Monday, December 25, 2006

கற்றதனால் ஆன பயனென்ன.......(பாகம் 3)

செல்வநாயகி அவர்களே சில காலம் முன்பு லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள் டைரக்டர் கௌதமை திட்டியிருந்தார். அவர் திட்டியிருந்த காரணம் அந்த டைரக்டர் தன்னுடைய படத்தில் ஒரு திருநங்கையை மோசமானவராக காட்டியிருந்தது தான்.

அந்தப் படத்தில் காட்டியுள்ளது போல திருநங்கைகள் இன்று சமூகத்தில் இல்லையா?(சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்ததால் தான் அவர்கள் அப்படி ஆனார்கள் என்பதால் சமூகத்தில் உள்ள அனைவரும் அந்தக் காட்சியின் போது தலை குனிந்திருக்க வேண்டும் என்பது வேறு விஷயம்.) ஆனால் திருநங்கைகள் என்பவர்கள் அது போலவே இல்லவே இல்லை என்பது போல அவர் அங்கு ஆவேசப்பட்டது எனக்குத் தவறாக பட்டது

ஏன் இதனை சொல்கிறேன் என்றால் ஒரு விஷயத்தை அலசும் சமயம் இரு வேறு விதமாகவும் அதனை பார்க்க வேண்டும் எனக்குத் தேவையானவற்றை மட்டுமே பார்ப்பேன் என்பது தவறான கண்ணோட்டம் ஆகும்.

உங்களின் பதிவில் நான் சொன்னதை பொதுமைப் படுத்தி விட்டீர்களோ என்று தோன்றுகிறது

நான் அந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது பெண்ணியம் பேசும் எல்லாப் பெண்களையும் அல்ல என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

ஆனால் பெண்ணியம் பேசும் பெண்களில் சிலர் அப்படி இல்லை என்பதை மறுத்தால் அதில் நேர்மை இருக்காது. எதிர்வினைகளே இல்லை இதில் என்பது வேறு சில பிரச்சனைகளுக்கு வழி வகுப்பது போலாகி விடும்.

மற்றபடி உங்களின் பதிவில் எனக்கு முழு உடன்பாடு உண்டு உழைக்கும் பெண்கள் இருக்கும் வீட்டில் ஆண் என்பவனும் சரி சமமாக வேலைகளை பகிர வேண்டும், பெண்களுக்கு இன்று மாதாந்திர தொந்தரவுகள் போன்றவை எல்லாம் பிரச்சனைகளே கிடையாது என்பதை எல்லாம் நூற்றுக்கு நூறு சதவீதகம் ஒப்புக் கொள்கிறேன்.(நான் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது கூட எப்படி இந்த நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சிந்தித்ததன் விளைவே. அதுவும் தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்)

உங்களிடம் இருந்து மேலும் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் சில

பல வேறு ரூபங்களில் பெண்களின் மேல் பிரயோகிக்கப்படும் பாலியல் பலாத்காரங்கள், சீண்டல்கள் போன்றவை பற்றி கூட இன்று பலர் அறியாமல் இருப்பது வேதனைக்குறிய ஒரு விஷயம் ஆகும். இது போன்ற பிரச்சனைகளை குறித்த பார்வைகளை எதிர்பார்க்கிறேன்.

கடைசியாக,

குடும்ப அமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போட்டி அல்ல. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறித்து அல்ல. நான் இதனை செய்வதால் நீ அதனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அப்படி ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதினால் பல பிரச்சனைகளே மிஞ்சும் என்பது என் தாழ்மையான கருத்து. பெண்ணியம் என்பது இது போன்ற விஷயங்களுக்கு துணை போய் விடக் கூடாது. இதனையும் தவறாக அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டாம். சில சமயங்களில் அது போலவும் நடக்கிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறேன்.


செந்தில்குமரன்,
நீங்கள் லிவிங்ஸ்மைல் வித்யாவின் பதிவின் கோணத்தையும், என் பதிவின் கோணத்தையும் ஒப்பிட்டு எழுதியிருப்பதே சரியானதல்ல என்பது என் கருத்து. திருநங்கைகளின்
பிரச்சினைகளும், போராட்டங்களும் பெண்ணியப் போராட்டங்களைவிடவும் கனமானவை. சக மனித இனமான ஆணினத்தோடு சமத்துவம் வேண்டி நிற்கிறது பெண்ணீயம். ஆனால்
முதலில் தாங்கள் மனித இனமாகவே ஏற்றுக்கொள்ளப்படாதிருக்கிற வேதனையை வெளிப்படுத்துகிறது திருநங்கைகளின் போராட்டம். இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை அறியவேண்டும்.

தோழி லிவிங்ஸ்மைல் வித்யாவுக்கு அந்தப் பதிவிற்காகக் குவிந்த கண்டனங்களைப் படித்தபோதே அங்கேயோ அல்லது அதுகுறித்து என் பதிவிலோ எழுதிட நினைத்தும் நேரமின்மை காரணமாக முயலவில்லை. மேலும் அந்தசமயத்தில்தான் என்று நினைக்கிறேன், நண்பர் ஆழியூரான் அதுகுறித்த ஆழ்ந்த கோணத்தில் அம்பேத்காரையெல்லாம் எடுத்துக்காட்டி ஒரு அழகான பதிவிட்டிருந்தார். அதை ஆதரித்து ஒரு பின்னூட்டம் இட்டதோடு சரி. ஆனால் இப்போது நீங்கள் அதை இங்கே நினைவுபடுத்தியிருப்பதால் கொஞ்சம் எழுதலாமென நினைக்கிறேன்.

இச்சமூகத்தில் திருநங்கைகளின் வாழ்வு என்ன? பிறந்ததிலிருந்து சுற்றிவந்த வீட்டிலேயே அந்நியமாக்கப்பட்டுத் தெருவில் விடப்பட்டு, எந்த ஒரு அன்பும், பரிவும் சமூகத்தின் எந்தப்
பக்கத்திலிருந்தும் துளியும் கிட்டாமல் ஒருவேளைச் சோற்றுக்கு எதையாவது செய்தாக வேண்டுமே என்கிற நிலையை, அதன் கொடூரம் எப்படியிருக்கும் என்கிற உண்மையை, உயிரின் ஒவ்வொரு செல்லிலும் ஏற்படும் வலியை நிச்சயமாக செந்தில்குமரன் நீங்களோ, நானோ அறியமுடியாது அப்படி ஒரு வாழ்க்கையில் நாம் துடிக்காதவரை. வெளியிலிருந்துகொண்டு அவர்களின் செயல்களுக்கு நாம் நீதிபதிகளாகித் தீர்ப்புச் சொல்லி, ஒழுக்கத்திற்கென்று நம்கையில் யாரோ கொடுத்துச் சென்ற அளவுகோலில் அவர்களை அளந்து கருத்துச் சொல்வதை நிறுத்துவதே அவர்களுக்கு நாம் முதலில் செய்கின்ற உதவியாக இருக்கமுடியும்.

"திரைப்படத்தில் திருநங்கை ஒருவரை அப்படிக் காட்டியதற்காக லிவிங்ஸ்மைல் வித்யா இப்படி ஆவேசப்படத் தேவையில்லை. ஏனென்றால் அப்படியான திருநங்கைகளே இல்லையா?"என்று கேட்கிறீர்கள். அடைப்புக்குறிக்குள் "அவர்களை அப்படி ஆக்கியது சமூகம்தான்" என்றும் ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் அந்த சமூகத்தின்மீது கோபப்படவும்
கூடாதென்கிறீர்கள். குழப்பமானதாக இருக்கிறது உங்கள் நிலை. எந்த வழியையும் திறந்துவிடாமல் அவர்களைப் புறக்கணிக்கிற சமூகத்தில் உயிர்த்திருத்தலின் பொருட்டு அவர்களாக ஒருவழியில் சென்றால் அதை நக்கலும், நையாண்டியும் செய்து கைகொட்டிச் சிரிக்கிற வேலையையும் அச்சமூகமே செய்கிறது. இந்த வக்கிரமனப்பான்மை ஒழிகிறவரை
திருநங்கைகளைப் போன்றவர்களுக்கு வாழ்க்கை சுலபமாகுமா?

ஏதோ இந்த ஒருபடத்தில் மட்டும்தான் இப்படிக் காட்டப்பட்டதா செந்தில்? நம் திரைப்படங்களில் திருநங்கைகள் காட்டப்படுகிற இடங்கள் எல்லாமே நையாண்டிகளாகத்தானே
இருக்கிறது? வேறெந்த வெளி ஊடக வாசிப்பு, அனுபவமெல்லாம் இல்லாமல் இருந்த என் பள்ளிநாட்களில் சினிமாக்களில் மட்டும் இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த காலத்தில்
"இவர்களைப் பார்த்தால் பயந்து ஒதுங்கிவிடவேண்டும்" என்கிற ரீதியிலும், "இவர்கள் மோசமானவர்கள்" என்கிற கோனத்திலும்தான் என் எண்ணங்கள்கூட இருந்திருக்கின்றன.
இவைபற்றிய சரியான செய்திகளை, அவர்கள் அப்படி ஆகிப்போனதற்கான காரனங்களை எடுத்துச்சொல்லி ஒரு விழ்ப்புணர்வை மனிதர்களிடத்தில் ஏற்படுத்தவும், இவர்கள் சரியாக
வாழ்வதற்கான வழிகளைத் தரவும் முயற்சிக்காத ஊடகங்களுக்கு இவர்களைப் பற்றி நக்கலடித்துக்கொண்டிருக்க மட்டும் முடியும் உரிமை எங்கிருந்து வந்தது?

அவர்கள்மீதான ஏளனங்களும், கொடுமைகளும் முற்றும் நின்றுபோன ஒருசமூகத்தில் திருநங்கைகள் வேண்டுமென்றே இப்படியிருக்கிறார்கள் என்கிற நிலைவரும்போது பேசலாம்
செந்தில் "இருப்பதைத்தானே படத்தில் காட்டுகிறார்கள்? இதற்கு எதற்கு இத்தனை ஆவேசம்?" என்கிற நேர்மையை, நியாயத்தை. இப்போது தேவையில்லை அது. லிவிங்ஸ்மைல் வித்யா என்கிற ஒருவரின் அனுபவம் மட்டுமல்ல. வேறெந்த வெற்றியான வாழ்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் திருநங்கையின் அனுபவமும் எப்படியானதென அறிகிறபோது அவர்களின் உண்மையான துயரங்கள் புரியும். நாட்டியக்கலைஞர் நர்த்தகி நடராஜனின் செவ்வி படித்தேன் சமீபத்தில் குமுதத்தில். இந்தியாவில் பாஸ்போர்ட் வாங்கிய முதல் திருநங்கை அவர். ஆனால் அதை வாங்குவதற்கு அவர் பட்ட பாடுகள் எத்தனை தெரியுமா? நாட்டியம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு, அவரின் பாலினம் கருதியே யாரும் அவருக்குச் சொல்லிதர முன்வராத சோகத்திலிருந்து இப்போதும் அவருக்கு முழு ஆதரவளித்து வாழவைத்துக்கொண்டிருப்பது அவரைப் போன்ற இன்னொரு திருநங்கைதான் என்பது வரைக்கும் சொல்லியுள்ள அவரின் அனுபவங்கள் முக்கியமானவை. இப்படிப் போராடி சாதிக்கும் திருநங்கைகளை(யும்) ஏன் நம் படங்களில் காட்டுவதில்லை? திருநங்கைகள் என்றாலே உடலுறவு வைத்துக்கொள்ள ஆள்தேடி அலைந்துகொண்டிருப்பவர்கள், மற்றவர்களிடம் காசு பிடுங்குபவர்கள் என்பதை மட்டுமே சித்தரித்துக் காட்டமுடிகிறவர்கள் நர்த்தகி நடராஜனை ஏன் காட்டமுடியவில்லை? அந்த ஊடகக் கதைகளின் உற்பத்தியாளர்களை பல்வேறு போராட்டங்களைத் தாண்டி வந்திருக்கும் திருநங்கையான லிவிங்ஸ்மைல் வித்யா திட்டியதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் திட்டியதற்குப் பயன்படுத்திய மொழியைக்கூட விமர்சிக்க நான் விரும்பவில்லை. அதன் பின்னிருந்த வலியை உணர்ந்துகொள்வது மட்டுமே
எனக்கு அதில் முக்கியமாக இருந்தது.

அதுமட்டுமல்ல செந்தில். சாந்தியின் பாலினம் குறித்த பிரச்சினைகளை இப்போது எழுதிக்கொண்டிருக்கிற ஊடகங்களில் ஒன்றில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரையில் ஒரு இடத்தில் "சாந்தி பெண்தான், அவரை அரவாணியைப் போல் மோசமாகக் கருதுவது" என்று படித்தேன். இந்த மொழிகளையெல்லாம் எதிர்த்துக் கண்டனம் எழுப்பி அப்படி நிகழாவண்ணம்
தடுக்க நம்மால் முடிந்ததைச் செய்யலாம். ஊடகங்கள் மட்டுமல்ல. அரச இயந்திரத்தில் பீகாரில் நடந்த ஒரு நிகழ்வை டிசம்பர் 10ம் தேதி ஜூனியர் விகடனில் படிக்க நேர்ந்தது.
அங்கிருக்கிற மாநகராட்சி ஒன்றில் அதற்கு வரவேண்டிய வரிபாக்கியை வசூல் செய்ய ஒரு புது உத்தியை யோசித்த அதன் ஆணையர், திருநங்கைகளை அனுப்பி வரிகட்டாத
கடையினர் முன்பு ஆட்டம் ஆடிப் பாட்டுப் பாடி வரிவசூலிக்கும் முறையை அமுல்படுத்தியிருக்கிறார். திருநங்கைகள் கடைகளுக்கு முன்பு கூடுவதில் அச்சம் கொள்பவர்கள் உடனே வரியைக் கொண்டுபோய்க் கட்டிவிடுகிறார்களாம். ஆனால் மாநாகராட்சி ஊழியர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடைக்காலமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த எதிர்ப்புக்கு அவர்கள் சொல்லும் காரணம் "நாங்கள் போய் வசூலித்தால் எங்களுக்குக் கிடைக்கும் 4 சதவீத கமிஷன் வரும். அலிகளால் அது போய்விடுகிறது. மேலும் நபர்களை அடையாளம் காட்ட நாங்களும் அலிகளுடன் போக வேண்டியிருக்கிறது. பிறகு வீட்டிற்குப் போனால் அலிகளுடன் ஆட்டம்போட்டுவிட்டு வர வெட்கமாக இல்லையா என்று கேட்கிறார்கள் வீட்டில்". இந்தச் செயல், ஒரு அரச இயந்திரமே திருநங்கைகளைப் பயன்படுத்தும் விதம், இவையெல்லாம் நம் சமூகம் எப்படிப்பட்டதென்பதை நாமே அறிந்துகொள்ள (முயன்றால்) ஒரு உதாரணம். நிற்க.

பெண்விடுதலை குறித்தான என் பதிவுகளையும் நீங்கள் தோழி லிவிங்ஸ்மைல் வித்யாவுக்குச் செய்த அதே "நேர்மை அளவுகோல்" கொண்டு அளந்தால் நான் சொல்வதற்கு
ஒன்றுமில்லை. நான் பெரும்பான்மை சமூகப் போக்கை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதில் பெண்விடுதலையைப் பெண்ணுக்குரிய விடுதலையாக மட்டும் நான் பார்க்கவில்லை. அதை
ஆரோக்கியமான சமூகத்திற்குத் தேவையான ஒரு அங்கமாகவே பார்க்கிறேன். அதை உணர்வது ஆண், பெண் இருவருக்குமே அவசியமானது என்பதையும் எழுதியிருக்கிறேன்.
என்னைவிடவும் இதை அழகாக எழுதிய, எழுதும் நண்பர்களும், தோழியரும் இங்கிருக்கிறார்கள். "பெண் விடுதலை கிடைத்து அதைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்கள்" என்பதை எந்த நிகழ்வுகள், அனுபவங்கள் அடிப்படையில் சொல்கிறீர்கள் என்பதை விரிவாக ஒரு பதிவாகவே இடுங்கள். உங்களின் கண்ணோட்டம் பற்றி நான் முழுமையாக அறிந்துகொள்வேன்.


///குடும்ப அமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போட்டி அல்ல. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறித்து அல்ல. நான் இதனை செய்வதால் நீ அதனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அப்படி ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதினால் பல பிரச்சனைகளே மிஞ்சும் என்பது என் தாழ்மையான கருத்து. பெண்ணியம் என்பது இது போன்ற விஷயங்களுக்கு துணை போய் விடக் கூடாது.//////

மீண்டும் ஒரு பொதுமையான கருத்தை இந்த இடுகையில் வைத்திருக்கிறீர்கள். குடும்பம் பற்றிய என் கருத்தை இந்த இடுகையின் முதல் பாகத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறேன்.

" உன் கணவன் குறித்தான உன்பயங்களை உதறிவிட்டு பேரன்பின் வெளிப்பாட்டுடன் அவரையும் உனக்குச் சமமாகவே எண்ணு. உன்னையும் அப்படியே அவர் எண்ணவேண்டும். அந்த அன்பில் இருவருமே கரைந்து போங்கள். ஆனால் தொலைந்து அல்ல. உங்களைப் புதுப்பித்துக்கொண்டு வெளிப்படுத்த, வாழ்வின் சுவாரசியங்களைத் தேட இருவருமே ஒருவருக்கொருவர் உறுதுணையாகுங்கள்"

இதைவிட எனக்குச் சொல்லவும் தெரியவில்லை. மேலும் ஆணுக்கு காலையில் இந்த வேலை, பெண்ணுக்கு மதியம் இந்தவேலை என்றெல்லாமும் நான் எங்கும் அட்டவணையிட்டும் கொடுக்கவில்லை. நான் "கத்தரிக்காய் எந்த அளவுக்கு உடம்புக்கு நல்லது" என்று சொல்லிக்கொண்டிருந்தால் அதையெல்லாம் உருளைக்கிழங்குக்குச் சொன்னதாக நினைத்து அதைச் சாப்பிடத் தொடங்கிவிடுகிறீர்களோ என்று நினைக்கும்படியாகச் சிலசமயங்களில் உங்களின் வாதங்கள் எனக்குத் தோன்றுகின்றன செந்தில்:)). ஆனால் நான் சொன்னது உருளைக்கிழங்கையல்ல என்பதை விளக்கிவிடவாவது எனக்கு விருப்பத்தைத் தரும் வகையில் உங்கள் மொழியின் முதிர்ச்சி இருப்பது மகிழ்ச்சி:))

3 comments:

செல்வநாயகி said...

வேலைகளின் சுமையால் செந்தில்குமரனுக்கும், சிவக்குமாருக்கும் பதிலாகச் சொல்ல நினைத்ததை எழுத இவ்வளவு தாமதம். மன்னிக்க வேண்டும். மேலும் சொல்லநினைத்தது ஒரு பதிவுக்கே நீளமானதாகத் தோன்றியதால் பின்னூட்டமாக இடாமல் புதிய பதிவாகவே இடுகிறேன். சிவக்குமார் அவர்களுக்கும் பதில் இன்னொரு பதிவாகவேதான் வருமென்று நினைக்கிறேன்:)) மேலும் அதற்கு இன்னுமொரு இரண்டு மூன்று நாட்கள் தள்ளி ஒரு வய்தாவும் வாங்கிக் கொள்கிறேன்:)) எட்டுக்கொரு பதிவே நமக்கு எழுத நேரம் கிடைப்பதில்லை:))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

விரிவான பதிலுக்கு நன்றி. நான் லிவிங் ஸ்மைல் வித்யா பற்றி உதாரணம் சொல்லப் போய் விவாதம் கொஞ்சம் தடம் மாறிப் போய் விட்டது என்று எண்ணுகிறேன்.

நான் தவறை தவற்றால் சரி செய்ய முடியாது என்று எண்ணுகிறவன். காந்தியின் அகிம்சை எனக்கு பிடித்திருப்பது அதனால் தான்.

மற்றபடி நாம் இருவரும் ஒரே அலை வரிசையில் இருந்து பேசவில்லை என்று தோன்றுகிறது.

ஆகையால் இதை இங்கோடு விட்டு விட்டு உங்களின் பிற பதிவுகளில் பேசுகிறேன்.

செல்வநாயகி said...

செந்தில்,
எப்போதும் உங்களுடனான வாதம் அல்லது கருத்துப் பரிமாற்றம் எனக்கு உவப்பையே தந்திருக்கிறது. அலுப்பைத் தந்ததில்லை. காரணம் உங்கள் அணுகுமுறை. இப்போதும் அப்படியே:))

நானும் காந்திய வழியை மட்டுமே எல்லாவற்றிற்கும் தீர்வுதரக்கூடியவை என்பதை பிடிவாதமாக நம்பிக்கொண்டிருந்த காலங்கள் உண்டு. இப்போதும் சிலபல விடயங்களில் காந்தீயம் மீதான பற்று அப்படியே இருந்தாலும், அதைக் கடந்த பார்வைகள் சில விடயங்களில் ஏற்படுவது இயல்பாகிவிட்டது எனக்கு.


///நான் தவறை தவற்றால் சரி செய்ய முடியாது என்று எண்ணுகிறவன்.///
நிச்சயம் ஒத்துக்கொள்கிறேன் செந்தில். ஆனால் எப்போது எது சரியாகவும், தவறாகவும் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதில் மட்டுமே நீங்களும் நானும் வேறுபடுகிறோம் திருநங்கைகள் விடயத்தில்.

//உங்களின் பிற பதிவுகளில் பேசுகிறேன். ///

பேசலாம்:)) நன்றி.