Tuesday, November 21, 2006

கற்றதனால் ஆன பயனென்ன? ...........பாகம் 1

மழை அழகுதான். ஆனாலும் நீண்ட மழை இரசிப்புக்குப் பிறகு கொட்டோகொட்டென்று கொட்டும் மழையின் இரைச்சலிலிருந்து விலகி சத்தமற்ற அமைதியில் சங்கமித்திருப்பதும்
அழகாயிருக்கிறது. வலையுலகவாசமும் அப்படியே. உதிர்ந்து குவிந்திருந்த இலையுதிர்கால மரங்களின் இலைகளிடம் விடைபெற்றுக்கொள்ளவும், பனிவிழுந்த முதல்நாளில்
ஆழப்புதைந்துகிடந்த குழந்தைமனதை அவசரமாய்த் தட்டியெழுப்பிக் குதூகலிக்கவும், சாலையில், கடைகளில் சந்திக்கும் மனிதர்களோடு புன்னகைதாண்டிக் கொஞ்சம் பேசிப்பிரியவும் முடிவதாயிருந்தது இந்த ஒருமாதகாலம். அவ்வப்போது வலையுலக நண்பர்களின் மின்னஞ்சல்களை மட்டும் படித்துக்கொண்டிருந்த பொழுதுகளில் ஒன்றில் ஓரு சுட்டியை அனுப்பி "இதை நீ படித்தாயா?" எனக் கேட்டும் "இதுகுறித்து நீ நினைப்பதைப் பகிர்ந்துகொள்ளேன்" எனச் சொல்லியும் ஒரு மடல் வந்திருந்தது பத்மாவிடமிருந்து. அது சுட்டிய பக்கம் கவிதாவின் "வாழ்க்கையை இழந்துவரும் இன்றைய மங்கைகள்" என்னும் பதிவு. சக்தியில் ஏற்கனவே பத்மா இட்டிருந்த பதிவு ஒன்றில் "பெண்ணுரிமையெல்லாம் கொடுத்தும் பிரயோசனமில்லை. ஏனென்றால் அதைப் பெண்கள் யாரும் சரியாகப் பயன்படுத்துவதில்லை" என்று ஆராய்ச்சி முடிவு வழங்கியிருந்த, பத்மா ஏதோ பொழுதுபோகாமல் ஆண்களையெல்லாம் "அவர்கள் பெண்களாகப் பிறக்காததாலேயே" திட்டிக்கொண்டிருப்பதாகவும் கணித்து எழுதியிருந்த நண்பர்களுக்கானதல்ல இப்பதிவு என்ற முதல் முன்குறிப்போடும், "பெண்ணுரிமை பற்றிப் பேசுகிற, எழுதுகிற பெண்கள் எல்லாம் குடும்பத்தை மதிக்காமல், பொழுது கிளம்பினால் வெளியே கிளம்பிப் போய் குடித்துவிட்டு, ஆடிவிட்டுப் பொழுது சாய வீட்டுக்குவருபவர்கள் இல்லை; அவர்களும் கணவன்மீதும், குடும்பத்தின்மீதும் கழுத்துவரைக்கும் காதல்கொண்டு வாழமுடிகிறவர்கள்" என்பதில்
நம்பிக்கைகொள்ளவியலுகிற நண்பர்கள் மட்டும் இதைத் தொடர்ந்து படிக்கலாம் என்கிற இரண்டாவது முன்குறிப்போடும் இப்பதிவை எழுதுகிறேன்.

ஆதிக்க மனோபாவம் மட்டுமல்ல அடிமை மனோபாவமும் நல்ல பலன்களுக்கு வித்திடாது. நம் சமூகத்தின் நோய்க்கூறுகளில் இந்த இரண்டும் அடங்கும். ஆனால் நம் கலாசாரத்தில்
ஆதிக்க மனோபாவம் சரியென்று வெளிப்படையாகச் சொல்லிப் பாதுகாக்கப்படுவதைவிட. அடிமை மனோபாவம் அழகென்று சொல்லிச்சொல்லியே ஆதிக்கத் தன்மைகள் மறைமுகமாக
வளர்த்தெடுக்கப்படுகின்றன. . "பின்தூங்கி முன் எழுவாள் பத்தினி" என்றும் "கொழுநன் தொழுதெழுபவள் பெய்யென்றால் மழை பெய்யும்" என்றும் சொல்லப்பட்ட, எழுதப்பட்ட
விடயங்களைப் புரிந்துகொள்வதில்கூட மனோபாவம் முக்கியமாகிறது. சுதந்திரத்தின் உண்மையான பொருள் புரிந்தவர்கள் இவற்றை இன்னொரு உயிரின்மீதான அடிமைச்சுமைகள்
என்று சொல்லலாம். அப்படியான அடிமைச்சுமைகளினால் தனக்கான சாதகங்களை அனுபவிப்பதே வாழ்வின் இயல்பு என்று கொண்டிருக்கும் நடைமுறைகளைக் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளப் பழகியவர்கள் இதே விடயங்கள் அந்த இன்னொரு உயிரின் பெருமைகளைப் பேசுகிறது என்றும் எடுத்துக்கொள்ள முடியும். இதில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆணாதிக்கச் சிந்தனைகளை இயல்பென்று ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பிசகாமல் தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் அமைத்துக்கொள்ளும் பெண்கள் இங்கு அதிகம். அப்படியான பெண்களுக்கே சமூகம், காப்பியங்கள், இன்னபிற எல்லாம் இங்கு பத்தினிப்பெண்டிர் என்றும், கற்புடை மகளிர் என்றும் பட்டயங்கள் வழங்கிக் கவுரவிக்கும் என்பதால் இதை விமர்சிக்கிற அவசியமும், துணிச்சலும் அற்றுப்போய் வாழும் பெண்கள் அனேகம்.

தமிழ்நாடு வரைபடத்தில் எப்படித்தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாத தொலைதூரக் கிராமமொன்றில் பிறந்த நான் பேச்சுப்போட்டிக்கென்று முதன்முதலாக என் மாவட்டத்தலைநகர் புறப்படத் தயாரானபோது என்னை மிகவும் நேசிக்கும் என் பாட்டியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "பள்ளிக்கூடத்தில் படிச்சாப் போதாதா? இதெல்லாம் எதற்கு?" என்று கேட்டார். அப்போது எனக்குத் துணையாய்ப் பேசி என்னை அழைத்துக்கொண்டுபோனது ஒரு ஆண்தான். பள்ளிப்படிப்பு முடித்துக் கல்லூரி விண்ணப்பங்களுக்காய் அலைந்துகொண்டிருந்த காலத்தில் "போதும் இதுவே. வீட்டில் வேலைகள் பழகட்டும். திருமணத்தின்போது அதுதான் நல்லது" என்று என் மேல்படிப்புக்குத் தடையாகப் பேசியது என்மீது உயிரையே வைத்திருக்கும் என் அம்மாதான். அப்போதும் எனக்குத் துணையாக இருந்ததும், இடம் கிடைத்த பொறியியல் கல்லூரியைப் புறக்கணித்துச் சட்டம்தான் படிப்பேன் என்ற என் பிடிவாதத்தை ஏற்றுக்கொண்டு உதவிசெய்ததும் ஆண்தான். என்னைச்சுற்றிய பெண்கள் பலரும் இப்படியான சிந்தனைகளில் இருந்தவர்கள்தான். இவர்களுக்கெல்லாம் என் செயல்களுக்கான விளக்கங்களைக் கொடுத்து வந்திருந்தாலும் என் நிலைகுறித்து, அதனால் என் எதிர்காலவாழ்வு என்னவாகுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தே வந்தது. காரணம் கேள்விகள் கேட்கும் பெண்களைப் பெரும்பாலும் நம் குடும்ப அமைப்புக்கள் விரும்புவதில்லை. ஆணை மரியாதையுடன் பார்க்கச் சொல்லித்தரப்பட்டவர்களே குடும்பத்தில் அமைதியாகப் பொழப்பு நடத்தமுடியும், அந்த ஆணிற்காகச் சில பல தியாகங்கள் செய்யத்தெரிந்தவர்களே நல்ல மனைவிகளாக இருக்கமுடியும் என்பதிலெல்லாம் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்த (கொண்டிருக்கும்) என் தாய்க்கோ, தாயின் தாய்க்கோ " உன் கணவன் குறித்தான உன்பயங்களை உதறிவிட்டு பேரன்பின் வெளிப்பாட்டுடன் அவரையும் உனக்குச் சமமாகவே எண்ணு. உன்னையும் அப்படியே அவர் எண்ணவேண்டும். அந்த அன்பில் இருவருமே கரைந்து போங்கள். ஆனால் தொலைந்து அல்ல. உங்களைப் புதுப்பித்துக்கொண்டு வெளிப்படுத்த, வாழ்வின் சுவாரசியங்களைத் தேட இருவருமே ஒருவருக்கொருவர் உறுதுணையாகுங்கள்" என்றெல்லாம் பிரசங்கம் நடத்தியதில்லை. அப்படியே
நடத்தியிருந்தாலும் அவர்கள் என்னைப் பேயறைந்த முகத்தோடும், எனக்கு ஏதோ நடந்துவிட்டதென்ற பீதியோடுமே பார்த்திருப்பார்கள். காரணம் அவர்களின் வாழ்விற்கு
வயதாகிவிட்டது. இன்னொருமுறை முதலிலிருந்து தொடங்கி விட்ட இடங்களைச் சரிசெய்ய முடியாது. ஆனால் "நான் அனுபவித்த கல்வி, எனக்குள் எழுந்த தேடல்கள் எல்லாம்
பெறமுடியாத அவர்களின் நிலைகுறித்து மனதில் வருத்தத்துடன் நான் எண்ணிக்கொள்வேனே தவிர என் பாட்டியும், அம்மாவும் அவர்கள் கணக்கில் சாதித்து முடித்தவர்களே. நல்ல
பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள், பெண்கள் என்பதே அவர்களைப் பொறுத்தவரை சாதனைதான். இந்தச் சாதனையை என் பாட்டி, அம்மா மட்டும் செய்யவில்லை.
லட்சக்கணக்கான பெண்களுக்கு இதுதான் சாதனை என்று சொல்லப்பட்டு வெற்றிகரமாக அவர்கள் அதைச் செய்தும் காட்டியிருக்கிறார்கள்.

கவிதா எழுதியிருக்கிறார் " நம் பாட்டியும், அம்மாவும் சாதிக்கவில்லையா? வேலைக்குப் போகும் பெண்கள் அவர்களைப்போல் இல்லாததால்தான் பிரச்சினைகள் வருகின்றன" என்று.
அரைநூற்றாண்டுக்கு முந்தைய வாழ்வையும், இன்றைய வாழ்வையும் ஒப்பிடுகையில் எந்த ஒரு முடிவையும் சட்டென்று சொல்வதற்கு முன் நிறைய விடயங்களை யோசிக்க வேண்டும். நான் இவ்வளவுகாலம் பெண்களுக்குப் படிப்பும், வேலையும், சம்பளமும், தன்னம்பிக்கையும் அவர்களின் வாழ்விற்கு வளமும் அளிப்பவை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் தோழியின் பதிவு மூலம் ஒரு புதிய செய்தியை அறிந்துகொள்கிறேன். படிப்பும், வேலையும் காரணமாக வாழ்க்கையை இழந்துவருகிறார்கள் இன்றைய பெண்கள் என்று. நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளை உதாரணம் காட்டி மட்டுமே தன் கூற்றை நிறுவ முயன்றிருக்கிறார். இப்படி ஒரு மேலோட்டமான சிந்தனையினால் உண்மையை அறியமுடியாது. பொதுவாகவே இப்போது வழக்குகளின் எண்ணிக்கை எல்லாவற்றிலும் அதிகமாகியே வருகிறது. தினம் ஒரு கொலைவழக்குப் பதிவாவதிலிருந்து, மாதத்திற்கொரு சாமியார் மீதான வழக்குவரை மற்ற நீதிமன்றங்கள் வழக்குகளால் நிறைவதுமாதிரியேதான் குடும்பநீதிமன்றங்களிலும்.

சில ஆண்டுகள் நீதிமன்றங்களோடு இணைந்திருந்தவள் என்ற முறையிலும், குடும்பநலநீதிமன்றங்களில் சில வழக்குகளை நடத்தியவள் என்ற முறையிலும் என் அனுபவம் வேறுவகையானது. குடும்பநீதிமன்றங்களுக்கு வழக்குத் தொடர்பாக வரும் பெண்கள் கொழுப்பெடுத்துப்போய் வந்ததாக நான் நினைத்ததில்லை. கால்கடுக்க நீதிமன்ற வாசலில், வழக்கறிஞரின் அலுவலகத்தில் ஏறி இறங்கும் அவர்களின் நிலை கடினமானதாகவே எனக்குத் தோன்றியிருக்கிறது. "இவள் என்னை மதிக்கவில்லை" என்று கூடிநிற்கும் சபையில் சொல்லத் தனியாளாக வந்துநிற்கும் ஆணை மறுத்துப் பேச அங்கும் தனியாக வரமுடியாது தாய்தகப்பனோடோ, சகோதரனோடோ வந்து தயங்கித் தயங்கி நிற்கும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். குடித்துவிட்டு வந்து துன்புறுத்துவதிலிருந்து, தனக்குத் தேவையான மரியாதையை மனைவியின் பெற்றோர்கள் அளிக்கவில்லை என்ற மாப்பிள்ளைத் தோரணை வரையான ஆண்களை அங்கே பார்க்கலாம். நீதிமன்றம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தும் அதைச் செயல்படுத்தாத, கணவன்களும் உண்டு. இவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழேயிருந்து வசதியான மேல்தட்டுவரையும் இருப்பார்கள். பூமியைப்போல் பொறுமையாக இருக்கவேண்டியவள் பெண் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த என் அண்டைவீட்டுப் பெண்ணொருத்தி கணவன் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருப்பதைக் கண்டும் காணாமல் இருந்து அக்கணவனோடே குடும்பமாக வாழ்வதையும், இதேமாதிரித் தனக்கு நேர்ந்தபோது அதைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல் நீத்மன்றம் வந்து குடும்பத்தை உடைத்துக்கொண்ட இன்னொரு பெண்ணையும் ஒருசேரப் பார்க்க முடிந்திருக்கிறது எனக்கு. முன்னவளைவிடவும் பின்னவளின் நிலை இதில் கடினமானது. அவளாவது கணவன் என்ற ஒருவரை மட்டுமே சமாளிக்க வேண்டியிருக்கும். இவளுக்கோ "கொழுப்பெடுத்தவள்" "கணவனை அனுசரிக்கத் தெரியாதவள்" "வேலைக்குப் போகும் திமிர்" என்பதுவரையான சமூகத்திடமிருந்து கிளம்பும் பல கோடாரிகளுக்கும் தலை தப்பித்தாகவேண்டும். இப்படிப் பாதிக்கப்பட்ட பெண் தானாகவோ, தன் நெருங்கிய, தன் அன்புக்குரிய இன்னொரு பெண்ணாகவோ இல்லாதவரை மற்றவர்களுக்கு இப்பெண்கள் "கொழுப்பெடுத்தவர்களாகத்" தெரிவது ஒன்றும் வியப்பானதல்ல. இவையும் தாண்டித் தங்களின் கருத்து, செயல் முரண்களோடு சேர்ந்து வாழ்வது ஒத்துவராதென கணவன், மனைவி இருவருமாக ஒன்றிணைந்து விண்ணப்பிக்கிறவர்களும் உண்டு. அப்படியானவர்களின் மனச் சிக்கல்களைத் தீர்க்க கவுன்சிலிங் தருவதும், அது பலனளிக்காதபோது அவர்கள் பிரிந்துபோவதைச் சுலபமானதாக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. இருந்தாலும் இத்தகைய பிரிவுகளால் குடும்ப அமைப்புகள் சீர்குலைகின்றன, குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்
என்பதைக் காரணங்களாக்கிக் குடும்ப அமைப்புக்களைக் காப்பாற்ற விரும்புபவர்கள்கூட இதில் பெண்களை மட்டுமே ஒருதலையாய்க் குற்றம் சாட்டாமல், மாறிவரும்
வாழ்வுமுறைகளின் சிக்கல்களை எடுத்துக்காட்டி இதில் இருபாலருக்கும் உள்ள பங்குணர்வைப் பேசுவதே பொருத்தமாக இருக்கும்.


படித்த, பெண்ணுரிமை விரும்பும் பெண்களுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினையா? பத்திரிக்கைகள் பேசும் பெண்ணுரிமையோ, வேறெந்த எழவோ அறியாத, படிப்போ, வேலையோ, மாதச் சம்பளமோ எதுவுமின்றி, கணவன் விரட்டியதும் தாய்வீட்டில் தஞ்சம் புகுந்த, நீதிமன்றத்தையே கோவிலாக நினைத்து வந்து நிற்கும் அப்பாவிப் பெண்களும் உண்டு. விசாரணைக்குச் சாட்சிக்கூண்டில் ஏறுவதற்குள் தொண்டை வறண்டு, சிறுநீர்முட்டும் அவர்களின் அவஸ்தைகளைக் கண்டு வேதனைப்பட்ட மணித்துளிகள் என் கணக்கில் உண்டு.
அவர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்துவந்து விவாகரத்து கேட்கும் ஆண்களும் இருக்கிறார்கள். படித்திருந்தாலும் குடும்பம் பணம் வேண்டினால் வேலைக்குப் போகவும், அவளின் பணம் தேவையில்லாத பட்சத்தில் வீட்டிலிருந்து பொறுப்பாகக் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளவுமே பணிக்கப்படும் பெண்களே இன்றும் அதிகம். வேலையை வேலைக்காகச் செய்யவும், அதில் தன் திறமைகளை முழுமையாகக் காட்டி உயரங்களை அடைந்திடவும் ஆண்களைப் போலவே பெண்களும் விரும்புவதில் தவறென்ன இருக்க முடியும்? அப்படித் தனித்தன்மையை விரும்புகிற பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை தோல்வியில் முடிந்தால் அவர்களி¢ன் சாதனை சாதனையாகாதென்றும் கூறியிருந்தார் கவிதா. அவர்களி¢ன் குடும்பவாழ்க்கை தோல்வியில் முடிவதற்கான காரணங்களாகப் பல இருக்கின்றன. வேலைக்கு வெளியில் போனாலும் வீட்டில் பெண் எப்படி இருக்கவேண்டுமென்ற வரையறைகள் நம் குடும்பக் கட்டமைப்புகளில் பெரிதாக மாறிடவில்லை. அதற்குத் தயாராகாத சூழலே பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன. அதில் எதையும் விவாதிக்காமல், கணக்கில்கூட எடுத்துக்கொள்ளாமல், அந்தப் பெண்கள்தான் அதற்குக் காரணம் என்ற ஒற்றைப் பார்வை சரியாக இருக்குமா? கவிதாவைப் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக இப்பெண்களைத் தூக்கியெறியாத மனிதர்களும் நல்லவேளையக இங்கு இருக்கிறார்கள். கலைத்துறையில் வெற்றிகரமாக இன்றும் நின்றுகொண்டிருக்கும் மனோரமாவுக்கோ, சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கோ காயங்கள் நிறைந்த அவர்களின் குடும்பவாழ்க்கை அளவுகோலின்றி அவர்களின் திறமையும், கடின உழைப்பும் அளவுகோலாகி அவர்களுக்குரிய அங்கீகாரங்களை வழங்கியிருப்பது போல் உயரங்களோடும், தனித்தன்மைகளோடும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை தம் வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படுத்திக்கொள்கிற பெண்களும் இருக்கிறார்கள். "இவர்கள் நவீனயுகத்தின் அலங்கோலங்கள்" என்று சான்றிதழ் வழங்கியிருந்தார் கவிதாவின் பதிவில் நண்பர் ஒருவர்.
விட்டேற்றியாக எழுதப்பட்ட இவ்வரிகளை எடுத்துப்போட்டுப் பாராட்டியிருந்த தோழி கவிதாவின் சிந்தனைக்கோணம் புல்லரிக்க வைக்கிறது.

தமிழை மட்டும் அறிவியல் வாகனத்தில் ஏற்றிவிட்டுத் தமிழர்கள் நாம் கற்காலம் நோக்கியே போய்க்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றவைக்கிற எழுத்துக்கள் வலைப்பதிவுகளில்
சிலநேரங்களில் வந்துபோவது பழகிப்போனதுதான் சிலவிடயங்களில். ஆனால் தன் மனைவி எந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக்கூடாது என்பதில்கூட தன் முடிவைத்
திணித்து வாழும் ஒரு ஆணின் செயலில் தவறு இல்லை என்று ஒப்புக்கொள்ள முடிகிற கவிதாவின் பெருந்தன்மை கண்டு வாயடைத்து நிற்கவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் அந்த ஆனின் சிந்தனையில் இருப்பது அறியாமை என்றுகூட எண்ணமுடியாத நிலையை என்னென்பது? சில நண்பர்கள் பெண்ணுரிமையையும், குடிக்கும், புகைக்கும் பெண்களையும்
ஒன்றுபடுத்தி இதைத்தான் பெண்ணுரிமை என்கிறார்கள் என நினைத்துக்கொள்வார்கள்போலும். உடல், மன ஒழுக்கங்கள் இருபாலருக்கும் பொதுவானது. அதைப் பேண மறப்பவர்கள் அதனதற்குரிய பலன்களை அனுபவித்துக்கொள்கிறார்கள். இந்த ஒழுக்கக் கேடுகளைத் தாங்களும் செய்யவே பெண்கள் உரிமை கேட்கிறார்கள் என நினைத்து
உட்கார்ந்திருப்பவர்களுக்குச் சொல்ல ஒன்றுமில்லை. அப்படியின்றி இந்த எழுத்துக்கள் பேசவருவது எது என்பதை உணர்ந்துகொள்ளும், இதன் அடியாழத்தில் ஒட்டிக்கிடக்கும்
கருத்துக்களை உள்வாங்கும் நண்பர்களோடு இதுசம்பந்தமாய்ப் பகிர்ந்துகொள்ள இப்போதைக்கு இன்னும் சில இருக்கின்றன. அவற்றை அடுத்த பதிவில் இடுகிறேன்.


என்னால் வலையில் தொடர்ந்தெழுதுவது முடிவதில்லையென்றாலும், இங்கு எழுதிவரும் பெண்களின் எண்ணிக்கை கூடிவருவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியே. அப்படியெழுதும்
பெண்களின் கருத்துக்களோடு உடன்படுவதும் சிலவேளைகளில் சிலருடையதோடு முரண்படுவதும் உண்டு. எனினும் அவர்களின் எழுத்துக்களை என்னைக் கவரும் ஏதவதொரு
அம்சத்திற்காய்த் தொடர்ந்து வாசித்தே வருகிறேன். அந்தவகையில் நீண்ட இடைவெளிக்குப்பின் எழுதவந்திருக்கும் தோழி கவிதாவின் பக்கத்திலும் என்னைக்கவர்ந்த அம்சங்கள் உண்டு. இது அவரின் குறிப்பிட்ட இடுகையின் கருத்துக்களுடனான முரண்பாடு மட்டுமே என்பதையும் இங்கு பின்குறிப்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன்:))

10 comments:

செல்வநாயகி said...

இப்பதிவு சுட்டும் தோழியின் தொடர்புடைய இடுகைக்கான தொடுப்பு பதிவில் இணைக்க விட்டுப்போனது. அது இங்கே:

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/11/blog-post.html

பொன்ஸ்~~Poorna said...

செல்வநாயகி,
பதிவிற்கு நன்றி என்பதைத் தவிர, என்ன சொல்லிவிட முடியும் என்னால்..

- யெஸ்.பாலபாரதி said...

யக்கா.. நல்ல பதிவு. ஆனா பெருசா இருக்கு.. மொத்தமா படிச்சுட்டு சொல்றேன்.
:-)))

- யெஸ்.பாலபாரதி said...

யக்கா.. நல்ல பதிவு. ஆனா பெருசா இருக்கு.. மொத்தமா படிச்சுட்டு சொல்றேன்.
:-)))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கவிதா அவர்களின் பதிவை முன்னரே படிக்க நேர்ந்தது. மனைவி என்ன புத்தகம் படிக்க வேண்டும் என்ற உரிமை இருப்பதாக நினைக்கும் கணவர் என்று அவர் சொல்லியுள்ள உதாரணம் எனக்கு தவறானதாகப்(முட்டாள்தனமாகவும்) பட்டது. வேறு பல கருத்துக்களோடும் உடன்பாடில்லை உதா.

ஆணுக்கு நிகரான வருமானம் அதனால் ஏற்படும் கர்வம்(இது பொதுவாக ஆண்களே கற்பனை செய்து கொள்வது)

ஆணுக்கு நிகர் பெண் என்ற தேவையில்லாத சிந்தனை(பெண் உசத்தி என்று சொல்ல வருகிறாரா என்று தெரியவில்லை மற்றபடி நிகர்தான் என்பதுதான் என் கருத்து)

தங்களுது வாழ்க்கையை படிப்போடும், பணத்தோடும் ஒப்பிடும் சிந்தனை.
தனது சம்பாத்தியம் தனக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கை(நல்ல நம்பிக்கைதானே ஏன் இதனை குறை சொல்கிறார் என்று தெரியவில்லை)

இதெல்லாம் தவறான கருத்துக்கள் என்று கருதும் அதே சமயம் hardcore பெண்ணுரிமைக்கும் இது போன்ற கருத்துக்களுக்கும் ஒரு நடுவுநிலைமை வர வேண்டும் என்றே நினைக்கிறேன்.

கொஞ்சம் வித்தியாசமான ஒரு சிந்தனையுடன் இந்த ஆண் ஆதிக்கம் பெண்ணுரிமைப் பிரச்சனையை யோசித்துப் பார்க்கிறேன். உலகில் எல்லா உயிரினங்களுக்கும் இயங்குவது survival என்பதன் அடிப்படையில் தான். இன்று குடும்பத்தின் survival என்பது குடும்பத்தின் சம்பாத்தியம் யார் செய்கிறார்களோ அவர்களைப் பொறுத்தே அமைகிறது. நமது சமூகத்தில் ஆண்களையே சம்பாதிப்பவராக கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பிள்ளைப் பேறு பெண்களில் தலையில் இயற்கையால் கட்டப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். பெண்கள் பலமில்லாதவர்கள் என்பதெல்லாம் முட்டாள்தனமானது. பிள்ளை பேறு அது தொடர்பாகவே மாதா மாதம் உண்டாகும் அவதிகள் இதெல்லாம் தான் இப்படி ஒரு சமூக அமைப்பை உருவாக்கி இருக்க வேண்டும்.

காலப் போக்கில் சம்பாதிக்கும் ஆண் survival என்பதற்கு முக்கியம் ஆனதால் பெண்களை அடிமை படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆண் சம்பாதிக்கிறான் என்பதாலோ இல்லை பெண் குடும்பத்தை நடத்துகிறாள் என்பதாலோ ஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ அல்ல. இருவருமே அந்தக் குடும்பம் சரியானபடி நடக்க இருவருமே அத்தியாவசியமானவர்கள் என்பதை உணர வேண்டும்.

இதில் சமைப்பது தாழ்வு என்றோ உயர்வு என்றோ நினைக்கக் கூடாது.

ஆனால் இன்றைய பெண்ணியவாதம் சமையல் செய்கிறார்கள், குடும்பத்தை கவனிப்பது என்பதெல்லாம் பெண்ணடிமைத்தனம் என்பது போல பேசத் தொடங்கி உள்ளன.

இது எனக்கு சரியாகப் படவில்லை. இதெல்லாம் பெண்ணடிமைத் தனம் இல்லை. இது செய்வதால் பெண்கள் கீழே என்று நினைப்பது தான் பெண்ணடைமைத்தனம்.

இதை எதிர்க்காமல் பெண்கள் சமையல் செய்யக் கூடாது என்றும் குடும்பத்தை கவனிக்கக் கூடாது இதன் மூலமாகத்தான் பெண்களை விடுதலை பெறச் செய்ய முடியும் என்று நினைத்தால் அது தவறானது என்று நினைக்கிறேன்.

கவிதா அவர்களும் இந்தக் கருத்தை சொல்ல வந்து டிராக் மாறி மீண்டும் பழைய பஞ்சாங்கக் கொள்கைகள் சிலவற்றை துணைக்கு அழைத்துக் கொண்டு விட்டார்.

நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லி இருக்கிறேனா என்று தெரியவில்லை ஆனால் நான் சொல்ல வந்தது ஆண் பெண் இருவரும் சமம். ஆனால் இன்றைய பெண்ணியவாத சிந்தனைகளிலும் சில தவறுகள் இருக்கின்றன என்பதுதான்.

அருள் குமார் said...

மிக விரிவானதானாலும் அவசியமான அலசல். பதிவின் நீளம் படிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுமே என்று வருத்தமாக இருக்கிறது. இனி இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

செல்வநாயகி said...

பொன்ஸ், பாலபாரதி, காந்தித்தொண்டன், அருள்குமார்,

உங்களின் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி.

காந்தித்தொண்டன்,
உங்களின் சிந்தனைகளைப் புரிந்துகொள்ளமுடிகிறது. இதே கோணத்தில் இவ்விடயத்தை அணுகும் நண்பர் சிவகுமார் அவர்களின் கருத்துக்களைப் படித்ததிலிருந்தே இந்தக் கோணத்தில் இருக்கும் சிக்கல்களாக நான் கருதுபவற்றை எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இதன் அடுத்த பாகத்தில் இதை அணுக முயற்சிப்பேன்.

அருள்,
ஒரே பதிவில் முடித்துக்கொள்ளலாம் என எண்ணி எழுதியதில் பதிவு நீண்டுவிட்டது. அப்படியும் முடிக்க இயலவில்லை. நீங்கள் சுட்டிக்காட்டியது நல்லது.

பாலபாரதி,
நான் எடுத்துக்கொண்டிருந்த இடைவெளி காரணமாக செய்தியை அறியவில்லை. இப்போது சந்திப்புக்குப் பின்னான நண்பர்களின் பதிவுகளைப் படித்து அறிந்துகொண்டேன். நீங்கள் ஒருங்கிணைத்து கட்டுரை வாசிப்பு, ஈழத்து நண்பர்கள் வருகை என்று புது வடிவத்தில் நடந்த வலைப்பதிவர் சந்திப்புக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

செல்வநாயகி said...

என் பின்னூட்டத்தை இடுவது தாண்டி இப்பதிவில் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்வதில் எனக்குச் சிலத் தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருப்பதால், நண்பர்கள் இடும் பின்னூட்டங்களைப் பத்மாவோ, மதியோ மட்டுறுத்த வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு அவகாசம் கிடைத்து மட்டுறுத்தும் வரை யாருடைய பின்னூட்டமாவது நிறையக் காத்திருக்க நேர்ந்தால் நண்பர்கள் மன்னிப்பார்களாக:))

Thangamani said...

செல்வநாயகி:

நீண்ட பதிவாயினும், அருமையான, எளிமையான பதிவு.

பொன்ஸ் சொன்னதைத்தான் நானும் சொல்லுகிறேன்.

செல்வநாயகி said...

மதுரா, தங்கமணி,
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.


மதுரா,

///நான் ரொம்ப மக்கு! :) ///


உங்க தன்னடக்கத்துக்கு அளவே இல்லையா:))