Monday, October 09, 2006

கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்

நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம் என்ற பதிவிற்கு வந்த சில பின்னூட்டங்கள் ஒரு கருத்தை முன்வைத்திருந்தன. அது பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தாலும் பிரயோசனம் இல்லை, அதை அவர்களால் அனுபவிக்க முடியாது என்ற ரீதியில் அமைந்திருந்தன. இன்னும் சில பின்னூட்டங்கள் நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம் என்ற ரீதியிலும் இருந்தது.
இப்படிப்பட்ட வாக்கியங்களை கவனித்தால் இதில் நாங்கள் கொடுத்தோம் என்ற ஆதிக்கம், நினைத்தால் கொடுக்கவும் எடுக்கவும் செய்ய எங்களால் முடியும் என்ற நினைப்பும் அதனூடன் இருப்பதும் சொல்லாமல் புரியும்.

உண்மைதான், அடங்கி அடி உதையும் பட்டு வேதனையில் உழலும் பெண்கள் நிறைய பேருக்கு விவாகரத்தோ இல்லை பாதுகாப்போ கிடைக்கும் போது அதை அவர்களால் அனுபவிக்க கூட முடியாமல் ஒரு பயமே எதிர்கொள்ளுகிறது. சமீபத்தில் அப்படி விடுதலையாகிப்போன பெண்மீது எனக்கு கூட சினம் வந்தது எப்படி இவர்களால் இந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. ஆனால் யோசித்துப்பார்த்தால் இதற்கடியில் உள்ள பயமும் பாதுகாப்பின்மையும் சுய இரக்கமும் புலப்படும்.

சிறகுகளை வெட்டி, வெட்டி கூண்டுக்குள் ஒரு கிளி வளர்த்து தீடீரென ஒருநாள் அந்த கூண்டை திறந்து விட்டு பறந்து போ என்று சொன்னால் சிறகில்லாத கிளியால் பறக்கத்தான் முடியுமா? ஆனால் இங்கே சிறகுகளை வெட்டி விடுவதோடு கூட குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் அல்லவா கட்டி விட்டிருக்கிறார்கள். கண்னுக்குப்புலப்படாத சமுதாய சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள்.

வீட்டு வன்முறையில் சிக்கிக்கொண்டவர்களுக்கு அதிலேயே இருந்து இருந்து தங்கள் மீதான தன்னம்பிக்கையும் குறைந்து போகிறது. தெரியாத சைத்தானுக்கு தெரிந்த பிசாசே பெரிதென்று மீண்டும் வருகிற நிலையில்உள்ள பெண்கள் நிறைய உண்டு.என்னைவிட்டால் உனக்கு சோறு போட யார் இருக்கிறார்கள், உன் குழந்தைகளை உன்னால் பார்த்து வளார்க்க முடியுமா என்று பொருளாதார சார்புநிலையை கேவலமாக்கி பேசுவது இன்னும் அதிகரிக்கும். படித்து வேலைக்கு போகும் பெண்களும் இந்த பொருளாதார சார்புநிலையை முற்றிலும் கடந்து விடவில்லை.தன்னுடைய பெற்றோர்களை ஆதரிக்க வேண்டுமானால் அதுவும் தன் வருமானத்தில் ஆதரிக்க வேண்டுமானாலும் கூட முறையான அனுமதி கணவன், அவனை பெற்றவர்களிடம் இருந்து பெறவேண்டிய நிலை இருக்கிறது. அப்படி ஒரு ஆண் அனுமதித்துவிட்டாலே அதுகூட அவன் பரந்தமனப்பான்மையை காட்டும் ஒரு கண்ணாடி.மாதம் 8000$ வருமானமென்ற போதிலும் அலுவலகத்தில் ஒரு விழாவிற்கு பணம் கொடுக்க வேண்டுமானாலும் கூட கணவனை கேட்கவேண்டிய நிலையில் உள்ள பெண்களும் உண்டு.

இந்த சிந்தனையை பிரதிபலிக்கும் வகையில் சக வலைப்பதிவாளரின் பதிவொன்றை படித்தேன். எத்தனை விதமான ஆபரணங்கள், சமையலுக்கு தேவையான மைக்ரோவேவ் போன்றவற்றை வாங்கி தந்திருக்கிறேன் என்று ஒரு ஆடவன் சொல்வது எப்படி சரியாகும்? யாருக்கு யார் வங்கித்தருவது?ஆளுக்கொன்றாய் செயல்களை பிரித்து செய்யும் போது ஒன்றில் tangible benefit ஆன வருவாயும் இன்னொன்றில் கண்ணுக்கு புலப்படாத அமைதியும் வரும்போது வருவாய் முழுதும் எனக்கே சொந்தம் என்பதும் அதனால் இன்னும் உரிமைகளைக் கூட்டிகொள்வதும் எப்படி சரியாகும்? வாழும் நாளில் நாம் செய்யவேண்டிய எத்தனையோ காரியங்கள் உண்டு. அவற்றை கணவனும் மனைவியும் செய்யும் போது வேலைகள் எளிதாகவேண்டுமானால் வாங்கும் உபகரணங்களுக்கு கூட ஆணின் தான் மட்டுமே இதில் முடிவெடுக்க உரிமை உள்ளவன் என்று எண்ணுவதும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எத்தனை அழகாக சொல்லி இருக்கிறார் இந்த பொருளாதார சார்பு நிலையை நகைச்சுவை என்ற போர்வைக்குள்.

சிவகுமார் சொன்னதுபோல பெண்களால் மட்டுமே பிள்ளை பெற்றுக்கொள்ளமுடியும், ஆரம்பநிலைகளில் வளர்க்கவும் முடியும் என்பது இயற்கை, அதற்காக வெளியிடத்தில் பணிசெய்து ஊதியம் கொண்டுவரும் ஆடவன் அந்த பெண்னின் சார்புநிலையை பயன்படுத்துதல் தவறல்லவா? வீட்டைப்பராமரித்து குழந்தைகளைப்பேணிதன் தேவைகளையும் தம் மனைவியின் பொருளாதார சார்புநிலையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் ஆண்கள் நிறைய உண்டு.

சமீபத்தில் இங்கே நியுயார்க்கில் வழக்காடுமன்றம் வந்த கதை இது. கணவன் மனைவி இருவரும் மனம் ஒருமித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருமே மேலாண்மை படித்திருந்தனர். ஆனாலும் மனைவி வேலைக்கே செல்லாமல் வீட்டை பரமாரித்து கொள்ள, கணவன் கடுமையாய் உழைத்து செல்வந்தனானான். பிள்ளைகள் இருவர் ஒருவர் மருத்துவராகவும் இன்னொருவர் வழக்கறிஞராகவும் பணியாற்ற அவர்கள் பள்ளி நாள் முதலாய் எல்லாமே அம்மாதான். இந்நிலையில் கணவன் மனைவையை விவாகரத்து செய்ய வழக்கு தொடுத்தான். சேமிப்பு முழுதும் தன்னுடையது என்றும் தன் உழைப்பால் வந்தது என்பதாலும் எதுவும் தர இயலாது என தெரிவிக்க, மனைவியோ நான் வீட்டை பராமரிக்காவிட்டால், இவனால் வேலையில் முழுக்கவனமும் செலுத்தி முன்னேறி இருக்க முடியாது. உழைப்பு அவனுடையது என்றாலும் வீட்டையும் குழந்தைகளையும் அவனையும் பராமரித்த என் செயலும் அதற்கு காரணம் என வாதிக்க, மனைவிக்கு சேமிப்பில் சரிபாதி தீர்ப்பாகியது. பொருளாதார சார்பு நிலை பற்றி பேசும் போது இதுபோன்ற மனைவியின் செயல்கள் கண்டு கொள்ளாமல் போவதும், ஆண்களை அடக்கி வாழும் பெண்களை நீங்கள் கண்டதில்லையா எனவும் பேசுதல் எப்படி சரியாகும்.

கனவுப்பூக்கள் கண்ணில் மின்ன
அன்றொருநாள் அம்மாவைக்கேட்டேன்
என்ன ஆகும் எனது வாழ்க்கை
காற்றுப்போல் சுதந்திரமும்
கவிதைப்போல தனிக்குணமும்
எப்போதும் உடன் வருமா
என்ன ஆகும் எனது வாழ்க்கை
கலைந்த முடியை காதில் ஒதுக்கி
அம்மா சொன்னாள் அணைத்துக்கொண்டு
கனவுகள் வேண்டாம் பெண்ணே
நேற்றைக்கு உன்போல் நானும்
நெஞ்சுக்குள் பூச்சுமந்து நின்றதில் நினைவே மிச்சம்
காலத்தின் மிரட்டல் கேட்டு கனவுகள் விற்று
அதில் வாழ்க்கையை வாங்கியாச்சு
வாசலில் போட்ட கோலம்
வழிப்போக்கர் மிதிக்க ஆச்சு
கனவுகள் வேண்டாம் பெண்ணே
நிஜங்களின் நிழல்கள் ரசிக்க
நீயேனும் கற்றுக்கொள்க என்ற கவிதை வரிகள் போல இங்கே இன்னமும் கனவுகளாகவே சுதந்திரமும் இருக்கிறது.