Friday, December 08, 2006

பிரச்சினைகளைச் சொல்லும் பெண்கள் சென்சிடிவானவர்களா?

சக்தியில் இட நினைத்திருந்தது சென்ற இடுகையான "கற்றதனால் ஆன பயனென்ன" என்னும் தலைப்பின் இரண்டாம் பாகம். கடந்த வாரத்தின் வாசிப்பு அனுபவத்தால் இந்தப் பதிவு. இது நான் எழுத நினைத்திருந்த அந்த இடுகையின் தொடர்சிக்குமுன் ஒரு இடைச் செருகலாக வருகிறது. தன் நட்சத்திரவாரத்தில் பொன்ஸ் எழுதிய "பெண் ஏன் அடிமையனாள்?" நூல் விமர்சனமும், அதைத் தொடர்ந்து இட்ட "பதிவுலகில் பெண்கள்"
என்னும் இடுகையும் முக்கியமானவை. அதிலும் "பதிவுலகில் பெண்கள்" என்னும் இடுகையின்பின் எழுந்த தொடர்வினைகள் கவனிக்கப் படவேண்டியவை. http://poonspakkangkal.blogspot.com/2006/11/blog-post_116472055242688256.html அதன் தாக்கம் நண்பர் இட்லிவடை ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி இங்கு எழுதும் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டிய அளவுவரை கொண்டுபோயிருக்கிறது.
http://idlyvadai.blogspot.com/2006/12/blog-post_1649.html வாக்கெடுப்பு நடத்தி மகிழ்ந்த, வாக்களித்து முடிவு சொல்லி மகிழ்ந்த
எல்லோருக்கும் நன்றி. எங்கள் சமூகம், எங்களைச் சுற்றிய மனிதர்கள் பற்றிய எங்களின் மதிப்பீடுகளை நாங்கள் மீண்டுமொருமுறை சரிபார்த்துக்கொள்ள இதுவும் ஒரு வாய்ப்பானதென்பதால் அவ்வாய்ப்பை வழங்கிய எல்லோருக்கும் நன்றி. இதற்குமேல் என்ன சொல்ல? ஓடுகிற தண்ணீர் உருட்டிக்கொண்டோடினால் என்ன, அதை அனுபவித்துப் பழகிய கற்கள் அதிலேயே தங்கள் வடிவம் செதுக்கிக் கொள்கின்றன. கிளம்பும்
எதிர்வினைகளை ஒரு மத்தாப்பு பொறிவிடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் பார்க்கப் பழக்கிவிடுகின்றன சில அனுபவங்கள்.

http://nilaraj.blogspot.com/2006/11/blog-post_30.html பொன்ஸ் பதிவுக்குத் தோழி நிலாவின் எதிர்வினையாக எழுதப்பட்ட பதிவு "இதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்க வேண்டுமா? புறக்கணித்துவிட்டுப் போய்க்கொண்டேயிருக்கலாம்?" என்று சொன்னது. தொடர்ந்து இயங்குவதற்கு "கடந்துபோதல்" முக்கியமானது. ஆனால் நிகழ்வுகளைப் பதிந்து வைத்தலும் முக்கியமானது. அப்படிப் பதியப்படுவதே முடங்கிப்போதல் ஆகாது. இன்னும்சொல்லப்போனால் அப்படிப் பதியப்படுகிற அனுபவங்கள்
இன்னொருவருக்குத் தொடர்ந்தியங்கும் வலிமையைக் கொடுப்பனவாகக்கூட இருக்கலாம். கரைகடந்து போய் உலாவிவருதல் பழக்கமில்லாத இனத்திலிருந்து முதன்முதலாய் அப்படிப் போய்வருபவர்களின் பிரச்சினைகள் அறியப்படல் நாளை போகத் தீர்மானிப்பவர்கள் தெளிவாய் இருக்க உதவும். நிலாவின் பதிவைக்கூட அதன் பின்னணியிலான நல்ல நோக்கம் கண்டு புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அவரே பின்னூட்டத்தில் " பெண்கள்
அதிக சென்சிட்டிவாக பலதிற்கு உள்ளர்த்தம் கற்பித்துக்கொள்வதால்தான் இப்படிப் புலம்புகிறார்கள்" என்று எழுதியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. நான் புரிந்தவரையில் பொன்ஸ் எழுதிய "பதிவுலகில் பெண்கள்" என்னும் இடுகை புலம்பலாகத் தெரியவில்லை. நிகழ்வுகளின் குறிப்புக்களாகவே தெரிகிறது. அவர் அதில் குறிப்பிட்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்றேனும் தோழி நிலாவுக்கு ஏற்பட்டதா எனத் தெரியவில்லை.
ஆனால் பொன்ஸ் கூறியிருப்பவற்றில் ஒன்றிரண்டு அனுபவங்கள் எனக்கு(ம்) ஏற்பட்டிருக்கின்றன. என்னிலிருந்து கிளம்பும் ஒரு மெல்லிய
புன்னகையோடும், என் வாழ்வில் எனக்கு நெருங்கியவர்களோடு என்னைச் சுற்றிய மற்ற நிகழ்வுகளைப் பகிர்வதுபோல் இதையும் பகிர்ந்துகொள்வதோடும் அந்த அனுபவங்கள் ஈரம் உலர்ந்துவிடுகின்றன. என்றாலும் அவை முக்கியமானவை. ஏன், எதற்காக ஏற்படுகின்றன என்கின்ற காரணங்கள் சிந்திக்கப்படவேண்டியவை. அதன் அடிப்படையில் நான் நாளையோ, பிறகோ என் அனுபவங்களைப் பதிந்து வைத்தால் அது "ஒரு மனுஷி, அவள் இயங்கிய தளம், அங்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதற்கான காரணங்கள்" என்ற ரீதியில் பார்க்கப்படாமல் "இது அவளின் குணத்தின் குறைபாடு, அவள் சென்சிடிவானவள், உள்ளர்த்தங்கள் கற்பித்துக்கொள்ளக்கூடியவள்" என்கிற அடிப்படையில் பார்க்கப்படுவது எவ்வளவுதூரம் பொருளுடையதாயிருக்கும்? கிரண்பேடியின் சுயசரிதையைக்கூட இந்தக்காரணம் சொல்லித் தூக்கியெறிந்துகொண்டே போய்க்கொண்டிருக்கலாம்.

தீராநதியில் வந்திருக்கும் பெண்படைப்பாளி லீனா மணிமேகலையின் பேட்டியைப் படித்துக்கொண்டிருந்தபோது அதிலிருந்து சில பகுதிகளை இங்கு எடுத்துப் போடுதல் இன்றியமையாததாகப் பட்டது. பதிவுலகில் மட்டுமின்றி எங்கெங்கும் தனக்கென்று ஒரு தளம் அமைத்து இயங்கும் பெண்கள் எதிர்கொள்ள நேர்பவை என்னென்ன என்பதை அவரின் பதில்களிலிருந்து அறியலாம். இதில் முக்கியமான இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.
சமூகத்தளங்களில் இயங்குகிற பெண்கள் எல்லோருமே பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் 100 சதவீதம் சொல்லிவிடமுடியாது. நீரின்
போக்கில் மிதந்துசெல்வதுமாதிரி இச்சமுகத்தின் நடைமுறையோடு கைகோர்த்து நடப்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் வருவதில்லை. அதை எதிர்த்துக்
கேள்விகேட்பவர்களுக்குத்தான் அவை அதிகம். பாதுகாப்பான கூரையின் நிழலில் நிற்கமுடிந்தவர்கள், வெட்டவெளியில் நிற்கவேண்டியிருப்பவன் தன்னைக் கருக்கும் வெயிலைத் திட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து "என்ன இவன் ஒரு சாதாரண வெயிலுக்கே இப்படிப் புலம்புகிறான்? " என்று சொல்வதுபோல் அமைந்துவிடக்கூடாது பிரச்சினைகளால் பாதிக்கப்படாதபோது நாம் அப்படிப் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துக் கருத்துச் சொல்வது. இனி அவரின் செவ்வியிலிருந்து:-

தீராநதி: சினிமாத்துறையோடு உங்கள் தொடர்பு எப்படி நிகழ்ந்தது?

லீனா: அகிரா குரோசோவா, ஃபெல்லினி என்ற பெயர்களையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ‘பாரதிராஜாவின் படங்களில் எக்ஸ்பிரஷன்’ என்பதுதான் என் அப்பாவின் (டாக்டர்.ரகுபதி, பேராசிரியர், பிஷப் ஹிபர் கல்லூரி, திருச்சி) டாக்டரேட்டுக்கான தீஸிஸ். ஆனாலும் நான் நிறைய சினிமா பார்க்கக்கூடாது என்ற மோராலிஸ்டிக் சிந்தனையுடையவராயிருந்தார் அவர். அவருடைய கட்டுரைகளை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் வேளையில்தான் இந்தப் பெயர்களெல்லாம் எனக்கு அறிமுகமாகின்றன. பாரதிராஜாவின் எல்லாப் படங்களையும் வீடியோவில் பார்த்திருக்கிறேன். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே சென்னையில் படித்தேன்.

பிறகு திருச்சியிலும், மதுரையிலும். அங்கேயெல்லாம் திரைப்பட இயக்கங்கள் கிடையாது. அப்பாவின் மரணத்துக்குப் பிறகு, பாரதிராஜாவுடன் அறிமுகமான பிறகுதான், சினிமா என்றால் என்ன என்று புரிய ஆரம்பித்தது. தம்பி லயோலா கல்லூரியில் மூன்றாம் வருட டிகிரி படித்துக் கொண்டிருக்கும்போதுதான் அப்பாவின் மரணம், அந்த எதிர்பாராத பிரிவு என் வாழ்க்கையையே திசை திருப்பியது. என்ன செய்வது என்று தெரியாத நிலை. சம்பாதிக்கின்ற நபர் வீட்டில் அவர் மட்டுமே. மரணமடைகையில் அவருக்கு 48 வயது. எனக்கோ 20. நான்தான் மூத்தவள். நான் பட்டப் படிப்பை முடித்து லண்டனுக்குச் சென்று எம்.எஸ், முடித்து ஒரு அகாடமீஷியன் ஆக வேண்டுமென்று அப்பா ஆசைப்பட்டிருந்தார். அதற்கான ஆயத்தங்களிலும் இருந்தேன். வாழ்வதற்காக ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன் நான். இதற்கிடையில்தான் அப்பாவின் நினைவுநாளுக்கு அவருடைய ஆராய்ச்சிகளையெல்லாம் புத்தகமாய் வெளியிடத் தீர்மானித்திருந்தோம். அதற்கு ஒரு முன்னுரை வாங்குவதற்காகத்தான் பாரதிராஜாவை முதன்முறை சந்தித்தேன். அன்று அவரிடம் நிறையப் பேசினேன். பள்ளியிலும், கல்லூரியிலும் ஆல்ரவுண்டர் ஆயிருந்தேன். பத்து வருடம் பரதநாட்டியம் பயின்றிருக்கிறேன். ஆறேழு வருடம் கர்நாடக சங்கீதமும், அத்லெட்டிக்ஸில் மாநில அளவில் கலந்துகொண்டிருக்கிறேன். கூடைப் பந்தில் பல்கலைக்கழகத்துக்காய் விளையாடியிருக்கிறேன். அப்பா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் எழுத்து, மேடைப் பேச்சு போன்றவற்றிலும் பங்கு பெற்றிருக்கிறேன். அப்பா மேடையில் பேசுவதைப் பார்த்துத்தான் நானும் மேடைப் பேச்சைத் துவக்கினேன். நடுத்தர வர்க்கக் குடும்பங்களைப் பொறுத்தவரை, படிப்பில் முன்னணியில் இருந்தால் உங்களுக்கு நிறைய சுதந்திரம் கிடைக்கும். பல களங்களில் உங்களை நிரூபித்துக்காட்டிவிட்டால் உங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், அது எனக்கு ஒரு தப்பிக்கும் வழியாயிருந்தது.

பதினொன்று, பன்னிரண்டு வகுப்புகளில் படிக்கையில் நிறைய இடதுசாரி வெளியீடுகளை வாசித்திருக்கிறேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் இந்தோ_ சோவியத் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாய் சோவியத் யூனியனுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அது எனக்குப் பெரிய எக்ஸ்போஷரைத் தந்தது, ‘யங் பயனீர்ஸ் ஆஃப் இந்தியா’ என்று ஒரு ரஷ்யன் ஸ்பான்ஸர் ப்ரோக்ராம் அன்று இருந்தது. தேசிய ஒருமைப்பாட்டுக்கான ஓவியப் போட்டியிலிருந்துதான் தேர்ந்தெடுத்தார்கள். 1990_ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு மூன்று மாதம் முன்புதான் சென்றோம். கருங்கடலின் ஆர்த்டெக்கில் இன்டர்நேஷனல் சில்ட்ரன்ஸ் கேம்ப்பில் பங்குகொண்டோம். அதுவரைக்கும் இடதுசாரியில் மிகவும் எதிர்பார்ப்புக் கொண்டிருந்த நான் நம்பிக்கை இழக்கத் துவங்கினேன். திரும்பி வந்த பிறகு, பல மேடைகளிலும் ‘லீனாவின் ரஷ்ய அனுபவங்கள்’ என்ற தலைப்பில் பேசினேன். சோவியத் யூனியன் வீழ்ந்து விடும். நீங்கள் வெறுமனே கனவு காண வேண்டாம் என்று கூறினேன்.

தீராநதி: எதனால் உங்களுக்கு அப்படித் தோன்றியது?

லீனா: பெஸ்ட்ரோய்கா, க்லாஸ்நாஸ்ட், புதிய சந்தைக் கொள்கைகள், இளைய தலைமுறையினர் நிறைய பேரைச் சந்தித்தேன். இன்று இந்திய இளைஞர்கள் கூறுவதைப் போல எனக்கு அமெரிக்காவில் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்றுதான் அவர்களும் கூறினார்கள். இளம் பெண்களுக்கு மிஸ் யூனிவர்ஸ் ஆக மட்டுமே விருப்பம். மேற்கத்திய உலகம் அவர்களை அந்த அளவுக்கு மயக்கியிருந்தது. இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. எல்லோரும் ஏதோ கண்ணியில் சிக்கிக் கொண்டதைப் போலிருந்தார்கள். மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே உங்களால் ஒரு சோஷலிஸ்ட் ஆக முடியும்.

அதேபோல் கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே ஒரு ஃபெமினிஸ்ட்டாகவும் முடியும். அப்படிக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படுபவர்களை இதைப்போல பலவற்றைக் காட்டி திறந்துவிட்டால் அவர்கள் அதை நோக்கிக் கவரப்படுகிறார்கள். ஆனால், அப்பா இப்படியெல்லாம் நான் பேசக்கூடாது என்று அறிவுறுத்தினார். அவருக்கு சோவியத் யூனியன்தான் கடவுளைப்போல. ஜனசக்தியில் 13 வாரங்கள் தொடர்ந்து இதைப் பற்றி எழுதினேன். அது என் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றிவிட்டது. பத்து வருடங்கள் கற்றபின் இனி பதரநாட்டியம் ஆடுவதில்லை என்று முடிவெடுத்தேன். பரதநாட்டியம் என்பது ஒரு மேல்தட்டுக் கலை. சாதாரண மக்களுக்கானதல்ல. தப்பாட்டம் அல்லது ஏதேனும் ஒரு கிராமியக் கலை கற்றுக்கொள்ளலாம். என்னிடம் இனிமேல் அ ஆ என்று கர்நாடக சங்கீதம் பாடச் சொல்லாதீர்கள். முருகனையும், கண்ணனையும் மனமுருக வேண்டுவதால் என்ன பயன்? இவ்வாறு என் மனமே மாறிப்போனது. எப்படி இது நிகழ்ந்ததென்று என்னால் சொல்ல முடியவில்லை. பரதநாட்டியம் கற்கிறாய். ஆனால், என்ன வெளிப்படுத்துகிறாய்? கண்ணனுக்காக உருகியுருகி ஆடுகிறாய். அல்லது முருகன் உன்னை வஞ்சித்ததாய் பாடிக் கொண்டிருப்பாய். ஆனால், அதன் மூலம் என்ன வெளிப்படுத்துகிறாய்? அய்யோ என்னை விட்டுப் போனாயே என்று அழுவாய், அல்லது கொஞ்சுவாய். எனக்கு அதில் `குறவன் குறத்தி` மட்டுமே பிடித்தது. அதில் காதல் இருக்கிறது. இருவருக்கும் சமநிலை. கர்நாடக சங்கீதத்தில் திரும்பத் திரும்ப சமஸ்கிருத ஸ்லோகங்கள் பாடப்படுகிறது அல்லது தெலுங்கு. ஆனால் என்ன வெளிப்படுத்துகிறோம்?

எனக்கு முதலில் நல்ல திராவிட மொழித் தாக்கம் இருந்தது. அடுக்குமொழி எல்லாம். ஆனால், பிறகு ரஷ்ய இலக்கியம் என்னை வெகுவாகப் பாதித்தது. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அல்லது தேர்ந்தெடுக்கிறீர்களோ அதுதான் உங்கள் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறதென்று நான் கருதுகிறேன். நான் மிகவும் கன்சர்வேட்டிவ்வான குடும்பத்திலிருந்து வந்தவள். என் மகள் நன்றாய் ஆடுவாள், பாடுவாள், வரைவாள் என்ற பெருமைக்காக மட்டுமே இதையெல்லாம் என்னைக் கற்றுக்கொள்ள வைத்தார்கள். நான் ஒரு மேல்ஜாதியில் பிறந்தவள். ஆனால், இன்று அந்த அடையாளத்தை முழுவதுமாக நிராகரித்துவிட்டேன். சிறு வயதிலேயே எனக்குள் நிறைய கேள்விகள். என் அப்பா, பெரியப்பா, தாத்தா, பெரிய தாத்தா எல்லாருமே சி.பி.ஐ,. சி.பி.எம்., சி.பி.ஐ(எம்.எல்) ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களாயிருந்தவர்கள். (தாத்தா ஏ.சீனிவாசன் சி.பி.ஐ.யின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவர், மாமா அழகிரிசாமி சி.பி.ஐ.யின் முன்னாள் பார்லிமென்ட் அங்கத்தினர்). ஆனால், எல்லா தலைவர்களின் மனைவிமார்களும் வீட்டில் தோசை வார்த்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இது ஒரு பெரிய அநீதியாக எனக்குப் பட்டது. எதனால் அவர்கள் தலைமைக்கு வரவில்லை? எதனால் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள்? கட்சிக் கூட்டங்களில்கூட பெண்கள் டீ தான் வைத்துக் கொடுக்கிறார்கள். ஒருபொழுதும் அவர்களை கூட உட்கார வைத்து அரசியல் விவாதிப்பதில்லை. இதெல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்று எனக்கு அன்றே தோன்றியது.

தீராநதி: இப்போதும் அதே நிலைதானே?

லீனா: ஆமாம். நான் சொல்ல வந்தது என் கேள்வி கேட்கும் செயல், குடும்பத்தின் உள்ளேயிருந்தே வந்தது என்பதைத்தான். அதேபோல் தீண்டாமையும் இருந்தது. நீங்கள் மேடையில் எல்லாவற்றையும் பேசுவீர்கள். ஆனால், வயலில் வேலை செய்பவனிடம் எஜமானனாய்ப் பழகுவீர்கள். வீட்டிற்குள் வேலையாட்கள் நேராக நுழையக் கூடாது, சுற்றி வளைந்துதான் வரவேண்டும். துணி துவைப்பவன் வெளியே நின்றபடி துணிகளை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும். அதேநேரத்தில், கம்யூனிஸ்ட் குடும்பம் என்று பெருமைப்பட்டுக் கொள்வீர்கள். இவையெல்லாம் பெரிய முரண்பாடாகத் தோன்றியது எனக்கு. மாரி என்ற வேலைக்காரிக்கு என் உடையைக் கொடுத்து என் படுக்கையில் அமர வைப்பேன். என் தட்டில் சாப்பாடு கொடுப்பேன். கருப்பையா என்ற வயதான வேலைக்காரரை கருப்பையா என்றுதான் அழைக்க வேண்டும். அவன், இவன் என்று தான் கூற வேண்டும். அவர், இவர் என்றெல்லாம் கூறக்கூடாது. பின் எதற்கு வயதானவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்று கூறுகிறீர்கள்? இப்படி எல்லா முரண்பாடுகளும் குடும்பத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. என் வீட்டிலிருந்த அரசியல் தலைவர்கள் ஒருபோதும் எனக்கு மாதிரியாய் இருக்கவில்லை. அவரைப் பார்க்கையில் தலைவர் என்ற நிலையில் ஜனங்கள் மரியாதை கொடுப்பார்கள். ஊரின் தலித்துகளின் பிரச்சனைகளெல்லாம் எங்கள் வீட்டுக்குத்தான் வரும். தாத்தா பஞ்சாயத்து செய்வார். ஆனால். ஒரு தலித்தை கல்யாணம் செய்யக்கூடாது. இதுதான் என் பின்னணி. எழுத்து, கவிதை எப்போதும் என் இதயத்தோடு இணைந்திருந்தது. கண்ணாடியைப் பார்த்து பல கேள்விகளையும் கேட்கத் துவங்கினேன். இந்த முரண்பாடுகளையெல்லாம் எழுத்தின் மூலமாகக் கட்டுடைக்கிறேன், அவற்றுக்குப் பரிகாரம் காண முடிகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.

பின்குறிப்பு:
லீனாவின் செவ்வியின் தொடர்ச்சி அடுத்த இடுகையில் (பதிவு நீளமானதால் படிக்காமல் திரும்பிப் போகிறேன் என்று இதற்கு முந்தைய இடுகையில் சொன்ன நண்பர் பாலபாரதி மற்றும் சில பா.க .ச உறுப்பினர்களைக் கருத்தில் கொண்டு இந்தக் கத்தரிப்பு வேலை:))

14 comments:

S. அருள் குமார் said...

லீனாவின் அந்த அருமையான பேட்டியை பொறுமையாக டைப் செய்து வலையேற்ற வேண்டும் என்றிருந்தேன். என் வேலையைக் குறைத்துவிட்டீர்கள். நன்றி! நான் பரிந்துரை செய்ய நினைக்கும் நபர்களுக்கு இப்பதிவின் சுட்டியை மட்டும் கொடுத்துவிடுவேன் :)

viji said...

லீனா மிகசிறந்த பெண்படைப்பாளி. என் நண்பர் ஒருவர் மூலம் அறிமுகம். அவ்ர்களது எழுத்துகளை வாசித்துள்ளேன். அவரது சில குறும் படங்களும் பார்த்துள்ளேன். இந்த பேட்டியை copy paste செய்துகொள்ளலாமா? சிலறை படிக்க சொல்ல வேண்டும்.

செல்வநாயகி said...

அருள்,

நானும் தட்டச்ச சோம்பல் பட்டுக்கொண்டு ஒரு வாரம் ஓட்டினேன். பிறகு தட்டச்சாமலேயே வெட்டி ஒட்டி, எழுத்துரு கொண்டு மாற்றி இங்கு இட்டேன்:))

விஜி,

நீங்கள் தாராளமாக காபி பேஸ்ட் செய்யலாம். இந்தமாத தீராநதியில் வந்துள்ளது. லீனாவைப்பற்றி நான் அறிந்திராத சிலவிடயங்களும் இந்தச் செவ்வி மூலம் அறிய முடிந்தது எனக்கு.

இருவருக்கும் நன்றி.

tamilnathy said...

அன்புள்ள தோழி,

லீனா மணிமேகலையைப் பற்றி மற்றவர்கள் கூறியதைக் கேட்டபின் மேலும் அறியவேண்டுமென்றிருந்தேன். உங்கள் பதிவில் அவரது செவ்வியை இட்டதன் மூலம் எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். ‘பெண்களும் பதிவுலகமும்’என்ற விடயம் குறித்த சர்ச்சைகள் நடந்திருக்கின்றனவா… ம்… நல்லது. நிறைய எழுதுங்கள். பெண் பதிவர்கள் சந்திப்பு அடுத்தமுறை நடக்கும்போது எங்களைப்போன்றவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்காமல் தயவுசெய்து வாருங்கள் (சென்னையில் இருந்தால்) என்பது எனது பணிவான வேண்டுகோள்.

பொன்ஸ்~~Poorna said...

செல்வா, பதிவுக்கு நன்றி...

// சில பா.க .ச உறுப்பினர்களைக் கருத்தில் கொண்டு //
நீங்களுமா :)))

செல்வநாயகி said...

பொன்ஸ்,

"பதிவுலகிற்கு வரும் பெண்கள் நுண்ணுணர்வுகளை இழந்துவிடுவதுபோல் தெரிகிறது. ஒரே ரணகளமாவும், ரௌத்திரமாவும் இருக்கிறது" என்றெல்லாம் நண்பர்கள் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்களே:)) இனி நகைச்சுவை உணர்வு கொப்பளிக்கவும் பதிவுகள் எழுதிட வேண்டியதுதான்:)) அது பா.க.ச வையெல்லாம் வம்புக்கிழுக்காமல் எப்படி:))

தமிழ்நதி,

உங்களின் பதிவுகளைப், பின்னூட்டங்களை வாசித்து வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். என்றேனுமொருநாளில் "உலகப் பெண்பதிவர்கள் மாநாடு" கூட நடக்கலாம். சந்தித்து விடலாம்:))

டிசே தமிழன் said...

/ஆனால் நிகழ்வுகளைப் பதிந்து வைத்தலும் முக்கியமானது. அப்படிப் பதியப்படுவதே முடங்கிப்போதல் ஆகாது. இன்னும்சொல்லப்போனால் அப்படிப் பதியப்படுகிற அனுபவங்கள்
இன்னொருவருக்குத் தொடர்ந்தியங்கும் வலிமையைக் கொடுப்பனவாகக்கூட இருக்கலாம். கரைகடந்து போய் உலாவிவருதல் பழக்கமில்லாத இனத்திலிருந்து முதன்முதலாய் அப்படிப் போய்வருபவர்களின் பிரச்சினைகள் அறியப்படல் நாளை போகத் தீர்மானிப்பவர்கள் தெளிவாய் இருக்க உதவும்/
பொன்ஸின் பதிவை வாசித்தபோது எனக்கும் இதுதான் முக்கியமாய்ப்பட்டது. எவரையும் நேரடியாக சுட்டவில்லையென்றாலும் அந்தப்பதிவில் பொன்ஸின், சமூகம் மீதான கோபம் தெரிந்தது. மற்றும்படி எழுதிக்கொண்டிருக்கும் பெண்கள் மீதான் ஆண்களின் நேரடி/மறைமுக abuses பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றேன்.
.....
செல்வநாயகி, லீலாவின் நேர்காணலின் பகுதியை பதிந்தமைக்கு நன்றி. தமிழகத்திலிருந்து கனடாவுக்கு வந்த படைப்பாளிகளில் லீனாவுடன் தான் நிறைய பல விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்திருந்தது. நமக்கான அலைவரிசை ஒன்றாய் இருந்தது ஒரு காரணாமாயிருக்கலாம் :-).

ramachandranusha said...

செல்வா, நிலாவில் பதில் சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்து விட்டு விட்ட கருத்து. நாம் (என்று நினைக்கிறேன்) பெரும்பாலும் நடு வயதை, அதாவது முப்பது வயதைக் கடந்தவர்கள் என்று நினைக்கிறேன். ஆகையால் நமக்கு வரும்
பிரச்சனைகளுக்கும் கல்யாணம் ஆகாத பெண்கள் என்று தெரிந்த இளைஞிகளுக்கு வரும் தொந்தரவு கொஞ்சம் அதிகமாய், வேறுவிதமாய்
இருக்கலாம். சரியா பொன்ஸ்?

செல்வநாயகி said...

டிசே, நிலாவின் பதிவிலியே உங்கள் பின்னூட்டம் கண்டேன். நீங்கள் சொல்லியிருந்தது சரியானது. நன்றி.

லீனா பற்றிய உங்கள் பழைய பதிவொன்றினை வாசித்த நினைவு வருகிறது. இச்செவ்வியின் அடுத்த பாகமாக நான் இட இருப்பவை இன்னும் சில முக்கியமான விடயங்களைத் தொடுகிறது. இப்பாகத்திலேயே லீனா சொல்லியிருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் இல்லமானாலும் அங்கு பெண்களுக்கான இடம் பற்றிய கருத்து மறுக்கமுடியாதது பெரும்பாலும்.

உஷா,
பெரிதாக வேறுபாடுகள் இருக்காதென்றாலும் அவதூறுகளின் தன்மையிலும், தொனியிலும் சில வித்தியாசங்கள் இருக்கலாம் பெண்களின் வயதைப் பொறுத்து.

பொன்ஸ்~~Poorna said...

உஷா,
நடு வயதைக் கடந்த பெண்களே இங்கே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்று நினைக்கிறேன்.. கல்யாணம் ஆகாத பெண்கள், ஆன பெண்கள் என்று பகுத்துப் பார்க்கும் அளவுக்கான எண்ணிக்கை இங்கே இல்லை.

எல்லாருக்குமான பதிவாகத் தான் என் பதிவை முன்வைத்திருந்தேன். அதில் சொல்லப்பட்டவற்றில் பல என்னுடைய பிரச்சனைகள் மட்டுமே இல்லை; எல்லா வகையினருக்குமானவை.

ஆனால், சமீபத்தில் பதிவெழுதத் வந்த தூயா போன்றவர்களுக்கே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன என்று அறியும் போதில் நீங்கள் சொல்வது போல் பிரித்தும் எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

செல்வ நாயகி யக்கோவ்...,
அவசியமான பதிவு. எங்கள்ட மக்களை மனதில் கருத்தில் கொண்டு.., பதிவை சுருக்கியமைக்கு முதலில் நன்றிகள்.
மேலும்...,
புலம்புகிறார்கள் என்ற அந்த கருத்துக்கணிப்பின் முடிவில் எனக்கு முழு சம்மதமே!

அவ்வாறு புலம்பும் நிலையில் தான் இந்த சமூகம் பெண்களை வைத்திருக்கிறது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தால் போதும்!

நம் புலம்பல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அப்படியொரு கருத்துக்கணிப்பு நடத்தியமைக்கு அவருக்கு என் நன்றிகள்.!!!

:-))))

பத்மா அர்விந்த் said...

செல்வநாயகி
பொன்ஸின் பதிவு, நிலாவின் பதிவு அதன் பின்னூட்டங்கள் அதன் பின் நடந்த கருத்துக்கணிப்பு எல்லாவற்றையும் கவனிக்கிறேன். ஒடுக்க பட்ட மக்கள் குரல் கொடுக்கும் போதெல்லாம் இந்த புலம்பல் என்ற கருத்தும் கண்டுகொள்ளாமல் உழைக்க வேண்டியதுதானே, முன்னேற்றைத்தை யார் தடுக்க முடியும் என்ற வாதமும் வராமல் இருந்ததில்லை. அதுவே தான் பெண்கள் பிரச்சினையின் போதும்.ஏனென்றால் பெண்கள் ஒடுக்க பட்டவர்கள் எல்லா மதத்திலும் இனத்திலும் சாதி வித்தியாசம் இன்றி. கடந்து வந்த பாதையின் க்டினத்தை சொல்வதும் இன்னும் க்டக்க இருக்கும் பாதையின் கடினத்தை எதிர்நோக்குவதும் எல்லா துறைக்கும் பொருந்தும். இந்த பிரச்சினைகள் உண்டு என்பது வரலாம் என்பதும் தெரியாமல் திட்டமிடுதல் சாத்தியம் இல்லை.அபாயம் (threat assessment) பற்றிய அறிவு வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் முக்கியம். மைக்கல் பாட்டரின் மேலாண்மை விதிகள் படித்தவர் த்ரிந்து கொள்வார்கள். அது போல பொன்ஸின் பதிவு அதன் ஊடான கருத்துக்கள் புதிதாக வருபவருக்கும் ஏற்கெனவே பதிவோருக்கும் அவசியம். பெரும்பாலான ஆண்கள் இருக்கும் சமூகத்தில் (வலைப்பதிவு) வேறெப்படியான கருத்துக்கணிப்பு இருக்க முடியும். எந்த வித முடிவு வரும் என்றுதெரிந்தே தேரிதல் நடத்துவது போல. தொடர்ந்து பேசுவோம்.

பத்மா அர்விந்த் said...

லீனாவின் செவ்வியை ஒத்த ஒரு வேலைக்காரி என்ற ஒரு சாதி என்ற என் பதிவும் அதனை ஒத்த விவாதங்களும் நினவுக்கு வந்தன.பதிவின் தொடர்ச்சியை படிக்க ஆவலாக இருக்கிறேன். டீசே இவரைப்பற்றீ நிறைய பதிந்திரூகிறார்.

செல்வநாயகி said...

பொன்ஸ், பாலபாரதி, பத்மா

உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி.