Saturday, September 02, 2006

சக்தி: அறிமுக இடுகை

வாசகர்களுக்கு வணக்கம். இம்முறை சக்தியாக சந்திப்பதில் மகிழ்ச்சி. இதுவரை ஊடகங்கள், வலைப்பதிவுகலள் இவை அனைத்திலும் பெண்களின் விடுதலை பற்றியும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் பற்றியும் பல கோணங்களில் பேசியும் எழுதுயுமாகி விட்டது. ஆனாலும் இன்னமும் பலருக்கு பெண்விடுதலை என்பது வேண்டும் போது விருப்பட்டவரோடு கலவி கொள்ள கிடைக்கும் சுதந்திரமாகவும் இன்னும் சிலருக்கு மதுஅரங்கில் மது அருந்தவும் விருப்பம்போல நடனமாட பெண்கள் போராடுவதாகவும் தோன்றுகிறது. இன்னும் சிலருக்கோ பெண்கள் சுதந்திரம் என்பது தமிழகத்து பண்பாட்டை கலாச்சாரத்தை சீரழிக்க வந்த பண்பாக தோன்றுகிறது.

இன்னும் சிலருக்கோ பொருளாதார சுதந்திரம் இன்றி இன்னொருவரை அண்டி வாழும் பலருக்கு சுவாசிக்கும் காற்று கூட அனுமதியோடுதான் கிடைக்கிறது என்னும் போது உன் சிறகுகளை உபயோகித்து பறந்து போ என்று சொல்வதன் வன்முறை புரியவில்லை. இவற்றை பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதால் என்ன பயன் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனாலும் பெண்களின் தொலைத்த அல்டையாளங்களை தேட, சுதந்திரமாக சுவாசிக்கும் காற்றின் இன்பத்தை நுகர கற்று கொள்ளவும் அந்த அனுபவத்தை தேடி பெறவும் இன்னமும் மேலாக சகல அநீதிகளுக்கும் எதிராகவும் தொடர்ந்து எழுதுவது அவசியமாகிறது.

படித்த படிப்பு கற்றுத்தேறும் அறிவும் சிந்தனையை வளர்க்கும். அந்த சிந்தனைகள் நல்ல வழிகளை தேடித்தரும். ஆனாலும் இங்கே வலை உலகில் படித்து நல்ல நிலையில் இருக்கும் பலருக்குமே பெண்விடுதலையின் அடிப்படை புரியவில்லை.

எவ்வாறாக பிற்படுத்தப்பட்ட மக்களின் அறிவை தேடும் வாய்ப்புகள் அந்த அறிவால் சிந்தனையால் அவர்கள் விட்டு விடுதலையாகி விடுவார்களோ என்ற ஐயத்தால் ஒடுக்க பட்டனவோ அதேபோல பெண்கள் கூட்டு முயற்சிகள் கேலி செய்யப்பட்டு நகைப்புக்கு ஆளாக்கப்படுகின்றன. கருத்து மோதல்களும் முரண்களும் ஆன்களிடையே இல்லாதது போல பேசப்படுகின்றன. பிரச்சினைகளை பேசிக்கொள்வதும் அதைப்பற்றிவிவாதிப்பதும் கூட சிறந்தவைதான்.

பெண்களே தங்கள் வழ்வை தாங்களே நிர்ணயித்து கொள்கிற அடிப்படை சுதந்திரம் எது என்று கூட புரிந்து கொள்ள முடியாத வகையில் சமுதாயம் கலாச்சாரம் என்ற பொருளில்லா நிலைமைகளில் இருந்து மீளவும் இத்தகைய பதிவுகள் அவசியம் என்றே உணர்கிறோம்.

வாழ்க்கையின் நிறங்களை அழகாகச் சொல்லும் செல்வநாயகி, அற்றம் பத்திரிக்கை மூலமாக பெண்களின் பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணரும் பிரதீபா, அறிமுகம் எதுவும் தேவையில்லா வகையில் பலரும் அறிந்திருக்கும் மதி கந்தசாமி மற்றும் நானும் சேர்ந்து இங்கு எழுத எண்ணி இருக்கிறோம்.




அச்சமில்லை, அமுங்குதலில்லை,
நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவமில்லை, பதுங்குதலில்லை
ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்,
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கு மஞ்சோம், எப்போழுது மஞ்சோம்


என்ற பாரதியின் வரிகளுக்கொப்ப இந்த பதிவுகள் நலிந்தவர்களுக்காகவும், வலையுலகில் நிலவி வரும் பெண்கள் மீது மிக சுலபமாக வாரிவிடும் அவதூறுகளை எதிர்கொள்ளவும் அமைக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சி.

-பத்மா அர்விந்த்

10 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அமர்க்களமாக வாருங்க மதி! இப்போ கூட பெண்கள் எதிலும் குறையவில்லை; சுதந்திரமாகத்தான் வாழ்கிறார்கள்.இல்லை..; குறையுண்டெனில் போராடத்தான் வேண்டும். அழுதழுதும் பிள்ளை அவள் தானே!! பெறவேண்டும்.....எனவே நீங்கள் தான் அதை முன்னெடுக்கவேண்டும்.
"அச்சமில்லை" என பாரதி வரிகளைப் போட்டுள்ளீர்கள். ஆனால் அவரோ! ஆங்கிலேயருக்கஞ்சிச் சென்னையை விட்டுப் பாண்டிச்சேரி சென்று ஒழித்திருந்தவர்.அப்படித்தான் படித்தேன்.
யோகன் பாரிஸ்

சிறில் அலெக்ஸ் said...

அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

மலைநாடான் said...

நல்லதோர் அணியின் நலம்பெருகு சக்தி இதுவென நம்புகின்றேன்.
வாருங்கள் தோழியரே!
வாழ்த்துக்களுடன் வரவேற்றுக் கொள்கிள்றேன்.

பொன்ஸ்~~Poorna said...

மதி, செல்வா, பிரதீபா - நல்ல கூட்டணி!
கலக்குங்க :)

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே. யோகன்: புலி பதுங்குவது கோழைத்தனத்தால் இல்லை, பாய்வதற்காக.

பாரதி தம்பி said...

செறிவான கருத்துக்களை சொல்லப்போவதை உங்கள் முன்னுரையே சொல்கிறது.வாழ்த்துக்கள்..

- யெஸ்.பாலபாரதி said...

வாழ்த்துக்கள்! பயனுள்ள பல ஆக்கங்களை எதிர் நோக்குகிறேன்.
தோழன்
பாலா

தேவமகள் said...

பெண்களின் தொலைத்த அடையாளங்களை தேட, சுதந்திரமாக சுவாசிக்கும் காற்றின் இன்பத்தை நுகர கற்று கொள்ளவும் அந்த அனுபவத்தை தேடி பெறவும் இன்னமும் மேலாக சகல அநீதிகளுக்கும் எதிராகவும் தொடர்ந்து எழுதுவது அவசியமாகிறது.

உண்மை உண்மை தோழி! வாழ்த்தி வரவேற்கிறேன்! தொடரட்டும் உங்கள் பணி!

தேவமகள் said...

பெண்களின் தொலைத்த அடையாளங்களை தேட, சுதந்திரமாக சுவாசிக்கும் காற்றின் இன்பத்தை நுகர கற்று கொள்ளவும் அந்த அனுபவத்தை தேடி பெறவும் இன்னமும் மேலாக சகல அநீதிகளுக்கும் எதிராகவும் தொடர்ந்து எழுதுவது அவசியமாகிறது.

உண்மை! உண்மை தோழீ...!
வாழ்த்தி வரவேற்கிறேன்!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க. உதயா. நன்றி!

//ஆனால் அவரோ! ஆங்கிலேயருக்கஞ்சிச் சென்னையை விட்டுப் பாண்டிச்சேரி சென்று ஒழித்திருந்தவர்.அப்படித்தான் படித்தேன்.//

பாரதியார் ஆங்கிலேயருக்கு அஞ்சி சென்னையை விட்டுப்போயிருப்பார் என்றா நினைக்கிறீர்கள்? தொடர்ந்து பத்திரிகையில் எழுதி மக்களின் விழிப்புணர்வைப் பேண அவர் சென்றார் என்று நான் நினைக்கிறேன். இந்தியா பத்திரிகை, பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்தது, இல்லையா.

-மதி