Monday, October 09, 2006

கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்

நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம் என்ற பதிவிற்கு வந்த சில பின்னூட்டங்கள் ஒரு கருத்தை முன்வைத்திருந்தன. அது பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தாலும் பிரயோசனம் இல்லை, அதை அவர்களால் அனுபவிக்க முடியாது என்ற ரீதியில் அமைந்திருந்தன. இன்னும் சில பின்னூட்டங்கள் நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம் என்ற ரீதியிலும் இருந்தது.
இப்படிப்பட்ட வாக்கியங்களை கவனித்தால் இதில் நாங்கள் கொடுத்தோம் என்ற ஆதிக்கம், நினைத்தால் கொடுக்கவும் எடுக்கவும் செய்ய எங்களால் முடியும் என்ற நினைப்பும் அதனூடன் இருப்பதும் சொல்லாமல் புரியும்.

உண்மைதான், அடங்கி அடி உதையும் பட்டு வேதனையில் உழலும் பெண்கள் நிறைய பேருக்கு விவாகரத்தோ இல்லை பாதுகாப்போ கிடைக்கும் போது அதை அவர்களால் அனுபவிக்க கூட முடியாமல் ஒரு பயமே எதிர்கொள்ளுகிறது. சமீபத்தில் அப்படி விடுதலையாகிப்போன பெண்மீது எனக்கு கூட சினம் வந்தது எப்படி இவர்களால் இந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. ஆனால் யோசித்துப்பார்த்தால் இதற்கடியில் உள்ள பயமும் பாதுகாப்பின்மையும் சுய இரக்கமும் புலப்படும்.

சிறகுகளை வெட்டி, வெட்டி கூண்டுக்குள் ஒரு கிளி வளர்த்து தீடீரென ஒருநாள் அந்த கூண்டை திறந்து விட்டு பறந்து போ என்று சொன்னால் சிறகில்லாத கிளியால் பறக்கத்தான் முடியுமா? ஆனால் இங்கே சிறகுகளை வெட்டி விடுவதோடு கூட குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் அல்லவா கட்டி விட்டிருக்கிறார்கள். கண்னுக்குப்புலப்படாத சமுதாய சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள்.

வீட்டு வன்முறையில் சிக்கிக்கொண்டவர்களுக்கு அதிலேயே இருந்து இருந்து தங்கள் மீதான தன்னம்பிக்கையும் குறைந்து போகிறது. தெரியாத சைத்தானுக்கு தெரிந்த பிசாசே பெரிதென்று மீண்டும் வருகிற நிலையில்உள்ள பெண்கள் நிறைய உண்டு.என்னைவிட்டால் உனக்கு சோறு போட யார் இருக்கிறார்கள், உன் குழந்தைகளை உன்னால் பார்த்து வளார்க்க முடியுமா என்று பொருளாதார சார்புநிலையை கேவலமாக்கி பேசுவது இன்னும் அதிகரிக்கும். படித்து வேலைக்கு போகும் பெண்களும் இந்த பொருளாதார சார்புநிலையை முற்றிலும் கடந்து விடவில்லை.தன்னுடைய பெற்றோர்களை ஆதரிக்க வேண்டுமானால் அதுவும் தன் வருமானத்தில் ஆதரிக்க வேண்டுமானாலும் கூட முறையான அனுமதி கணவன், அவனை பெற்றவர்களிடம் இருந்து பெறவேண்டிய நிலை இருக்கிறது. அப்படி ஒரு ஆண் அனுமதித்துவிட்டாலே அதுகூட அவன் பரந்தமனப்பான்மையை காட்டும் ஒரு கண்ணாடி.மாதம் 8000$ வருமானமென்ற போதிலும் அலுவலகத்தில் ஒரு விழாவிற்கு பணம் கொடுக்க வேண்டுமானாலும் கூட கணவனை கேட்கவேண்டிய நிலையில் உள்ள பெண்களும் உண்டு.

இந்த சிந்தனையை பிரதிபலிக்கும் வகையில் சக வலைப்பதிவாளரின் பதிவொன்றை படித்தேன். எத்தனை விதமான ஆபரணங்கள், சமையலுக்கு தேவையான மைக்ரோவேவ் போன்றவற்றை வாங்கி தந்திருக்கிறேன் என்று ஒரு ஆடவன் சொல்வது எப்படி சரியாகும்? யாருக்கு யார் வங்கித்தருவது?ஆளுக்கொன்றாய் செயல்களை பிரித்து செய்யும் போது ஒன்றில் tangible benefit ஆன வருவாயும் இன்னொன்றில் கண்ணுக்கு புலப்படாத அமைதியும் வரும்போது வருவாய் முழுதும் எனக்கே சொந்தம் என்பதும் அதனால் இன்னும் உரிமைகளைக் கூட்டிகொள்வதும் எப்படி சரியாகும்? வாழும் நாளில் நாம் செய்யவேண்டிய எத்தனையோ காரியங்கள் உண்டு. அவற்றை கணவனும் மனைவியும் செய்யும் போது வேலைகள் எளிதாகவேண்டுமானால் வாங்கும் உபகரணங்களுக்கு கூட ஆணின் தான் மட்டுமே இதில் முடிவெடுக்க உரிமை உள்ளவன் என்று எண்ணுவதும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எத்தனை அழகாக சொல்லி இருக்கிறார் இந்த பொருளாதார சார்பு நிலையை நகைச்சுவை என்ற போர்வைக்குள்.

சிவகுமார் சொன்னதுபோல பெண்களால் மட்டுமே பிள்ளை பெற்றுக்கொள்ளமுடியும், ஆரம்பநிலைகளில் வளர்க்கவும் முடியும் என்பது இயற்கை, அதற்காக வெளியிடத்தில் பணிசெய்து ஊதியம் கொண்டுவரும் ஆடவன் அந்த பெண்னின் சார்புநிலையை பயன்படுத்துதல் தவறல்லவா? வீட்டைப்பராமரித்து குழந்தைகளைப்பேணிதன் தேவைகளையும் தம் மனைவியின் பொருளாதார சார்புநிலையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் ஆண்கள் நிறைய உண்டு.

சமீபத்தில் இங்கே நியுயார்க்கில் வழக்காடுமன்றம் வந்த கதை இது. கணவன் மனைவி இருவரும் மனம் ஒருமித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருமே மேலாண்மை படித்திருந்தனர். ஆனாலும் மனைவி வேலைக்கே செல்லாமல் வீட்டை பரமாரித்து கொள்ள, கணவன் கடுமையாய் உழைத்து செல்வந்தனானான். பிள்ளைகள் இருவர் ஒருவர் மருத்துவராகவும் இன்னொருவர் வழக்கறிஞராகவும் பணியாற்ற அவர்கள் பள்ளி நாள் முதலாய் எல்லாமே அம்மாதான். இந்நிலையில் கணவன் மனைவையை விவாகரத்து செய்ய வழக்கு தொடுத்தான். சேமிப்பு முழுதும் தன்னுடையது என்றும் தன் உழைப்பால் வந்தது என்பதாலும் எதுவும் தர இயலாது என தெரிவிக்க, மனைவியோ நான் வீட்டை பராமரிக்காவிட்டால், இவனால் வேலையில் முழுக்கவனமும் செலுத்தி முன்னேறி இருக்க முடியாது. உழைப்பு அவனுடையது என்றாலும் வீட்டையும் குழந்தைகளையும் அவனையும் பராமரித்த என் செயலும் அதற்கு காரணம் என வாதிக்க, மனைவிக்கு சேமிப்பில் சரிபாதி தீர்ப்பாகியது. பொருளாதார சார்பு நிலை பற்றி பேசும் போது இதுபோன்ற மனைவியின் செயல்கள் கண்டு கொள்ளாமல் போவதும், ஆண்களை அடக்கி வாழும் பெண்களை நீங்கள் கண்டதில்லையா எனவும் பேசுதல் எப்படி சரியாகும்.

கனவுப்பூக்கள் கண்ணில் மின்ன
அன்றொருநாள் அம்மாவைக்கேட்டேன்
என்ன ஆகும் எனது வாழ்க்கை
காற்றுப்போல் சுதந்திரமும்
கவிதைப்போல தனிக்குணமும்
எப்போதும் உடன் வருமா
என்ன ஆகும் எனது வாழ்க்கை
கலைந்த முடியை காதில் ஒதுக்கி
அம்மா சொன்னாள் அணைத்துக்கொண்டு
கனவுகள் வேண்டாம் பெண்ணே
நேற்றைக்கு உன்போல் நானும்
நெஞ்சுக்குள் பூச்சுமந்து நின்றதில் நினைவே மிச்சம்
காலத்தின் மிரட்டல் கேட்டு கனவுகள் விற்று
அதில் வாழ்க்கையை வாங்கியாச்சு
வாசலில் போட்ட கோலம்
வழிப்போக்கர் மிதிக்க ஆச்சு
கனவுகள் வேண்டாம் பெண்ணே
நிஜங்களின் நிழல்கள் ரசிக்க
நீயேனும் கற்றுக்கொள்க என்ற கவிதை வரிகள் போல இங்கே இன்னமும் கனவுகளாகவே சுதந்திரமும் இருக்கிறது.

11 comments:

செல்வநாயகி said...

///கண்னுக்குப்புலப்படாத சமுதாய சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள்.///

///அப்படி ஒரு ஆண் அனுமதித்துவிட்டாலே அதுகூட அவன் பரந்தமனப்பான்மையை காட்டும் ஒரு கண்ணாடி///

நல்ல வரிகள் பத்மா. நண்பர் சிவகுமாரின் பின்னூட்டம் தொடர்பாக எனக்கும் சில எண்ணங்கள் உதித்தன. விரைவில் சக்தியில் அவற்றை இடுகிறேன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

என் பின்னூட்டம் சற்றே பெரிதாகிப் போனதால் 'மழை'யில் தனிப் பதிவாக இட்டிருக்கிறேன்.

http://mazhai.blogspot.com/2006/10/blog-post.html

Premalatha said...

கனவுகள் கனவுகளாய் தேவையில்லை பெண்ணே.
வாழ்க்கையும் கனவுகளாய் தேவையில்லை பெண்ணே.
வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ முடியும்;
சிறிதாய் சிறிது நேரம் ஒதுக்கு சிந்திக்க.
வீட்டை கூட்டலாம் அப்புறம்.
குப்பையும் இயற்கையே. :))

பொன்ஸ்~~Poorna said...

கனவுகள் வேண்டாம் பெண்ணே
நிஜங்களின் நிழல்கள் ரசிக்க
நீயேனும் கற்றுக்கொள்க

நல்ல பதிவு பத்மா.

ramachandranusha said...

பத்மா, முன்பு எழுதியதுதான். தலைப்பைப் பார்த்ததும் நினைவுக்கு வந்து எடுத்துப் போட்டுள்ளேன்.
பார்க்க, படிக்க வருகைத் தாருங்கள்.
http://nunippul.blogspot.com/2006/10/blog-post_11.html

ரவியா said...

நல்ல பதிவு பத்மா.

enRenRum-anbudan.BALA said...

பத்மா,
பதிவை இர்ண்டு தடவை வாசித்தேன், மிக நல்ல, தேவையான பதிவு ! என்னால் முடிந்தது, இப்பதிவுக்கு ஒரு '+' போட்டேன் ! என்னை சரி பார்த்துக் கொள்ளவும் இது உதவியது, உதவும் என்று சொல்ல விழைகிறேன். நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா

பத்மா அர்விந்த் said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. எலிவால்ராஜா: உங்கள் பின்னூட்டம் தனிப்பதிவாக வர இருக்கிறது என் மறுமொழியுடன்.

மா சிவகுமார் said...

பத்மா,

வெகு காலமாக எழுதி வைத்து வெளியிடாத ஒரு பத்தி இது. இந்தப் பதிவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வீட்டு வேலைகளிலும், வெளி வேலைகளிலும் சம பங்கு கொண்டு கணவன் மனைவி செயல்படுவது சரியா? அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு ஆற்றல்கள் உள்ளன, ஒரு பகுதியில் பெண் தலைமை ஏற்க ஆண் உதவி புரியவும், மற்றொரு பகுதியில் அதையே மாற்றிப் பழகவும் செய்வது சரியா? கணவனுக்கு மனைவியின் கடமை என்ன? மனைவிக்கு கணவனின் கடமை என்ன?

அன்பு இருக்கும் போது இந்தக் கேள்விகள் எல்லாம் அடிபட்டு விடுகின்றன, ஆணும் பெண்ணும் தமக்கு ஏற்ற வழியை வகுத்துக் கொள்கிறார்கள்.

தன் மனைவி வெளியில் சென்று பொருள் ஈட்டினாலும், வீட்டு வேலைக்கு பெண்தான் பொறுப்பு என்று இருக்கும் ஆண்கள் சரியா? தன் கணவன் எவ்வளவுதான் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டாலும் தனக்கு வீட்டில் இருக்கும் உரிமை அவனுக்கு இருக்கக் கூடாது என்று நினைக்கும் பெண்கள் சரியா?

தம்பதிகளில் ஒருவர் வாழ்க்கைத் தரம் என்று நினைப்பது இன்னொருவருக்கு ஆடம்பரமாகப் படும்போது என்ன செய்வது?

அன்புடன்,

மா சிவகுமார்

பத்மா அர்விந்த் said...

சிவகுமார்
வீட்டு வேலையானாலும் வெளிவேலையானாலும் யாருக்கு நன்றாக செய்யவும் ஆர்வமும் நேரமும் இருக்கிறதோ அவர்கள் செய்யலாம். சில பேருக்கு சில வேலைகளில் விருப்பமும் மகிழ்ச்சியும் இருக்கும். எந்த வேலையை யார் திறம்பட செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். காட்டாக, என் வீட்டில் கணிணி சம்பந்தபட்ட பொருட்கள் எந்த மாதிரி நெட்வொர்க் தேவை என்பது போன்ற விஷய்ங்களில் அர்விந்திற்கு என்னைவிட திறமை அதிகம். நான் தலைஇடுவதில்லை. ஆனால் பண நிர்வாகத்தில் எந்த மாதிரி invest செய்ய வேண்டும் என்பதில் அர்விந்தைவிட எனக்கு விருப்பமும் திறமையும் அதிகம்.அர்விந்த் தலை யிடுவதில்லை. இதற்கு இருவரிடையே சமளவு மரியாதை (mutual understanding and respect) இருக்க வேண்டும். சில பெண்களுக்கு சமையலறை என்பது ஒரு அரசவை மாதிரி. அங்கே அவர்களின் ஆட்சி கோலோச்சும் என்றால் அவரவர் விருப்பம் அறிந்து விட்டுவிடுதல் வேண்டும். ஆணாயினும் பெண்ணாயினும் அவரவர் இடம் (space) அவசியம் தேவை.
அதேபோல ஒருவருக்கு ஆடம்பரமாய் இருப்பது இன்னொருவருக்கு அவசியமானா அதை புரிந்து கொள்ளுதல் வ்ஏண்டும். நிதி இடம் தராது என்ரால் பொறுமையாக அதனால் வரும் தீமைகளையோ நன்மைகலாஇயோ பட்டியல் இட வேண்டும். குறிப்பாக உணர்ச்சி வேகத்தில் இருக்கும் போது பேசுவதை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு பழக்கத்தையும் மாற்ற அவரவர் மனதில் விருப்பமும் ஆர்வமும் வர வழைகக் வேண்டுமே தவிர (showing benefits an dharm) கட்டாயப்படுத்துதல் தவறு.

Madura said...

பத்மா,
இரண்டு பின்னூட்டங்களுக்கும் மனமார்ந்த நன்றி. நிஜமாகவே ஊட்டம் கொடுக்கம் இனிமையான வார்த்தைகள். நன்றி.

இன்றைக்குத்தான் சக்தி பக்கம் வந்தேன். நல்ல எண்ணக் கோர்வைகளும், சுதந்திரத் தேனமுதுமாய், அழகான நோக்கோடு உலகைக் காணும் சக்தி அருமையாய் உள்ளது.