Wednesday, July 28, 2021

 நேற்று, நான் மதிக்கிற ஆட்களில் ஒருத்தர் ஆசாத் பாய்க்கு நான் எழுதுவன் எண்டு சொன்னன். அவர், மட்டுமில்ல இன்னும் நிறைய ஆட்கள் - மரத்தடி ஆக்கள்,  வலைப்பதிவு சனம், கூகுள் பஸ்/பிளஸ் ஆட்களெண்டு அப்பப்ப கேட்டபடி... அப்படியென்ன எழுதுறன் எண்டு தெரியேல்லயெண்டாலும், இந்த எழுத்துதான் நிறைய நண்பர்களைச் சம்பாதிச்சுக் குடுத்திருக்கு. என்ர உணர்வுகளை சரிசமமா வைச்சுக்கொள்ள உதவியிருக்கு. ஒத்த இரசனையுள்ள மனிதர்களிடம் அவர்களின் விருப்பு வெறுப்பு தாண்டி கற்றுக்கொள்ள வழிவகை அமைச்சுக் கொடுத்திருக்கு.

எழுதிறதெண்டு ஆயிற்றுது. எங்க எழுதுவம் எண்டு யோசிச்சா, இப்ப மரத்தடி குழுமம் இல்லை. அதில் இருந்த குருவிகள் நாங்களெல்லாம் ஒவ்வொரு திசையா பறந்து போயிற்றம். அதுக்கடுத்தது வலைப்பதிவு. இந்த வலைப்பதிவு blogspot.com. சின்னப்பிள்ளை அடிமேல அடிவைச்சு பழகின மாதிரி வலைப்பதிவில் தமிழை எப்படி எழுதிறது எண்டும் தமிழில எழுதிற ஆட்களை எப்படி ஒருங்கிணைக்கிறது எண்டும் பழகின இடம். ஒவ்வொருத்தரின்ட அஜெண்டாக்களுக்குள்ள சிக்கிக்கொள்ளாமல் தமிழில், தமிழோடு உறவாட ஒரு தளமாக உருவமைச்ச இடம்.

பார்வதி கிட்டடியில ஒரு பேட்டியில சொன்னமாதிரி... அந்தக் காலத்தில அப்படி செய்தம், இப்படி செய்தம் எண்டு பெரிய ஆட்கள் சொல்லி அறிவுரை செய்யேக்க கேட்கப் பிடிக்காது. அதையே நானும் செய்யக்கூடாது எண்டு நினைச்சாலும் அப்பப்ப பழைய நினைவுகள் வந்துபோகுது. 

வலைப்பதிவுக்கு வந்து உள்ளநுழையலாமெண்டு போனா, கதவு உடனயே திறந்தது ஒரு பெரிய ஆச்சரியம். அப்ப பாவிச்ச மின்னஞ்சல்தானெண்ட படியால இருக்கும்... உள்ளுக்குள்ள வந்து தன்பாட்டில எழுதத் தொடங்கிற்றன். இருந்த பழைய கணினியில சில மாதங்களுக்கு முந்தி உபுண்டு லினக்ஸ் போட்டுப் பார்த்தனான். இண்டைக்கு fbல கேட்டு தமிழில தட்டச்சவும் வழி வகுத்தாச்சு... என்ன எழுதுறது எண்டு நாளைக்கு யோசிப்பம்


July 28, 2021