Monday, September 11, 2006

நாங்கள் நாங்களாக இருக்கிறோம்

சமீப காலமாக வலைப்பதிவுகளில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கொட்டிக்கிடக்கிறது. எந்த தகுதியும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம் என்பது போல யார் வேண்டுமானாலும் பெண்களுக்கு அறிவுரை சொல்லலாம். எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்று. கம்பனின் சீதையாய் இரு, இல்லை பாரதியின் புதுமைப்பெண்ணாய் இரு என்றெல்லாம் ஒரே அறிவுரை மயம்.

மண்பார்த்து நடக்காவிட்டால் தடுக்கி விழுந்துவிடுவார்கள் பெண்கள் என்று எத்தனை கவலை.
ஓட்டமாய் ஓடும் இந்த காலத்தில் அடுத்தவர் பற்றி இப்படி கவலை பட்டு சமுதாயத்தின் சீரழிவை தடுக்கும் இத்தகய மாமனிதர்களை பெற இந்த வலைப்பதிவுலகம் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்.

வானும் காற்றும் கூட சுத்தமாய் இல்லாத நாளில் பெண்களின் சுத்தம் பற்றியும் அந்த நிர்மலமான சுத்தத்திற்கு தீங்கு வரக்கூடாதென்று கவலைப்படும் நல்ல உள்ளங்களின் தன்னலமற்ற தன்மையை எதைச்சொல்லி பாராட்டுவேன்.

எது சுத்தம் என்பதை யார் வரையறுத்தது?ஆண் வரையறுத்தான் என்றால் அவனின் அளவுகோல் கொண்டு பெண்ணை அளக்கும் வன்முறையை யார் சொல்லித்தந்தது? சுத்தமாக நீரும் காற்றும் கூட இல்லாத போது ஏன் பெண்கள் மட்டும் கண்ணுக்கு தெரியாத எதுவோ ஒன்றை காப்பாற்றி பூமியின் நிதர்சனத்தை தாண்டி இருக்க வேண்டும். பூமியில் வாழ வேண்டும், ஆனால் ஆசைகள் அடக்கி இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஆண்கள் எழுதிய விதிகளுக்கு உட்பட்டு, இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒரு பாரத்தை சுமக்க மாட்டாமல் சுமந்து திரியவேண்டும்?

இந்திரா நூயியை பாராட்டக்கூட இவர்களுக்கு அவருடைய நிர்வாகத்திறனோ இல்லை ஆளுமையோ கிடைக்காது. தன் குழந்தைகளுக்கு தானே தயிர்சாதம் தருவது தான் திருப்தி தரும் என்றார், இன்னமும் பாரம்பரியங்களை விடாமல் இருக்கிரார் என்று தேடி காரணங்கள் அடுக்குகிறார்கள்.

யோசிக்க ஆரம்பித்ததும் கேள்விகள் கேட்க ஆரம்பித்ததும் பெண்களின் தப்பு, பெரியவர் சொன்னது பெருமாள் சொன்னது மாதிரி என்று கேட்காமல் நுகத்தடி மாடாய் உழன்று கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நிறைய பேருக்கு தன் வீட்டு பெண்ணும் விழித்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம், வேளைக்கு ராஜவாய் சாப்பிட்டு காலாட்டி படுத்துக்கொள்ளும் சுகம் போய்விடும் என்ற பயம், இத்தனை நாளாய் கேள்விகேட்காத தன் ராஜாங்கம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயம் அடிவயிற்றை கலக்குகிறது.

கம்பனின் சீதையாகவோ இல்லை பாரதியின் புதுமைப்பெண்ணாகவோ இருக்க வேண்டுமா என்ன? பெண்கள் பெண்களாய் இருந்துவிட்டு போகட்டும் அவரவர்க்கு பிடித்தமாதிரி அவரவர்க்கு ஏற்ற மாதிரி. நீங்கள் சொல்ல வேண்டாம்; வேண்டும் போது கலவி கொள்ளுங்கள் என்று, நீங்கள் சொல்ல வேண்டாம் பார்த்து நட என்று. எதையுமே நீங்கள் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்ற நினைப்பை விட்டுவிட்டாலாவது நிம்மதியாய் இருக்கும். பிறந்த உடன் சுவாசிக்கும் காற்று போல நாங்கள் இருந்துவிட்டு போகிறோம் தன்னிச்சையாக.

இங்கே இருக்கும் தலைவர்களுக்கும் அது அரசியல் ஆகட்டும் மதமாகட்டும், பெண்களுக்கு புத்தி சொல்வதென்றால் பாயாசம் சாப்பிடுவது மாதிரி.மடாதிபதியாட்டும் இல்லை மந்திரியாகட்டும், குழந்தைத் தொழிலாளிகள் பற்றியோ பெருகிவரும் வன்முறைகளை பற்றியோ இல்லை தேவைக்கும் அதிகமாக பெருகிவரும் சுற்றுப்புற மாசு பற்றியோ கவலை இருக்கிற மாதிரி தெரியவில்லை. ஆனால் எல்லாருக்கும் பெண் என்ன செய்துவிடுவாளோ என்ற கவலை மட்டும் அடிமட்டத்தில் இருக்கிறது.

உடல் நிலையில்லை,அழியக்கூடிய ஒன்று என்றால் இத்தனை கவலை ஏன்? பெண்களின் நிலையில்லா உடம்பைப் போற்றி பாதுகாக்க பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர அடியில் புரையோடிப்போன சீழும் சகதியுமாய் இருக்கிற தங்களின் மன அழுக்கை பற்றி யாருக்கும் கவலையில்லை.ஒவ்வொருமுறை பேசும் போதும் எழுதும் போது இந்த சீழ் வெளிப்பட்டு அவர்கலிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறது உன் மனம் அடியில் எப்படி புரையோடி போயிருக்கிறது என்று. கவலைப்படத்தான் ஆளில்லை.

25 comments:

துளசி கோபால் said...

பத்மா,

போட்டீங்களே ஒரு போடு!

சூப்பர்.

குமரன் (Kumaran) said...

இதை இதைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இதுவரை பெண் எப்படி இருக்க வேண்டும் என்று வலையிலோ வெளியிலோ பேசியதில்லை. ஆனால் எனக்கும் இந்தப் பதிவில் சிந்திப்பதற்கு இருக்கும் என்று எண்ணுகிறேன். ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும். இன்னும் பல முறை படிக்கிறேன். இப்படி என் வீட்டிலிருக்கும் பெண்களும் வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கினால் என்னைப் போன்ற ஆண்களுக்கு குழப்பமில்லாமல் இருக்கும். அவரவர்களுக்கு என்ன என்ன பிடிக்கிறது என்று புரியும்.

இன்னும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வேண்டும்.

ஜெயஸ்ரீ said...

// பெண்கள் பெண்களாய் இருந்துவிட்டு போகட்டும் அவரவர்க்கு பிடித்தமாதிரி அவரவர்க்கு ஏற்ற மாதிரி. //

பத்மா, இது மட்டும் எல்லாருக்கும் புரிந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.
சிந்திக்கத் தூண்டும் பதிவு.

VSK said...

நீங்கள் சொல்வதுடன் முற்றிலும் உடன்படுகிறேன்..... அந்தக் கடைசி வார்த்தைகளைத் தவிர!

"கவலைப் படத்தான் ஆளில்லை' என்று மீண்டும் ஏன் அவர்கள் காலில் விழும் மாயத்தோற்றத்தை உண்டு பண்ணுகிறீர்கள்!?

நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருங்கள்!

யாருடைய அனுமதியுமோ, யாருக்கும் வேண்டுகோளோ, தேவையில்லை.

அந்த வேலையை என் போன்ற ஆண்களிடம் விடுங்கள்!

என்ன அடி பட்டாலும், அதை இவர்களுக்குப் புரிய வைக்க நாங்கள் முயல்கிறோம்....அவர்களை அடித்துத் திருத்தியல்ல!

நாங்கள் நடந்து காட்டி!

ஓகை said...

அறிவுரைகள் எரிச்சலை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் ஆண்களின் கருத்துக்களையும் அறிவுரைகளோடு சேர்த்துவிட்டது போல் தெரிகிறது.

//யோசிக்க ஆரம்பித்ததும் கேள்விகள் கேட்க ஆரம்பித்ததும் பெண்களின் தப்பு, பெரியவர் சொன்னது பெருமாள் சொன்னது மாதிரி என்று கேட்காமல் நுகத்தடி மாடாய் உழன்று கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நிறைய பேருக்கு தன் வீட்டு பெண்ணும் விழித்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம், வேளைக்கு ராஜவாய் சாப்பிட்டு காலாட்டி படுத்துக்கொள்ளும் சுகம் போய்விடும் என்ற பயம், இத்தனை நாளாய் கேள்விகேட்காத தன் ராஜாங்கம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயம் அடிவயிற்றை கலக்குகிறது.//

உடன்பட முடியவில்லை.

ILA (a) இளா said...

நல்லா அழுத்தமா சொல்லியிருக்கீங்க

மலைநாடான் said...

// பெண்கள் பெண்களாய் இருந்துவிட்டு போகட்டும் அவரவர்க்கு பிடித்தமாதிரி அவரவர்க்கு ஏற்ற மாதிரி. //

நியாயமான கருத்தும், கேள்வியும். நல்லதோர் நோக்கு. உங்கள் சிந்தனையுடன் எனக்கும் உடன்பாடே.
நன்றி பத்மா!

யாத்ரீகன் said...

>>> அடுத்தவர் பற்றி இப்படி கவலை பட்டு சமுதாயத்தின் சீரழிவை தடுக்கும் இத்தகய மாமனிதர்களை <<<

:-)

>> என்று தேடி காரணங்கள் அடுக்குகிறார்கள் <<<

Well Said.. Ritely Said..

>> பெண்கள் பெண்களாய் இருந்துவிட்டு <<

Short and Crisp.. This brought out the essense of the whole writeup.. Hope the fools realize this....

தருமி said...

நிறைய பேருக்கு தன் வீட்டு பெண்ணும் விழித்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம்,//
it is also an yearning for some. dont you agree?

ramachandranusha(உஷா) said...

//நிறைய பேருக்கு தன் வீட்டு பெண்ணும் விழித்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம், வேளைக்கு ராஜவாய் சாப்பிட்டு காலாட்டி படுத்துக்கொள்ளும் சுகம் போய்விடும் என்ற பயம், இத்தனை நாளாய் கேள்விகேட்காத தன் ராஜாங்கம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயம் அடிவயிற்றை கலக்குகிறது.//

பத்மா! சூப்பர் :-)
இதுதான் அத்தனை பிரச்சனைக்கும் காரணம். தாயை, சகோதரியை, மகளை புதுமை பெண்ணாய் பார்க்கும் ஆண், தன் மனைவி என்றுவரும் பெண் மட்டும் பாரம்பரியத்தை கட்டி காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகிறான்.

சீனு said...

//நாங்கள் நாங்களாக இருக்கிறோம்//
//பெண்களின் நிலையில்லா உடம்பைப் போற்றி பாதுகாக்க பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர அடியில் புரையோடிப்போன சீழும் சகதியுமாய் இருக்கிற தங்களின் மன அழுக்கை பற்றி யாருக்கும் கவலையில்லை.//
அப்படிப் போடு அருவாள...செருப்படி.

மயிலாடுதுறை சிவா said...

"......எதையுமே நீங்கள் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்ற நினைப்பை விட்டுவிட்டாலாவது நிம்மதியாய் இருக்கும். பிறந்த உடன் சுவாசிக்கும் காற்று போல நாங்கள் இருந்துவிட்டு போகிறோம் தன்னிச்சையாக...."

சூப்பர் பத்மா? நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு.

நன்றி
மயிலாடுதுறை சிவா

Santhosh said...

நல்லா சொல்லி இருக்கிங்க பத்மா,

அறிவுறை மேட்டர் ஓகே.

//வானும் காற்றும் கூட சுத்தமாய் இல்லாத நாளில் பெண்களின் சுத்தம் பற்றியும் அந்த நிர்மலமான சுத்தத்திற்கு தீங்கு வரக்கூடாதென்று கவலைப்படும் நல்ல உள்ளங்களின் தன்னலமற்ற தன்மையை எதைச்சொல்லி பாராட்டுவேன்.//
நீங்க கற்பை/ஒழுக்கம் பற்றி பேசுறீங்களான்னு தெரியலை. கற்பு/ஒழுக்கம் என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவா இருக்கணும். அது கூட தப்புங்களா? அப்படி தப்பு இல்லாட்டி ஊருக்கு மட்டும் உபதேசமா இருக்கக்கூடாதுங்க.

//இந்திரா நூயியை பாராட்டக்கூட இவர்களுக்கு அவருடைய நிர்வாகத்திறனோ இல்லை ஆளுமையோ கிடைக்காது. தன் குழந்தைகளுக்கு தானே தயிர்சாதம் தருவது தான் திருப்தி தரும் என்றார், இன்னமும் பாரம்பரியங்களை விடாமல் இருக்கிரார் என்று தேடி காரணங்கள் அடுக்குகிறார்கள். //
நல்லாப்பாத்திங்கன்னா இந்த தயிர்சாதம் மேட்டரை பெண்களின் இதழ்கள் எ.கா அவள் விகடன் அது மாதிரியான இடங்களில் பார்க்கலாம். தேடும் இடத்தை பொறுத்து தான் கிடைக்கும் பொருளின் தரம் இருக்கும். இவர்களுக்கு அப்படின்னா நீங்க யாரை சொல்றீங்க? ஆண்களையா?

இங்க போன வாரம் ஒரு கோயிலுக்கு போயி இருந்தேன் அங்கே ஒரு பெண் தன்னுடைய மகன் ஒரு அமெரிக்க பெண்ணுடன் date போவதை பெருமையுடன் சொல்வதையும் அதே கூட்டம் வேறு ஒருவருடைய மகள் ஒரு கருப்பின ஆணுடன் date போவதை பற்றி புரளி பேசுவதையும் கேட்டேன். முதலில் நீங்க உங்க கிட்ட இருந்து சுதந்திரம் வாங்குங்க அப்புறம் ஆண்களை குறை சொல்லாம்.

பாதிப்பொண்களுக்கு அவங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளியே சொல்வதே இல்லை. கேட்டாலும் உங்க இஷ்டம் அப்படின்னு ஒரு பேச்சு. நாங்க எப்படி உங்க மனசுல இருப்பதை கண்டுபிடிப்பது.

ஓகை said...

//நிறைய பேருக்கு தன் வீட்டு பெண்ணும் விழித்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம், வேளைக்கு ராஜவாய் சாப்பிட்டு காலாட்டி படுத்துக்கொள்ளும் சுகம் போய்விடும் என்ற பயம், இத்தனை நாளாய் கேள்விகேட்காத தன் ராஜாங்கம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயம் அடிவயிற்றை கலக்குகிறது.//

இந்தக் கருத்துக்களுக்கு வழிமொழிதல் வேறு கிடைக்கிறது! எப்படிச் சொல்லுகிறீர்கள் இதை?

ஒரு ஆணாக நான் செய்யாததை, செய்யவிரும்பாததை, என்னால் உணர முடியாததை, பெரும்பான்மையான ஆண்களிடம் நான் காணாததை சர்வ சாதாரணமாக அள்ளி விடுகிறீர்கள்.

ஆண்களின் எண்ண ஓட்டத்தை உட்சென்று படித்ததுபோல் ஆனித்தரமக சொல்லப்படும் இவ்வாக்கியங்கள் இவை சொல்லும் பொருள் உணர்ந்துதான் சொல்லப்படுகிறதா அல்லது சிலாகிக்கப் படுகிறதா?

//வேளைக்கு ராஜவாய் சாப்பிட்டு // இதைச் சொல்ல மனமும் வருகிறதே!!

ஆண்களை, ஆண்குலத்தை மனிதத் தன்மையற்றவர்களாக சித்தரிக்கும் இந்தக் கருத்துக்களுக்கு என் வண்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.

ஆண்களின் தவறுகள் கண்டிக்கப்படுவது நலம்.
ஆண்கள் தூற்றப்படுவது கேடு.

பத்மா அர்விந்த் said...

நன்றி வழவழா கொழகொழா, துளசி, உஷா, பாபிள்
குமரன்: நீங்கள் சொல்வது சரியானது, நிறைய பெண்கள் சொல்வதில்லை, ஆசைகளையும் தேவைகளையும். தன் விருப்பத்தை விட்டுதந்து வாழ்வதே பெண்மை என்றூ போதிக்கப்பட்டிருப்பதால். நல்ல மனமுடைய ஆண்கள் வந்தாலும் என்ன சொல்வார்களோ, என்ற அச்சமும் தடுக்கிறது. நன்றிகள் மீண்டும்.

பத்மா அர்விந்த் said...

எஸ்கே: நன்றி வருகைக்கும் கருத்துக்கும். கவலை பட ஆளில்லை என்பது தங்கள் மன விகாரங்களை பற்றி கவலைப்படாமல் அறிவுரை பொழிபவர்கள் பற்றி. மற்றபடி எங்களை பற்றி கவலைப்படுங்கள் என்றீல்லை.
சிவா, ஜெயஸ்ரீ: நன்றி வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும்.

பத்மா அர்விந்த் said...

இளா, மலைநாடன், யாத்திரீகண்: நன்றி
தருமி: குமரனின் பின்னூட்டம் உங்களுக்கான பதிலை தருகிறது.
உஷா: பயணம் நல்லமுறையில் முடிந்ததா? எங்கே உங்கள் பதிவுகள் இன்னும் வர ஆரம்பிக்கவில்லை.
சந்தோஷ்: எல்லாவற்றிற்கும் நான் அப்படி இல்லை என்பதோ நீ எப்படி என்பதோ பதிலாகாது. ஒருவரைக்கொண்டு சமுதாயம் அளக்கப்படுவதும் இல்லை அப்படி ஒரு அளாவுகோல் இருக்குமானால் அதுவும் தவறே. ஆளாளுக்கு விருப்பங்களும் நியமங்களும் மாறும். கற்பை பற்றீ என் கருத்தை அறிய வேண்டுமானால் என் பழைய பதிவுகளை படித்து பாருங்கள்.

பத்மா அர்விந்த் said...

சந்தோஷ்: கேட்டு வருவதில்லை சுதந்திரம் என்ற கருத்தே புரியாதபோது நான் என்ன சொல்வது?
ஓகை: நீங்கள் அப்படியில்லை என்றறிந்து குறித்து என் பாராட்டுக்கள். நான் அறிந்த நிறைய ஆண்கள் கூட அப்படி இல்லை ஆனால் சமுதாயத்தில் நிறைய ஆண்கள் அப்படி இல்லை என்பதி எங்கள் மருத்துவமனிக்கு வரும் பெண்கல் சொல்லாமல் சொல்கிறார்கள். மேலும் ஒரு கருத்தில் எல்லாருக்கும் உடன்பாடு இருக்கவேண்டியது அவசியமும் இல்லை.

Thangamani said...

பத்மா, நல்ல பதிவு.

//நிறைய பேருக்கு தன் வீட்டு பெண்ணும் விழித்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம், வேளைக்கு ராஜவாய் சாப்பிட்டு காலாட்டி படுத்துக்கொள்ளும் சுகம் போய்விடும் என்ற பயம், இத்தனை நாளாய் கேள்விகேட்காத தன் ராஜாங்கம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயம் அடிவயிற்றை கலக்குகிறது.//

இது உணவு, வேலை பற்றி இவைகளை மீறி "இத்தனை நாளாய் கேள்விகேட்காத தன் ராஜாங்கம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயம்" என்பதைச் சொல்லி தனக்குக் கீழாக, தன்னைச் சார்ந்து இயங்க ஒரு அடிமையை வைத்திருப்பதற்கான முயற்சியும், பயம் என்பதையும் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த எதிர்பார்ப்பு இல்லையென்பவர்கள் பெண்களின், நடத்தை, தொழில், உணவு, கல்வி, ஆடை, உடல் இவைகளைப்பற்றிய கருத்துக்களை வழங்கி அவற்றை ஒழுக்கத்தின் அடிப்படையில் கொண்டுவந்து சமூகத்தில் பரப்பவேண்டிய தேவை, அதிகாரத்தில் இருக்கும் சக்திகளுக்கு என்ன என்பதை யோசிக்கலாம். காஞ்சி பீடமாயிருந்தாலும், ரஜினியாய் இருந்தாலும் (விலைபோகக்கூடிய, தான் ஏற்றுக்கொள்ளக்கூடிய கதாபாத்திரத்தின் வழி) உபதேசிப்பதையும், அதை எல்லோரும் அமைதியாய், இரசித்து ஏற்றுக்கொள்வதன் தேவை என்ன என்பதை யோசிக்கலாம்.

Santhosh said...

//கேட்டு வருவதில்லை சுதந்திரம் என்ற கருத்தே புரியாதபோது நான் என்ன சொல்வது?//
பத்மா நிறைய பெண்களுக்கு சுதந்திரம் என்றாலே என்ன என்பது தெரியவில்லை. கொடுத்தும் பயன் இல்லை :)).

செல்வநாயகி said...

///சமீப காலமாக வலைப்பதிவுகளில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கொட்டிக்கிடக்கிறது///

இந்தமாதிரி எழுதப்படும் பதிவுகளும், இதோ அவற்றைக் கண்டித்து நீங்கள் எழுதியிருக்கும் பதிவினை எதிர்த்து வந்திருக்கும் பின்னூட்டங்களும்கூட உண்மையில் நம்முடைய புரிதல்களை மேலும் விரிவாக்குபவை பத்மா.
ஒவ்வொரு மனிதனும் தனக்கான சுயவிடுதலையை ஆர்வமுடனும், உண்மையாகவும் விரும்புகிற பட்சத்தில்தான் தன்னோடு பிணைந்திருக்கிற பிற மனிதர்களின் உணர்வுகளைப் புரியவும், மதிக்கவும் முடியும்.

ஆனால் ஆன்மீகரீதியில் அப்படியான சுயவிடுதலையை மனிதர்களுக்குச் சொல்லித்தருபவையாக நம் மதங்களோ, பிறவோ இல்லை. அவை அரசியல் மிகுந்தவை. ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம் என்பவைகளை நிர்ணயித்து அவற்றின் காவல் தெய்வங்களாகப் பெண்களை ஆக்கி வைத்திருப்பவை. இவற்றால் முளைச் சலவை செய்யப்பட்டவர்கள் பெண்களைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் அந்த அளவுகோல்களில்தான் இருக்கும். வெளியில் சமத்துவத்தை விரும்புவதாகச் சொல்லிக்கொண்டாலும் உண்மையிலேயே அதை நோக்கி நடக்க உள்ளிருக்கும் பல மனத்தடைகளையும் கடக்க வேண்டியிருக்கிறது. அத்தடைகளைக் கடப்பதில் பலருக்குப் பலநேரங்களில் தோல்வி ஏற்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் பல வடிவங்களிலும் ஏற்றி வைக்கப்படுகிறது. நேற்று எதேச்சையாகக் கனிமொழி பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். "மதத்தைக் காப்பாற்றுபவர்கள் எல்லாம் பெண்களை மதிப்பதாகவே சொல்கிறார்கள்; ஆனாலும் இங்கு கோயிலுக்குள் பெண் போனால் தீட்டு பரவும், அரசியல்வாதிகள் யாரும் பெண்முன்னேற்றத்தை விரும்புவதாகவே சொல்வர்: ஆனாலும் அந்த 33% மசோதா மட்டும் கிடப்பிலேயே கிடக்கும்" என்பது அவர் பேச்சில் ஒரு பாகம். நாம் களைகளின் நுனிகளைத்தான் கிள்ளிக்கொண்டிருக்கிறோம். வேர்கள் பற்றிப் பேசுவதே பிறகு தெய்வகுத்தம் ஆகிவிடப்போகிறது இங்கு:))

பதிவுக்கு நன்றி.

தேவமகள் said...

இனிய பத்மா,
அவசியமான கோபம்!
நறுக்கென்று அலசியிருக்கிறீர்கள்!!

நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றம் கண்களுக்குத் தெரிகிறது. மனசுக்கும் புரிகிறது. அதனால்தான் அவர்களுக்கு இந்த பதட்டம்.
நாமென்ன கேட்டா பெற வேண்டும்
நமக்கு வேண்டியதை!
தூண்டுவோம் பெண்களின் சுய சிந்தனையை!
வளர்ப்போம், கற்றுத்தருவோம் அவர்களுக்கு பொருளாதார
சுயபலத்தின் வலுவை!

சார்ந்திருத்தல் தவிர்க்க முடியாததெனும் போது இருவருக்கும் அது பொதுவென்றும், இருவரும் அதில் சமமென்றும் உணர்த்துவோம்.
இவற்றை உணர்ந்திருப்பவரோடு மட்டும் நட்புக் கரம் நீட்டுவோம்.

நம் பலவீனங்களை சாதகமாய் பயன்படுத்திக் கொள்பவர்களை அடையாளம் காணவும், வஞ்சப்புகழ்ச்சிகளை இனம் கண்டுகொண்டு தற்காத்துக் கொள்ளவும்
அறிவுரை சொல்வோம்.

பெண்கள் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், நாம் ஒருபோதும் ஒருவருக்கொருவர் பகை கொள்ளக் கூடாதெனவும் கற்றுத்தருவோம்.
நாம் அடித்துக் கொள்வது ஆண்களுக்குத்தான் சாதமாய் போகும் என்பதை உணர்த்துவோம்.

அறிவும் மனமும் சார்ந்த பெண்சுதந்திரம் பற்றிய புரிதலின் அவசியத்தை உணரச்செய்வோம்.

இவற்றை புரிந்து கொள்ள மறுக்கும், உதாசீனப்படுத்தும், நகைக்கும் ஆண்களை சட்டை செய்யாதிருக்கவும், பெண்மையின் பலத்தோடு, பலவீனங்களையும் புரிந்து கொண்டு நீளும் நேசக்கரங்களோடு நேர்மையாய் கைக்குலுக்கவும் பழகிக்கொள்வோம்.

நாம் அந்த மாபெரும் சக்தி யல்லவா!
வாருங்கள் தோழியரே!!

enRenRum-anbudan.BALA said...

பத்மா,
சரியான நேரத்தில் எழுதப்பட்ட ஓர் அருமையான பதிவு. பெண்களுக்கு இது சரி என்று வரையறுப்பதே ஒரு வித ஆணாதிக்க மனோபாவமோ ??? நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா

மா சிவகுமார் said...

சிந்தனையைத் தூண்டும் பதிவு பத்மா.

ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் இருந்து விட்டுப் போவதுதான் எளிமையானது. சிக்கல் எங்கே வருகிறது என்றால் ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சில நடைமுறை பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு வாழும்போது உலகம் தளைக்கிறது. அந்த விதிமுறைகள், பழக்க வழக்கங்கள் பழையன கழிந்து புதியன வருவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பெண்ணிற்கும் ஆணுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று எல்லா வேலைகளிலும் பங்கு ஏற்றுக் கொண்டாலும், ஆணுக்கு குழந்தை சுமந்து பெரும் பாக்கியம் கிடைக்காதே! அதை ஈடு கட்ட தன் பங்காக ஏதோ செய்ய முனைவதுதானே குடும்ப வாழ்க்கை. அதில் வீட்டு வேலை செய்வது ஏதோ வெட்டி வேலை என்றும் வெளியில் போய் பொருள் ஈட்டுவது மட்டும்தான் சாதனை என்று உருவகப்படுத்தியது சமூகத் தவறு. அதனால் காலாட்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை வேண்டுமானால் நீங்கள் குறை சொல்லலாம்.

இந்திரா நூயி பெப்சி தலைவரானால்தான் விகடனில் எழுத வேண்டும் என்பது ஏன்? பெண்களுக்கு ஆண்களும், மதங்களும் அறிவுரை சொல்வது போல ஆண்களிடமும் எதிர்பார்ப்புகள் இல்லையா?

பெண்ணும் ஆணும் முற்றிலும் சமம் என்று செயல்பட்டதன் விளைவுகள் எனக்கு சொந்த வாழ்வில் நன்கு தெரியும் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

Unknown said...

//ஆனால் எல்லாருக்கும் பெண் என்ன செய்துவிடுவாளோ என்ற கவலை மட்டும் அடிமட்டத்தில் இருக்கிறது

பத்மா, கிளப்பிட்டீங்க. நிஜமா அனுபவிச்சுப் படிச்சேன்.
சத்தியமான வார்த்தைகள்:
//சமீப காலமாக வலைப்பதிவுகளில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கொட்டிக்கிடக்கிறது
//...பெண் என்ன செய்துவிடுவாளோ என்ற கவலை மட்டும் அடிமட்டத்தில் இருக்கிறது...

வாழ்த்தும் பல பின்னூட்டங்களில் உண்மையான கவலை இருக்கிறது...

சப்பைக்கட்டும் பின்னூட்டங்களையும் படித்தேன்;-)
//நாங்க எப்படி உங்க மனசுல இருப்பதை கண்டுபிடிப்பது
//ஆனால் ஆண்களின் கருத்துக்களையும் அறிவுரைகளோடு சேர்த்துவிட்டது போல் தெரிகிறது
//(சுதந்திரம்) கொடுத்தும் பயன் இல்லை ...
//பெண்களுக்கு ஆண்களும், மதங்களும் அறிவுரை சொல்வது போல ஆண்களிடமும் எதிர்பார்ப்புகள் இல்லையா?

நாம் இன்னும் கைப்பாவைகளாய் இருப்பதே பலரின் எதிர்பார்ப்பு. ஆண்கள் இப்படி இருக்க வேண்டும் என்று எழுத எனக்கு தேவை/எதிர்பார்ப்பு இல்லை. ஏனெனில்,
//நாங்கள் நாங்களாக இருக்கிறோம்

மிக்க நன்றி.
கெ.பி.