Tuesday, January 09, 2007

கற்றதனால் ஆன பயனென்ன? (நிறைவு)

ஒரு ஆங்கில முதல்தாள்தேர்வுக்கு முந்தையநாள் என்றைக்கோ கலந்திருந்த போட்டியொன்றின் பரிசளிப்பு நிகழ்ச்சிக்குப் பயணித்துப் போகவேண்டியிருந்தது. பரிசாக முதன்முறையாகப் பாடநூல் தவிர்த்த ஒரு ஐந்து தமிழ்நூல்களைச் சுமந்துகொண்டு வீடுதிரும்புகையில் எல்லோரும் உறங்கச் செல்லும் நேரம். அடுத்தநாள் காலைத் தேர்வுக்குத் திருப்பிப் பார்க்கவேண்டியது கிடந்தாலும் கையில் கிடைத்திருந்த "குடும்பவிளக்கு" , "இருண்டவீடு" இரண்டுமே அன்று படித்து முடிக்கப்பட்டது நள்ளிரவுதாண்டியும்.

கல்லூரியில் படிக்கும்போது அடுத்தநாள் அரசியல் பாடத் தேர்விருந்தபோதும், ஆட்சிப்பணித்துறைத் தேர்வுக்கனவிலிருப்பவர்களுக்கு Competetion Success Review எனும் CSR இதழ் உதவுமென்று அன்றைய தொலைபேசி உரையாடலொன்று மூலம் அறிந்து உடனே
வாங்கிவந்து அதை முதல் அட்டையிலிருந்து கடைசியட்டைவரை படித்துக்கொண்டிருந்ததும் உண்டு. என் இத்தகைய பழக்கங்கள் இன்றும் சிலநேரங்களில் சிலவிடயங்களில் தலைகாட்டுவதுண்டு. அப்படித்தான் சிவக்குமார் அவர்களின் பின்னூட்டத்திற்கு விரிவாகப்
பதில்சொல்வதாய்ச் சொல்லிவிட்டு அதை முதலில் முடிக்காமல், கடந்த இருவாரங்களாக என்னைக்கவர்ந்த மற்ற இடுகைகளை வாசிப்பதில் மட்டும் இங்குவரமுடிந்த நேரத்தைக் கரைத்துக்கொண்டிருந்தேன்.

இடுகைகள் படிப்பதையும்(அவை பிடித்திருந்தால்) இலகுவாகச் செய்து கடந்தபோக முடியாது எனக்கு. ஒரு முத்தம் தரப்பட்டால் அது எப்படி உதட்டின் ஈரம்மட்டும் பட்டு உலர்ந்துவிடும்படி அவசரமாக இல்லாமல் உள்ளத்திலிருந்து கிளம்பும் ஈரத்தைச் சொல்லும்படி நிதானமாகத் தரப்படவேண்டுமோ, மாலையில் வருவேன் எனத்தெரிந்து காலையிலேயே மழைபெய்து இளகிய மண்ணில் எங்காவது எனக்குப் பிடித்த காளான் முளைத்திருக்கிறதா என அலைந்து திரிந்து அதைப் பிடுங்கிவந்து சமைத்துவைத்திருக்கும் அம்மாயியின் காளான்வறுவலை உண்டோமா, தண்ணீர்குடித்தோமா என்றில்லாமல் அதைப் பிடுங்கியது முதல் வறுத்ததுவரையான அவரின் அனுபவத்தைக் கேட்டுக்கொண்டே பொறுமையாகச் சாப்பிடவேண்டுமோ அப்படித்தான் எனக்குப் பிடிக்கும் இடுகைகளைப் படிப்பதையும் செய்யவேண்டும் எனக்கு. அந்தவகையில் என் நேரத்தை எடுத்துக்கொண்ட இடுகைகள் பல கடந்த இருவாரங்களில். டிசேவின் "சேகுவரா", மானிடளின்
"பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை" , பொடிச்சியின் நட்சத்திரப்பதிவுகள், தமிழ்நதியின் "நேற்றிருந்தேன் அந்த ஊரினிலே" , தருமியின் ஆணிகள் பற்றிய இடுகை, சிவக்குமார் எழுதியிருந்த தொழில்முனைவோரின் வெற்றிக்கான பண்பு பற்றிய கட்டுரை, அப்பிடிப்போடுவின் "வளத்த கடா முட்ட வந்தா..." என்று சொல்ல ஆரம்பித்தால் இன்னும் நீளும் பட்டியல் உண்டு.

இதற்கிடையில் வலைப்பதிவுகளின் அடுத்தகட்ட நகர்வு வேறு நடந்துகொண்டிருக்கிறது. எப்படிச் சாதிகள் ஒழிப்புப் பற்றிப் பேசினால் அது எந்தப் பிரயோசனமுமில்லாத வாதமாக மாறுவதற்குரிய பிரயத்தனங்களே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றனவோ, அந்தப் பாணியில் இப்போது ஆண்களா? பெண்களா? என்ற நகர்வை எட்டிப்பிடித்திருக்கிறோம். நடப்பதையெல்லாம் பார்த்தால் ஒரு கொசு ஒழிப்பிற்குக்கூட ஒருமருந்தை ஒருமித்து ஆய்ந்து ஒத்துக்கொள்ளமுடியாத மனநிலையே நம்மிடம் இருப்பதாகத் தோன்றுகிறது. உன்மருந்து பெரிதா? என் மருந்து பெரிதா என ஆளாளுக்கு அடிக்க ஆரம்பித்துக் கொசுக்களை ஒழிக்கிறோமோ இல்லையோ மருந்துநாற்றம் இன்னொரு
சாக்கடை நாற்றத்திற்கு ஈடாகும்வரைகூடப் போய்விடுவோம் போலிருக்கிறது. கடைசியில் கொசுக்களை உற்பத்தி செய்யும் சாக்கடைகள், நின்று ஒருநிமிடம் சிரித்துவிட்டுத் தொடர்ந்து தன் பாதையில் ஓடலாம்.

வேறெதற்கும் பதில்களோ, விளக்கங்களோ, மாற்றுக்கருத்துக்களோ எடுத்துவைத்துக்கொண்டிருக்கும் ஆர்வம் இப்போதைக்கு இல்லையென்றாலும் சிவக்குமாருக்கு அவரின் கேள்விகளுக்கான பதில்களாய்ச் சொல்ல நினைத்ததை மட்டும் இந்த இடுகையில் எழுத முயற்சிக்கிறேன். இந்த இடுகையின் இரண்டாம் பாகத்தில் இடப்பட்டஅவரின் பின்னூட்டம் இது:-

குழந்தைகளை பத்து மாதம் சுமப்பதாலும், பின்னர் சில ஆண்டுகளாவது வளர்ப்புகளில் பெரும் பங்கு வகிப்பதாலும் பெண்களுக்கு வீட்டை பராமரிப்பது, குழந்தைகளுக்கும் கணவனுக்கும், பிற வீட்டு ஆட்களுக்கும் சமையல் செய்து கொடுப்பதிலும் ஈடுபாடும் ஆர்வமும் இயல்பாகவே இருப்பதாக என்னுடைய புரிதல்.

நான்கு இடங்களுக்குப் போய்ச் சுற்றி வருதல், புதிய முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற, சீர்மையான வீட்டு வாழ்க்கைக்கு ஒவ்வாத பணிகளை மேற்கொள்ளுவதில் ஆண்களுக்கு உந்துதல் அதிகம் என்பது இன்னொரு பக்கம்.

இரண்டுக்கும் விதிவிலக்குகளும், கூடுதல் குறைவுகளும் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை 'வீட்டுக்குள் என்ன சமைப்பது, எதைச் சாப்பிடுவது, எந்தப் பொருளை எங்கே வைப்பது, எப்படி நேரம் செலவளிப்பது என்று தீர்மானிப்பது' வெளியில் சென்று வாள் சுற்றுவதை விட அதிகமான அல்லது அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது.

வெளி நடவடிக்கைகளில் கிடைக்கும் ஆதாயங்களைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டை நிர்வாகித்து வந்த பெண்களை ஒடுக்கவும் கொடுமைப் படுத்தவும் ஆணும், ஆணைச் சேர்ந்த பெண்களும் ஈடுபடுவதைத் தடுக்க எழுந்த பெண்ணியக் குரல்கள், 'நாம் வெளிவேலைகளை விட்டு ஒதுங்கி இருப்பதால்தானே இந்தக் கொடுமைகள்' என்று காரணப்படுத்தியோ

அல்லது

இயல்பாகவே பெண்களுக்கும் விண்ணை அளக்கும் ஆர்வமும் இருப்பதாலோ

பெண்களும் வெளி உலகில் வேலை செய்வது நடைமுறைக்கு வந்துள்ளது. வெளி வேலைகள் உடல் சார்ந்த உழைப்பாக இல்லாமல் மூளை வேலைகளாக மாறி விட்ட பொருளாதாரக் காரணிகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

1. பெண் வெளியே போய் வேலை செய்யும் போது ஆணும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதுதானே சரி. வெளியில் போய் செயலாற்றுவதால் பெண்ணுக்குக் கிடைக்கும் புதிய உரிமைகளுக்கு ஈடாக வீட்டில் வேலை செய்வதால் ஆணுக்கு நிறைவுகள் கிடைப்பதில்லை (அதுதான், நான் குறிப்பிட்டிருந்த சொந்த அனுபவம்). ஆணின் இயல்புக்கு எதிரான வேலைகள் என்பதால் இருக்கலாம்.

2. (கொஞ்சம் அப்பட்டமான கருத்து, சரியான நோக்கில் புரிந்து கொண்டு பதிலளியுங்கள்)
வீடு என்பது பெண்ணால் உருவாக்கப்பட்டு பெண்ணுக்கு தேவையான இடம். அதற்குள் ஆணை அன்பால் கட்டிப் போட்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வாழ்க்கைத் துனையாக ஆணையும் இணைத்துக் கொள்வது இல்லறம். இப்போது வரையறைகள் மாறும் போது ஆண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன வலுவான காரணம் இருக்கும்?

3. கொடுமைப்படுத்தப்படும் பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகக் கருத்தோட்டங்கள், சட்டங்கள் இவற்றை மேலே சொன்னவாறு பல நிலைகளில் சரிக்குச் சமமாகச் செயல்படும் பெண் ஆணுக்கு எதிராகப் பயன்படுத்தும் போது என்ன தீர்வு?


என் பதில்:-
**********

வேறுபல இடங்களில், (உங்களின் இடுகைகள் உட்பட) உங்களின் ஆழமான நோக்கைக் கண்டு அதைப் புரியமுயற்சிப்பவளும், அந்த நோக்கைப் பாராட்டுபவளும் நான். ஆனால் இவ்விடயத்தில் உங்களின் கருத்து மிக மேலோட்டமான ஒன்றாக இருக்கிறதென்றே கருதுகிறேன் நான். பெண்ணின் பிள்ளைப்பேறு, உடலியல் காரணங்களைச் சொல்லி அணுகுவதும், பெண் அதனால் வீட்டிலிருக்கவேண்டி வந்தவள் என்கிற கருத்தை முன்வைப்பதும் அலுப்பாக இருக்கிறது கேட்க. அதுமட்டுமில்லை, இப்போது ஏதோ மூளைக்கு மட்டுமே வேலைதரும் பணிகள் வந்தபிந்தான் பெண்கள் வெளிப்போதல் தேவையாக இருக்கிறதென்பதுபோல் நீங்கள் வைத்திருக்கிற கருத்தும் ஒரு நகர்ப்புற நாகரீக வாழ்வின் போக்கிலிருந்து மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டாதாகவே நினைக்கிறேன். நான் நிரலி எழுதும் உதாரனத்தைச் சொல்லியிருந்தது இன்று நிரலியெழுதும் ஆண்களில்கூட வேலைக்குப் போகாத மனைவியை விரும்பும், அல்லது தான் வேண்டுகிறபோது
வேலையைவிட்டுவிட இசையும் மனைவியை விரும்பும் போக்குள்ளதைச் சுட்டிக்காட்டவே. மற்றபடி நீங்கள் படித்த, வெள்ளைக்காலர் வேலை தாண்டிய சமூகத்தை எடுத்துப்பார்த்தால், அதில் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக வீட்டுவேலைகள் தாண்டியும்
உழைக்கும் பெண்கள் அதிகம். நிறைமாதம்வரை கட்டிட வேலைக்குப் போகும் பெண்கள், கைக்குழந்தையைக் கொண்டுவந்து காட்டில் மரத்தில் ஒரு தூளிகட்டித் தூங்கவைத்துவிட்டுக் களையெடுப்பு வேலைசெய்து சம்பாதிக்கும் பெண்கள், சாலைகளில் காலுக்கு டயர்
கட்டிக்கொண்டு சுடுதார் ஊற்றும் பெண்கள், கருங்கல் தொழிற்சாலைகளில் ஜல்லிசுமக்கும் பெண்கள், செங்கல், சுண்ணாம்பு சூளைகளில் பணிபுரிபவர் என்று ஒரு செவ்வியில் ஆதவன் தீட்சண்யா சொல்லியதுபோல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பெரும்பான்மைப்
பெண்கள் வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் ஆணுக்கிணையாய் உழைக்கும் பெண்களே. இவர்களுக்கெல்லாம் நீங்கள் சொல்வதுமாதிரி "வெளிப்போதல் ஆணின் இயல்பு, வீட்டை நிர்வகிப்பது பெண்ணின் இயல்பு" என்பதைப் பொருத்திப்பார்த்தால் சரிவருமா என்று யோசித்துப் பாருங்கள்.

மேற்சொன்ன பெண்கள் வீடு, வெளிவேலை என்ற இரண்டிலும் இயங்குபவர்கள். ஆனாலும் அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தில் ஆணுக்குச் சமமாய் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள். ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான கூலிகூட இத்தகைய வேலைகளில் இன்னும் பல
இடங்களில் கிடையாது. நான் சுட்டவருகிற சமத்துவம் என்பது இதுபோன்றவையும் சேர்த்து. இப்படி உழைக்கும் பெண்களானாலும் அவர்களுக்கு ஒரு ஆண்துணை இல்லாத வாழ்வு கடினமானது. ஏனென்றால் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் வெளியில் முன்னெடுத்து நடத்துவதற்கு ஒரு ஆண்தான் சரியானவன் என்கிற சமூக அமைப்புமுறை. இவர்களில் கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்கள் என்னதான் தன் சம்பாத்தியம் கொண்டு பிள்ளைகளை வளர்த்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு திருமணம் என்று வரும்போதுகூட தன் உறவினர்களிலிருந்து இன்னொரு ஆணை அழைத்துதான் முன்னின்று நடத்தச் சொல்லவேண்டிவரும். இந்தமாதிரி அமைப்பில் தன் குழந்தைகளில் ஆண்குழந்தை ஒன்றுவேண்டும் என்று இப்பெண்கள் விரும்புவதன் காரணம் இதுதான். "ஆண்பிள்ளையோ சாகும்வரை பெண்பிள்ளையோ போகும்வரை" என்று நாம் இந்தநூற்றாண்டிலும் பாட்டெழுதித் திரையில் பார்க்கிறோம். இவைபோன்றவைகளைக் கடக்கவேண்டும் என்பதுதான் என்கருத்து. இங்கு சிலவிடங்களில் இன்றெல்லாம் விதவைப்பெண்களுக்கு பெரிய கொடுமையில்லை என்று எழுதும் நண்பர்களின் எழுத்து நகைப்பைத் தருகிறது. இன்றும் வெள்ளைச்சீலை கட்டிய, பொட்டில்லாத, பூவில்லாத கோலம்கொண்டு ஒடுங்கிவாழும் பெண்கள் என் உறவினரிலேயே பலர் உண்டு. தனித்து இயங்குதலற்ற அவர்களின் சார்பு வாழ்க்கை இனிமைகளைத் தொலைத்தவை.

இவைதவிர்த்து நீங்கள் உங்கள் சொந்த அனுபவமாக வீட்டிலிருப்பது பெண்ணுக்கு இயல்பாய் ஒத்துவருகிறது. ஆனால் வெளியில் சுற்றிய ஆணுக்கு அப்படி இருக்கவேண்டிவருவது ஒத்துவராது என்று சொல்லியிருக்கிறீர்கள். சிவக்குமார், என் இடுகையில் நான் சொல்லியதை உள்வாங்காமல் தோணுகிற எதையோ எழுதிவிட்டுப் போகிற ஒருவராக உங்களை நான் நினைக்கமுடியாது. நிச்சயம் நன்கு வாசித்தபிறகே எழுதியிருப்பீர்கள். எல்லா ஆண்களும் வீட்டிலிருக்கப் பெண்கள்தான் இனி வெளிப்போகவேண்டும் என்று நான் எழுதவில்லை. ஒருவர் கண்டிப்பாய் வீட்டிலிருக்கவேண்டிய காரணம் ஏற்படுகிறபோது பணிநன்மை, பொருளாதாரம் எல்லாம் கணக்கில்கொண்டு யார் இருக்கலாம் என்பதை ஒரு கணவனும், மனைவியும் அவர்கள் தீர்மானிக்கலாம். அப்படித் தீர்மானிக்கிறபோது பெண் இருந்தால் இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் நம் சமூகம் ஒரு ஆண் அவரே விரும்பி இருந்தாலும் அதை முன்னதைப்போல் ஏற்றுக்கொள்ளாமல் ஏளனப்படுத்துவதையே சுட்டினேன். உண்மையில் அது அந்த ஆணுக்குச் சிரமமானதுதான். நீங்கள் சொல்வதுபோல் வீட்டுவேலைகள் அவ்வளவு எளிதானதல்ல. கொத்தமல்லி அடுத்தமாதம்வரை வாங்காமல் தாக்குப்பிடிக்குமா என்பதிலிருந்து, துவைக்கப்போட்ட எல்லாத்துணிகளும் மடிக்கவந்திருக்கிறதா எனச் சரிபார்ப்பதுவரை ஓவ்வொருநாளும் நினைவில் வைக்க ஏராளமானவை உண்டு. எங்கோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

"நாமிருவரும் பதினெட்டுவருடமாய் இருக்கும் வீட்டில்
காபித்தூள் டப்பா
எங்கிருக்கிறதெனச் சரியாகச் சொல்லத்தெரியவில்லை எனக்கு
நீ சமையலறையில் எது எங்கிருக்கிறதென எப்போதும் சரியாகச் சொல்வாய்
காரணம் நீ ஆயிரமாயிரமாண்டுகளாய் அங்கேயே இருக்கிறாய்"

தன் மனைவியைப் பார்த்துக் கணவன் சொல்லும் இக்கவிதையில் எவ்வளவோ சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் நம்வாழ்வென்று இப்படியே இருந்துவிடலாமா சிவக்குமார். ஏன் ஆணுக்கு வராது? ஆண் செய்யக்கூடியவை இவை, பெண் செய்யவேண்டியவை இவை
என்று யாரோ ஏற்படுத்தியதை அப்படியே கடைப்பிடித்துக்கொண்டிருக்கும்வரை நாம் இப்படித்தான் இருப்போம். நான் இந்த ஒப்பீட்டை இந்த இடத்தில் செய்யக் கொஞ்சம் தயங்குகிறேன், அது உங்களுக்கான என் கடுமையான பதிலாக அமைந்துவிடுமோ என்று. என்றாலும் புரிந்துகொள்ளக்கூடியவர் நீங்கள் என்பதால் சொல்கிறேன். "இந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் இது செய்யவரும்; எனவே இதை இதை இவர்கள்தான் இயல்பாகச் செய்யமுடியும்" என்று சொல்வதும், "பெண்ணுக்கு இதுதான் இயல்பாகச் செய்ய வரும், ஆணுக்கு இதுதான் வரும்" என்று சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் என்ன இருக்கிறது? இரண்டும் சூழலால் வேறுபட்டாலும், தன்மையால் ஒன்றுபட்டதேயல்லவா? நிறைய சிரமங்கள் உண்டு சிவக்குமார். ஒரு யுகத்தின் நடைமுறையை ஒரு நாளில் மாற்றமுடியாது. ஆனால் ஆர்வமுள்ளவர்கள் எல்லாம் ஒரு அடியாவது எடுத்துவைக்கமுடியுமில்லையா? நம்மால் சாத்தியப்படாததையும் நமக்கு அடுத்து வரும் தலைமுறைகள் நிகழ்த்திவிடமுடியும் வாய்ப்பையாவது சுட்டிக்காட்ட முயலுவோமே! ஒரேவரியில் ல்வதென்றால் "discrimination அற்ற ஒரு உலகம், ஒரு வாழ்வு". discrimination எந்த வடிவத்தில் இருந்தாலும் சமத்துவசமூகம் எட்டாக்கனிதான்.

நீங்கள் பொருளாதரம் சார்ந்த கட்டுரைகளும் எழுதிவருபவர். சமயம் கிடைக்கும்போது இந்தச்சுட்டியில் சென்று பாருங்கள். http://www.economist.com/finance/displaystory.cfm?story_id=6802551. உலகப்பொருளாதாரம் உயர பெண்களின் பங்களிப்பு எவ்வளவுதூரம் உதவமுடியும்? பணிபுரியும் பெண்களின் நிலைமை வெவ்வேறுநாடுகளில் எப்படி இருக்கிறது? இன்றும்கூட நிறுவன இயக்குனர் போன்ற தலைமைப் பொறுப்புகளுக்கு வரும் பெண்கள் உலக அளவில் குறைந்த சதவீதம் மட்டுமே இருப்பதற்கான காரணங்கள் என்ன?, பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் வீட்டைச் சார்ந்த ஆண்கள் மட்டுமின்றி, அந்நாட்டு அரசாங்கமும் எப்படி உதவ முடியும்? ஆசிய நாடுகளில் இதில் இன்னுமுள்ள குறைபாடுகள் என்பன போன்ற விடயங்களை விளக்கிய கட்டுரை உள்ளது.

கொடுமைப்படுத்தப்படும் பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகக் கருத்தோட்டங்கள், சட்டங்கள் இவற்றை மேலே சொன்னவாறு பல நிலைகளில் சரிக்குச் சமமாகச் செயல்படும் பெண் ஆணுக்கு எதிராகப் பயன்படுத்தும் போது என்ன தீர்வு?

இந்தக் கேள்வியை நான் சிரித்து ரசித்தேன். ரசித்ததற்குக் காரணம் வெளியில் எவ்வளவோ பேருக்கு ஆலோசனைகள் வழங்குவதும் பரபரப்பாகப் பலரை இயக்குவிப்பதுமான ஒரு அப்பாவோ, அம்மாவோ வீட்டில் வீடியோ கேம் ஆடும் சிறுவன் அல்லது சிறுமியிடம் அதை எப்படிச் செய்வதெனக் கேட்டுக்கொண்டிருப்பதுமாதிரி நான் ஆர்வமுடன் வாசிக்கிற பல இடுகைகளை எழுதுகிற நீங்கள் என்னிடம் இப்படிக் கேட்டுக்கொண்டிருப்பது. சிரித்ததற்குக் காரணம் ஒரு 33 சதவீத இடஒதுக்கீட்டிற்கே இன்னும் இழுபறியிலிருக்கிற நிலைமையில் உங்களைப் போன்றவர்களுக்கும் இப்போதே வந்திருக்கும் இந்தப் பயத்தை நினைத்து. இதில் நான் என்ன பதில் சொல்வேனென்று நினைக்கிறீர்கள்? ஏன் இந்த பெண்கள் சம்பந்தமான சட்டத்தை மட்டுமெடுத்து இப்படிக் கவலைப்படுகிறீர்கள்? இது இந்த ஒரு சட்டத்திற்கு மட்டுமே பொருந்துமா என்ன? இருக்கிற எல்லா சட்டங்களையும் விரும்புபவர்கள் தவறாகப் பயன்படுத்தலாம். பயன்படுத்துகிறார்கள். ஒரு மனிதனை அவதூறாகப் பேசக்கூடாதெனச் சட்டம் இருக்கிறது. ஆனால் நீங்கள் ஒருவனைச் சிரமப்பட வைக்க விரும்பினால் உண்மையில்லாமலே "அவன் என்னை அவதூறாகப் பேசினான், ஆதாரங்கள் இவை" எனப் பொய்யாக எதையாவது உருவாக்கி வழக்குப்போட்டு அந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தலாம். உங்கள் ஒருவரால் அல்லது சிலரால் அச்சட்டமே கூடாதெனச் சொல்லிவிடலாமா? தாழ்த்தப்பட்ட ஒருவரைச் சாதியைச் சொல்லித் திட்டினால் அவரைத் தண்டிக்கச் சட்டம் இருக்கிறது. ஆனால் ஒருவர் இன்னொருவர்மீது வேறுகாரணத்திற்க்காகக்கூட இச்சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குத் தொடுக்கலாம். அதற்காக அந்தச் சட்டமே கூடாதெனச் சொல்லிவிடலாமா? இப்படியே எல்லாவற்றையும் சிந்தித்தால் எந்தப் பெரும்பான்மை நலனுக்கும் எதுவும் செய்யமுடியாது. என்னுடைய நிலை இதில் " யாராக இருந்தாலும் எதையும் எதற்காகவும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது". அதைப் பெண்கள் நலம்சார்ந்த சட்டம் மற்றும் கருத்தாக்கத்திற்கு மட்டுமே பொருத்திப்பார்க்கவேண்டிய அவசியமில்லை. பொதுக்கருத்து அது.