Monday, December 11, 2006

லீனா மணிமேகலை செவ்வியின் தொடர்ச்சி

தீராநதி: பாரதிராஜாவை முதலில் சந்தித்த நிகழ்ச்சியில் துவங்கினோம்...

லீனா: ஆம். அவர் என் சர்டிஃபிகேட்டுகளைப் பார்த்தார். "why dont you try in films?" என்று கேட்டார். என் கவிதைகளை ஆர்வமுடன் வாசித்தார். நான் தினமும் புதிய கவிதைகள் எழுதி அவரிடம் சென்று காண்பித்தேன். அப்பா சொன்னதை வைத்து அவரைப் பற்றிய ஒரு பெரிய இமேஜ் என் மனதில் உருவாகியிருந்தது.

தீராநதி: அந்த நாட்களில் பாரதிராஜா ஒரு பெரிய ஹீரோவாகவே இருந்தார் இல்லையா?

லீனா: இப்போதும் அவர் ஹீரோதான். மிக முற்போக்கான படங்கள் செய்தவர். `தமிழ் சினிமா` என்பதை அவர் மட்டுமே செய்தார் எனலாம். நான் அவருடைய சினிமாவில் செயல்படத் துவங்கினேன். என் வீட்டாருக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சிதான். பெண்கள் சினிமாத்துறைக்குப் போவதைக் குறித்தெல்லாம் சிந்திக்கவே முடியாத சூழ்நிலை அங்கு. ‘தாஜ்மகால்’ என்ற படத்தில் சேர்ந்து பணியாற்றினேன். யூனிட்டுக்குச் சென்று சினிமாவின் எல்லா விஷயங்களையும் புரிந்துகொள்ளச் சொன்னார் அவர். எங்கு சென்றாலும் பலர் என்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தார்கள், நான் ஒரு நடிகை என்று எண்ணி. ஒரு 20 வயதுப் பெண் யூனிட்டில் வேலை செய்வாள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதாவது ஒரு கிரியேட்டிவ் டீமின் அங்கம் ஆவாள் என்று. யூனிட்டிலிருந்தவர்கள் ஒரு விசித்திர ஜீவியாகத்தான் பார்த்தார்கள். ஆனால், நான் வேலை செய்யத் துவங்கியபோது எல்லாம் மாறிவிட்டது. சினிமா எடுத்தல் எனும் நிகழ்வை ரசிக்கத் துவங்கினேன். சினிமா தயாரிப்பின் ஒவ்வொரு அணுவையும். ஆனால், சினிமா தயாரிப்பு மிகவும் ஃப்யூடலாகத் தெரிந்தது எனக்கு. டைரக்டருக்கு முன்னால் உட்காரக்கூடாது. அதேபோல் அவர்கள் பெண்களிடம் பழகும் விதமும். மூன்று, நான்கு மாதங்கள் வேலை செய்தேன். பிறகு மிக அசௌகரியமாய் உணர்ந்தேன். திரும்பிவிட்டேன்.

வீட்டில் மிகப் பிரச்சனையாக இருந்தது. நன்றாய்ப் படித்து ராங்க் வாங்கிய இவள், மிக உயர்ந்த நிலைக்குச் செல்வாள் என்று நினைத்தால், சினிமாவுக்குப் போய்விட்டாளே என்ற கேள்வி. எனக்கே குழப்பமாய்த்தான் இருந்தது. என் வாழ்க்கைக்கு இது சரிதானா? பிறகு பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் பதினொரு மாதங்கள் வேலை பார்த்தேன். ஆனாலும், சினிமா என் மனதில் நுழைந்துவிட்டிருந்தது. அங்கிருந்துதான் சினிமா பார்க்கும் பழக்கம் துவங்கியது. தியேட்டருக்குச் சென்று வெகுஜனப் படங்களைப் பார்ப்பேன். ஆனால், பெங்களூரின் நகர வாழ்க்கை, வேறு ஏதோ கிரகத்துக்கு வந்து சேர்ந்ததுபோல், த்ரில்லிங்காகவும்தான் இருந்தது. சிறிது காலம்தான் நீடித்தது அது. வேலை ஒருபோதும் விறுவிறுப்பாக இருக்கவில்லை. நல்ல ப்ரோக்ராமர், நல்ல டீ கோடிங், நல்ல டெஸ்டிங், எல்லாம் சரி. ஆனால், அதிலென்ன சேலஞ்ச்? அதன் க்ரியேட்டிவ் ப்ராசஸ் என்ன? யாரிடமும் ஏதும் பேசாமல் எந்திரம் போல செய்யும் வேலை. அப்போதுதான் மீண்டும் சினிமாவுக்கே போனால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில்தான் தீபா மேத்தாவைப் பற்றி கேள்விப்படுகிறேன். நான் அவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் `வாட்டரி`ல் வேலை செய்து பார்க்கச் சொன்னார். நான் சினிமாவுக்குத் திரும்பப் போகிறேன் என்று சொல்லி எப்படியோ அம்மாவைச் சம்மதிக்க வைத்தேன். தீபா மேத்தாவுடன் மறுபடியும் தொடர்புகொண்டேன். ஆனால், `வாட்டர்` நிறுத்தி வைக்கப்பட்டதால் சினிமாவில் உடனே வாய்ப்பு இல்லை என்ற நிலை வந்தது. ஆனாலும், நான் வேலையை விட்டுவிடுவது என்றே முடிவு செய்தேன்.

பிறகுதான் Êஜெரால்டைப் பார்க்கிறேன். அவர் தொலைக்காட்சித் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடன் ஒரு டெலிஃபிலிமில் வேலை செய்தேன். ஜெரால்ட் சில மர்மத் தொடர்களை எல்லாம் எடுத்திருந்தார். நாம் வேலை செய்ய வேண்டிய களம் இதுவல்ல என்று நான் சொன்னேன். நான் விஜய் டி.வி.யில் சேர்ந்தேன். டெலிவிஷன் எனும் ஊடகத்தின் ஆதி அந்தம் கற்றேன். பாரதிராஜாவின் உதவியாளராக வேலை பார்த்த அனுபவமும் என் தொழில்நுட்பப் படிப்புகளும் தொலைக்காட்சி ஊடகத்தின் பரிணாமங்களைக் கற்றுக்கொள்ள உதவின. சினிமாவைப் பற்றிய நிகழ்ச்சிகள் எதுவும் செய்ததில்லை. கலாச்சார நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி ஊடகத்துக்குத் தகுந்த சில நிகழ்ச்சிகள். இன்டர்நெட்டில் ஆய்வு செய்து பல புதிய விஷயங்களையும் செய்தேன்.

அப்போதுதான் ஆக்டிவிஸத்தை மீண்டும் ஆரம்பித்தேன். மாணவ இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் ஆகியவற்றில் சேர்ந்து செயல்படத் துவங்கினேன். கல்லூரியில் படிக்கும்போது கிராமம்தோறும் சென்று தெரு நாடகங்களெல்லாம் செய்திருக்கிறேன். அதெல்லாம் மீண்டும் ஆரம்பம். படிக்கின்ற காலத்தில் நான் மாணவ நிருபராக இருந்தேன். சென்னைக்கு வந்தவுடன் ஃப்ரீலான்ஸராக தினமணி கதிர், தாமரை போன்றவற்றில் செயல்பட்டேன். மாணவ இயக்கக் காலத்தில் ‘புதிய தலைமுறை’ என்ற பத்திரிகையில் வேலை செய்தேன். சேரனைப் பற்றி ஒரு கவர் ஸ்டோரி செய்திருந்தேன். அதிலிருந்து அவர் பெரிய தோஸ்த் ஆனார். சேரன் என்னை மீண்டும் சினிமாவுக்கு வரச்சொல்லி வற்புறுத்தினார். ‘பாண்டவர் பூமி’யில் அவருடன் வேலை செய்தேன். பிறகு அவருடன் சில கருத்து வேறுபாடுகள் உண்டானது. பாலசந்தரிடம் சேர்ந்தேன். இதற்கிடையில் கவிதை எழுதுவதும் அதன்பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தது. ஐம்பது கவிதைகள் வரை முக்கிய பத்திரிகைகளில் பிரசுரமானது. இப்படியாக கவிதை, ஜர்னலிஸம், தொலைக்காட்சி என்று போய்க்கொண்டிருந்தபோதுதான் மின்பிம்பங்களில் சேர்கிறேன். பாலசந்தரின் டி.வி புரொடக்ஷன் கம்பெனி. எனக்குள் மாற்று சினிமாவின் விதை தூவப்பட்டது மின்பிம்பங்களில்தான்.


என் கையில் ஒரு கேமராவைத் தந்து தமிழ்நாடு முழுக்க போய்வரச் சொன்னார்கள். அதுதான் கேமராவுடன் என் முதல் பயணம். என்ன செய்ய வேண்டுமென்று நானே தீர்மானித்துக் கொள்ளலாம். 2001_ல் பல இடங்களுக்குச் சென்று 16 கேஸ் ஹிஸ்டரிகளைப் பதிவு செய்தேன். எல்லாமே பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள். ஈவ் டீசிங், பெண் சிசுக்கொலை. கஸ்டடி கற்பழிப்புகள், குழந்தை கற்பழிப்புகள் இப்படி 16 கேஸ்கள். ரியாலிட்டி ஷோவுக்காக. ஆனால், அந்த நிகழ்ச்சி வரவில்லை. ஆனால், எனக்கு அது மிகவும் தன்னம்பிக்கையைத் தந்தது. அந்த யீஷீஷீtணீரீமீக்கெல்லாம் என் ணீநீtவீஸ்வீளீsனீ தான் பின்னணியை அமைத்துத் தந்தது. என் தொடர்புகள் மூலமாகத்தான் நான் அவற்றை அடைந்தேன். ஒவ்வொரு கேஸ் டைரியும் ஒரு திரைப்படமாகவே இருந்தது. ஆனால், எனக்கு அப்போது அது தெரியாது. இந்த ஃபிலிம் மெட்டீரியலை எப்படி உபயோகித்தால் அதை சினிமா ஆக்கலாம் அல்லது டி.வி நிகழ்ச்சியாக உருவாக்கலாம் என்ற பயிற்சியை மின்பிம்பங்கள் தான் எனக்குக் கற்றுத் தந்தது. நிறைய திரைப்படங்கள் பார்த்தேன். ஃபிலிம் கிளப்களில் உறுப்பினரானேன். மிதிதிரி 2003 என் கண்களைத் திறந்தது. நிறைய திரைத் துறையினரின் அறிமுகம் கிடைத்தது. அதுவரை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் டாக்யூமென்ட்ரிகளை மட்டுமே பார்த்திருந்தேன். இனி இந்தத் திரைப்பட விழாவுக்கு ஒரு சினிமாவோடுதான் வரவேண்டும் என்ற முடிவோடு திரும்பினேன்.

பிறகு, மின்பிம்பங்களிலிருந்து வெளிவந்தேன். திருமணம் ஜெரால்டுடன். திருமணம்தான் உங்களிடம் சொல்லவேண்டிய பெரிய கதை. அது ஒரு கலப்பு மத, கலப்பு சாதி, கலப்பு மொழித் திருமணம். நாங்கள் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள். ஜெரால்ட் தமிழ் கிறித்துவர். நான் ஆசாரங்களுக்கு எதிராக இருந்தேன். தாலியெல்லாம் அணிந்துகொள்ளமாட்டேன். நான் ஒரு பெரியாரிஸ்ட்டும்கூட. திருமணத்துக்கே எதிரானவள். ஆனால், ஜெரால்ட் திருமணத்தை வற்புறுத்தினார். ஒரு நல்ல மனிதன் கம்பேனியனாகக் கிடைப்பதால் ஒத்துக்கொண்டேன். அதே சமயம், சோஷியல்மீடியா ஆக்டிவிஸம் தான் என் கேரியர் என்று முடிவெடுத்த நிலையில், என் வாழ்க்கையிலேயே மரபுகளை எதிர்க்கவில்லை என்றால் முதலில் அதுதான் கேள்விக்குட்படுத்தப்படும். என் ஆக்டிவிஸத்துக்கு இதெல்லாம் தடையாகக்கூடாது என்று எண்ணினேன். நிபந்தனைகளுக்கெல்லாம் சம்மதம் தெரிவித்த ஜெரால்டோ, தன் வீட்டிலும் என் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கினார். கொஞ்சம் காலம் பிடித்தது என்றாலும் எல்லாம் நினைத்ததுபோல் நிறைவேறியது. அதன் வேதனையும் சுகமும் எங்களுக்கு இருக்கிறது.

சொல்கிறவற்றைத் தனிப்பட்ட வாழ்க்கையிலாவது செய்து காட்ட முடிந்ததன் சந்தோஷம் எனக்கு. ஆனால், ஜெரால்ட் மத நம்பிக்கை உடையவர். ஒரு அசல் கிறித்துவ திருமணத்தை எதிர்பார்த்திருக்கலாம். அதைத் தியாகம் செய்துவிட்டாரென்றுதான் எனக்குத் தோன்றியது. பிறகு யோசித்துப் பார்த்தபோது எனக்கு சங்கடமாய்த்தான் இருந்தது. எதற்காக நான் அடம் பிடித்தேன்? ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கையிலேனும் இதைக் கடைப்பிடிக்கவில்லையென்றால், பிறகு வெளியே பேசித்திரிவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒரு பத்து பவுன் தாலியைச் சுமந்தபடி பெண்ணியம் பேச என்னால் முடியுமா? ஜெரால்டால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. பிறகு எல்லா சேனல்களுக்கும் ஃப்ரீலான்ஸராக வேலை செய்யத் துவங்கினேன். சன் டி.வியில் அறிவிப்பாளராயிருந்தேன். ஒரு டி.வி தொகுப்பாளர் என்ற நிலையில் புகழ்பெற்றுமிருந்தேன். ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு அந்த இமேஜ் எனக்குப் பிடிக்காமல் போனது. கொஞ்சிக்குழைந்து அர்த்தமில்லாமல் பேசுபவர்களும் டி.வி தொகுப்பாளர். நானும் டி.வி தொகுப்பாளர். அது எனக்கு ஒரு பெரிய பிரச்சனையாயிருந்தது. ஆனால் நான் எப்போதும் வாழ்வதற்குத் தேவையான பணத்தை நானே சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவள். சினிமாவில் வேலை செய்த நாட்களில் சரியான சம்பளத்தை எப்போதும் கேட்டுப் பெற்றுக் கொள்வேன். மாதம் 15,000 கிடைக்க தகுந்த ஏதாவது வேலை செய்வேன். டி.வி. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கச் சொன்னால் செய்வேன், ஒரு ஷோ டைரக்ட் செய்ய சொன்னாலும் செய்வேன். ஆனாலும், ஒரு வாரமோ பத்து நாட்களோ என் ஆக்டிவிஸத்துக்கு ஒதுக்கிவிடுவேன். அப்படித்தான் நான் `மாத்தம்மா`வை எடுத்தேன். அந்தப் பிரச்சனைப் பற்றி முதலில் கேள்விப்பட்டபோது பெண் குழந்தைகளை தெய்வத்தின் மனைவியாக்குவது, பிறகு பாலியல் தொழிலாளியாக்குவது என்ற பிரச்சனை. அப்போது நான் சன் டி.வியில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதை ஒரு வீடியோவாகச் செய்ய விரும்பினேன். அப்போது நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் வுமன் (ழிதிமிகீ) அமைப்பின் தேசிய சம்மேளனம் நடைபெறப் போவதை அறிந்தேன். அங்கே அதைத் திரையிட முடிவு செய்தேன். அது ஒரு ரிப்போர்டிங் வகைத் திரைப்படம். பெரிய பட்ஜெட்டில் ஆந்த்ரபோரஜிக்கல் அனாலிடிக்கல் சினிமா எடுக்கும் வாய்ப்பு இல்லை. நான் அவர்களிடம் போய் அறிமுகம் செய்து கொண்டேன். என்னை அவர்களில் ஒருத்தியைப் போல் பாவித்து என்னிடம் பழகினார்கள். பிறகு ‘தலித் பெண்கள் எழுச்சி இயக்கம்’ எனும் அமைப்பின் மூலம் அவர்களோடு இன்னும் நெருங்கிப் பழக முடிந்தது. ஒரு நாள், நான் கேமரா கொண்டு வந்தால் இதையெல்லாம் சொல்லமுடியுமா? என்று கேட்டேன். அவர்கள் சம்மதித்தார்கள். ‘எங்களைப்போல் இனி யாரும் வஞ்சிக்கப்படக் கூடாது, அதற்காகவே பேசுகிறோம்’ என்றார்கள். கேமராவின் ஒரு நாள் வாடகையும் மற்ற செலவுகளும் சேர்த்தால் 10,000 ரூபாய் வரும். அதுதான் என் மாத வருமானம். அதைக்கொண்டு ஒரு சினிமா எடுக்க முடியுமா? அதனால் நண்பர்களிடமிருந்து கேமரா கடன் வாங்கினேன். வேனுக்குக் கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாய் மட்டும் ஏற்பாடு செய்து ஒரே நாளில் படமெடுக்க முடிவு செய்தேன். தேசிய சம்மேளனத்துக்கான ரிப்போர்டிங் படம் போல எடுத்தேன். படம் பார்த்தால் உங்களுக்கு அது புரியும். எடிட் செய்யப் பணமில்லை. சப் டைட்டில் கொடுக்க வேண்டும். சீரியல் வேலைகள் நடக்கும்போது டீ, லஞ்ச் பிரேக்குகளில் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று வேலை செய்து ஒன்றரை மாதங்களில் எடிட்டிங் முடித்தேன். பிறகு மாற்று சினிமா நண்பர்களிடம் காண்பித்தேன். நான் ஒரு படம் எடுத்திருக்கிறேன் என்று சொல்லி அல்ல, ழிதிமிகீ_ல் திரையிடுவதற்காக என்று சொல்லி. பிறகு அதைத் திரையிட்டோம். மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மீடியாக்களில் கவனம் பெற்றது. இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே எங்களுக்குத் தெரியாதே என்று பலரும் கூறத் துவங்கினார்கள். ‘அதிர்வுகள்’ என்ற இயக்கத்தினர் நான் அப்போதும் பெயர் வைக்காத அந்தப் படத்தைக் கேட்டார்கள். பல இடங்களிலும் திரையிடுவதற்காக நிறையப் பேர் அணுகினார்கள். பல பத்திரிகையாளர்களும் அந்த இடத்தைப் பார்வையிடத் துவங்கினார்கள். ‘நிழல்’ என்ற அமைப்பினர் என் படத்தை பாரீசிலும், நார்வேயிலும் நடைபெற்ற டாக்யூமென்ட்ரி விழாக்களில் திரையிட ஏற்பாடு செய்தார்கள். பல இடங்களிலும் விருதுகள் கிடைத்தன. நான் உண்மையிலேயே வியந்து போனேன்.

தீராநதி: ஒரு ஆக்டிவிஸ்ட் என்ற முறையில் தமிழின் இன்றைய பெண்ணிய இயக்கம் எந்த நிலையில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?


லீனா:
தமிழில் மட்டுமல்ல, இந்தியாவின் மொத்த பெண்ணிய இயக்கமே ஒரு தேக்க நிலையில் இருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறேன். எதனால் வளரவில்லை என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான பெண்ணிய இயக்கங்களும் மிகவும் மோரலி`ஸட்டாகத்தான் இருக்கின்றன. வரதட்சணை, கற்பழிப்பு இவையெல்லாம் முக்கியமான பிரச்சனைகள்தான். ஆனாலும் பெண்ணியம் ஒரு தியரி என்ற முறையில் இன்னும் வளர்ச்சியடைய வேண்டியுள்ளது. இன்று மாற்றுப் பேறு உரிமைகளைப் பற்றிப் பேசும்போதோ அல்லது சாய்ஸ் ஆஃப் செக்சுவாலிட்டியைப் பற்றிப் பேசும்போதோ பெண்ணிய இயக்கம் வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை.

தீராநதி: வெளிநாட்டு அனுபவங்களில் சந்தித்த தமிழ் வாசகர் லீனாவின் படைப்புகளை எப்படி எதிர்கொண்டார்கள்?

லீனா: பாரீஸ், லண்டன், பெர்லின், சூரிச் (ஸ்விஸ்), யுஎஸ் என எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு க்ரூப் ஆண் எழுத்தாளர்களுக்கு என் கவிதைகள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தி வீக்கில் அதைப் பற்றி ஒரு கட்டுரை வந்தது. என் கவிதைத் தொகுப்பு வெளிவரும் முன்னரே இந்தியா டுடேயில் ஒரு கட்டுரை வந்தது. பெண்கள் உடலின் அரசியலைப் பற்றிக் கூறுவதற்கு எதிராக, எழுதுவதை நிறுத்தச் சொல்லி பல அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வந்தன. `நான் இனி உங்களிடம் அனுமதி பெற்றுத்தான் எழுத வேண்டும் என்றிருக்கிறேன்` என்று ஒரு கவிதைகூட எழுதினேன். அது புதிய பார்வையின் முதல் இதழில் வெளிவந்தது.

சற்று கூர்ந்து யோசித்தால் எல்லா பத்திரிகைகளும் என்னை ஒரு கம்மோடிட்டியாக உபயோகிக்கத் துவங்கினார்கள் எனத் தோன்றியது. என் பிரச்சனையை அவர்கள் விற்பனைச் சரக்காக்கினார்கள். அது என்னை மிகவும் பாதித்தது. என் கலைச் செயல்பாடே இதற்கு எதிரானதுதான். என் பிரச்சனைகள், என் அரசியல், என் எதிர்வினைகள் எதையும் விற்க நான் விரும்புவதில்லை. வாரத்துக்கொருமுறை மீண்டும் மீண்டும் கூட்டம் நடத்துகிறார்கள். வாருங்கள் வாருங்கள் என்று அழைக்கிறார்கள். அங்கே வருபவர்களாகட்டும், நீ ஏன் ஜீன்ஸ் அணிகிறாய் என்ற கேள்வியில்தான் துவங்குகிறார்கள். நாற்பது வருடம் முன்னரே ‘தலைமுடியை வெட்டிக்கொள், சட்டையோ பேண்டோ உனக்கு எது சௌகர்யமோ அதை அணிந்துகொள்’ என்று பெரியார் சொல்லிவிட்டார். ஒரு ஆண் எழுதினால் அது அவனுடைய அனுபவமா? என்று கேட்பதில்லை. ஆனால், பெண் எழுதினால் அது அவளுடைய அனுபவம்தான் என்று கூறி விசாரணைக்குட்படுத்துகிறார்கள்.

தீராநதி: இலக்கியத்திலாகட்டும் மற்ற எந்தத் துறையிலாகட்டும் இந்த மோரல் போலீசிங்கால் சமூகம் கட்டுப்படுத்தப்படுகிறது இல்லையா?

லீனா: ஒருபக்கம் இந்த மோரல் போலீசிங், மறுபக்கம் தான் சொல்வதுதான் சரியென்று சொல்பவர்களின் சர்வாதிகாரம். இவர்களுக்கு இடையில் ஒரு இடத்தைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். இடம் இருக்கிறது. என் திரைப்படங்களை 200 கிராமங்களில் திரையிட்டிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 10 திரையிடல்கள் நடக்கிறது. இருபது திரைப்பட விழாக்களில் பங்குபெற்றிருக்கிறேன். லத்தீன், அமெரிக்கா, யூரோப், ஆசியா என எல்லா கண்டங்களிலும் பயணம் செய்திருக்கிறேன். இதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலாவதாக, தமிழ்நாட்டுக்குள் குறைந்தது 5000 திரையிடல்களை நடத்தியிருக்கிறேன். ஒவ்வொரு திரையிடலும் எனக்கொரு படம்போலத்தான். தியேட்டரில் வருவார்கள், பார்ப்பார்கள், சென்று விடுவார்கள். ஆனால், இது அப்படியல்ல. திரையிடல் முடிந்து ஒரு விவாதம் இருக்கிறதல்லவா? அப்போதுதான் சினிமா முழுமையடைகிறது என்று நான் கருதுகிறேன். விவாதம் நடக்காத தருணத்தில் என் எல்லா சினிமாக்களும் முழுமை பெறாதவைதான். சினிமா எடுத்ததும் அது முழுமையடைவதில்லை. ஒவ்வொரு திரையிடல்களின் மூலமாகத்தான் அது முழுமையடைகின்றது. இதை ஒரு கூட்டு எதிர்க்குரலாக நான் நினைக்கிறேன்.

தீராநதி: சென்சார் பிரச்சனை இருந்ததா?

லீனா: என் எல்லா சினிமாக்களுக்கும் சென்சார் பிரச்சனை இருந்தது. ‘அலைகளைக் கடந்து’ தவிர என் எந்தப் படத்தையும் சென்சார் ஒத்துக்கொள்ளவில்லை. சென்சார்போர்டின் முன் பலமுறை சென்று நிற்க வேண்டியிருந்தது. ஜாதிப் பிரச்சனைதான் தடை என்று சென்சார் போர்டு கூறியது. ‘பறை’யை ஆயிரம் பிரதியெடுத்து எல்லோருக்கும் காண்பித்தேன். ஆனால், அவர்கள் பயந்ததுபோல் ஒன்றும் நடக்கவில்லை. ஜனநாயக முறையிலான விவாதங்கள் தான் நடந்தன. ஜாதிச் சண்டை எதுவும் வரவில்லை. திருப்பூரில் திரையிட்டபோது ஒரு பி.ஜே.பி கட்சிக்காரரும் வந்து பேசினார். ஏனென்றால் நான் காந்தியை விமர்சித்திருந்தேன். திராவிடக் கழகக்காரரும் வந்து பேசினார். அது ஒரு விவாதத்துக்கான களமானது. நியூயார்க்கில் திரையிட்டபோது இடையில் நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். ஆனால், வாஷிங்டன்னில் சினிமா முடிந்த பிறகு, ஆறு மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

தீராநதி: நியூயார்க்கில் ஏன் நிறுத்தச் சொன்னார்கள்?

லீனா: அங்கு அமைப்பாளர்களுக்குக் கருத்தியல் பிரச்சனை. அதுமட்டுமல்ல, என் மற்றொரு படமான `பிரேக் தி ஷாக்கிள்ஸ்` உலகமயமாக்கலுக்கு எதிரானது. அமொரிக்காவிலுள்ள இந்தியர்களெல்லோருமே உலகமயமாக்கலின் விளைவுகள்தான். அங்கே சென்று அவர்களை எதிர்க்க அவர்கள் அனுமதிப்பார்களா? திரையிடுதலை நிறுத்த வேண்டும் என்றார்கள். நான் மறுத்துவிட்டேன். நீங்கள் யாரும் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. நிறுத்த மாட்டேன். எல்லோரும் கடைசி வரை இருந்து பார்த்து விவாதமும் முடிந்தபிறகுதான் கலைந்தார்கள். இந்த முறை ஒரு தமிழ்ச் சங்கத்துக்குப் போகிறேன். தமிழ்ச் சங்கங்களெல்லாம் க்ளாசிக்கல் டான்ஸ் மற்றும் க்ளாசிக்கல் ம்யூசிக் இவற்றுக்கானவை. டாக்யூமென்ட்ரி திரையிடுவதற்கானவை அல்ல. இந்த மாதிரிப் பிரச்சனைகளை எல்லாம் அவர்கள் அறிய விரும்புவதில்லை. தெரியாத்தனமாய் ஏதேனும் ஒரு சங்கத்தில் திரையிடும் அவசியம் நிகழ்ந்துவிட்டால் அவர்கள் உடனே லீனாவை அழைக்க வேண்டாமென்று மற்ற சங்கங்களுக்குத் தெரியப்படுத்திவிடுகிறார்கள். அந்த சங்கங்களின் தலைவரோ, செயலாளரோ பிராமணீய மனப்பான்மையோடு இருந்துவிட்டால், பின்னர் ஒருபோதும் அழைப்பு வராது. இரண்டு, மூன்று தமிழ்ச் சங்கங்களில் எனக்கு இது நிகழ்ந்தது. ஏனென்றால், பிரச்சனைகளைப் பேசுவது என் சினிமா. அவர்களுக்கு அந்த மாதிரி பிரச்சனைகளைக் கேட்க வேண்டியதில்லை. நீங்கள் இப்படிப் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் வந்தால் வருக வருக. ஆனால், திமீபீமீக்ஷீணீtவீஷீஸீ ஷீயீ ழிஷீக்ஷீtலீ கினீமீக்ஷீவீநீணீஸீ ஜிணீனீவீறீ ஷிணீஸீரீலீணீனீs (திணிஜிழிகி) பிராமணத் தமிழியத்துக்கு எதிராகக் குரலெழுப்புகிறது. அவர்கள் யு.எஸ். முழுக்க என் படங்களைத் திரையிட்டார்கள். அதைக் கேள்விப்பட்டபோது தமிழ்நாட்டில் நண்பர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். தமிழ்ச் சங்கங்கள் எஸ்.வி.சேகர் நாடகம், கிரேஸி மோகன் நாடகம் போன்றவற்றை நடத்துவார்கள். அல்லது அவரவர் குழந்தைகளை நன்றாக மேக்கப் செய்து டான்ஸ் ஆட வைப்பார்கள். கமர்ஷியல் படங்கள் திரையிடுவார்கள். டாக்யூமென்ட்ரி திரையிடுவதில்லை.


தீராநதி: தமிழ் பெண் கவிதையின் அரசியல் குறித்து உங்கள் கருத்து என்ன?

லீனா: personal is political ஆகவே, தனிமனித வாழ்க்கைக் கவிதைகளுக்கு நான் எதிரானவள் அல்ல. நான் எழுதுவதும் தனிமனித வாழ்க்கைக் கவிதைகள் தான். ஆனால், நம் சூழ்நிலை விரிவாக வேண்டும். மித்தாலஜியுடன் ஒரு வாதத்துக்கு நாம் தயாராக வேண்டும். இன்று நம்முடைய மைன்ட்ஸ்கேப்பும் லேண்ட்ஸ்கேப்பும் நான்கு சுவர்களுக்குள் அடங்கிக் கிடக்கிறது. இங்கிருந்துதான் நம் விவாதத்தைத் துவக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், அதன் பரப்பு இன்னும் விரிந்ததாக இருக்க வேண்டும். நான் ஒரு சிட்டிசன் அல்ல, குளோபிசன் என்ற நிலையிலிருந்துதான் நான் எல்லாவற்றையும் பார்க்கிறேன். இன்று உள்நாட்டு அரசியலுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. உலகம் அவ்வளவு சுருங்கிவிட்டது. நீங்கள் எழுத வேண்டியது உலக அரசியல் பற்றி. உலக அளவில் நடக்கிற விஷயங்கள் தனிமனித எழுத்திலும் பேச்சிலும் செயல்பாட்டிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். குஜராத் சம்பவத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதினேன். பிறகு பெண்கள், யுத்தங்கள். தமிழ் பெண்ணிய எழுத்தாளர்களிடம் ஒரு போர்க்குணம் உண்டு. ரகசியமான இலட்சியங்களுக்காக எழுதுவது. இவர்களுடைய முதல் தொகுப்புகள் எனக்குப் பிடித்தவை. ஆனால், பிறகு வந்தவையில் வலிந்து சொல்வது நடக்கிறது. என் கவிதைகள் அப்படியாகக் கூடாதென்று நான் நினைக்கிறேன். இலக்கியத்தில் ஒரு வீஸீநீறீusவீஸ்மீ ஆன அரசியலைத்தான் நான் அங்கீகரிக்கிறேன். யாரையும் ஒதுக்க முடியாது. அதைப் பழக்கப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறேன். இளம் வயது எழுத்தாளர்கள் வருவதையும் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதையும் சகிப்புத்தன்மையோடு பார்ப்பதில்லை பலரும். சகிப்புத்தன்மையின்மை, புதிதாய் வருபவர்களைக் கண்டு அச்சம், அராஜகத்தன்மை இவையெல்லாம் பெண் எழுத்தாளர்களுக்கிடையேயும் அதிகமாகி வருகிறது. ஆண் எழுத்தாளர்களுக்கு அது பிறவியிலேயே உண்டு. இவையெல்லாம் என்னைப் பெரிதும் வருத்தமடையச் செய்கின்றன. ஆனால், இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டு கடந்து செல்வதும் எழுத்தினால் மட்டுமே முடியும். இந்த ஆயுதம் மட்டுமே என் கையிலிருக்கிறது. நிலைகொள்ளவும் எதிர்த்து நிற்கவும் எனக்கிருக்கிற ஆயுதங்கள் ஒன்றுதான்.

தீராநதி: இன்றைய சமூகத்தில் குடும்பம் என்ற நிறுவனம் எப்படி ஒரு பெண் கலைஞரை அல்லது பெண் எழுத்தாளரை பாதிக்கிறது?

லீனா: நீங்கள் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆகலாம். வங்கியில் வேலை பார்க்கலாம். அதாவது பெண்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட துறைகளில். ஆனால், கவிதையெழுதச் செல்வீர்களேயானால், யாராவது உங்கள் கவிதைகளைப் பற்றி மோசமான அபிப்பிராயம் சொன்னால் உங்களுக்குப் பிரச்சனைதான். நான் ஒரு நேர்முகத்தில், கற்பு என்றால் என்ன? கறுப்பா, சிவப்பா? இந்தக் கலாச்சாரம் என்று சொல்வதெல்லாம் பெண்களை கட்டுப்படுத்தத்தான், வேறொன்றுமில்லை என்று கூறினால், என் அம்மாவுக்குப் பிரச்சனை. பாலியல் வியாபாரத்தைப் பற்றிய `செல்லம்மா` என்ற சினிமாவில் பாலியல் தொழிலாளியாக நான் நடித்ததால் அம்மாவுக்கு வருத்தம். ஆனால், நான் என்ன செய்கிறேன் என்பதை எல்லோருக்கும் தெரிவிக்க முயற்சிப்பதுண்டு. அந்த விஷயத்தில் நான் கொஞ்சம் வயலன்ட் ஆகக்கூட இருக்கிறேனோ என்று சந்தேகிக்கிறேன். திரையிடலின்போது என் வீட்டிலும் ஜெரால்டின் வீட்டிலும் எல்லோரையும் அழைப்பேன். என் நிலைப்பாடுகளில் அவர்களுக்குப் பிரச்சனை இருக்கலாம். ஆனாலும், நான் எல்லோரையும் அழைத்துக் காண்பித்து விடுவேன். நீ எப்படி இப்படியெல்லாம் பேசலாம் என்றெல்லாம் அவர்களின் மனதில் கேள்விகள் இருக்கும். ஆனால் கேட்பதில்லை.

தீராநதி: லீனாவின் எழுத்து மற்றும் ஆக்டிவிஸத்தோடு ஜெரால்ட் ஒத்துழைத்துப் போகிறாரா?

லீனா: நிச்சயமாக. அவருக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. அம்மாதான் வருத்தப்படுவார். என்னைப்பற்றி யாரும் மோசமாகச் சொல்லக்கூடாது என்பதுதான் அம்மாவின் ஆசை. நீங்கள் புழக்கத்திலிருக்கிற எதை எதிர்த்தாலும் உங்களைக் குற்றம் சொல்ல பலர் இருப்பார்கள். ஒரு பெண் கொஞ்சம் ஆக்டிவாக எதாவது செய்யத் துவங்கினால் முதலில் நடத்தைக் குற்றம் சுமத்தப்படுவாள். ஆனால், அந்த நிலையைக் கடந்து வந்துவிட்டால் உங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பாரதிராஜாவுடன் வேலை பார்க்கும்போதும் எனக்கு இந்தப் பிரச்சனை வந்தது. அவதூறுப் பிரச்சாரம். சமுகம் உங்களை நோக்கி எறிகின்ற முதல் கல் அதுதான். அந்தக் கல்லை எடுத்துத் திருப்பி எறிய உங்களால் முடிந்தால் நீங்கள் முன்னேறிச் செல்லலாம். பயந்து உட்காந்து விட்டீர்களேயானால் அவ்வளவுதான். திறமைசாலிகளான பெரும்பாலான பெண்களின் கேரியர் முடிவடைவது, நீ நடத்தை சரியில்லாதவள்; நல்லவள் அல்ல என்ற குற்றச்சாட்டின் முன்தான். நல்ல பெண் என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெண்களெல்லோருமே இந்த காலகட்டத்தைக் கடந்துதான் போயிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

**********************
தீராநதிக்கு நன்றி.

4 comments:

tamilnathy said...

செல்வநாயகி,
உங்கள் வலைப்பதிவுப்பக்கம் ஆறுதலாக வந்து வாசிக்கலாமென்றிருந்தேன். ஏனென்றால் சில பதிவுகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுக் கடந்துவிடமுடியாது என்பதனால். ஆனால், இன்று ‘லீனா’என்ற பெயர் என்னை உள்ளே அழைத்துவிட்டது. அவருடைய பேட்டி நிறைந்த வாசிப்பனுபவத்தை வழங்கியது. இவ்வாறான விடயங்களைத் தேடியெடுத்து வாசிக்க எல்லோரிடமும் உள்ளதுபோன்ற சோம்பலால் தவிர்த்துவந்தேன். உங்கள் வாசிப்பை எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. தமிழ்மணத்தில் உங்கள் பெயரைக் கண்டால் வாசிக்காமல் போவதென்பது எதையோ தவறவிடுகிறோம் என்ற உறுத்தலை எனக்கு இனி நிச்சயமாகத் தரும்.

நட்புடன் நதி

Mookku Sundar said...

இவருடைய மாத்தம்மா மற்றும் பறை போன்ற படங்களை குடாப்பகுதி தமிழ்ச்சங்க விழாவில் பார்த்தேன். பேசுவத்ற்கு அவகாசம் கிடைக்கவில்லை.
பேட்டி நன்றாக வந்திருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி செல்வா...

செல்வநாயகி said...

தமிழ்நதி, இந்தச் செவ்வி படித்து முடித்ததும் உடனடியாகக் கடந்து அடுத்த வேலைக்குச் செல்ல முடியாமலிருந்தது எனக்குச் சிறிது நேரம். அதிலும் ஒரு கேள்வி எனக்குள் நிறைய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. "உங்கள் ஆக்டிவிஸத்தோடு ஜெரால்டு ஒத்துப்போகிறாரா?" என்கிற கேள்வி. லீனாவுக்கு மட்டுமின்றி இப்படியான தளங்களில் இயங்குகிற எல்லாப் பெண்களுக்கும் கேட்கப்படும் கேள்வி. அப்படிப் புரிந்துகொண்டு ஒத்துழைக்கிற ஆண்களின் எண்ணிக்கை குறைவு என்பதையே இத்தகைய கேள்விகள் சொல்கின்றன. எந்த ஆணுக்கும் அவரின் துணைவியைச் சுட்டி இந்தக் கேள்வி கேட்கப்படத் தேவையில்லாத சமூகத்தில் பெண்ணுக்கு இன்னும் கேட்கப்படவேண்டிய தேவை மிகுந்தே இருப்பதை உணரவேண்டியுள்ளது. நன்றி.

மூக்கு சுந்தர்,

நீங்கள் வலைப்பதிவுகள் பக்கம் வந்துகொண்டுதான் இருக்கிறீர்களா:)) நீண்டநாட்கள் இருக்கும் உங்களின் எழுத்தை வாசித்து. நன்றி வருகைக்கு.

தனம் said...

உண்மையிலேயே என்னை போன்ற இலக்கியத்தில் தொடர்பு இல்லாதவர்களுக்கும் மற்றும் நேரம் ஒதுக்கி வாசிக்காதவர்களையும் வாசிக்க வைத்த எழுத்தாளருக்கும் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திய தீராநதிக்கும் நன்றி. முழுவதுமாய் ஒரு போராட்டத்தில் வெற்றவாகை சூடிக்கொண்டே இருக்கும் லீனாவிற்கு வாழ்த்துக்கள் கூறி முடிக்கிறேன்.