Wednesday, July 28, 2021

 நேற்று, நான் மதிக்கிற ஆட்களில் ஒருத்தர் ஆசாத் பாய்க்கு நான் எழுதுவன் எண்டு சொன்னன். அவர், மட்டுமில்ல இன்னும் நிறைய ஆட்கள் - மரத்தடி ஆக்கள்,  வலைப்பதிவு சனம், கூகுள் பஸ்/பிளஸ் ஆட்களெண்டு அப்பப்ப கேட்டபடி... அப்படியென்ன எழுதுறன் எண்டு தெரியேல்லயெண்டாலும், இந்த எழுத்துதான் நிறைய நண்பர்களைச் சம்பாதிச்சுக் குடுத்திருக்கு. என்ர உணர்வுகளை சரிசமமா வைச்சுக்கொள்ள உதவியிருக்கு. ஒத்த இரசனையுள்ள மனிதர்களிடம் அவர்களின் விருப்பு வெறுப்பு தாண்டி கற்றுக்கொள்ள வழிவகை அமைச்சுக் கொடுத்திருக்கு.

எழுதிறதெண்டு ஆயிற்றுது. எங்க எழுதுவம் எண்டு யோசிச்சா, இப்ப மரத்தடி குழுமம் இல்லை. அதில் இருந்த குருவிகள் நாங்களெல்லாம் ஒவ்வொரு திசையா பறந்து போயிற்றம். அதுக்கடுத்தது வலைப்பதிவு. இந்த வலைப்பதிவு blogspot.com. சின்னப்பிள்ளை அடிமேல அடிவைச்சு பழகின மாதிரி வலைப்பதிவில் தமிழை எப்படி எழுதிறது எண்டும் தமிழில எழுதிற ஆட்களை எப்படி ஒருங்கிணைக்கிறது எண்டும் பழகின இடம். ஒவ்வொருத்தரின்ட அஜெண்டாக்களுக்குள்ள சிக்கிக்கொள்ளாமல் தமிழில், தமிழோடு உறவாட ஒரு தளமாக உருவமைச்ச இடம்.

பார்வதி கிட்டடியில ஒரு பேட்டியில சொன்னமாதிரி... அந்தக் காலத்தில அப்படி செய்தம், இப்படி செய்தம் எண்டு பெரிய ஆட்கள் சொல்லி அறிவுரை செய்யேக்க கேட்கப் பிடிக்காது. அதையே நானும் செய்யக்கூடாது எண்டு நினைச்சாலும் அப்பப்ப பழைய நினைவுகள் வந்துபோகுது. 

வலைப்பதிவுக்கு வந்து உள்ளநுழையலாமெண்டு போனா, கதவு உடனயே திறந்தது ஒரு பெரிய ஆச்சரியம். அப்ப பாவிச்ச மின்னஞ்சல்தானெண்ட படியால இருக்கும்... உள்ளுக்குள்ள வந்து தன்பாட்டில எழுதத் தொடங்கிற்றன். இருந்த பழைய கணினியில சில மாதங்களுக்கு முந்தி உபுண்டு லினக்ஸ் போட்டுப் பார்த்தனான். இண்டைக்கு fbல கேட்டு தமிழில தட்டச்சவும் வழி வகுத்தாச்சு... என்ன எழுதுறது எண்டு நாளைக்கு யோசிப்பம்


July 28, 2021

Tuesday, January 09, 2007

கற்றதனால் ஆன பயனென்ன? (நிறைவு)

ஒரு ஆங்கில முதல்தாள்தேர்வுக்கு முந்தையநாள் என்றைக்கோ கலந்திருந்த போட்டியொன்றின் பரிசளிப்பு நிகழ்ச்சிக்குப் பயணித்துப் போகவேண்டியிருந்தது. பரிசாக முதன்முறையாகப் பாடநூல் தவிர்த்த ஒரு ஐந்து தமிழ்நூல்களைச் சுமந்துகொண்டு வீடுதிரும்புகையில் எல்லோரும் உறங்கச் செல்லும் நேரம். அடுத்தநாள் காலைத் தேர்வுக்குத் திருப்பிப் பார்க்கவேண்டியது கிடந்தாலும் கையில் கிடைத்திருந்த "குடும்பவிளக்கு" , "இருண்டவீடு" இரண்டுமே அன்று படித்து முடிக்கப்பட்டது நள்ளிரவுதாண்டியும்.

கல்லூரியில் படிக்கும்போது அடுத்தநாள் அரசியல் பாடத் தேர்விருந்தபோதும், ஆட்சிப்பணித்துறைத் தேர்வுக்கனவிலிருப்பவர்களுக்கு Competetion Success Review எனும் CSR இதழ் உதவுமென்று அன்றைய தொலைபேசி உரையாடலொன்று மூலம் அறிந்து உடனே
வாங்கிவந்து அதை முதல் அட்டையிலிருந்து கடைசியட்டைவரை படித்துக்கொண்டிருந்ததும் உண்டு. என் இத்தகைய பழக்கங்கள் இன்றும் சிலநேரங்களில் சிலவிடயங்களில் தலைகாட்டுவதுண்டு. அப்படித்தான் சிவக்குமார் அவர்களின் பின்னூட்டத்திற்கு விரிவாகப்
பதில்சொல்வதாய்ச் சொல்லிவிட்டு அதை முதலில் முடிக்காமல், கடந்த இருவாரங்களாக என்னைக்கவர்ந்த மற்ற இடுகைகளை வாசிப்பதில் மட்டும் இங்குவரமுடிந்த நேரத்தைக் கரைத்துக்கொண்டிருந்தேன்.

இடுகைகள் படிப்பதையும்(அவை பிடித்திருந்தால்) இலகுவாகச் செய்து கடந்தபோக முடியாது எனக்கு. ஒரு முத்தம் தரப்பட்டால் அது எப்படி உதட்டின் ஈரம்மட்டும் பட்டு உலர்ந்துவிடும்படி அவசரமாக இல்லாமல் உள்ளத்திலிருந்து கிளம்பும் ஈரத்தைச் சொல்லும்படி நிதானமாகத் தரப்படவேண்டுமோ, மாலையில் வருவேன் எனத்தெரிந்து காலையிலேயே மழைபெய்து இளகிய மண்ணில் எங்காவது எனக்குப் பிடித்த காளான் முளைத்திருக்கிறதா என அலைந்து திரிந்து அதைப் பிடுங்கிவந்து சமைத்துவைத்திருக்கும் அம்மாயியின் காளான்வறுவலை உண்டோமா, தண்ணீர்குடித்தோமா என்றில்லாமல் அதைப் பிடுங்கியது முதல் வறுத்ததுவரையான அவரின் அனுபவத்தைக் கேட்டுக்கொண்டே பொறுமையாகச் சாப்பிடவேண்டுமோ அப்படித்தான் எனக்குப் பிடிக்கும் இடுகைகளைப் படிப்பதையும் செய்யவேண்டும் எனக்கு. அந்தவகையில் என் நேரத்தை எடுத்துக்கொண்ட இடுகைகள் பல கடந்த இருவாரங்களில். டிசேவின் "சேகுவரா", மானிடளின்
"பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை" , பொடிச்சியின் நட்சத்திரப்பதிவுகள், தமிழ்நதியின் "நேற்றிருந்தேன் அந்த ஊரினிலே" , தருமியின் ஆணிகள் பற்றிய இடுகை, சிவக்குமார் எழுதியிருந்த தொழில்முனைவோரின் வெற்றிக்கான பண்பு பற்றிய கட்டுரை, அப்பிடிப்போடுவின் "வளத்த கடா முட்ட வந்தா..." என்று சொல்ல ஆரம்பித்தால் இன்னும் நீளும் பட்டியல் உண்டு.

இதற்கிடையில் வலைப்பதிவுகளின் அடுத்தகட்ட நகர்வு வேறு நடந்துகொண்டிருக்கிறது. எப்படிச் சாதிகள் ஒழிப்புப் பற்றிப் பேசினால் அது எந்தப் பிரயோசனமுமில்லாத வாதமாக மாறுவதற்குரிய பிரயத்தனங்களே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றனவோ, அந்தப் பாணியில் இப்போது ஆண்களா? பெண்களா? என்ற நகர்வை எட்டிப்பிடித்திருக்கிறோம். நடப்பதையெல்லாம் பார்த்தால் ஒரு கொசு ஒழிப்பிற்குக்கூட ஒருமருந்தை ஒருமித்து ஆய்ந்து ஒத்துக்கொள்ளமுடியாத மனநிலையே நம்மிடம் இருப்பதாகத் தோன்றுகிறது. உன்மருந்து பெரிதா? என் மருந்து பெரிதா என ஆளாளுக்கு அடிக்க ஆரம்பித்துக் கொசுக்களை ஒழிக்கிறோமோ இல்லையோ மருந்துநாற்றம் இன்னொரு
சாக்கடை நாற்றத்திற்கு ஈடாகும்வரைகூடப் போய்விடுவோம் போலிருக்கிறது. கடைசியில் கொசுக்களை உற்பத்தி செய்யும் சாக்கடைகள், நின்று ஒருநிமிடம் சிரித்துவிட்டுத் தொடர்ந்து தன் பாதையில் ஓடலாம்.

வேறெதற்கும் பதில்களோ, விளக்கங்களோ, மாற்றுக்கருத்துக்களோ எடுத்துவைத்துக்கொண்டிருக்கும் ஆர்வம் இப்போதைக்கு இல்லையென்றாலும் சிவக்குமாருக்கு அவரின் கேள்விகளுக்கான பதில்களாய்ச் சொல்ல நினைத்ததை மட்டும் இந்த இடுகையில் எழுத முயற்சிக்கிறேன். இந்த இடுகையின் இரண்டாம் பாகத்தில் இடப்பட்டஅவரின் பின்னூட்டம் இது:-

குழந்தைகளை பத்து மாதம் சுமப்பதாலும், பின்னர் சில ஆண்டுகளாவது வளர்ப்புகளில் பெரும் பங்கு வகிப்பதாலும் பெண்களுக்கு வீட்டை பராமரிப்பது, குழந்தைகளுக்கும் கணவனுக்கும், பிற வீட்டு ஆட்களுக்கும் சமையல் செய்து கொடுப்பதிலும் ஈடுபாடும் ஆர்வமும் இயல்பாகவே இருப்பதாக என்னுடைய புரிதல்.

நான்கு இடங்களுக்குப் போய்ச் சுற்றி வருதல், புதிய முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற, சீர்மையான வீட்டு வாழ்க்கைக்கு ஒவ்வாத பணிகளை மேற்கொள்ளுவதில் ஆண்களுக்கு உந்துதல் அதிகம் என்பது இன்னொரு பக்கம்.

இரண்டுக்கும் விதிவிலக்குகளும், கூடுதல் குறைவுகளும் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை 'வீட்டுக்குள் என்ன சமைப்பது, எதைச் சாப்பிடுவது, எந்தப் பொருளை எங்கே வைப்பது, எப்படி நேரம் செலவளிப்பது என்று தீர்மானிப்பது' வெளியில் சென்று வாள் சுற்றுவதை விட அதிகமான அல்லது அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது.

வெளி நடவடிக்கைகளில் கிடைக்கும் ஆதாயங்களைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டை நிர்வாகித்து வந்த பெண்களை ஒடுக்கவும் கொடுமைப் படுத்தவும் ஆணும், ஆணைச் சேர்ந்த பெண்களும் ஈடுபடுவதைத் தடுக்க எழுந்த பெண்ணியக் குரல்கள், 'நாம் வெளிவேலைகளை விட்டு ஒதுங்கி இருப்பதால்தானே இந்தக் கொடுமைகள்' என்று காரணப்படுத்தியோ

அல்லது

இயல்பாகவே பெண்களுக்கும் விண்ணை அளக்கும் ஆர்வமும் இருப்பதாலோ

பெண்களும் வெளி உலகில் வேலை செய்வது நடைமுறைக்கு வந்துள்ளது. வெளி வேலைகள் உடல் சார்ந்த உழைப்பாக இல்லாமல் மூளை வேலைகளாக மாறி விட்ட பொருளாதாரக் காரணிகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

1. பெண் வெளியே போய் வேலை செய்யும் போது ஆணும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதுதானே சரி. வெளியில் போய் செயலாற்றுவதால் பெண்ணுக்குக் கிடைக்கும் புதிய உரிமைகளுக்கு ஈடாக வீட்டில் வேலை செய்வதால் ஆணுக்கு நிறைவுகள் கிடைப்பதில்லை (அதுதான், நான் குறிப்பிட்டிருந்த சொந்த அனுபவம்). ஆணின் இயல்புக்கு எதிரான வேலைகள் என்பதால் இருக்கலாம்.

2. (கொஞ்சம் அப்பட்டமான கருத்து, சரியான நோக்கில் புரிந்து கொண்டு பதிலளியுங்கள்)
வீடு என்பது பெண்ணால் உருவாக்கப்பட்டு பெண்ணுக்கு தேவையான இடம். அதற்குள் ஆணை அன்பால் கட்டிப் போட்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வாழ்க்கைத் துனையாக ஆணையும் இணைத்துக் கொள்வது இல்லறம். இப்போது வரையறைகள் மாறும் போது ஆண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன வலுவான காரணம் இருக்கும்?

3. கொடுமைப்படுத்தப்படும் பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகக் கருத்தோட்டங்கள், சட்டங்கள் இவற்றை மேலே சொன்னவாறு பல நிலைகளில் சரிக்குச் சமமாகச் செயல்படும் பெண் ஆணுக்கு எதிராகப் பயன்படுத்தும் போது என்ன தீர்வு?


என் பதில்:-
**********

வேறுபல இடங்களில், (உங்களின் இடுகைகள் உட்பட) உங்களின் ஆழமான நோக்கைக் கண்டு அதைப் புரியமுயற்சிப்பவளும், அந்த நோக்கைப் பாராட்டுபவளும் நான். ஆனால் இவ்விடயத்தில் உங்களின் கருத்து மிக மேலோட்டமான ஒன்றாக இருக்கிறதென்றே கருதுகிறேன் நான். பெண்ணின் பிள்ளைப்பேறு, உடலியல் காரணங்களைச் சொல்லி அணுகுவதும், பெண் அதனால் வீட்டிலிருக்கவேண்டி வந்தவள் என்கிற கருத்தை முன்வைப்பதும் அலுப்பாக இருக்கிறது கேட்க. அதுமட்டுமில்லை, இப்போது ஏதோ மூளைக்கு மட்டுமே வேலைதரும் பணிகள் வந்தபிந்தான் பெண்கள் வெளிப்போதல் தேவையாக இருக்கிறதென்பதுபோல் நீங்கள் வைத்திருக்கிற கருத்தும் ஒரு நகர்ப்புற நாகரீக வாழ்வின் போக்கிலிருந்து மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டாதாகவே நினைக்கிறேன். நான் நிரலி எழுதும் உதாரனத்தைச் சொல்லியிருந்தது இன்று நிரலியெழுதும் ஆண்களில்கூட வேலைக்குப் போகாத மனைவியை விரும்பும், அல்லது தான் வேண்டுகிறபோது
வேலையைவிட்டுவிட இசையும் மனைவியை விரும்பும் போக்குள்ளதைச் சுட்டிக்காட்டவே. மற்றபடி நீங்கள் படித்த, வெள்ளைக்காலர் வேலை தாண்டிய சமூகத்தை எடுத்துப்பார்த்தால், அதில் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக வீட்டுவேலைகள் தாண்டியும்
உழைக்கும் பெண்கள் அதிகம். நிறைமாதம்வரை கட்டிட வேலைக்குப் போகும் பெண்கள், கைக்குழந்தையைக் கொண்டுவந்து காட்டில் மரத்தில் ஒரு தூளிகட்டித் தூங்கவைத்துவிட்டுக் களையெடுப்பு வேலைசெய்து சம்பாதிக்கும் பெண்கள், சாலைகளில் காலுக்கு டயர்
கட்டிக்கொண்டு சுடுதார் ஊற்றும் பெண்கள், கருங்கல் தொழிற்சாலைகளில் ஜல்லிசுமக்கும் பெண்கள், செங்கல், சுண்ணாம்பு சூளைகளில் பணிபுரிபவர் என்று ஒரு செவ்வியில் ஆதவன் தீட்சண்யா சொல்லியதுபோல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பெரும்பான்மைப்
பெண்கள் வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் ஆணுக்கிணையாய் உழைக்கும் பெண்களே. இவர்களுக்கெல்லாம் நீங்கள் சொல்வதுமாதிரி "வெளிப்போதல் ஆணின் இயல்பு, வீட்டை நிர்வகிப்பது பெண்ணின் இயல்பு" என்பதைப் பொருத்திப்பார்த்தால் சரிவருமா என்று யோசித்துப் பாருங்கள்.

மேற்சொன்ன பெண்கள் வீடு, வெளிவேலை என்ற இரண்டிலும் இயங்குபவர்கள். ஆனாலும் அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தில் ஆணுக்குச் சமமாய் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள். ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான கூலிகூட இத்தகைய வேலைகளில் இன்னும் பல
இடங்களில் கிடையாது. நான் சுட்டவருகிற சமத்துவம் என்பது இதுபோன்றவையும் சேர்த்து. இப்படி உழைக்கும் பெண்களானாலும் அவர்களுக்கு ஒரு ஆண்துணை இல்லாத வாழ்வு கடினமானது. ஏனென்றால் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் வெளியில் முன்னெடுத்து நடத்துவதற்கு ஒரு ஆண்தான் சரியானவன் என்கிற சமூக அமைப்புமுறை. இவர்களில் கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்கள் என்னதான் தன் சம்பாத்தியம் கொண்டு பிள்ளைகளை வளர்த்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு திருமணம் என்று வரும்போதுகூட தன் உறவினர்களிலிருந்து இன்னொரு ஆணை அழைத்துதான் முன்னின்று நடத்தச் சொல்லவேண்டிவரும். இந்தமாதிரி அமைப்பில் தன் குழந்தைகளில் ஆண்குழந்தை ஒன்றுவேண்டும் என்று இப்பெண்கள் விரும்புவதன் காரணம் இதுதான். "ஆண்பிள்ளையோ சாகும்வரை பெண்பிள்ளையோ போகும்வரை" என்று நாம் இந்தநூற்றாண்டிலும் பாட்டெழுதித் திரையில் பார்க்கிறோம். இவைபோன்றவைகளைக் கடக்கவேண்டும் என்பதுதான் என்கருத்து. இங்கு சிலவிடங்களில் இன்றெல்லாம் விதவைப்பெண்களுக்கு பெரிய கொடுமையில்லை என்று எழுதும் நண்பர்களின் எழுத்து நகைப்பைத் தருகிறது. இன்றும் வெள்ளைச்சீலை கட்டிய, பொட்டில்லாத, பூவில்லாத கோலம்கொண்டு ஒடுங்கிவாழும் பெண்கள் என் உறவினரிலேயே பலர் உண்டு. தனித்து இயங்குதலற்ற அவர்களின் சார்பு வாழ்க்கை இனிமைகளைத் தொலைத்தவை.

இவைதவிர்த்து நீங்கள் உங்கள் சொந்த அனுபவமாக வீட்டிலிருப்பது பெண்ணுக்கு இயல்பாய் ஒத்துவருகிறது. ஆனால் வெளியில் சுற்றிய ஆணுக்கு அப்படி இருக்கவேண்டிவருவது ஒத்துவராது என்று சொல்லியிருக்கிறீர்கள். சிவக்குமார், என் இடுகையில் நான் சொல்லியதை உள்வாங்காமல் தோணுகிற எதையோ எழுதிவிட்டுப் போகிற ஒருவராக உங்களை நான் நினைக்கமுடியாது. நிச்சயம் நன்கு வாசித்தபிறகே எழுதியிருப்பீர்கள். எல்லா ஆண்களும் வீட்டிலிருக்கப் பெண்கள்தான் இனி வெளிப்போகவேண்டும் என்று நான் எழுதவில்லை. ஒருவர் கண்டிப்பாய் வீட்டிலிருக்கவேண்டிய காரணம் ஏற்படுகிறபோது பணிநன்மை, பொருளாதாரம் எல்லாம் கணக்கில்கொண்டு யார் இருக்கலாம் என்பதை ஒரு கணவனும், மனைவியும் அவர்கள் தீர்மானிக்கலாம். அப்படித் தீர்மானிக்கிறபோது பெண் இருந்தால் இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் நம் சமூகம் ஒரு ஆண் அவரே விரும்பி இருந்தாலும் அதை முன்னதைப்போல் ஏற்றுக்கொள்ளாமல் ஏளனப்படுத்துவதையே சுட்டினேன். உண்மையில் அது அந்த ஆணுக்குச் சிரமமானதுதான். நீங்கள் சொல்வதுபோல் வீட்டுவேலைகள் அவ்வளவு எளிதானதல்ல. கொத்தமல்லி அடுத்தமாதம்வரை வாங்காமல் தாக்குப்பிடிக்குமா என்பதிலிருந்து, துவைக்கப்போட்ட எல்லாத்துணிகளும் மடிக்கவந்திருக்கிறதா எனச் சரிபார்ப்பதுவரை ஓவ்வொருநாளும் நினைவில் வைக்க ஏராளமானவை உண்டு. எங்கோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

"நாமிருவரும் பதினெட்டுவருடமாய் இருக்கும் வீட்டில்
காபித்தூள் டப்பா
எங்கிருக்கிறதெனச் சரியாகச் சொல்லத்தெரியவில்லை எனக்கு
நீ சமையலறையில் எது எங்கிருக்கிறதென எப்போதும் சரியாகச் சொல்வாய்
காரணம் நீ ஆயிரமாயிரமாண்டுகளாய் அங்கேயே இருக்கிறாய்"

தன் மனைவியைப் பார்த்துக் கணவன் சொல்லும் இக்கவிதையில் எவ்வளவோ சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் நம்வாழ்வென்று இப்படியே இருந்துவிடலாமா சிவக்குமார். ஏன் ஆணுக்கு வராது? ஆண் செய்யக்கூடியவை இவை, பெண் செய்யவேண்டியவை இவை
என்று யாரோ ஏற்படுத்தியதை அப்படியே கடைப்பிடித்துக்கொண்டிருக்கும்வரை நாம் இப்படித்தான் இருப்போம். நான் இந்த ஒப்பீட்டை இந்த இடத்தில் செய்யக் கொஞ்சம் தயங்குகிறேன், அது உங்களுக்கான என் கடுமையான பதிலாக அமைந்துவிடுமோ என்று. என்றாலும் புரிந்துகொள்ளக்கூடியவர் நீங்கள் என்பதால் சொல்கிறேன். "இந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் இது செய்யவரும்; எனவே இதை இதை இவர்கள்தான் இயல்பாகச் செய்யமுடியும்" என்று சொல்வதும், "பெண்ணுக்கு இதுதான் இயல்பாகச் செய்ய வரும், ஆணுக்கு இதுதான் வரும்" என்று சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் என்ன இருக்கிறது? இரண்டும் சூழலால் வேறுபட்டாலும், தன்மையால் ஒன்றுபட்டதேயல்லவா? நிறைய சிரமங்கள் உண்டு சிவக்குமார். ஒரு யுகத்தின் நடைமுறையை ஒரு நாளில் மாற்றமுடியாது. ஆனால் ஆர்வமுள்ளவர்கள் எல்லாம் ஒரு அடியாவது எடுத்துவைக்கமுடியுமில்லையா? நம்மால் சாத்தியப்படாததையும் நமக்கு அடுத்து வரும் தலைமுறைகள் நிகழ்த்திவிடமுடியும் வாய்ப்பையாவது சுட்டிக்காட்ட முயலுவோமே! ஒரேவரியில் ல்வதென்றால் "discrimination அற்ற ஒரு உலகம், ஒரு வாழ்வு". discrimination எந்த வடிவத்தில் இருந்தாலும் சமத்துவசமூகம் எட்டாக்கனிதான்.

நீங்கள் பொருளாதரம் சார்ந்த கட்டுரைகளும் எழுதிவருபவர். சமயம் கிடைக்கும்போது இந்தச்சுட்டியில் சென்று பாருங்கள். http://www.economist.com/finance/displaystory.cfm?story_id=6802551. உலகப்பொருளாதாரம் உயர பெண்களின் பங்களிப்பு எவ்வளவுதூரம் உதவமுடியும்? பணிபுரியும் பெண்களின் நிலைமை வெவ்வேறுநாடுகளில் எப்படி இருக்கிறது? இன்றும்கூட நிறுவன இயக்குனர் போன்ற தலைமைப் பொறுப்புகளுக்கு வரும் பெண்கள் உலக அளவில் குறைந்த சதவீதம் மட்டுமே இருப்பதற்கான காரணங்கள் என்ன?, பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் வீட்டைச் சார்ந்த ஆண்கள் மட்டுமின்றி, அந்நாட்டு அரசாங்கமும் எப்படி உதவ முடியும்? ஆசிய நாடுகளில் இதில் இன்னுமுள்ள குறைபாடுகள் என்பன போன்ற விடயங்களை விளக்கிய கட்டுரை உள்ளது.

கொடுமைப்படுத்தப்படும் பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகக் கருத்தோட்டங்கள், சட்டங்கள் இவற்றை மேலே சொன்னவாறு பல நிலைகளில் சரிக்குச் சமமாகச் செயல்படும் பெண் ஆணுக்கு எதிராகப் பயன்படுத்தும் போது என்ன தீர்வு?

இந்தக் கேள்வியை நான் சிரித்து ரசித்தேன். ரசித்ததற்குக் காரணம் வெளியில் எவ்வளவோ பேருக்கு ஆலோசனைகள் வழங்குவதும் பரபரப்பாகப் பலரை இயக்குவிப்பதுமான ஒரு அப்பாவோ, அம்மாவோ வீட்டில் வீடியோ கேம் ஆடும் சிறுவன் அல்லது சிறுமியிடம் அதை எப்படிச் செய்வதெனக் கேட்டுக்கொண்டிருப்பதுமாதிரி நான் ஆர்வமுடன் வாசிக்கிற பல இடுகைகளை எழுதுகிற நீங்கள் என்னிடம் இப்படிக் கேட்டுக்கொண்டிருப்பது. சிரித்ததற்குக் காரணம் ஒரு 33 சதவீத இடஒதுக்கீட்டிற்கே இன்னும் இழுபறியிலிருக்கிற நிலைமையில் உங்களைப் போன்றவர்களுக்கும் இப்போதே வந்திருக்கும் இந்தப் பயத்தை நினைத்து. இதில் நான் என்ன பதில் சொல்வேனென்று நினைக்கிறீர்கள்? ஏன் இந்த பெண்கள் சம்பந்தமான சட்டத்தை மட்டுமெடுத்து இப்படிக் கவலைப்படுகிறீர்கள்? இது இந்த ஒரு சட்டத்திற்கு மட்டுமே பொருந்துமா என்ன? இருக்கிற எல்லா சட்டங்களையும் விரும்புபவர்கள் தவறாகப் பயன்படுத்தலாம். பயன்படுத்துகிறார்கள். ஒரு மனிதனை அவதூறாகப் பேசக்கூடாதெனச் சட்டம் இருக்கிறது. ஆனால் நீங்கள் ஒருவனைச் சிரமப்பட வைக்க விரும்பினால் உண்மையில்லாமலே "அவன் என்னை அவதூறாகப் பேசினான், ஆதாரங்கள் இவை" எனப் பொய்யாக எதையாவது உருவாக்கி வழக்குப்போட்டு அந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தலாம். உங்கள் ஒருவரால் அல்லது சிலரால் அச்சட்டமே கூடாதெனச் சொல்லிவிடலாமா? தாழ்த்தப்பட்ட ஒருவரைச் சாதியைச் சொல்லித் திட்டினால் அவரைத் தண்டிக்கச் சட்டம் இருக்கிறது. ஆனால் ஒருவர் இன்னொருவர்மீது வேறுகாரணத்திற்க்காகக்கூட இச்சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குத் தொடுக்கலாம். அதற்காக அந்தச் சட்டமே கூடாதெனச் சொல்லிவிடலாமா? இப்படியே எல்லாவற்றையும் சிந்தித்தால் எந்தப் பெரும்பான்மை நலனுக்கும் எதுவும் செய்யமுடியாது. என்னுடைய நிலை இதில் " யாராக இருந்தாலும் எதையும் எதற்காகவும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது". அதைப் பெண்கள் நலம்சார்ந்த சட்டம் மற்றும் கருத்தாக்கத்திற்கு மட்டுமே பொருத்திப்பார்க்கவேண்டிய அவசியமில்லை. பொதுக்கருத்து அது.

Tuesday, December 26, 2006

கற்றதனால் ஆன பயனென்ன.......(பாகம் 4)

இந்த இடுகையின் இரண்டாவது பாகத்தில் வந்த நண்பர் ஆசாத்தின் பின்னூட்டங்கள் முக்கியமான கேள்விகளை முன்வைத்தன. அவை நான் இதுவரை பெரிதும் சிந்தித்திருக்காததும், இப்போது என்னைச் சிந்திக்கத் தூண்டியவையும் ஆகும். "பெண்ணுரிமை என்பது ஒரு ஒருமித்த திட்டம், அதற்கான அரசியல் இயக்கம் எல்லாம் இல்லாமல் வெற்றிபெறமுடியுமா?" என்கிற அவரின் கேள்வியைத் தொடர்ந்து எனக்கும் அவருக்கும் நடந்த கருத்துப் பரிமாற்றங்களை, அவரின் இறுதியான பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக எனக்குள் விழைந்த எண்ணங்களையும் எழுதி (வழக்கம்போல் அவை நீண்டுவிட்டதால்:)) இங்கு தனிப்பதிவாக இடுகிறேன்.

ஆசாத்தின் முதல் பின்னூட்டம்:

I have appreciate your expectation about the fellows of Virtual world(net blog).

My quet. is simple. Can win Feminism without a plan, party, Tactics ... etc?

If cant't what is the unique plan for it. If ok please describe it now.

Second, all feminst thoughters have such freedom at family than other Females. Why are fought against that feminine has treated as a Commadity in India.?

Third, why this type of independent personalities have not became the Social activities (Politics like against the mass struggle against Hindu Fascism & Imperialistic USA


என் மறுமொழிஆசாத்,
முதன்முறையாக உங்கள் எழுத்தைப் படிக்கிறேன். மறுமொழிக்கு நன்றி. பெண்ணியத்திலிருந்து மேலும் விரிவான இடங்களைத் தொடுகிறீர்கள் என நினைக்கிறேன். எனக்குப் பதில் சொல்ல உள்வாங்கிடும் வகையில் இன்னும்கூட விரித்து நீங்கள் நினைப்பதை முடிந்தால் எழுதுங்களேன்.


ஆசாத்தின் இரண்டாவது பின்னூட்டம்
I am aasath

I can't know that to describe my previous question? ... If possible, can anyone tell it now.

Without any Party (political) how feminism will success?

On Kairanchi Massacare also, Females have treated as a property of Dalits. How you accept it?

All of you (so-called female feminists) have such small freedom in your home (ie, family). Then why you can't come in front of the peasants' struggle, Peoples struggle, .... Govt. employees struggle against privitization, trying of form a Union at IT employees also. I need the explanation?என் மறுமொழி

நண்பர் ஆசாத்,
உங்களின் பார்வைகளுக்கான பின்னணியை அறிய விரும்பியே உங்களை மேலும் எழுதக் கேட்டது. நீங்கள் அப்படி விரிவாக எழுதாதபோது நான் பதில்சொல்லிக்கொண்டிருப்பது இருவரும் ஒரு புள்ளியில் இல்லாமல் அவரவர் திசைகளில் பேசிக்கொண்டிருக்க
வித்திடலாம். இப்போது நீங்கள் மீண்டும் விளக்கம் வேண்டும் என்று (மட்டுமே) கேட்டிருப்பதால் இதை எழுதுகிறேன்.

பெண்விடுதலை பற்றிய சிந்தனைகள் ஒரே இயக்கமாக ஒரு குடையின்கீழ் வராதிருப்பினும் சமீபத்திய நூற்றாண்டுகளில் இதுபற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு அதன் விளைவாக உலகெங்கும் தோன்றிய சிறுசிறு இயக்கங்களின் எழுச்சிகளும், போராட்டங்களுமே இன்று
பெண்களுக்கு ஆதரவான பல சட்டங்கள்வரை கொண்டுவந்திருக்கிறது. நம் ஊரிலும் இயங்கிவரும், அரசுசார்ந்த மகளிர் ஆணையங்களில் இருந்து, கட்சிசார்ந்த ஜனநாயக மாதர் இயக்கங்கள் வரை இதில் சேரும்.. அடிமட்டப் பெண்களின் அன்றாட வாழ்வாதாரப்
பிரச்சினைகளைக் களைவதில் சிறந்து விளங்கும் இன்றைய மகளிர் சுய உதவிக்குழுக்களைக்கூட நான் இதனடிப்படையில் பார்க்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருகிற, அவர்களுக்கு வேண்டியது செய்கிற பல சமூக இயக்கங்களையும் பார்க்கிறோம். இவையெல்லாம் தத்தம் பணிகளில் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது அவற்றின் பலம் இன்னும் கூடும் என்பது உண்மையே.

எங்களைப்போல் பெண்ணுரிமைபற்றிப் பேசுகிற பெண்கள் வீதிக்குவந்து போராடவேண்டும் என்கிற உங்களின் ஆவல் பாராட்டுதலுக்குரியது. இப்படியான பெண்கள் உங்களின் கண்களில் விழுகிறவண்ணம் வெளியில்வந்து போராடவில்லை என்பதால் அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று பொருள் கிடையாது. சிறுசிறு பணியாகவேனும் அவரவருக்கு முடிந்த தளங்களில் இயங்குகிறவர்கள் நிறைய உண்டு. என்றாலும் முழுமையாக அரசியல், சமூகத் தளங்களுக்கு பெண் தன் பங்களிப்பை வழங்க முன்வராமைக்குப் பலகாரணங்கள் உள்ளன. இங்கெல்லாம் இயங்கும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் எப்படியானவை என்பதை நாம் அறிவோம். வேலையா, குடும்பமா என்று வருகிறபோதே வேலையைவிட்டுக் குடும்பத்திற்கு மட்டுமே முன்னுரிமை தருவதற்கே இன்றும் பெண்கள் வலியுறுத்தப்படுகிற சமூகத்தில் பொதுவாழ்வில் இன்னும் பெண்களின் பங்கு அதிகமாக, பெண்களைவிடவும் சமூகமே தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஜெயிலுக்குப் போன பெண்களில் இருந்து இன்று ஒரு போராளியாகக் களத்தில் இருக்கிற மேதாபட்கர் வரை உண்டு.

பெண்விடுதலை பேசுபவர்கள் ஏன் இந்து பாசிசத்திற்கெதிராகவெல்லாம் போராடவில்லை என்கிற உங்களின் முதல் பின்னூட்டக் கேள்விக்கு என் பதில்:-

மதங்களில் இந்து மதம் என்றில்லை, பொதுவாக எல்லா மதங்களுமே இன்றும் பெண்ணுக்குரிய அங்கீகாரங்களை வழங்கிவிட்டதாகச் சொல்லமுடியாது. பெண்ணடிமையைப் பேணிக்காப்பதில் மதங்களுக்கு நிறையப் பங்குண்டு. அவற்றிற்கெதிரான பெண்களின் குரல்களையே இன்னும் அவர்கள் முழுமையாக எழுப்பமுடியாவண்ணம் அங்கங்கு மதங்களின் அரண்களாய் மனிதர்களும், மத அமைப்புகளும் நின்றுகொண்டிருக்கையில் அடுத்த கட்டம் நோக்கிய பயணங்களுக்குப் பெண்கள் ஏன் வரவில்லை என்று கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் ஐடி பணியாளர்களின் சங்கம் அமைப்பதிலும் பெண்விடுதலை பேசுபவர்கள் ஏன் முன்வரவில்லை என்று முடித்திருக்கிறீர்கள்:)) உலகின் எல்லாவேலைகளையும் இனிப் பெண்விடுதலை பேசுபவர்கள்தான் ஆரம்பித்து வைக்கவேண்டும்போல் தெரிகிறதே:)) இந்த இடுகையின் அடுத்த பாகத்தில் நண்பர் செந்தில்குமரனுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும். பெண்விடுதலை என்பதே பெண்கள் மட்டும் செய்யவேண்டிய வேலை அல்ல. ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவம் பெறுவதுதான் சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது. அவ்வகையில் பெண்விடுதலை என்பதும் பெண்களின் பிரச்சினை மட்டுமேயில்லை. அது சமூகத்தின் பிரச்சினை. அதைக் களைவதில் ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே சமமான கடமைகள் உண்டு. ஐடியில் எனக்குத் தெரிந்து மேலாளர்களாகவும், உதவி மேலாளர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பான்மை ஆண்களே. அதிலேயே இன்னும் சமத்துவம் முழுமையாக வந்தபாடில்லை. இதில் சங்கம் அமைக்க மட்டும் பெண்கள் வந்து போராடவேண்டும் என்றால் எப்படி:)) ஆனாலும் அப்படி ஒரு கருத்து செயல்வடிவம் பெறும்போது அத்துறைசார்ந்த பெண்களும் அதற்குக் குரல்கொடுப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். நன்றி.ஆசாத்தின் மூன்றாவது பின்னூட்டம்
i am aasath

You thought that your view is for the way of acheive of freedom to Feminine gender.

Do Any struggle against suffering in world is done by feminist or Comminist?

So everybody in the world whom suffered by class/gender/community can join with them to fight against the Backward thoughts/System. Then, which weapon could guide to us?

Marxism-Leninism or Like Self-support groups, or NGOs of Patkar.

Please form the anger to the semi-feudal society to prevent the females' social activities. Individuals anger haveen't good enough. It forms a plan, party with whom is fighting for the sufferers. Through this struggle, all feminine genders also growth their soccial activities as civilizing Homozapeans.

You got such minimized rights from your former rebelions. What is the consequent history for it without plan?

Shall you justify?

Without promotion of Manager in IT field, why females to try to form a union for struggle. If female or male got it, they should corrupted by the neo-Capitalist societies Strategy. He don't come in front of the struggle.


அதன்பின் எழுதி நான் இப்போது சேர்த்திருப்பவை

ஆசாத்,

நீங்கள் சிந்திக்கும் கோணத்தின் ஒரு நுனியை (யாவது) பிடித்துவிடும் தெளிவை உங்களின் இந்தப் பின்னூட்டம் எனக்கு அளித்துள்ளது. நீங்கள் தெளிவாக எழுதவில்லை என்பதைவிட, நான் இதுவரை அப்படியான ஒரு பார்வையில் தீவிரமாக இதைச் சிந்திக்காதிருந்ததும்கூட காரணமாக இருந்திருக்கலாம், உங்களின் கருத்துக்களை எடுத்தவுடன் சட்டென்று உள்வாங்கிடமுடியாமல் போனதற்கு. ஆனாலும் எனக்கு இந்த இடுகையில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது உங்களின் பின்னூட்டம். நான் சிந்தித்துக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து என்னை இன்னொரு நிலைக்கு அதற்குரிய தர்க்கரீதியான காரணங்களுடன் எடுத்துப்போகும் எழுத்துக்களை நான் விரும்புகிறேன்.

இதற்கான ஒரு ஆயுதம் என்று ஒரேயொரு குறிப்பிட்ட இசத்தை மட்டும் என்னால் சொல்லிவிடமுடியவில்லை. வர்க்கப்பிளவுகளை, முதலாளித்துவத்தை, எதேச்சாதிகாரத்தை, ஆதிக்க மனோபாவத்தை எதிர்த்த எல்லா இசங்களும் பெண்விடுதலையை ஆதரிப்பவை எனச்
சொல்லிக்கொள்பவையே. ஆனால் அவையும் இதற்கொரு முழுமையான தீர்வாக இருந்தனவா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. காரணம் தொழிலாளர்களின் நலன் விரும்புவர்கள் முதலாளித்துவநிலையை மட்டும் எதிர்த்தால் போதும். அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு சிறுபான்மை இனத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள் அதன் உடனடியான அடுத்த ஆதிக்கசக்தியை எதிர்த்தால் போதும். ஆனால் தொடர்ச்சியான வலைகளால் பின்னப்பட்டு ஆரம்ப நுனி தேடிச் சிக்கல் அவிழ்க்கப்படவேண்டிய இடங்களில் இது கடினமாகிறது. இந்து மதத்தில் சாதிகளை ஒழிக்க முடியாமல் இருப்பதற்கு, அடிமட்டத்தில் வைக்கப்பட்டவன் அங்கேயே வருந்திக்கொண்டிருப்பதற்கு
நான் இதையே காரணமாகப் பார்க்கிறேன். பெண்விடுதலையும் இதைப்போல் பல வலைகளுக்குள்ளும் சிக்குண்டிருக்கிறது.

நாம் பெண்விடுதலையை முற்றிலுமாக அடைவதற்கு எதிர்க்கவேண்டியவைகள் ஏராளம். ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் எதிர்க்க வேண்டி வரும், குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் பிரச்சினைகளுக்கு அப்பிரச்சினைகளுக்கு
காரணமானவர்களை மட்டும் எதிர்க்க முடியாது, அப்படியான சாதகமான ஒரு சூழலை அவர்களுக்கு வழங்கி ஊக்குவிக்கும் குடும்பம் என்கிற அமைப்பையே எதிர்க்க வேண்டிவரும். பெண்ணுக்குத் தியாகப் பட்டம் கொடுத்து அவளை உச்சாணியில் உட்காரவைத்திருப்பதாய்ச் சொல்லும் புராணங்களைப் புனிதங்களை எதிர்க்கவேண்டிவரும். இப்படி இன்னும் பலவலைகளைக் கொண்டிருக்கும் இந்த விடயத்திற்கு இவ்வளவையும் எதிர்க்கும் முகமாக ஒரு ஆயுதம் வேண்டும் என்கிற உங்கள் வாதம் நியாயமானதே. அப்படியொரு ஆயுதத்தால் மட்டுமே இது ஒட்டுமொத்த விடியலாவதற்குச் சாத்தியங்களும் உண்டு என்பதை என்னாலும் உணரமுடிகிறது.அவ்வகையில் பார்த்தால் பெண்ணுரிமை இயக்கங்கள் என்பவை அந்தநிலையை இன்னும் எட்டவில்லை என்பதை ஒத்துக்கொள்வதிலும்
எனக்குச் சங்கடமில்லை. ஆனால் அதற்கு அவ்வகை இயக்கங்கள் முயலவேயில்லை என்றும் குற்றம்சாட்ட என்னால் முடியவில்லை. காரணம் அதன் செயலாக்கங்களுக்கான சிந்தனைவடிவைக்கூட அடையமுடியாவண்ணம் இங்கு அறியாமையும், அயோக்கியத்தனங்களும் மண்டிக்கிடக்கின்றன. இவ்விடயத்தில் நான் அறியாமைக்குப் பலியான, மதங்களின் புனிதங்களைக் கேள்விகள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்
பழகிய பெண்களையும் (படிக்காதவர்களைவிடப் படித்தவர்களும்) தைரியமாக விரல்நீட்டிச் சுட்டுவேன். எனவேதான் பெண்கள் வேலைக்குப் போகத் தேவையில்லை என்று மதங்களின் பீடங்களும், "பெண்ணா, லட்சனமா அடக்கமா இரு" என்று சூப்பர்ஸ்டார்களும் வசனம் பேச
முடிகிறது. எங்காவது எதிர்ப்பை எழுப்பும் சிலபெண்களின், ஆண்களின் குரல்களும் வெளித்தெரியாவண்ணம் சுற்றிலும் அதன்மீதான விமர்சன இரைச்சல்கள் கேட்கத் தொடங்கிவிடுகின்றன.

இந்தவகையில் இசங்களும்கூட அவற்றைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இயக்கங்கள் மூலம்(அரசியல் இயக்கங்களானாலும்) தோல்வியைத் தழுவுகின்றன என்பதைத் தமிழ்நாட்டில் கற்பு பற்றிக் கருத்துச்சொன்ன நடிகை குஷ்புவுக்கு எதிராக விளக்குமாறெடுத்துப்
போராடவேண்டிய நிலைக்குப் பெரியாரியவாதிகள் போனதை வைத்துச் சொல்லலாம். பெண்விடுதலை என்பது ஒரு அரசியல் இயக்கமாகவோ அதன் ஆயுதமாக அதற்கென்று ஒரு இசமோ உருவாகும்வரை அழைத்துச்சென்று ஊக்கப்படுத்தவேண்டியவர்களே இப்படிச்
சறுக்கிவிழுவதும், பிறகு அதற்காகக் காத்திருந்த வெறும்வாயை மெல்லும் மதவாதிகளுக்கு, இன்னபிற ஆதிக்க சமூகங்களுக்கு அவல் கிடைத்து, அதுவே முக்கியமாகிவிடுவதும் இயல்பாக நடக்கிறது. இத்தனை கரடுமுரடான பாதைகளைக் கடந்துதான் நீங்கள் சொல்கின்ற
ஒரு கனவை அடையமுடியும். இருந்தாலும் இடைவிடாத தேவைகளும், போராட்டங்களும் இதையும் ஒருநாள் சாத்தியமாக்கும் என்றே நம்புவோம்.

பெண்ணுரிமைவாதிகள் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இருக்கிறார்கள். பாரதியாலும், பெரியாராலும் சொல்லமுடியாத ஒரு பெண்விடுதலையை ஒரு பெண் பெண்ணுரிமைவாதிதான் சொல்லமுடியும் என்றில்லை. எனவே நீங்கள் சொல்லுகிற பெண்
பெண்ணுரிமைவிரும்பிகள் மட்டுமே இதைச் செய்யவேண்டும் என்கிற கருத்தில் எனக்கு இப்போதும் உடன்பாடில்லை. ஒடுக்கப்பட்ட இனத்துக்குக் குரல்கொடுப்பதாய்ச் சொல்லும் இசங்கள், அவற்றைக் காப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட இயக்கங்கள், பெண்விடுதலையை
மானிடவிடுதலையாகப் பார்க்க முடிகிற பெண்கள், ஆண்கள் எல்லோருமே இணைந்து நீங்கள் சொல்லும் இடம்நோக்கி நடக்கலாம். எழுத்து, செயல் என்று கொஞ்சமேனும் இதை உணர்ந்து சிறிதுசிறிதாகச் செயல்பட முயன்றிருக்கிற பெண்களுக்கு எதிராகக் கிளம்பும்
எகத்தாளக் கொக்கரிப்புகளை சமூகத்திலிருந்து அகற்றிக்கொடுக்கவேண்டிய கடமை மேற்சொன்ன அனைவருக்கும் உண்டு.

மற்றபடி ஆசாத், மீண்டும் என் மனமார்ந்த நன்றி உங்களுக்கு. உங்களின் மற்ற எழுத்துக்களின் தன்மையைக் கண்டுணர விரும்பி உங்கள் பக்கத்துக்குப் போனேன். ஆங்கிலத்தில் ஒரேயொரு பதிவு மட்டும், ஒன்றேயென்றாலும், நன்றாக எழுதப்பட்டிருந்த அந்தப் பெரியார் பற்றிய பதிவும் பிடித்தது. உங்களைப்போன்றவர்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும். உங்களுக்குத் தமிழில் எழுத ஏதும் பிரச்சினை இருக்கிறதா?
இருந்தால் சொல்லுங்கள், எனக்குத் தெரியாவிட்டாலும் நண்பர்கள் உதவுவார்கள். தமிழிலும் நீங்கள் எழுதவேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாய் இதைச் சொல்லுகிறேன்.

Monday, December 25, 2006

கற்றதனால் ஆன பயனென்ன.......(பாகம் 3)

செல்வநாயகி அவர்களே சில காலம் முன்பு லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள் டைரக்டர் கௌதமை திட்டியிருந்தார். அவர் திட்டியிருந்த காரணம் அந்த டைரக்டர் தன்னுடைய படத்தில் ஒரு திருநங்கையை மோசமானவராக காட்டியிருந்தது தான்.

அந்தப் படத்தில் காட்டியுள்ளது போல திருநங்கைகள் இன்று சமூகத்தில் இல்லையா?(சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்ததால் தான் அவர்கள் அப்படி ஆனார்கள் என்பதால் சமூகத்தில் உள்ள அனைவரும் அந்தக் காட்சியின் போது தலை குனிந்திருக்க வேண்டும் என்பது வேறு விஷயம்.) ஆனால் திருநங்கைகள் என்பவர்கள் அது போலவே இல்லவே இல்லை என்பது போல அவர் அங்கு ஆவேசப்பட்டது எனக்குத் தவறாக பட்டது

ஏன் இதனை சொல்கிறேன் என்றால் ஒரு விஷயத்தை அலசும் சமயம் இரு வேறு விதமாகவும் அதனை பார்க்க வேண்டும் எனக்குத் தேவையானவற்றை மட்டுமே பார்ப்பேன் என்பது தவறான கண்ணோட்டம் ஆகும்.

உங்களின் பதிவில் நான் சொன்னதை பொதுமைப் படுத்தி விட்டீர்களோ என்று தோன்றுகிறது

நான் அந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது பெண்ணியம் பேசும் எல்லாப் பெண்களையும் அல்ல என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

ஆனால் பெண்ணியம் பேசும் பெண்களில் சிலர் அப்படி இல்லை என்பதை மறுத்தால் அதில் நேர்மை இருக்காது. எதிர்வினைகளே இல்லை இதில் என்பது வேறு சில பிரச்சனைகளுக்கு வழி வகுப்பது போலாகி விடும்.

மற்றபடி உங்களின் பதிவில் எனக்கு முழு உடன்பாடு உண்டு உழைக்கும் பெண்கள் இருக்கும் வீட்டில் ஆண் என்பவனும் சரி சமமாக வேலைகளை பகிர வேண்டும், பெண்களுக்கு இன்று மாதாந்திர தொந்தரவுகள் போன்றவை எல்லாம் பிரச்சனைகளே கிடையாது என்பதை எல்லாம் நூற்றுக்கு நூறு சதவீதகம் ஒப்புக் கொள்கிறேன்.(நான் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது கூட எப்படி இந்த நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சிந்தித்ததன் விளைவே. அதுவும் தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்)

உங்களிடம் இருந்து மேலும் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் சில

பல வேறு ரூபங்களில் பெண்களின் மேல் பிரயோகிக்கப்படும் பாலியல் பலாத்காரங்கள், சீண்டல்கள் போன்றவை பற்றி கூட இன்று பலர் அறியாமல் இருப்பது வேதனைக்குறிய ஒரு விஷயம் ஆகும். இது போன்ற பிரச்சனைகளை குறித்த பார்வைகளை எதிர்பார்க்கிறேன்.

கடைசியாக,

குடும்ப அமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போட்டி அல்ல. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறித்து அல்ல. நான் இதனை செய்வதால் நீ அதனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அப்படி ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதினால் பல பிரச்சனைகளே மிஞ்சும் என்பது என் தாழ்மையான கருத்து. பெண்ணியம் என்பது இது போன்ற விஷயங்களுக்கு துணை போய் விடக் கூடாது. இதனையும் தவறாக அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டாம். சில சமயங்களில் அது போலவும் நடக்கிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறேன்.


செந்தில்குமரன்,
நீங்கள் லிவிங்ஸ்மைல் வித்யாவின் பதிவின் கோணத்தையும், என் பதிவின் கோணத்தையும் ஒப்பிட்டு எழுதியிருப்பதே சரியானதல்ல என்பது என் கருத்து. திருநங்கைகளின்
பிரச்சினைகளும், போராட்டங்களும் பெண்ணியப் போராட்டங்களைவிடவும் கனமானவை. சக மனித இனமான ஆணினத்தோடு சமத்துவம் வேண்டி நிற்கிறது பெண்ணீயம். ஆனால்
முதலில் தாங்கள் மனித இனமாகவே ஏற்றுக்கொள்ளப்படாதிருக்கிற வேதனையை வெளிப்படுத்துகிறது திருநங்கைகளின் போராட்டம். இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை அறியவேண்டும்.

தோழி லிவிங்ஸ்மைல் வித்யாவுக்கு அந்தப் பதிவிற்காகக் குவிந்த கண்டனங்களைப் படித்தபோதே அங்கேயோ அல்லது அதுகுறித்து என் பதிவிலோ எழுதிட நினைத்தும் நேரமின்மை காரணமாக முயலவில்லை. மேலும் அந்தசமயத்தில்தான் என்று நினைக்கிறேன், நண்பர் ஆழியூரான் அதுகுறித்த ஆழ்ந்த கோணத்தில் அம்பேத்காரையெல்லாம் எடுத்துக்காட்டி ஒரு அழகான பதிவிட்டிருந்தார். அதை ஆதரித்து ஒரு பின்னூட்டம் இட்டதோடு சரி. ஆனால் இப்போது நீங்கள் அதை இங்கே நினைவுபடுத்தியிருப்பதால் கொஞ்சம் எழுதலாமென நினைக்கிறேன்.

இச்சமூகத்தில் திருநங்கைகளின் வாழ்வு என்ன? பிறந்ததிலிருந்து சுற்றிவந்த வீட்டிலேயே அந்நியமாக்கப்பட்டுத் தெருவில் விடப்பட்டு, எந்த ஒரு அன்பும், பரிவும் சமூகத்தின் எந்தப்
பக்கத்திலிருந்தும் துளியும் கிட்டாமல் ஒருவேளைச் சோற்றுக்கு எதையாவது செய்தாக வேண்டுமே என்கிற நிலையை, அதன் கொடூரம் எப்படியிருக்கும் என்கிற உண்மையை, உயிரின் ஒவ்வொரு செல்லிலும் ஏற்படும் வலியை நிச்சயமாக செந்தில்குமரன் நீங்களோ, நானோ அறியமுடியாது அப்படி ஒரு வாழ்க்கையில் நாம் துடிக்காதவரை. வெளியிலிருந்துகொண்டு அவர்களின் செயல்களுக்கு நாம் நீதிபதிகளாகித் தீர்ப்புச் சொல்லி, ஒழுக்கத்திற்கென்று நம்கையில் யாரோ கொடுத்துச் சென்ற அளவுகோலில் அவர்களை அளந்து கருத்துச் சொல்வதை நிறுத்துவதே அவர்களுக்கு நாம் முதலில் செய்கின்ற உதவியாக இருக்கமுடியும்.

"திரைப்படத்தில் திருநங்கை ஒருவரை அப்படிக் காட்டியதற்காக லிவிங்ஸ்மைல் வித்யா இப்படி ஆவேசப்படத் தேவையில்லை. ஏனென்றால் அப்படியான திருநங்கைகளே இல்லையா?"என்று கேட்கிறீர்கள். அடைப்புக்குறிக்குள் "அவர்களை அப்படி ஆக்கியது சமூகம்தான்" என்றும் ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் அந்த சமூகத்தின்மீது கோபப்படவும்
கூடாதென்கிறீர்கள். குழப்பமானதாக இருக்கிறது உங்கள் நிலை. எந்த வழியையும் திறந்துவிடாமல் அவர்களைப் புறக்கணிக்கிற சமூகத்தில் உயிர்த்திருத்தலின் பொருட்டு அவர்களாக ஒருவழியில் சென்றால் அதை நக்கலும், நையாண்டியும் செய்து கைகொட்டிச் சிரிக்கிற வேலையையும் அச்சமூகமே செய்கிறது. இந்த வக்கிரமனப்பான்மை ஒழிகிறவரை
திருநங்கைகளைப் போன்றவர்களுக்கு வாழ்க்கை சுலபமாகுமா?

ஏதோ இந்த ஒருபடத்தில் மட்டும்தான் இப்படிக் காட்டப்பட்டதா செந்தில்? நம் திரைப்படங்களில் திருநங்கைகள் காட்டப்படுகிற இடங்கள் எல்லாமே நையாண்டிகளாகத்தானே
இருக்கிறது? வேறெந்த வெளி ஊடக வாசிப்பு, அனுபவமெல்லாம் இல்லாமல் இருந்த என் பள்ளிநாட்களில் சினிமாக்களில் மட்டும் இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த காலத்தில்
"இவர்களைப் பார்த்தால் பயந்து ஒதுங்கிவிடவேண்டும்" என்கிற ரீதியிலும், "இவர்கள் மோசமானவர்கள்" என்கிற கோனத்திலும்தான் என் எண்ணங்கள்கூட இருந்திருக்கின்றன.
இவைபற்றிய சரியான செய்திகளை, அவர்கள் அப்படி ஆகிப்போனதற்கான காரனங்களை எடுத்துச்சொல்லி ஒரு விழ்ப்புணர்வை மனிதர்களிடத்தில் ஏற்படுத்தவும், இவர்கள் சரியாக
வாழ்வதற்கான வழிகளைத் தரவும் முயற்சிக்காத ஊடகங்களுக்கு இவர்களைப் பற்றி நக்கலடித்துக்கொண்டிருக்க மட்டும் முடியும் உரிமை எங்கிருந்து வந்தது?

அவர்கள்மீதான ஏளனங்களும், கொடுமைகளும் முற்றும் நின்றுபோன ஒருசமூகத்தில் திருநங்கைகள் வேண்டுமென்றே இப்படியிருக்கிறார்கள் என்கிற நிலைவரும்போது பேசலாம்
செந்தில் "இருப்பதைத்தானே படத்தில் காட்டுகிறார்கள்? இதற்கு எதற்கு இத்தனை ஆவேசம்?" என்கிற நேர்மையை, நியாயத்தை. இப்போது தேவையில்லை அது. லிவிங்ஸ்மைல் வித்யா என்கிற ஒருவரின் அனுபவம் மட்டுமல்ல. வேறெந்த வெற்றியான வாழ்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் திருநங்கையின் அனுபவமும் எப்படியானதென அறிகிறபோது அவர்களின் உண்மையான துயரங்கள் புரியும். நாட்டியக்கலைஞர் நர்த்தகி நடராஜனின் செவ்வி படித்தேன் சமீபத்தில் குமுதத்தில். இந்தியாவில் பாஸ்போர்ட் வாங்கிய முதல் திருநங்கை அவர். ஆனால் அதை வாங்குவதற்கு அவர் பட்ட பாடுகள் எத்தனை தெரியுமா? நாட்டியம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு, அவரின் பாலினம் கருதியே யாரும் அவருக்குச் சொல்லிதர முன்வராத சோகத்திலிருந்து இப்போதும் அவருக்கு முழு ஆதரவளித்து வாழவைத்துக்கொண்டிருப்பது அவரைப் போன்ற இன்னொரு திருநங்கைதான் என்பது வரைக்கும் சொல்லியுள்ள அவரின் அனுபவங்கள் முக்கியமானவை. இப்படிப் போராடி சாதிக்கும் திருநங்கைகளை(யும்) ஏன் நம் படங்களில் காட்டுவதில்லை? திருநங்கைகள் என்றாலே உடலுறவு வைத்துக்கொள்ள ஆள்தேடி அலைந்துகொண்டிருப்பவர்கள், மற்றவர்களிடம் காசு பிடுங்குபவர்கள் என்பதை மட்டுமே சித்தரித்துக் காட்டமுடிகிறவர்கள் நர்த்தகி நடராஜனை ஏன் காட்டமுடியவில்லை? அந்த ஊடகக் கதைகளின் உற்பத்தியாளர்களை பல்வேறு போராட்டங்களைத் தாண்டி வந்திருக்கும் திருநங்கையான லிவிங்ஸ்மைல் வித்யா திட்டியதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் திட்டியதற்குப் பயன்படுத்திய மொழியைக்கூட விமர்சிக்க நான் விரும்பவில்லை. அதன் பின்னிருந்த வலியை உணர்ந்துகொள்வது மட்டுமே
எனக்கு அதில் முக்கியமாக இருந்தது.

அதுமட்டுமல்ல செந்தில். சாந்தியின் பாலினம் குறித்த பிரச்சினைகளை இப்போது எழுதிக்கொண்டிருக்கிற ஊடகங்களில் ஒன்றில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரையில் ஒரு இடத்தில் "சாந்தி பெண்தான், அவரை அரவாணியைப் போல் மோசமாகக் கருதுவது" என்று படித்தேன். இந்த மொழிகளையெல்லாம் எதிர்த்துக் கண்டனம் எழுப்பி அப்படி நிகழாவண்ணம்
தடுக்க நம்மால் முடிந்ததைச் செய்யலாம். ஊடகங்கள் மட்டுமல்ல. அரச இயந்திரத்தில் பீகாரில் நடந்த ஒரு நிகழ்வை டிசம்பர் 10ம் தேதி ஜூனியர் விகடனில் படிக்க நேர்ந்தது.
அங்கிருக்கிற மாநகராட்சி ஒன்றில் அதற்கு வரவேண்டிய வரிபாக்கியை வசூல் செய்ய ஒரு புது உத்தியை யோசித்த அதன் ஆணையர், திருநங்கைகளை அனுப்பி வரிகட்டாத
கடையினர் முன்பு ஆட்டம் ஆடிப் பாட்டுப் பாடி வரிவசூலிக்கும் முறையை அமுல்படுத்தியிருக்கிறார். திருநங்கைகள் கடைகளுக்கு முன்பு கூடுவதில் அச்சம் கொள்பவர்கள் உடனே வரியைக் கொண்டுபோய்க் கட்டிவிடுகிறார்களாம். ஆனால் மாநாகராட்சி ஊழியர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடைக்காலமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த எதிர்ப்புக்கு அவர்கள் சொல்லும் காரணம் "நாங்கள் போய் வசூலித்தால் எங்களுக்குக் கிடைக்கும் 4 சதவீத கமிஷன் வரும். அலிகளால் அது போய்விடுகிறது. மேலும் நபர்களை அடையாளம் காட்ட நாங்களும் அலிகளுடன் போக வேண்டியிருக்கிறது. பிறகு வீட்டிற்குப் போனால் அலிகளுடன் ஆட்டம்போட்டுவிட்டு வர வெட்கமாக இல்லையா என்று கேட்கிறார்கள் வீட்டில்". இந்தச் செயல், ஒரு அரச இயந்திரமே திருநங்கைகளைப் பயன்படுத்தும் விதம், இவையெல்லாம் நம் சமூகம் எப்படிப்பட்டதென்பதை நாமே அறிந்துகொள்ள (முயன்றால்) ஒரு உதாரணம். நிற்க.

பெண்விடுதலை குறித்தான என் பதிவுகளையும் நீங்கள் தோழி லிவிங்ஸ்மைல் வித்யாவுக்குச் செய்த அதே "நேர்மை அளவுகோல்" கொண்டு அளந்தால் நான் சொல்வதற்கு
ஒன்றுமில்லை. நான் பெரும்பான்மை சமூகப் போக்கை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதில் பெண்விடுதலையைப் பெண்ணுக்குரிய விடுதலையாக மட்டும் நான் பார்க்கவில்லை. அதை
ஆரோக்கியமான சமூகத்திற்குத் தேவையான ஒரு அங்கமாகவே பார்க்கிறேன். அதை உணர்வது ஆண், பெண் இருவருக்குமே அவசியமானது என்பதையும் எழுதியிருக்கிறேன்.
என்னைவிடவும் இதை அழகாக எழுதிய, எழுதும் நண்பர்களும், தோழியரும் இங்கிருக்கிறார்கள். "பெண் விடுதலை கிடைத்து அதைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்கள்" என்பதை எந்த நிகழ்வுகள், அனுபவங்கள் அடிப்படையில் சொல்கிறீர்கள் என்பதை விரிவாக ஒரு பதிவாகவே இடுங்கள். உங்களின் கண்ணோட்டம் பற்றி நான் முழுமையாக அறிந்துகொள்வேன்.


///குடும்ப அமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போட்டி அல்ல. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறித்து அல்ல. நான் இதனை செய்வதால் நீ அதனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அப்படி ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதினால் பல பிரச்சனைகளே மிஞ்சும் என்பது என் தாழ்மையான கருத்து. பெண்ணியம் என்பது இது போன்ற விஷயங்களுக்கு துணை போய் விடக் கூடாது.//////

மீண்டும் ஒரு பொதுமையான கருத்தை இந்த இடுகையில் வைத்திருக்கிறீர்கள். குடும்பம் பற்றிய என் கருத்தை இந்த இடுகையின் முதல் பாகத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறேன்.

" உன் கணவன் குறித்தான உன்பயங்களை உதறிவிட்டு பேரன்பின் வெளிப்பாட்டுடன் அவரையும் உனக்குச் சமமாகவே எண்ணு. உன்னையும் அப்படியே அவர் எண்ணவேண்டும். அந்த அன்பில் இருவருமே கரைந்து போங்கள். ஆனால் தொலைந்து அல்ல. உங்களைப் புதுப்பித்துக்கொண்டு வெளிப்படுத்த, வாழ்வின் சுவாரசியங்களைத் தேட இருவருமே ஒருவருக்கொருவர் உறுதுணையாகுங்கள்"

இதைவிட எனக்குச் சொல்லவும் தெரியவில்லை. மேலும் ஆணுக்கு காலையில் இந்த வேலை, பெண்ணுக்கு மதியம் இந்தவேலை என்றெல்லாமும் நான் எங்கும் அட்டவணையிட்டும் கொடுக்கவில்லை. நான் "கத்தரிக்காய் எந்த அளவுக்கு உடம்புக்கு நல்லது" என்று சொல்லிக்கொண்டிருந்தால் அதையெல்லாம் உருளைக்கிழங்குக்குச் சொன்னதாக நினைத்து அதைச் சாப்பிடத் தொடங்கிவிடுகிறீர்களோ என்று நினைக்கும்படியாகச் சிலசமயங்களில் உங்களின் வாதங்கள் எனக்குத் தோன்றுகின்றன செந்தில்:)). ஆனால் நான் சொன்னது உருளைக்கிழங்கையல்ல என்பதை விளக்கிவிடவாவது எனக்கு விருப்பத்தைத் தரும் வகையில் உங்கள் மொழியின் முதிர்ச்சி இருப்பது மகிழ்ச்சி:))