியென்று சொல்பவர்களின் சர்வாதிகாரம். இவர்களுக்கு இடையில் ஒரு இடத்தைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். இடம் இருக்கிறது. என் திரைப்படங்களை 200 கிராமங்களில் திரையிட்டிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 10 திரையிடல்கள் நடக்கிறது. இருபது திரைப்பட விழாக்களில் பங்குபெற்றிருக்கிறேன். லத்தீன், அமெரிக்கா, யூரோப், ஆசியா என எல்லா கண்டங்களிலும் பயணம் செய்திருக்கிறேன். இதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலாவதாக, தமிழ்நாட்டுக்குள் குறைந்தது 5000 திரையிடல்களை நடத்தியிருக்கிறேன். ஒவ்வொரு திரையிடலும் எனக்கொரு படம்போலத்தான். தியேட்டரில் வருவார்கள், பார்ப்பார்கள், சென்று விடுவார்கள். ஆனால், இது அப்படியல்ல. திரையிடல் முடிந்து ஒரு விவாதம் இருக்கிறதல்லவா? அப்போதுதான் சினிமா முழுமையடைகிறது என்று நான் கருதுகிறேன். விவாதம் நடக்காத தருணத்தில் என் எல்லா சினிமாக்களும் முழுமை பெறாதவைதான். சினிமா எடுத்ததும் அது முழுமையடைவதில்லை. ஒவ்வொரு திரையிடல்களின் மூலமாகத்தான் அது முழுமையடைகின்றது. இதை ஒரு கூட்டு எதிர்க்குரலாக நான் நினைக்கிறேன்.

தீராநதி: சென்சார் பிரச்சனை இருந்ததா?

லீனா: என் எல்லா சினிமாக்களுக்கும் சென்சார் பிரச்சனை இருந்தது. ‘அலைகளைக் கடந்து’ தவிர என் எந்தப் படத்தையும் சென்சார் ஒத்துக்கொள்ளவில்லை. சென்சார்போர்டின் முன் பலமுறை சென்று நிற்க வேண்டியிருந்தது. ஜாதிப் பிரச்சனைதான் தடை என்று சென்சார் போர்டு கூறியது. ‘பறை’யை ஆயிரம் பிரதியெடுத்து எல்லோருக்கும் காண்பித்தேன். ஆனால், அவர்கள் பயந்ததுபோல் ஒன்றும் நடக்கவில்லை. ஜனநாயக முறையிலான விவாதங்கள் தான் நடந்தன. ஜாதிச் சண்டை எதுவும் வரவில்லை. திருப்பூரில் திரையிட்டபோது ஒரு பி.ஜே.பி கட்சிக்காரரும் வந்து பேசினார். ஏனென்றால் நான் காந்தியை விமர்சித்திருந்தேன். திராவிடக் கழகக்காரரும் வந்து பேசினார். அது ஒரு விவாதத்துக்கான களமானது. நியூயார்க்கில் திரையிட்டபோது இடையில் நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். ஆனால், வாஷிங்டன்னில் சினிமா முடிந்த பிறகு, ஆறு மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

தீராநதி: நியூயார்க்கில் ஏன் நிறுத்தச் சொன்னார்கள்?

லீனா: அங்கு அமைப்பாளர்களுக்குக் கருத்தியல் பிரச்சனை. அதுமட்டுமல்ல, என் மற்றொரு படமான `பிரேக் தி ஷாக்கிள்ஸ்` உலகமயமாக்கலுக்கு எதிரானது. அமொரிக்காவிலுள்ள இந்தியர்களெல்லோருமே உலகமயமாக்கலின் விளைவுகள்தான். அங்கே சென்று அவர்களை எதிர்க்க அவர்கள் அனுமதிப்பார்களா? திரையிடுதலை நிறுத்த வேண்டும் என்றார்கள். நான் மறுத்துவிட்டேன். நீங்கள் யாரும் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. நிறுத்த மாட்டேன். எல்லோரும் கடைசி வரை இருந்து பார்த்து விவாதமும் முடிந்தபிறகுதான் கலைந்தார்கள். இந்த முறை ஒரு தமிழ்ச் சங்கத்துக்குப் போகிறேன். தமிழ்ச் சங்கங்களெல்லாம் க்ளாசிக்கல் டான்ஸ் மற்றும் க்ளாசிக்கல் ம்யூசிக் இவற்றுக்கானவை. டாக்யூமென்ட்ரி திரையிடுவதற்கானவை அல்ல. இந்த மாதிரிப் பிரச்சனைகளை எல்லாம் அவர்கள் அறிய விரும்புவதில்லை. தெரியாத்தனமாய் ஏதேனும் ஒரு சங்கத்தில் திரையிடும் அவசியம் நிகழ்ந்துவிட்டால் அவர்கள் உடனே லீனாவை அழைக்க வேண்டாமென்று மற்ற சங்கங்களுக்குத் தெரியப்படுத்திவிடுகிறார்கள். அந்த சங்கங்களின் தலைவரோ, செயலாளரோ பிராமணீய மனப்பான்மையோடு இருந்துவிட்டால், பின்னர் ஒருபோதும் அழைப்பு வராது. இரண்டு, மூன்று தமிழ்ச் சங்கங்களில் எனக்கு இது நிகழ்ந்தது. ஏனென்றால், பிரச்சனைகளைப் பேசுவது என் சினிமா. அவர்களுக்கு அந்த மாதிரி பிரச்சனைகளைக் கேட்க வேண்டியதில்லை. நீங்கள் இப்படிப் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் வந்தால் வருக வருக. ஆனால், திமீபீமீக்ஷீணீtவீஷீஸீ ஷீயீ ழிஷீக்ஷீtலீ கினீமீக்ஷீவீநீணீஸீ ஜிணீனீவீறீ ஷிணீஸீரீலீணீனீs (திணிஜிழிகி) பிராமணத் தமிழியத்துக்கு எதிராகக் குரலெழுப்புகிறது. அவர்கள் யு.எஸ். முழுக்க என் படங்களைத் திரையிட்டார்கள். அதைக் கேள்விப்பட்டபோது தமிழ்நாட்டில் நண்பர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். தமிழ்ச் சங்கங்கள் எஸ்.வி.சேகர் நாடகம், கிரேஸி மோகன் நாடகம் போன்றவற்றை நடத்துவார்கள். அல்லது அவரவர் குழந்தைகளை நன்றாக மேக்கப் செய்து டான்ஸ் ஆட வைப்பார்கள். கமர்ஷியல் படங்கள் திரையிடுவார்கள். டாக்யூமென்ட்ரி திரையிடுவதில்லை.


தீராநதி: தமிழ் பெண் கவிதையின் அரசியல் குறித்து உங்கள் கருத்து என்ன?

லீனா: personal is political ஆகவே, தனிமனித வாழ்க்கைக் கவிதைகளுக்கு நான் எதிரானவள் அல்ல. நான் எழுதுவதும் தனிமனித வாழ்க்கைக் கவிதைகள் தான். ஆனால், நம் சூழ்நிலை விரிவாக வேண்டும். மித்தாலஜியுடன் ஒரு வாதத்துக்கு நாம் தயாராக வேண்டும். இன்று நம்முடைய மைன்ட்ஸ்கேப்பும் லேண்ட்ஸ்கேப்பும் நான்கு சுவர்களுக்குள் அடங்கிக் கிடக்கிறது. இங்கிருந்துதான் நம் விவாதத்தைத் துவக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், அதன் பரப்பு இன்னும் விரிந்ததாக இருக்க வேண்டும். நான் ஒரு சிட்டிசன் அல்ல, குளோபிசன் என்ற நிலையிலிருந்துதான் நான் எல்லாவற்றையும் பார்க்கிறேன். இன்று உள்நாட்டு அரசியலுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. உலகம் அவ்வளவு சுருங்கிவிட்டது. நீங்கள் எழுத வேண்டியது உலக அரசியல் பற்றி. உலக அளவில் நடக்கிற விஷயங்கள் தனிமனித எழுத்திலும் பேச்சிலும் செயல்பாட்டிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். குஜராத் சம்பவத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதினேன். பிறகு பெண்கள், யுத்தங்கள். தமிழ் பெண்ணிய எழுத்தாளர்களிடம் ஒரு போர்க்குணம் உண்டு. ரகசியமான இலட்சியங்களுக்காக எழுதுவது. இவர்களுடைய முதல் தொகுப்புகள் எனக்குப் பிடித்தவை. ஆனால், பிறகு வந்தவையில் வலிந்து சொல்வது நடக்கிறது. என் கவிதைகள் அப்படியாகக் கூடாதென்று நான் நினைக்கிறேன். இலக்கியத்தில் ஒரு வீஸீநீறீusவீஸ்மீ ஆன அரசியலைத்தான் நான் அங்கீகரிக்கிறேன். யாரையும் ஒதுக்க முடியாது. அதைப் பழக்கப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறேன். இளம் வயது எழுத்தாளர்கள் வருவதையும் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதையும் சகிப்புத்தன்மையோடு பார்ப்பதில்லை பலரும். சகிப்புத்தன்மையின்மை, புதிதாய் வருபவர்களைக் கண்டு அச்சம், அராஜகத்தன்மை இவையெல்லாம் பெண் எழுத்தாளர்களுக்கிடையேயும் அதிகமாகி வருகிறது. ஆண் எழுத்தாளர்களுக்கு அது பிறவியிலேயே உண்டு. இவையெல்லாம் என்னைப் பெரிதும் வருத்தமடையச் செய்கின்றன. ஆனால், இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டு கடந்து செல்வதும் எழுத்தினால் மட்டுமே முடியும். இந்த ஆயுதம் மட்டுமே என் கையிலிருக்கிறது. நிலைகொள்ளவும் எதிர்த்து நிற்கவும் எனக்கிருக்கிற ஆயுதங்கள் ஒன்றுதான்.

தீராநதி: இன்றைய சமூகத்தில் குடும்பம் என்ற நிறுவனம் எப்படி ஒரு பெண் கலைஞரை அல்லது பெண் எழுத்தாளரை பாதிக்கிறது?

லீனா: நீங்கள் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆகலாம். வங்கியில் வேலை பார்க்கலாம். அதாவது பெண்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட துறைகளில். ஆனால், கவிதையெழுதச் செல்வீர்களேயானால், யாராவது உங்கள் கவிதைகளைப் பற்றி மோசமான அபிப்பிராயம் சொன்னால் உங்களுக்குப் பிரச்சனைதான். நான் ஒரு நேர்முகத்தில், கற்பு என்றால் என்ன? கறுப்பா, சிவப்பா? இந்தக் கலாச்சாரம் என்று சொல்வதெல்லாம் பெண்களை கட்டுப்படுத்தத்தான், வேறொன்றுமில்லை என்று கூறினால், என் அம்மாவுக்குப் பிரச்சனை. பாலியல் வியாபாரத்தைப் பற்றிய `செல்லம்மா` என்ற சினிமாவில் பாலியல் தொழிலாளியாக நான் நடித்ததால் அம்மாவுக்கு வருத்தம். ஆனால், நான் என்ன செய்கிறேன் என்பதை எல்லோருக்கும் தெரிவிக்க முயற்சிப்பதுண்டு. அந்த விஷயத்தில் நான் கொஞ்சம் வயலன்ட் ஆகக்கூட இருக்கிறேனோ என்று சந்தேகிக்கிறேன். திரையிடலின்போது என் வீட்டிலும் ஜெரால்டின் வீட்டிலும் எல்லோரையும் அழைப்பேன். என் நிலைப்பாடுகளில் அவர்களுக்குப் பிரச்சனை இருக்கலாம். ஆனாலும், நான் எல்லோரையும் அழைத்துக் காண்பித்து விடுவேன். நீ எப்படி இப்படியெல்லாம் பேசலாம் என்றெல்லாம் அவர்களின் மனதில் கேள்விகள் இருக்கும். ஆனால் கேட்பதில்லை.

தீராநதி: லீனாவின் எழுத்து மற்றும் ஆக்டிவிஸத்தோடு ஜெரால்ட் ஒத்துழைத்துப் போகிறாரா?

லீனா: நிச்சயமாக. அவருக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. அம்மாதான் வருத்தப்படுவார். என்னைப்பற்றி யாரும் மோசமாகச் சொல்லக்கூடாது என்பதுதான் அம்மாவின் ஆசை. நீங்கள் புழக்கத்திலிருக்கிற எதை எதிர்த்தாலும் உங்களைக் குற்றம் சொல்ல பலர் இருப்பார்கள். ஒரு பெண் கொஞ்சம் ஆக்டிவாக எதாவது செய்யத் துவங்கினால் முதலில் நடத்தைக் குற்றம் சுமத்தப்படுவாள். ஆனால், அந்த நிலையைக் கடந்து வந்துவிட்டால் உங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பாரதிராஜாவுடன் வேலை பார்க்கும்போதும் எனக்கு இந்தப் பிரச்சனை வந்தது. அவதூறுப் பிரச்சாரம். சமுகம் உங்களை நோக்கி எறிகின்ற முதல் கல் அதுதான். அந்தக் கல்லை எடுத்துத் திருப்பி எறிய உங்களால் முடிந்தால் நீங்கள் முன்னேறிச் செல்லலாம். பயந்து உட்காந்து விட்டீர்களேயானால் அவ்வளவுதான். திறமைசாலிகளான பெரும்பாலான பெண்களின் கேரியர் முடிவடைவது, நீ நடத்தை சரியில்லாதவள்; நல்லவள் அல்ல என்ற குற்றச்சாட்டின் முன்தான். நல்ல பெண் என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெண்களெல்லோருமே இந்த காலகட்டத்தைக் கடந்துதான் போயிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

**********************
தீராநதிக்கு நன்றி.

Friday, December 08, 2006

பிரச்சினைகளைச் சொல்லும் பெண்கள் சென்சிடிவானவர்களா?

சக்தியில் இட நினைத்திருந்தது சென்ற இடுகையான "கற்றதனால் ஆன பயனென்ன" என்னும் தலைப்பின் இரண்டாம் பாகம். கடந்த வாரத்தின் வாசிப்பு அனுபவத்தால் இந்தப் பதிவு. இது நான் எழுத நினைத்திருந்த அந்த இடுகையின் தொடர்சிக்குமுன் ஒரு இடைச் செருகலாக வருகிறது. தன் நட்சத்திரவாரத்தில் பொன்ஸ் எழுதிய "பெண் ஏன் அடிமையனாள்?" நூல் விமர்சனமும், அதைத் தொடர்ந்து இட்ட "பதிவுலகில் பெண்கள்"
என்னும் இடுகையும் முக்கியமானவை. அதிலும் "பதிவுலகில் பெண்கள்" என்னும் இடுகையின்பின் எழுந்த தொடர்வினைகள் கவனிக்கப் படவேண்டியவை. http://poonspakkangkal.blogspot.com/2006/11/blog-post_116472055242688256.html அதன் தாக்கம் நண்பர் இட்லிவடை ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி இங்கு எழுதும் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டிய அளவுவரை கொண்டுபோயிருக்கிறது.
http://idlyvadai.blogspot.com/2006/12/blog-post_1649.html வாக்கெடுப்பு நடத்தி மகிழ்ந்த, வாக்களித்து முடிவு சொல்லி மகிழ்ந்த
எல்லோருக்கும் நன்றி. எங்கள் சமூகம், எங்களைச் சுற்றிய மனிதர்கள் பற்றிய எங்களின் மதிப்பீடுகளை நாங்கள் மீண்டுமொருமுறை சரிபார்த்துக்கொள்ள இதுவும் ஒரு வாய்ப்பானதென்பதால் அவ்வாய்ப்பை வழங்கிய எல்லோருக்கும் நன்றி. இதற்குமேல் என்ன சொல்ல? ஓடுகிற தண்ணீர் உருட்டிக்கொண்டோடினால் என்ன, அதை அனுபவித்துப் பழகிய கற்கள் அதிலேயே தங்கள் வடிவம் செதுக்கிக் கொள்கின்றன. கிளம்பும்
எதிர்வினைகளை ஒரு மத்தாப்பு பொறிவிடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் பார்க்கப் பழக்கிவிடுகின்றன சில அனுபவங்கள்.

http://nilaraj.blogspot.com/2006/11/blog-post_30.html பொன்ஸ் பதிவுக்குத் தோழி நிலாவின் எதிர்வினையாக எழுதப்பட்ட பதிவு "இதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்க வேண்டுமா? புறக்கணித்துவிட்டுப் போய்க்கொண்டேயிருக்கலாம்?" என்று சொன்னது. தொடர்ந்து இயங்குவதற்கு "கடந்துபோதல்" முக்கியமானது. ஆனால் நிகழ்வுகளைப் பதிந்து வைத்தலும் முக்கியமானது. அப்படிப் பதியப்படுவதே முடங்கிப்போதல் ஆகாது. இன்னும்சொல்லப்போனால் அப்படிப் பதியப்படுகிற அனுபவங்கள்
இன்னொருவருக்குத் தொடர்ந்தியங்கும் வலிமையைக் கொடுப்பனவாகக்கூட இருக்கலாம். கரைகடந்து போய் உலாவிவருதல் பழக்கமில்லாத இனத்திலிருந்து முதன்முதலாய் அப்படிப் போய்வருபவர்களின் பிரச்சினைகள் அறியப்படல் நாளை போகத் தீர்மானிப்பவர்கள் தெளிவாய் இருக்க உதவும். நிலாவின் பதிவைக்கூட அதன் பின்னணியிலான நல்ல நோக்கம் கண்டு புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அவரே பின்னூட்டத்தில் " பெண்கள்
அதிக சென்சிட்டிவாக பலதிற்கு உள்ளர்த்தம் கற்பித்துக்கொள்வதால்தான் இப்படிப் புலம்புகிறார்கள்" என்று எழுதியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. நான் புரிந்தவரையில் பொன்ஸ் எழுதிய "பதிவுலகில் பெண்கள்" என்னும் இடுகை புலம்பலாகத் தெரியவில்லை. நிகழ்வுகளின் குறிப்புக்களாகவே தெரிகிறது. அவர் அதில் குறிப்பிட்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்றேனும் தோழி நிலாவுக்கு ஏற்பட்டதா எனத் தெரியவில்லை.
ஆனால் பொன்ஸ் கூறியிருப்பவற்றில் ஒன்றிரண்டு அனுபவங்கள் எனக்கு(ம்) ஏற்பட்டிருக்கின்றன. என்னிலிருந்து கிளம்பும் ஒரு மெல்லிய
புன்னகையோடும், என் வாழ்வில் எனக்கு நெருங்கியவர்களோடு என்னைச் சுற்றிய மற்ற நிகழ்வுகளைப் பகிர்வதுபோல் இதையும் பகிர்ந்துகொள்வதோடும் அந்த அனுபவங்கள் ஈரம் உலர்ந்துவிடுகின்றன. என்றாலும் அவை முக்கியமானவை. ஏன், எதற்காக ஏற்படுகின்றன என்கின்ற காரணங்கள் சிந்திக்கப்படவேண்டியவை. அதன் அடிப்படையில் நான் நாளையோ, பிறகோ என் அனுபவங்களைப் பதிந்து வைத்தால் அது "ஒரு மனுஷி, அவள் இயங்கிய தளம், அங்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதற்கான காரணங்கள்" என்ற ரீதியில் பார்க்கப்படாமல் "இது அவளின் குணத்தின் குறைபாடு, அவள் சென்சிடிவானவள், உள்ளர்த்தங்கள் கற்பித்துக்கொள்ளக்கூடியவள்" என்கிற அடிப்படையில் பார்க்கப்படுவது எவ்வளவுதூரம் பொருளுடையதாயிருக்கும்? கிரண்பேடியின் சுயசரிதையைக்கூட இந்தக்காரணம் சொல்லித் தூக்கியெறிந்துகொண்டே போய்க்கொண்டிருக்கலாம்.

தீராநதியில் வந்திருக்கும் பெண்படைப்பாளி லீனா மணிமேகலையின் பேட்டியைப் படித்துக்கொண்டிருந்தபோது அதிலிருந்து சில பகுதிகளை இங்கு எடுத்துப் போடுதல் இன்றியமையாததாகப் பட்டது. பதிவுலகில் மட்டுமின்றி எங்கெங்கும் தனக்கென்று ஒரு தளம் அமைத்து இயங்கும் பெண்கள் எதிர்கொள்ள நேர்பவை என்னென்ன என்பதை அவரின் பதில்களிலிருந்து அறியலாம். இதில் முக்கியமான இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.
சமூகத்தளங்களில் இயங்குகிற பெண்கள் எல்லோருமே பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் 100 சதவீதம் சொல்லிவிடமுடியாது. நீரின்
போக்கில் மிதந்துசெல்வதுமாதிரி இச்சமுகத்தின் நடைமுறையோடு கைகோர்த்து நடப்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் வருவதில்லை. அதை எதிர்த்துக்
கேள்விகேட்பவர்களுக்குத்தான் அவை அதிகம். பாதுகாப்பான கூரையின் நிழலில் நிற்கமுடிந்தவர்கள், வெட்டவெளியில் நிற்கவேண்டியிருப்பவன் தன்னைக் கருக்கும் வெயிலைத் திட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து "என்ன இவன் ஒரு சாதாரண வெயிலுக்கே இப்படிப் புலம்புகிறான்? " என்று சொல்வதுபோல் அமைந்துவிடக்கூடாது பிரச்சினைகளால் பாதிக்கப்படாதபோது நாம் அப்படிப் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக் கருத்துச் சொல்வது. இனி அவரின் செவ்வியிலிருந்து:-

தீராநதி: சினிமாத்துறையோடு உங்கள் தொடர்பு எப்படி நிகழ்ந்தது?

லீனா: அகிரா குரோசோவா, ஃபெல்லினி என்ற பெயர்களையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ‘பாரதிராஜாவின் படங்களில் எக்ஸ்பிரஷன்’ என்பதுதான் என் அப்பாவின் (டாக்டர்.ரகுபதி, பேராசிரியர், பிஷப் ஹிபர் கல்லூரி, திருச்சி) டாக்டரேட்டுக்கான தீஸிஸ். ஆனாலும் நான் நிறைய சினிமா பார்க்கக்கூடாது என்ற மோராலிஸ்டிக் சிந்தனையுடையவராயிருந்தார் அவர். அவருடைய கட்டுரைகளை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் வேளையில்தான் இந்தப் பெயர்களெல்லாம் எனக்கு அறிமுகமாகின்றன. பாரதிராஜாவின் எல்லாப் படங்களையும் வீடியோவில் பார்த்திருக்கிறேன். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே சென்னையில் படித்தேன்.

பிறகு திருச்சியிலும், மதுரையிலும். அங்கேயெல்லாம் திரைப்பட இயக்கங்கள் கிடையாது. அப்பாவின் மரணத்துக்குப் பிறகு, பாரதிராஜாவுடன் அறிமுகமான பிறகுதான், சினிமா என்றால் என்ன என்று புரிய ஆரம்பித்தது. தம்பி லயோலா கல்லூரியில் மூன்றாம் வருட டிகிரி படித்துக் கொண்டிருக்கும்போதுதான் அப்பாவின் மரணம், அந்த எதிர்பாராத பிரிவு என் வாழ்க்கையையே திசை திருப்பியது. என்ன செய்வது என்று தெரியாத நிலை. சம்பாதிக்கின்ற நபர் வீட்டில் அவர் மட்டுமே. மரணமடைகையில் அவருக்கு 48 வயது. எனக்கோ 20. நான்தான் மூத்தவள். நான் பட்டப் படிப்பை முடித்து லண்டனுக்குச் சென்று எம்.எஸ், முடித்து ஒரு அகாடமீஷியன் ஆக வேண்டுமென்று அப்பா ஆசைப்பட்டிருந்தார். அதற்கான ஆயத்தங்களிலும் இருந்தேன். வாழ்வதற்காக ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன் நான். இதற்கிடையில்தான் அப்பாவின் நினைவுநாளுக்கு அவருடைய ஆராய்ச்சிகளையெல்லாம் புத்தகமாய் வெளியிடத் தீர்மானித்திருந்தோம். அதற்கு ஒரு முன்னுரை வாங்குவதற்காகத்தான் பாரதிராஜாவை முதன்முறை சந்தித்தேன். அன்று அவரிடம் நிறையப் பேசினேன். பள்ளியிலும், கல்லூரியிலும் ஆல்ரவுண்டர் ஆயிருந்தேன். பத்து வருடம் பரதநாட்டியம் பயின்றிருக்கிறேன். ஆறேழு வருடம் கர்நாடக சங்கீதமும், அத்லெட்டிக்ஸில் மாநில அளவில் கலந்துகொண்டிருக்கிறேன். கூடைப் பந்தில் பல்கலைக்கழகத்துக்காய் விளையாடியிருக்கிறேன். அப்பா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் எழுத்து, மேடைப் பேச்சு போன்றவற்றிலும் பங்கு பெற்றிருக்கிறேன். அப்பா மேடையில் பேசுவதைப் பார்த்துத்தான் நானும் மேடைப் பேச்சைத் துவக்கினேன். நடுத்தர வர்க்கக் குடும்பங்களைப் பொறுத்தவரை, படிப்பில் முன்னணியில் இருந்தால் உங்களுக்கு நிறைய சுதந்திரம் கிடைக்கும். பல களங்களில் உங்களை நிரூபித்துக்காட்டிவிட்டால் உங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், அது எனக்கு ஒரு தப்பிக்கும் வழியாயிருந்தது.

பதினொன்று, பன்னிரண்டு வகுப்புகளில் படிக்கையில் நிறைய இடதுசாரி வெளியீடுகளை வாசித்திருக்கிறேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் இந்தோ_ சோவியத் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாய் சோவியத் யூனியனுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அது எனக்குப் பெரிய எக்ஸ்போஷரைத் தந்தது, ‘யங் பயனீர்ஸ் ஆஃப் இந்தியா’ என்று ஒரு ரஷ்யன் ஸ்பான்ஸர் ப்ரோக்ராம் அன்று இருந்தது. தேசிய ஒருமைப்பாட்டுக்கான ஓவியப் போட்டியிலிருந்துதான் தேர்ந்தெடுத்தார்கள். 1990_ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு மூன்று மாதம் முன்புதான் சென்றோம். கருங்கடலின் ஆர்த்டெக்கில் இன்டர்நேஷனல் சில்ட்ரன்ஸ் கேம்ப்பில் பங்குகொண்டோம். அதுவரைக்கும் இடதுசாரியில் மிகவும் எதிர்பார்ப்புக் கொண்டிருந்த நான் நம்பிக்கை இழக்கத் துவங்கினேன். திரும்பி வந்த பிறகு, பல மேடைகளிலும் ‘லீனாவின் ரஷ்ய அனுபவங்கள்’ என்ற தலைப்பில் பேசினேன். சோவியத் யூனியன் வீழ்ந்து விடும். நீங்கள் வெறுமனே கனவு காண வேண்டாம் என்று கூறினேன்.

தீராநதி: எதனால் உங்களுக்கு அப்படித் தோன்றியது?

லீனா: பெஸ்ட்ரோய்கா, க்லாஸ்நாஸ்ட், புதிய சந்தைக் கொள்கைகள், இளைய தலைமுறையினர் நிறைய பேரைச் சந்தித்தேன். இன்று இந்திய இளைஞர்கள் கூறுவதைப் போல எனக்கு அமெரிக்காவில் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்றுதான் அவர்களும் கூறினார்கள். இளம் பெண்களுக்கு மிஸ் யூனிவர்ஸ் ஆக மட்டுமே விருப்பம். மேற்கத்திய உலகம் அவர்களை அந்த அளவுக்கு மயக்கியிருந்தது. இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. எல்லோரும் ஏதோ கண்ணியில் சிக்கிக் கொண்டதைப் போலிருந்தார்கள். மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே உங்களால் ஒரு சோஷலிஸ்ட் ஆக முடியும்.

அதேபோல் கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே ஒரு ஃபெமினிஸ்ட்டாகவும் முடியும். அப்படிக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படுபவர்களை இதைப்போல பலவற்றைக் காட்டி திறந்துவிட்டால் அவர்கள் அதை நோக்கிக் கவரப்படுகிறார்கள். ஆனால், அப்பா இப்படியெல்லாம் நான் பேசக்கூடாது என்று அறிவுறுத்தினார். அவருக்கு சோவியத் யூனியன்தான் கடவுளைப்போல. ஜனசக்தியில் 13 வாரங்கள் தொடர்ந்து இதைப் பற்றி எழுதினேன். அது என் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றிவிட்டது. பத்து வருடங்கள் கற்றபின் இனி பதரநாட்டியம் ஆடுவதில்லை என்று முடிவெடுத்தேன். பரதநாட்டியம் என்பது ஒரு மேல்தட்டுக் கலை. சாதாரண மக்களுக்கானதல்ல. தப்பாட்டம் அல்லது ஏதேனும் ஒரு கிராமியக் கலை கற்றுக்கொள்ளலாம். என்னிடம் இனிமேல் அ ஆ என்று கர்நாடக சங்கீதம் பாடச் சொல்லாதீர்கள். முருகனையும், கண்ணனையும் மனமுருக வேண்டுவதால் என்ன பயன்? இவ்வாறு என் மனமே மாறிப்போனது. எப்படி இது நிகழ்ந்ததென்று என்னால் சொல்ல முடியவில்லை. பரதநாட்டியம் கற்கிறாய். ஆனால், என்ன வெளிப்படுத்துகிறாய்? கண்ணனுக்காக உருகியுருகி ஆடுகிறாய். அல்லது முருகன் உன்னை வஞ்சித்ததாய் பாடிக் கொண்டிருப்பாய். ஆனால், அதன் மூலம் என்ன வெளிப்படுத்துகிறாய்? அய்யோ என்னை விட்டுப் போனாயே என்று அழுவாய், அல்லது கொஞ்சுவாய். எனக்கு அதில் `குறவன் குறத்தி` மட்டுமே பிடித்தது. அதில் காதல் இருக்கிறது. இருவருக்கும் சமநிலை. கர்நாடக சங்கீதத்தில் திரும்பத் திரும்ப சமஸ்கிருத ஸ்லோகங்கள் பாடப்படுகிறது அல்லது தெலுங்கு. ஆனால் என்ன வெளிப்படுத்துகிறோம்?

எனக்கு முதலில் நல்ல திராவிட மொழித் தாக்கம் இருந்தது. அடுக்குமொழி எல்லாம். ஆனால், பிறகு ரஷ்ய இலக்கியம் என்னை வெகுவாகப் பாதித்தது. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அல்லது தேர்ந்தெடுக்கிறீர்களோ அதுதான் உங்கள் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறதென்று நான் கருதுகிறேன். நான் மிகவும் கன்சர்வேட்டிவ்வான குடும்பத்திலிருந்து வந்தவள். என் மகள் நன்றாய் ஆடுவாள், பாடுவாள், வரைவாள் என்ற பெருமைக்காக மட்டுமே இதையெல்லாம் என்னைக் கற்றுக்கொள்ள வைத்தார்கள். நான் ஒரு மேல்ஜாதியில் பிறந்தவள். ஆனால், இன்று அந்த அடையாளத்தை முழுவதுமாக நிராகரித்துவிட்டேன். சிறு வயதிலேயே எனக்குள் நிறைய கேள்விகள். என் அப்பா, பெரியப்பா, தாத்தா, பெரிய தாத்தா எல்லாருமே சி.பி.ஐ,. சி.பி.எம்., சி.பி.ஐ(எம்.எல்) ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களாயிருந்தவர்கள். (தாத்தா ஏ.சீனிவாசன் சி.பி.ஐ.யின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவர், மாமா அழகிரிசாமி சி.பி.ஐ.யின் முன்னாள் பார்லிமென்ட் அங்கத்தினர்). ஆனால், எல்லா தலைவர்களின் மனைவிமார்களும் வீட்டில் தோசை வார்த்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இது ஒரு பெரிய அநீதியாக எனக்குப் பட்டது. எதனால் அவர்கள் தலைமைக்கு வரவில்லை? எதனால் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள்? கட்சிக் கூட்டங்களில்கூட பெண்கள் டீ தான் வைத்துக் கொடுக்கிறார்கள். ஒருபொழுதும் அவர்களை கூட உட்கார வைத்து அரசியல் விவாதிப்பதில்லை. இதெல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்று எனக்கு அன்றே தோன்றியது.

தீராநதி: இப்போதும் அதே நிலைதானே?

லீனா: ஆமாம். நான் சொல்ல வந்தது என் கேள்வி கேட்கும் செயல், குடும்பத்தின் உள்ளேயிருந்தே வந்தது என்பதைத்தான். அதேபோல் தீண்டாமையும் இருந்தது. நீங்கள் மேடையில் எல்லாவற்றையும் பேசுவீர்கள். ஆனால், வயலில் வேலை செய்பவனிடம் எஜமானனாய்ப் பழகுவீர்கள். வீட்டிற்குள் வேலையாட்கள் நேராக நுழையக் கூடாது, சுற்றி வளைந்துதான் வரவேண்டும். துணி துவைப்பவன் வெளியே நின்றபடி துணிகளை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும். அதேநேரத்தில், கம்யூனிஸ்ட் குடும்பம் என்று பெருமைப்பட்டுக் கொள்வீர்கள். இவையெல்லாம் பெரிய முரண்பாடாகத் தோன்றியது எனக்கு. மாரி என்ற வேலைக்காரிக்கு என் உடையைக் கொடுத்து என் படுக்கையில் அமர வைப்பேன். என் தட்டில் சாப்பாடு கொடுப்பேன். கருப்பையா என்ற வயதான வேலைக்காரரை கருப்பையா என்றுதான் அழைக்க வேண்டும். அவன், இவன் என்று தான் கூற வேண்டும். அவர், இவர் என்றெல்லாம் கூறக்கூடாது. பின் எதற்கு வயதானவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்று கூறுகிறீர்கள்? இப்படி எல்லா முரண்பாடுகளும் குடும்பத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. என் வீட்டிலிருந்த அரசியல் தலைவர்கள் ஒருபோதும் எனக்கு மாதிரியாய் இருக்கவில்லை. அவரைப் பார்க்கையில் தலைவர் என்ற நிலையில் ஜனங்கள் மரியாதை கொடுப்பார்கள். ஊரின் தலித்துகளின் பிரச்சனைகளெல்லாம் எங்கள் வீட்டுக்குத்தான் வரும். தாத்தா பஞ்சாயத்து செய்வார். ஆனால். ஒரு தலித்தை கல்யாணம் செய்யக்கூடாது. இதுதான் என் பின்னணி. எழுத்து, கவிதை எப்போதும் என் இதயத்தோடு இணைந்திருந்தது. கண்ணாடியைப் பார்த்து பல கேள்விகளையும் கேட்கத் துவங்கினேன். இந்த முரண்பாடுகளையெல்லாம் எழுத்தின் மூலமாகக் கட்டுடைக்கிறேன், அவற்றுக்குப் பரிகாரம் காண முடிகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.

பின்குறிப்பு:
லீனாவின் செவ்வியின் தொடர்ச்சி அடுத்த இடுகையில் (பதிவு நீளமானதால் படிக்காமல் திரும்பிப் போகிறேன் என்று இதற்கு முந்தைய இடுகையில் சொன்ன நண்பர் பாலபாரதி மற்றும் சில பா.க .ச உறுப்பினர்களைக் கருத்தில் கொண்டு இந்தக் கத்தரிப்பு வேலை:))

Tuesday, November 21, 2006

கற்றதனால் ஆன பயனென்ன? ...........பாகம் 1

மழை அழகுதான். ஆனாலும் நீண்ட மழை இரசிப்புக்குப் பிறகு கொட்டோகொட்டென்று கொட்டும் மழையின் இரைச்சலிலிருந்து விலகி சத்தமற்ற அமைதியில் சங்கமித்திருப்பதும்
அழகாயிருக்கிறது. வலையுலகவாசமும் அப்படியே. உதிர்ந்து குவிந்திருந்த இலையுதிர்கால மரங்களின் இலைகளிடம் விடைபெற்றுக்கொள்ளவும், பனிவிழுந்த முதல்நாளில்
ஆழப்புதைந்துகிடந்த குழந்தைமனதை அவசரமாய்த் தட்டியெழுப்பிக் குதூகலிக்கவும், சாலையில், கடைகளில் சந்திக்கும் மனிதர்களோடு புன்னகைதாண்டிக் கொஞ்சம் பேசிப்பிரியவும் முடிவதாயிருந்தது இந்த ஒருமாதகாலம். அவ்வப்போது வலையுலக நண்பர்களின் மின்னஞ்சல்களை மட்டும் படித்துக்கொண்டிருந்த பொழுதுகளில் ஒன்றில் ஓரு சுட்டியை அனுப்பி "இதை நீ படித்தாயா?" எனக் கேட்டும் "இதுகுறித்து நீ நினைப்பதைப் பகிர்ந்துகொள்ளேன்" எனச் சொல்லியும் ஒரு மடல் வந்திருந்தது பத்மாவிடமிருந்து. அது சுட்டிய பக்கம் கவிதாவின் "வாழ்க்கையை இழந்துவரும் இன்றைய மங்கைகள்" என்னும் பதிவு. சக்தியில் ஏற்கனவே பத்மா இட்டிருந்த பதிவு ஒன்றில் "பெண்ணுரிமையெல்லாம் கொடுத்தும் பிரயோசனமில்லை. ஏனென்றால் அதைப் பெண்கள் யாரும் சரியாகப் பயன்படுத்துவதில்லை" என்று ஆராய்ச்சி முடிவு வழங்கியிருந்த, பத்மா ஏதோ பொழுதுபோகாமல் ஆண்களையெல்லாம் "அவர்கள் பெண்களாகப் பிறக்காததாலேயே" திட்டிக்கொண்டிருப்பதாகவும் கணித்து எழுதியிருந்த நண்பர்களுக்கானதல்ல இப்பதிவு என்ற முதல் முன்குறிப்போடும், "பெண்ணுரிமை பற்றிப் பேசுகிற, எழுதுகிற பெண்கள் எல்லாம் குடும்பத்தை மதிக்காமல், பொழுது கிளம்பினால் வெளியே கிளம்பிப் போய் குடித்துவிட்டு, ஆடிவிட்டுப் பொழுது சாய வீட்டுக்குவருபவர்கள் இல்லை; அவர்களும் கணவன்மீதும், குடும்பத்தின்மீதும் கழுத்துவரைக்கும் காதல்கொண்டு வாழமுடிகிறவர்கள்" என்பதில்
நம்பிக்கைகொள்ளவியலுகிற நண்பர்கள் மட்டும் இதைத் தொடர்ந்து படிக்கலாம் என்கிற இரண்டாவது முன்குறிப்போடும் இப்பதிவை எழுதுகிறேன்.

ஆதிக்க மனோபாவம் மட்டுமல்ல அடிமை மனோபாவமும் நல்ல பலன்களுக்கு வித்திடாது. நம் சமூகத்தின் நோய்க்கூறுகளில் இந்த இரண்டும் அடங்கும். ஆனால் நம் கலாசாரத்தில்
ஆதிக்க மனோபாவம் சரியென்று வெளிப்படையாகச் சொல்லிப் பாதுகாக்கப்படுவதைவிட. அடிமை மனோபாவம் அழகென்று சொல்லிச்சொல்லியே ஆதிக்கத் தன்மைகள் மறைமுகமாக
வளர்த்தெடுக்கப்படுகின்றன. . "பின்தூங்கி முன் எழுவாள் பத்தினி" என்றும் "கொழுநன் தொழுதெழுபவள் பெய்யென்றால் மழை பெய்யும்" என்றும் சொல்லப்பட்ட, எழுதப்பட்ட
விடயங்களைப் புரிந்துகொள்வதில்கூட மனோபாவம் முக்கியமாகிறது. சுதந்திரத்தின் உண்மையான பொருள் புரிந்தவர்கள் இவற்றை இன்னொரு உயிரின்மீதான அடிமைச்சுமைகள்
என்று சொல்லலாம். அப்படியான அடிமைச்சுமைகளினால் தனக்கான சாதகங்களை அனுபவிப்பதே வாழ்வின் இயல்பு என்று கொண்டிருக்கும் நடைமுறைகளைக் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளப் பழகியவர்கள் இதே விடயங்கள் அந்த இன்னொரு உயிரின் பெருமைகளைப் பேசுகிறது என்றும் எடுத்துக்கொள்ள முடியும். இதில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆணாதிக்கச் சிந்தனைகளை இயல்பென்று ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பிசகாமல் தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் அமைத்துக்கொள்ளும் பெண்கள் இங்கு அதிகம். அப்படியான பெண்களுக்கே சமூகம், காப்பியங்கள், இன்னபிற எல்லாம் இங்கு பத்தினிப்பெண்டிர் என்றும், கற்புடை மகளிர் என்றும் பட்டயங்கள் வழங்கிக் கவுரவிக்கும் என்பதால் இதை விமர்சிக்கிற அவசியமும், துணிச்சலும் அற்றுப்போய் வாழும் பெண்கள் அனேகம்.

தமிழ்நாடு வரைபடத்தில் எப்படித்தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாத தொலைதூரக் கிராமமொன்றில் பிறந்த நான் பேச்சுப்போட்டிக்கென்று முதன்முதலாக என் மாவட்டத்தலைநகர் புறப்படத் தயாரானபோது என்னை மிகவும் நேசிக்கும் என் பாட்டியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "பள்ளிக்கூடத்தில் படிச்சாப் போதாதா? இதெல்லாம் எதற்கு?" என்று கேட்டார். அப்போது எனக்குத் துணையாய்ப் பேசி என்னை அழைத்துக்கொண்டுபோனது ஒரு ஆண்தான். பள்ளிப்படிப்பு முடித்துக் கல்லூரி விண்ணப்பங்களுக்காய் அலைந்துகொண்டிருந்த காலத்தில் "போதும் இதுவே. வீட்டில் வேலைகள் பழகட்டும். திருமணத்தின்போது அதுதான் நல்லது" என்று என் மேல்படிப்புக்குத் தடையாகப் பேசியது என்மீது உயிரையே வைத்திருக்கும் என் அம்மாதான். அப்போதும் எனக்குத் துணையாக இருந்ததும், இடம் கிடைத்த பொறியியல் கல்லூரியைப் புறக்கணித்துச் சட்டம்தான் படிப்பேன் என்ற என் பிடிவாதத்தை ஏற்றுக்கொண்டு உதவிசெய்ததும் ஆண்தான். என்னைச்சுற்றிய பெண்கள் பலரும் இப்படியான சிந்தனைகளில் இருந்தவர்கள்தான். இவர்களுக்கெல்லாம் என் செயல்களுக்கான விளக்கங்களைக் கொடுத்து வந்திருந்தாலும் என் நிலைகுறித்து, அதனால் என் எதிர்காலவாழ்வு என்னவாகுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தே வந்தது. காரணம் கேள்விகள் கேட்கும் பெண்களைப் பெரும்பாலும் நம் குடும்ப அமைப்புக்கள் விரும்புவதில்லை. ஆணை மரியாதையுடன் பார்க்கச் சொல்லித்தரப்பட்டவர்களே குடும்பத்தில் அமைதியாகப் பொழப்பு நடத்தமுடியும், அந்த ஆணிற்காகச் சில பல தியாகங்கள் செய்யத்தெரிந்தவர்களே நல்ல மனைவிகளாக இருக்கமுடியும் என்பதிலெல்லாம் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்த (கொண்டிருக்கும்) என் தாய்க்கோ, தாயின் தாய்க்கோ " உன் கணவன் குறித்தான உன்பயங்களை உதறிவிட்டு பேரன்பின் வெளிப்பாட்டுடன் அவரையும் உனக்குச் சமமாகவே எண்ணு. உன்னையும் அப்படியே அவர் எண்ணவேண்டும். அந்த அன்பில் இருவருமே கரைந்து போங்கள். ஆனால் தொலைந்து அல்ல. உங்களைப் புதுப்பித்துக்கொண்டு வெளிப்படுத்த, வாழ்வின் சுவாரசியங்களைத் தேட இருவருமே ஒருவருக்கொருவர் உறுதுணையாகுங்கள்" என்றெல்லாம் பிரசங்கம் நடத்தியதில்லை. அப்படியே
நடத்தியிருந்தாலும் அவர்கள் என்னைப் பேயறைந்த முகத்தோடும், எனக்கு ஏதோ நடந்துவிட்டதென்ற பீதியோடுமே பார்த்திருப்பார்கள். காரணம் அவர்களின் வாழ்விற்கு
வயதாகிவிட்டது. இன்னொருமுறை முதலிலிருந்து தொடங்கி விட்ட இடங்களைச் சரிசெய்ய முடியாது. ஆனால் "நான் அனுபவித்த கல்வி, எனக்குள் எழுந்த தேடல்கள் எல்லாம்
பெறமுடியாத அவர்களின் நிலைகுறித்து மனதில் வருத்தத்துடன் நான் எண்ணிக்கொள்வேனே தவிர என் பாட்டியும், அம்மாவும் அவர்கள் கணக்கில் சாதித்து முடித்தவர்களே. நல்ல
பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள், பெண்கள் என்பதே அவர்களைப் பொறுத்தவரை சாதனைதான். இந்தச் சாதனையை என் பாட்டி, அம்மா மட்டும் செய்யவில்லை.
லட்சக்கணக்கான பெண்களுக்கு இதுதான் சாதனை என்று சொல்லப்பட்டு வெற்றிகரமாக அவர்கள் அதைச் செய்தும் காட்டியிருக்கிறார்கள்.

கவிதா எழுதியிருக்கிறார் " நம் பாட்டியும், அம்மாவும் சாதிக்கவில்லையா? வேலைக்குப் போகும் பெண்கள் அவர்களைப்போல் இல்லாததால்தான் பிரச்சினைகள் வருகின்றன" என்று.
அரைநூற்றாண்டுக்கு முந்தைய வாழ்வையும், இன்றைய வாழ்வையும் ஒப்பிடுகையில் எந்த ஒரு முடிவையும் சட்டென்று சொல்வதற்கு முன் நிறைய விடயங்களை யோசிக்க வேண்டும். நான் இவ்வளவுகாலம் பெண்களுக்குப் படிப்பும், வேலையும், சம்பளமும், தன்னம்பிக்கையும் அவர்களின் வாழ்விற்கு வளமும் அளிப்பவை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் தோழியின் பதிவு மூலம் ஒரு புதிய செய்தியை அறிந்துகொள்கிறேன். படிப்பும், வேலையும் காரணமாக வாழ்க்கையை இழந்துவருகிறார்கள் இன்றைய பெண்கள் என்று. நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளை உதாரணம் காட்டி மட்டுமே தன் கூற்றை நிறுவ முயன்றிருக்கிறார். இப்படி ஒரு மேலோட்டமான சிந்தனையினால் உண்மையை அறியமுடியாது. பொதுவாகவே இப்போது வழக்குகளின் எண்ணிக்கை எல்லாவற்றிலும் அதிகமாகியே வருகிறது. தினம் ஒரு கொலைவழக்குப் பதிவாவதிலிருந்து, மாதத்திற்கொரு சாமியார் மீதான வழக்குவரை மற்ற நீதிமன்றங்கள் வழக்குகளால் நிறைவதுமாதிரியேதான் குடும்பநீதிமன்றங்களிலும்.

சில ஆண்டுகள் நீதிமன்றங்களோடு இணைந்திருந்தவள் என்ற முறையிலும், குடும்பநலநீதிமன்றங்களில் சில வழக்குகளை நடத்தியவள் என்ற முறையிலும் என் அனுபவம் வேறுவகையானது. குடும்பநீதிமன்றங்களுக்கு வழக்குத் தொடர்பாக வரும் பெண்கள் கொழுப்பெடுத்துப்போய் வந்ததாக நான் நினைத்ததில்லை. கால்கடுக்க நீதிமன்ற வாசலில், வழக்கறிஞரின் அலுவலகத்தில் ஏறி இறங்கும் அவர்களின் நிலை கடினமானதாகவே எனக்குத் தோன்றியிருக்கிறது. "இவள் என்னை மதிக்கவில்லை" என்று கூடிநிற்கும் சபையில் சொல்லத் தனியாளாக வந்துநிற்கும் ஆணை மறுத்துப் பேச அங்கும் தனியாக வரமுடியாது தாய்தகப்பனோடோ, சகோதரனோடோ வந்து தயங்கித் தயங்கி நிற்கும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். குடித்துவிட்டு வந்து துன்புறுத்துவதிலிருந்து, தனக்குத் தேவையான மரியாதையை மனைவியின் பெற்றோர்கள் அளிக்கவில்லை என்ற மாப்பிள்ளைத் தோரணை வரையான ஆண்களை அங்கே பார்க்கலாம். நீதிமன்றம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தும் அதைச் செயல்படுத்தாத, கணவன்களும் உண்டு. இவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழேயிருந்து வசதியான மேல்தட்டுவரையும் இருப்பார்கள். பூமியைப்போல் பொறுமையாக இருக்கவேண்டியவள் பெண் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த என் அண்டைவீட்டுப் பெண்ணொருத்தி கணவன் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருப்பதைக் கண்டும் காணாமல் இருந்து அக்கணவனோடே குடும்பமாக வாழ்வதையும், இதேமாதிரித் தனக்கு நேர்ந்தபோது அதைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல் நீத்மன்றம் வந்து குடும்பத்தை உடைத்துக்கொண்ட இன்னொரு பெண்ணையும் ஒருசேரப் பார்க்க முடிந்திருக்கிறது எனக்கு. முன்னவளைவிடவும் பின்னவளின் நிலை இதில் கடினமானது. அவளாவது கணவன் என்ற ஒருவரை மட்டுமே சமாளிக்க வேண்டியிருக்கும். இவளுக்கோ "கொழுப்பெடுத்தவள்" "கணவனை அனுசரிக்கத் தெரியாதவள்" "வேலைக்குப் போகும் திமிர்" என்பதுவரையான சமூகத்திடமிருந்து கிளம்பும் பல கோடாரிகளுக்கும் தலை தப்பித்தாகவேண்டும். இப்படிப் பாதிக்கப்பட்ட பெண் தானாகவோ, தன் நெருங்கிய, தன் அன்புக்குரிய இன்னொரு பெண்ணாகவோ இல்லாதவரை மற்றவர்களுக்கு இப்பெண்கள் "கொழுப்பெடுத்தவர்களாகத்" தெரிவது ஒன்றும் வியப்பானதல்ல. இவையும் தாண்டித் தங்களின் கருத்து, செயல் முரண்களோடு சேர்ந்து வாழ்வது ஒத்துவராதென கணவன், மனைவி இருவருமாக ஒன்றிணைந்து விண்ணப்பிக்கிறவர்களும் உண்டு. அப்படியானவர்களின் மனச் சிக்கல்களைத் தீர்க்க கவுன்சிலிங் தருவதும், அது பலனளிக்காதபோது அவர்கள் பிரிந்துபோவதைச் சுலபமானதாக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. இருந்தாலும் இத்தகைய பிரிவுகளால் குடும்ப அமைப்புகள் சீர்குலைகின்றன, குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்
என்பதைக் காரணங்களாக்கிக் குடும்ப அமைப்புக்களைக் காப்பாற்ற விரும்புபவர்கள்கூட இதில் பெண்களை மட்டுமே ஒருதலையாய்க் குற்றம் சாட்டாமல், மாறிவரும்
வாழ்வுமுறைகளின் சிக்கல்களை எடுத்துக்காட்டி இதில் இருபாலருக்கும் உள்ள பங்குணர்வைப் பேசுவதே பொருத்தமாக இருக்கும்.


படித்த, பெண்ணுரிமை விரும்பும் பெண்களுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினையா? பத்திரிக்கைகள் பேசும் பெண்ணுரிமையோ, வேறெந்த எழவோ அறியாத, படிப்போ, வேலையோ, மாதச் சம்பளமோ எதுவுமின்றி, கணவன் விரட்டியதும் தாய்வீட்டில் தஞ்சம் புகுந்த, நீதிமன்றத்தையே கோவிலாக நினைத்து வந்து நிற்கும் அப்பாவிப் பெண்களும் உண்டு. விசாரணைக்குச் சாட்சிக்கூண்டில் ஏறுவதற்குள் தொண்டை வறண்டு, சிறுநீர்முட்டும் அவர்களின் அவஸ்தைகளைக் கண்டு வேதனைப்பட்ட மணித்துளிகள் என் கணக்கில் உண்டு.
அவர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்துவந்து விவாகரத்து கேட்கும் ஆண்களும் இருக்கிறார்கள். படித்திருந்தாலும் குடும்பம் பணம் வேண்டினால் வேலைக்குப் போகவும், அவளின் பணம் தேவையில்லாத பட்சத்தில் வீட்டிலிருந்து பொறுப்பாகக் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளவுமே பணிக்கப்படும் பெண்களே இன்றும் அதிகம். வேலையை வேலைக்காகச் செய்யவும், அதில் தன் திறமைகளை முழுமையாகக் காட்டி உயரங்களை அடைந்திடவும் ஆண்களைப் போலவே பெண்களும் விரும்புவதில் தவறென்ன இருக்க முடியும்? அப்படித் தனித்தன்மையை விரும்புகிற பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை தோல்வியில் முடிந்தால் அவர்களி¢ன் சாதனை சாதனையாகாதென்றும் கூறியிருந்தார் கவிதா. அவர்களி¢ன் குடும்பவாழ்க்கை தோல்வியில் முடிவதற்கான காரணங்களாகப் பல இருக்கின்றன. வேலைக்கு வெளியில் போனாலும் வீட்டில் பெண் எப்படி இருக்கவேண்டுமென்ற வரையறைகள் நம் குடும்பக் கட்டமைப்புகளில் பெரிதாக மாறிடவில்லை. அதற்குத் தயாராகாத சூழலே பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன. அதில் எதையும் விவாதிக்காமல், கணக்கில்கூட எடுத்துக்கொள்ளாமல், அந்தப் பெண்கள்தான் அதற்குக் காரணம் என்ற ஒற்றைப் பார்வை சரியாக இருக்குமா? கவிதாவைப் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக இப்பெண்களைத் தூக்கியெறியாத மனிதர்களும் நல்லவேளையக இங்கு இருக்கிறார்கள். கலைத்துறையில் வெற்றிகரமாக இன்றும் நின்றுகொண்டிருக்கும் மனோரமாவுக்கோ, சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கோ காயங்கள் நிறைந்த அவர்களின் குடும்பவாழ்க்கை அளவுகோலின்றி அவர்களின் திறமையும், கடின உழைப்பும் அளவுகோலாகி அவர்களுக்குரிய அங்கீகாரங்களை வழங்கியிருப்பது போல் உயரங்களோடும், தனித்தன்மைகளோடும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை தம் வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படுத்திக்கொள்கிற பெண்களும் இருக்கிறார்கள். "இவர்கள் நவீனயுகத்தின் அலங்கோலங்கள்" என்று சான்றிதழ் வழங்கியிருந்தார் கவிதாவின் பதிவில் நண்பர் ஒருவர்.
விட்டேற்றியாக எழுதப்பட்ட இவ்வரிகளை எடுத்துப்போட்டுப் பாராட்டியிருந்த தோழி கவிதாவின் சிந்தனைக்கோணம் புல்லரிக்க வைக்கிறது.

தமிழை மட்டும் அறிவியல் வாகனத்தில் ஏற்றிவிட்டுத் தமிழர்கள் நாம் கற்காலம் நோக்கியே போய்க்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றவைக்கிற எழுத்துக்கள் வலைப்பதிவுகளில்
சிலநேரங்களில் வந்துபோவது பழகிப்போனதுதான் சிலவிடயங்களில். ஆனால் தன் மனைவி எந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக்கூடாது என்பதில்கூட தன் முடிவைத்
திணித்து வாழும் ஒரு ஆணின் செயலில் தவறு இல்லை என்று ஒப்புக்கொள்ள முடிகிற கவிதாவின் பெருந்தன்மை கண்டு வாயடைத்து நிற்கவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் அந்த ஆனின் சிந்தனையில் இருப்பது அறியாமை என்றுகூட எண்ணமுடியாத நிலையை என்னென்பது? சில நண்பர்கள் பெண்ணுரிமையையும், குடிக்கும், புகைக்கும் பெண்களையும்
ஒன்றுபடுத்தி இதைத்தான் பெண்ணுரிமை என்கிறார்கள் என நினைத்துக்கொள்வார்கள்போலும். உடல், மன ஒழுக்கங்கள் இருபாலருக்கும் பொதுவானது. அதைப் பேண மறப்பவர்கள் அதனதற்குரிய பலன்களை அனுபவித்துக்கொள்கிறார்கள். இந்த ஒழுக்கக் கேடுகளைத் தாங்களும் செய்யவே பெண்கள் உரிமை கேட்கிறார்கள் என நினைத்து
உட்கார்ந்திருப்பவர்களுக்குச் சொல்ல ஒன்றுமில்லை. அப்படியின்றி இந்த எழுத்துக்கள் பேசவருவது எது என்பதை உணர்ந்துகொள்ளும், இதன் அடியாழத்தில் ஒட்டிக்கிடக்கும்
கருத்துக்களை உள்வாங்கும் நண்பர்களோடு இதுசம்பந்தமாய்ப் பகிர்ந்துகொள்ள இப்போதைக்கு இன்னும் சில இருக்கின்றன. அவற்றை அடுத்த பதிவில் இடுகிறேன்.


என்னால் வலையில் தொடர்ந்தெழுதுவது முடிவதில்லையென்றாலும், இங்கு எழுதிவரும் பெண்களின் எண்ணிக்கை கூடிவருவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியே. அப்படியெழுதும்
பெண்களின் கருத்துக்களோடு உடன்படுவதும் சிலவேளைகளில் சிலருடையதோடு முரண்படுவதும் உண்டு. எனினும் அவர்களின் எழுத்துக்களை என்னைக் கவரும் ஏதவதொரு
அம்சத்திற்காய்த் தொடர்ந்து வாசித்தே வருகிறேன். அந்தவகையில் நீண்ட இடைவெளிக்குப்பின் எழுதவந்திருக்கும் தோழி கவிதாவின் பக்கத்திலும் என்னைக்கவர்ந்த அம்சங்கள் உண்டு. இது அவரின் குறிப்பிட்ட இடுகையின் கருத்துக்களுடனான முரண்பாடு மட்டுமே என்பதையும் இங்கு பின்குறிப்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன்:))

Monday, October 09, 2006

கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்

நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம் என்ற பதிவிற்கு வந்த சில பின்னூட்டங்கள் ஒரு கருத்தை முன்வைத்திருந்தன. அது பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தாலும் பிரயோசனம் இல்லை, அதை அவர்களால் அனுபவிக்க முடியாது என்ற ரீதியில் அமைந்திருந்தன. இன்னும் சில பின்னூட்டங்கள் நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம் என்ற ரீதியிலும் இருந்தது.
இப்படிப்பட்ட வாக்கியங்களை கவனித்தால் இதில் நாங்கள் கொடுத்தோம் என்ற ஆதிக்கம், நினைத்தால் கொடுக்கவும் எடுக்கவும் செய்ய எங்களால் முடியும் என்ற நினைப்பும் அதனூடன் இருப்பதும் சொல்லாமல் புரியும்.

உண்மைதான், அடங்கி அடி உதையும் பட்டு வேதனையில் உழலும் பெண்கள் நிறைய பேருக்கு விவாகரத்தோ இல்லை பாதுகாப்போ கிடைக்கும் போது அதை அவர்களால் அனுபவிக்க கூட முடியாமல் ஒரு பயமே எதிர்கொள்ளுகிறது. சமீபத்தில் அப்படி விடுதலையாகிப்போன பெண்மீது எனக்கு கூட சினம் வந்தது எப்படி இவர்களால் இந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. ஆனால் யோசித்துப்பார்த்தால் இதற்கடியில் உள்ள பயமும் பாதுகாப்பின்மையும் சுய இரக்கமும் புலப்படும்.

சிறகுகளை வெட்டி, வெட்டி கூண்டுக்குள் ஒரு கிளி வளர்த்து தீடீரென ஒருநாள் அந்த கூண்டை திறந்து விட்டு பறந்து போ என்று சொன்னால் சிறகில்லாத கிளியால் பறக்கத்தான் முடியுமா? ஆனால் இங்கே சிறகுகளை வெட்டி விடுவதோடு கூட குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் அல்லவா கட்டி விட்டிருக்கிறார்கள். கண்னுக்குப்புலப்படாத சமுதாய சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள்.

வீட்டு வன்முறையில் சிக்கிக்கொண்டவர்களுக்கு அதிலேயே இருந்து இருந்து தங்கள் மீதான தன்னம்பிக்கையும் குறைந்து போகிறது. தெரியாத சைத்தானுக்கு தெரிந்த பிசாசே பெரிதென்று மீண்டும் வருகிற நிலையில்உள்ள பெண்கள் நிறைய உண்டு.என்னைவிட்டால் உனக்கு சோறு போட யார் இருக்கிறார்கள், உன் குழந்தைகளை உன்னால் பார்த்து வளார்க்க முடியுமா என்று பொருளாதார சார்புநிலையை கேவலமாக்கி பேசுவது இன்னும் அதிகரிக்கும். படித்து வேலைக்கு போகும் பெண்களும் இந்த பொருளாதார சார்புநிலையை முற்றிலும் கடந்து விடவில்லை.தன்னுடைய பெற்றோர்களை ஆதரிக்க வேண்டுமானால் அதுவும் தன் வருமானத்தில் ஆதரிக்க வேண்டுமானாலும் கூட முறையான அனுமதி கணவன், அவனை பெற்றவர்களிடம் இருந்து பெறவேண்டிய நிலை இருக்கிறது. அப்படி ஒரு ஆண் அனுமதித்துவிட்டாலே அதுகூட அவன் பரந்தமனப்பான்மையை காட்டும் ஒரு கண்ணாடி.மாதம் 8000$ வருமானமென்ற போதிலும் அலுவலகத்தில் ஒரு விழாவிற்கு பணம் கொடுக்க வேண்டுமானாலும் கூட கணவனை கேட்கவேண்டிய நிலையில் உள்ள பெண்களும் உண்டு.

இந்த சிந்தனையை பிரதிபலிக்கும் வகையில் சக வலைப்பதிவாளரின் பதிவொன்றை படித்தேன். எத்தனை விதமான ஆபரணங்கள், சமையலுக்கு தேவையான மைக்ரோவேவ் போன்றவற்றை வாங்கி தந்திருக்கிறேன் என்று ஒரு ஆடவன் சொல்வது எப்படி சரியாகும்? யாருக்கு யார் வங்கித்தருவது?ஆளுக்கொன்றாய் செயல்களை பிரித்து செய்யும் போது ஒன்றில் tangible benefit ஆன வருவாயும் இன்னொன்றில் கண்ணுக்கு புலப்படாத அமைதியும் வரும்போது வருவாய் முழுதும் எனக்கே சொந்தம் என்பதும் அதனால் இன்னும் உரிமைகளைக் கூட்டிகொள்வதும் எப்படி சரியாகும்? வாழும் நாளில் நாம் செய்யவேண்டிய எத்தனையோ காரியங்கள் உண்டு. அவற்றை கணவனும் மனைவியும் செய்யும் போது வேலைகள் எளிதாகவேண்டுமானால் வாங்கும் உபகரணங்களுக்கு கூட ஆணின் தான் மட்டுமே இதில் முடிவெடுக்க உரிமை உள்ளவன் என்று எண்ணுவதும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எத்தனை அழகாக சொல்லி இருக்கிறார் இந்த பொருளாதார சார்பு நிலையை நகைச்சுவை என்ற போர்வைக்குள்.

சிவகுமார் சொன்னதுபோல பெண்களால் மட்டுமே பிள்ளை பெற்றுக்கொள்ளமுடியும், ஆரம்பநிலைகளில் வளர்க்கவும் முடியும் என்பது இயற்கை, அதற்காக வெளியிடத்தில் பணிசெய்து ஊதியம் கொண்டுவரும் ஆடவன் அந்த பெண்னின் சார்புநிலையை பயன்படுத்துதல் தவறல்லவா? வீட்டைப்பராமரித்து குழந்தைகளைப்பேணிதன் தேவைகளையும் தம் மனைவியின் பொருளாதார சார்புநிலையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் ஆண்கள் நிறைய உண்டு.

சமீபத்தில் இங்கே நியுயார்க்கில் வழக்காடுமன்றம் வந்த கதை இது. கணவன் மனைவி இருவரும் மனம் ஒருமித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருமே மேலாண்மை படித்திருந்தனர். ஆனாலும் மனைவி வேலைக்கே செல்லாமல் வீட்டை பரமாரித்து கொள்ள, கணவன் கடுமையாய் உழைத்து செல்வந்தனானான். பிள்ளைகள் இருவர் ஒருவர் மருத்துவராகவும் இன்னொருவர் வழக்கறிஞராகவும் பணியாற்ற அவர்கள் பள்ளி நாள் முதலாய் எல்லாமே அம்மாதான். இந்நிலையில் கணவன் மனைவையை விவாகரத்து செய்ய வழக்கு தொடுத்தான். சேமிப்பு முழுதும் தன்னுடையது என்றும் தன் உழைப்பால் வந்தது என்பதாலும் எதுவும் தர இயலாது என தெரிவிக்க, மனைவியோ நான் வீட்டை பராமரிக்காவிட்டால், இவனால் வேலையில் முழுக்கவனமும் செலுத்தி முன்னேறி இருக்க முடியாது. உழைப்பு அவனுடையது என்றாலும் வீட்டையும் குழந்தைகளையும் அவனையும் பராமரித்த என் செயலும் அதற்கு காரணம் என வாதிக்க, மனைவிக்கு சேமிப்பில் சரிபாதி தீர்ப்பாகியது. பொருளாதார சார்பு நிலை பற்றி பேசும் போது இதுபோன்ற மனைவியின் செயல்கள் கண்டு கொள்ளாமல் போவதும், ஆண்களை அடக்கி வாழும் பெண்களை நீங்கள் கண்டதில்லையா எனவும் பேசுதல் எப்படி சரியாகும்.

கனவுப்பூக்கள் கண்ணில் மின்ன
அன்றொருநாள் அம்மாவைக்கேட்டேன்
என்ன ஆகும் எனது வாழ்க்கை
காற்றுப்போல் சுதந்திரமும்
கவிதைப்போல தனிக்குணமும்
எப்போதும் உடன் வருமா
என்ன ஆகும் எனது வாழ்க்கை
கலைந்த முடியை காதில் ஒதுக்கி
அம்மா சொன்னாள் அணைத்துக்கொண்டு
கனவுகள் வேண்டாம் பெண்ணே
நேற்றைக்கு உன்போல் நானும்
நெஞ்சுக்குள் பூச்சுமந்து நின்றதில் நினைவே மிச்சம்
காலத்தின் மிரட்டல் கேட்டு கனவுகள் விற்று
அதில் வாழ்க்கையை வாங்கியாச்சு
வாசலில் போட்ட கோலம்
வழிப்போக்கர் மிதிக்க ஆச்சு
கனவுகள் வேண்டாம் பெண்ணே
நிஜங்களின் நிழல்கள் ரசிக்க
நீயேனும் கற்றுக்கொள்க என்ற கவிதை வரிகள் போல இங்கே இன்னமும் கனவுகளாகவே சுதந்திரமும் இருக்கிறது.

Monday, September 11, 2006

நாங்கள் நாங்களாக இருக்கிறோம்

சமீப காலமாக வலைப்பதிவுகளில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கொட்டிக்கிடக்கிறது. எந்த தகுதியும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம் என்பது போல யார் வேண்டுமானாலும் பெண்களுக்கு அறிவுரை சொல்லலாம். எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்று. கம்பனின் சீதையாய் இரு, இல்லை பாரதியின் புதுமைப்பெண்ணாய் இரு என்றெல்லாம் ஒரே அறிவுரை மயம்.

மண்பார்த்து நடக்காவிட்டால் தடுக்கி விழுந்துவிடுவார்கள் பெண்கள் என்று எத்தனை கவலை.
ஓட்டமாய் ஓடும் இந்த காலத்தில் அடுத்தவர் பற்றி இப்படி கவலை பட்டு சமுதாயத்தின் சீரழிவை தடுக்கும் இத்தகய மாமனிதர்களை பெற இந்த வலைப்பதிவுலகம் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்.

வானும் காற்றும் கூட சுத்தமாய் இல்லாத நாளில் பெண்களின் சுத்தம் பற்றியும் அந்த நிர்மலமான சுத்தத்திற்கு தீங்கு வரக்கூடாதென்று கவலைப்படும் நல்ல உள்ளங்களின் தன்னலமற்ற தன்மையை எதைச்சொல்லி பாராட்டுவேன்.

எது சுத்தம் என்பதை யார் வரையறுத்தது?ஆண் வரையறுத்தான் என்றால் அவனின் அளவுகோல் கொண்டு பெண்ணை அளக்கும் வன்முறையை யார் சொல்லித்தந்தது? சுத்தமாக நீரும் காற்றும் கூட இல்லாத போது ஏன் பெண்கள் மட்டும் கண்ணுக்கு தெரியாத எதுவோ ஒன்றை காப்பாற்றி பூமியின் நிதர்சனத்தை தாண்டி இருக்க வேண்டும். பூமியில் வாழ வேண்டும், ஆனால் ஆசைகள் அடக்கி இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஆண்கள் எழுதிய விதிகளுக்கு உட்பட்டு, இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒரு பாரத்தை சுமக்க மாட்டாமல் சுமந்து திரியவேண்டும்?

இந்திரா நூயியை பாராட்டக்கூட இவர்களுக்கு அவருடைய நிர்வாகத்திறனோ இல்லை ஆளுமையோ கிடைக்காது. தன் குழந்தைகளுக்கு தானே தயிர்சாதம் தருவது தான் திருப்தி தரும் என்றார், இன்னமும் பாரம்பரியங்களை விடாமல் இருக்கிரார் என்று தேடி காரணங்கள் அடுக்குகிறார்கள்.

யோசிக்க ஆரம்பித்ததும் கேள்விகள் கேட்க ஆரம்பித்ததும் பெண்களின் தப்பு, பெரியவர் சொன்னது பெருமாள் சொன்னது மாதிரி என்று கேட்காமல் நுகத்தடி மாடாய் உழன்று கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நிறைய பேருக்கு தன் வீட்டு பெண்ணும் விழித்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம், வேளைக்கு ராஜவாய் சாப்பிட்டு காலாட்டி படுத்துக்கொள்ளும் சுகம் போய்விடும் என்ற பயம், இத்தனை நாளாய் கேள்விகேட்காத தன் ராஜாங்கம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயம் அடிவயிற்றை கலக்குகிறது.

கம்பனின் சீதையாகவோ இல்லை பாரதியின் புதுமைப்பெண்ணாகவோ இருக்க வேண்டுமா என்ன? பெண்கள் பெண்களாய் இருந்துவிட்டு போகட்டும் அவரவர்க்கு பிடித்தமாதிரி அவரவர்க்கு ஏற்ற மாதிரி. நீங்கள் சொல்ல வேண்டாம்; வேண்டும் போது கலவி கொள்ளுங்கள் என்று, நீங்கள் சொல்ல வேண்டாம் பார்த்து நட என்று. எதையுமே நீங்கள் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்ற நினைப்பை விட்டுவிட்டாலாவது நிம்மதியாய் இருக்கும். பிறந்த உடன் சுவாசிக்கும் காற்று போல நாங்கள் இருந்துவிட்டு போகிறோம் தன்னிச்சையாக.

இங்கே இருக்கும் தலைவர்களுக்கும் அது அரசியல் ஆகட்டும் மதமாகட்டும், பெண்களுக்கு புத்தி சொல்வதென்றால் பாயாசம் சாப்பிடுவது மாதிரி.மடாதிபதியாட்டும் இல்லை மந்திரியாகட்டும், குழந்தைத் தொழிலாளிகள் பற்றியோ பெருகிவரும் வன்முறைகளை பற்றியோ இல்லை தேவைக்கும் அதிகமாக பெருகிவரும் சுற்றுப்புற மாசு பற்றியோ கவலை இருக்கிற மாதிரி தெரியவில்லை. ஆனால் எல்லாருக்கும் பெண் என்ன செய்துவிடுவாளோ என்ற கவலை மட்டும் அடிமட்டத்தில் இருக்கிறது.

உடல் நிலையில்லை,அழியக்கூடிய ஒன்று என்றால் இத்தனை கவலை ஏன்? பெண்களின் நிலையில்லா உடம்பைப் போற்றி பாதுகாக்க பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர அடியில் புரையோடிப்போன சீழும் சகதியுமாய் இருக்கிற தங்களின் மன அழுக்கை பற்றி யாருக்கும் கவலையில்லை.ஒவ்வொருமுறை பேசும் போதும் எழுதும் போது இந்த சீழ் வெளிப்பட்டு அவர்கலிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறது உன் மனம் அடியில் எப்படி புரையோடி போயிருக்கிறது என்று. கவலைப்படத்தான் ஆளில்லை.

Saturday, September 02, 2006

சக்தி: அறிமுக இடுகை

வாசகர்களுக்கு வணக்கம். இம்முறை சக்தியாக சந்திப்பதில் மகிழ்ச்சி. இதுவரை ஊடகங்கள், வலைப்பதிவுகலள் இவை அனைத்திலும் பெண்களின் விடுதலை பற்றியும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் பற்றியும் பல கோணங்களில் பேசியும் எழுதுயுமாகி விட்டது. ஆனாலும் இன்னமும் பலருக்கு பெண்விடுதலை என்பது வேண்டும் போது விருப்பட்டவரோடு கலவி கொள்ள கிடைக்கும் சுதந்திரமாகவும் இன்னும் சிலருக்கு மதுஅரங்கில் மது அருந்தவும் விருப்பம்போல நடனமாட பெண்கள் போராடுவதாகவும் தோன்றுகிறது. இன்னும் சிலருக்கோ பெண்கள் சுதந்திரம் என்பது தமிழகத்து பண்பாட்டை கலாச்சாரத்தை சீரழிக்க வந்த பண்பாக தோன்றுகிறது.

இன்னும் சிலருக்கோ பொருளாதார சுதந்திரம் இன்றி இன்னொருவரை அண்டி வாழும் பலருக்கு சுவாசிக்கும் காற்று கூட அனுமதியோடுதான் கிடைக்கிறது என்னும் போது உன் சிறகுகளை உபயோகித்து பறந்து போ என்று சொல்வதன் வன்முறை புரியவில்லை. இவற்றை பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதால் என்ன பயன் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனாலும் பெண்களின் தொலைத்த அல்டையாளங்களை தேட, சுதந்திரமாக சுவாசிக்கும் காற்றின் இன்பத்தை நுகர கற்று கொள்ளவும் அந்த அனுபவத்தை தேடி பெறவும் இன்னமும் மேலாக சகல அநீதிகளுக்கும் எதிராகவும் தொடர்ந்து எழுதுவது அவசியமாகிறது.

படித்த படிப்பு கற்றுத்தேறும் அறிவும் சிந்தனையை வளர்க்கும். அந்த சிந்தனைகள் நல்ல வழிகளை தேடித்தரும். ஆனாலும் இங்கே வலை உலகில் படித்து நல்ல நிலையில் இருக்கும் பலருக்குமே பெண்விடுதலையின் அடிப்படை புரியவில்லை.

எவ்வாறாக பிற்படுத்தப்பட்ட மக்களின் அறிவை தேடும் வாய்ப்புகள் அந்த அறிவால் சிந்தனையால் அவர்கள் விட்டு விடுதலையாகி விடுவார்களோ என்ற ஐயத்தால் ஒடுக்க பட்டனவோ அதேபோல பெண்கள் கூட்டு முயற்சிகள் கேலி செய்யப்பட்டு நகைப்புக்கு ஆளாக்கப்படுகின்றன. கருத்து மோதல்களும் முரண்களும் ஆன்களிடையே இல்லாதது போல பேசப்படுகின்றன. பிரச்சினைகளை பேசிக்கொள்வதும் அதைப்பற்றிவிவாதிப்பதும் கூட சிறந்தவைதான்.

பெண்களே தங்கள் வழ்வை தாங்களே நிர்ணயித்து கொள்கிற அடிப்படை சுதந்திரம் எது என்று கூட புரிந்து கொள்ள முடியாத வகையில் சமுதாயம் கலாச்சாரம் என்ற பொருளில்லா நிலைமைகளில் இருந்து மீளவும் இத்தகைய பதிவுகள் அவசியம் என்றே உணர்கிறோம்.

வாழ்க்கையின் நிறங்களை அழகாகச் சொல்லும் செல்வநாயகி, அற்றம் பத்திரிக்கை மூலமாக பெண்களின் பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணரும் பிரதீபா, அறிமுகம் எதுவும் தேவையில்லா வகையில் பலரும் அறிந்திருக்கும் மதி கந்தசாமி மற்றும் நானும் சேர்ந்து இங்கு எழுத எண்ணி இருக்கிறோம்.




அச்சமில்லை, அமுங்குதலில்லை,
நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவமில்லை, பதுங்குதலில்லை
ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்,
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கு மஞ்சோம், எப்போழுது மஞ்சோம்


என்ற பாரதியின் வரிகளுக்கொப்ப இந்த பதிவுகள் நலிந்தவர்களுக்காகவும், வலையுலகில் நிலவி வரும் பெண்கள் மீது மிக சுலபமாக வாரிவிடும் அவதூறுகளை எதிர்கொள்ளவும் அமைக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சி.

-பத்மா அர்விந்த்

சக்தி: அறிமுக இடுகை

வாசகர்களுக்கு வணக்கம். இம்முறை சக்தியாக சந்திப்பதில் மகிழ்ச்சி. இதுவரை ஊடகங்கள், வலைப்பதிவுகலள் இவை அனைத்திலும் பெண்களின் விடுதலை பற்றியும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் பற்றியும் பல கோணங்களில் பேசியும் எழுதுயுமாகி விட்டது. ஆனாலும் இன்னமும் பலருக்கு பெண்விடுதலை என்பது வேண்டும் போது விருப்பட்டவரோடு கலவி கொள்ள கிடைக்கும் சுதந்திரமாகவும் இன்னும் சிலருக்கு மதுஅரங்கில் மது அருந்தவும் விருப்பம்போல நடனமாட பெண்கள் போராடுவதாகவும் தோன்றுகிறது. இன்னும் சிலருக்கோ பெண்கள் சுதந்திரம் என்பது தமிழகத்து பண்பாட்டை கலாச்சாரத்தை சீரழிக்க வந்த பண்பாக தோன்றுகிறது.

இன்னும் சிலருக்கோ பொருளாதார சுதந்திரம் இன்றி இன்னொருவரை அண்டி வாழும் பலருக்கு சுவாசிக்கும் காற்று கூட அனுமதியோடுதான் கிடைக்கிறது என்னும் போது உன் சிறகுகளை உபயோகித்து பறந்து போ என்று சொல்வதன் வன்முறை புரியவில்லை. இவற்றை பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதால் என்ன பயன் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனாலும் பெண்களின் தொலைத்த அல்டையாளங்களை தேட, சுதந்திரமாக சுவாசிக்கும் காற்றின் இன்பத்தை நுகர கற்று கொள்ளவும் அந்த அனுபவத்தை தேடி பெறவும் இன்னமும் மேலாக சகல அநீதிகளுக்கும் எதிராகவும் தொடர்ந்து எழுதுவது அவசியமாகிறது.

படித்த படிப்பு கற்றுத்தேறும் அறிவும் சிந்தனையை வளர்க்கும். அந்த சிந்தனைகள் நல்ல வழிகளை தேடித்தரும். ஆனாலும் இங்கே வலை உலகில் படித்து நல்ல நிலையில் இருக்கும் பலருக்குமே பெண்விடுதலையின் அடிப்படை புரியவில்லை.

எவ்வாறாக பிற்படுத்தப்பட்ட மக்களின் அறிவை தேடும் வாய்ப்புகள் அந்த அறிவால் சிந்தனையால் அவர்கள் விட்டு விடுதலையாகி விடுவார்களோ என்ற ஐயத்தால் ஒடுக்க பட்டனவோ அதேபோல பெண்கள் கூட்டு முயற்சிகள் கேலி செய்யப்பட்டு நகைப்புக்கு ஆளாக்கப்படுகின்றன. கருத்து மோதல்களும் முரண்களும் ஆன்களிடையே இல்லாதது போல பேசப்படுகின்றன. பிரச்சினைகளை பேசிக்கொள்வதும் அதைப்பற்றிவிவாதிப்பதும் கூட சிறந்தவைதான்.

பெண்களே தங்கள் வழ்வை தாங்களே நிர்ணயித்து கொள்கிற அடிப்படை சுதந்திரம் எது என்று கூட புரிந்து கொள்ள முடியாத வகையில் சமுதாயம் கலாச்சாரம் என்ற பொருளில்லா நிலைமைகளில் இருந்து மீளவும் இத்தகைய பதிவுகள் அவசியம் என்றே உணர்கிறோம்.

வாழ்க்கையின் நிறங்களை அழகாகச் சொல்லும் செல்வநாயகி, அற்றம் பத்திரிக்கை மூலமாக பெண்களின் பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணரும் பிரதீபா, அறிமுகம் எதுவும் தேவையில்லா வகையில் பலரும் அறிந்திருக்கும் மதி கந்தசாமி மற்றும் நானும் சேர்ந்து இங்கு எழுத எண்ணி இருக்கிறோம்.




அச்சமில்லை, அமுங்குதலில்லை,
நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவமில்லை, பதுங்குதலில்லை
ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்,
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கு மஞ்சோம், எப்போழுது மஞ்சோம்


என்ற பாரதியின் வரிகளுக்கொப்ப இந்த பதிவுகள் நலிந்தவர்களுக்காகவும், வலையுலகில் நிலவி வரும் பெண்கள் மீது மிக சுலபமாக வாரிவிடும் அவதூறுகளை எதிர்கொள்ளவும் அமைக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சி.

அச்சமில்லை, அமுங்குதலில்லை

அச்சமில்லை, அமுங்குதலில்லை,
நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவமில்லை, பதுங்குதலில்லை
ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்,
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கு மஞ்சோம், எப்போழுது மஞ்சோம்